என் மலர்
ஈரோடு
- ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் இன்று மாநகராட்சியின் அவசர கூட்டம் மேயர் நாகரத்தினம் தலைமையில் நடந்தது.
- கூட்டதிதல் தமிழக அரசு மின்கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இதற்கு எதற்கு தெரிவித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் இன்று மாநகராட்சியின் அவசர கூட்டம் மேயர் நாகரத்தினம் தலைமையில் நடந்தது. துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும் மேயர் நாகரத்தினம் திருக்குறள் வாசித்து அதற்கான பொருளையும் கூறினார். அதனைத் தொடர்ந்து 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக நடத்திய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதேபோல் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதேப்போல் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்ட வரும் பல்வேறு பணிகள் குறித்து 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதன் பின்னர் அ.தி.மு.க மாநகராட்சி எதிர்க்கட்சித் துணைத்தலைவர் சூரம்பட்டி ஜெகதீஷ் பேசும்போது, 31-வது வார்டில் ஏற்கனவே 11 போர்வெல்கள், மாநகராட்சி சார்பில் 4 போர்வெல்கள் என மொத்தம் 20 போர்வெல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் அவற்றுக்கு முறையான டேங்க் ஆப்ரேட்டர்கள் நியமிக்கப்படவில்லை. மேலும் கூட்டத்தொடரில் கவுன்சிலர்கள் பேசுவது பதிவு செய்யப்படுகிறதா? என்று தெரியவில்லை.
ஏற்கனவே கவுன்சிலர்கள் புகைப்படம் எங்கு வைக்க வேண்டும் என்று கூறி இருந்தேன். அதை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநகராட்சி பகுதியில் போதுமான தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை என்று பேசினார்.
அப்போது இடையில் தி.மு.க. கவுன்சிலர் பேசினார். இதனால் அ.தி.மு.க., தி.மு.க. உறுப்பினர்கள் இடைய காரசார விவாதம் நடைபெற்றது.
தொடர்ந்து அ.தி.மு.க. மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் தங்கமுத்து பேசுகையில், மாநகராட்சியில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் முழு நேரமும் டாக்டர்கள் நியமிக்கப்படாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சாக்கடைகள் முறையாக தூர்வரப்படுவதில்லை, ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை என்று கூறினார்.
மேலும் தமிழக அரசு மின்கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இந்த மின் கட்டண அறிவிப்பு மக்களை பாதிக்கும். எனவே இதற்கு நாங்கள் எதற்கு தெரிவித்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.
அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. எதிர்க்கட்சி துணைத் தலைவர் சூரம்பட்டி ஜெகதீஷ், கவுன்சிலர்கள் தங்கவேல், நிர்மலா தேவி, ஹேமலதா, பாரதி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
இதைத்தொடர்ந்து மற்ற கவுன்சிலர்கள் தங்களது வார்டில் உள்ள பிரச்சனைகளை குறித்து விரிவாக பேசினர்.
- சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 62 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 404 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
பிற மாவட்டங்களில் தினசரி பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஈரோட்டில் கடந்த 6 நாட்களாக தினசரி பாதிப்பு 50-க்கு மேல் பதிவாகி வருகிறது.
இந்நிலையில் கடந்த 23-ந் தேதி ஒரே நாளில் 62 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து 50 ஆக பதிவாகி வந்தது.
இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 62 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 1 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் சிகிச்சையில் இருந்த 53 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 863 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 404 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறையினர் இதனை தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுவரை கொரோனா தினசரி பரிசோதனை 450 வரை எடுக்கப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது தொற்று அதிகரித்து வருவதால் தினசரி பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்து தற்போது 800 பேருக்கு எடுக்கப்பட்டு வருகிறது.
- ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட நகர கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது.
- இதில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட நகர கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் இன்று ஈரோடு காளை மாட்டு சிலை அருகே தர்ணா போராட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு கூட்டுறவு வங்கி ஊழியர்களின் நிலுவையில் உள்ள பிரச்சனைகளுக்கு மாநில பதிவாளர் உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி 4 . 7 . 2022 முதல் 12.8.2022 வரை தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த 18-ந் தேதி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. தர்ணா போராட்டத்திற்கு ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் கவுரவ தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார்.
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் விநாயகமூர்த்தி, மாவட்ட நகர கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் தலைவர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஊதிய தொடர்பாக பேச்சு வார்த்தை தொடங்கிட வேண்டும்.
கூட்டுறவு வங்கியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களுக்கு கருணை ஓய்வு ஊதியமாக 10,000, தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு அகவிலைப்படி உடன் கூடிய மாற்று ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவி மேலாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கு 3:1 என்கிற விகிதத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள 25 சதவீத பணியிடங்களை பதவி உயர்வுகள் மூலம் நிரப்ப வேண்டும்.
எஸ்.ஆர்.பி மூலம் 2015-16 ஆண்டுகளில் கூட்டுறவு வங்கிகளில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்களின் பணி மூப்பு பட்டியல் உடனடியாக வெளியிட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர்.
- கொடுமுடி மகுடேசுவரர் வீர நாராயணப்பெருமாள் கோவிலில் ஆடிப்பூர லட்சார்ச்சனை விழா தொங்கியது.
- இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
கொடுமுடி:
கொடுமுடி மகுடேசுவரர் வீர நாராயணப்பெருமாள் கோவிலில் ஆடிப்பூர லட்சார்ச்சனை விழா வெகு விமரிசையுடன் தொங்கியது.
இதனையொட்டி வீரநாராயணப் பெருமாள் கோவில் வளாகத்தில் காலையில் ஸ்ரீ சுதர்சன் ஹோமம், ஸ்ரீ லட்சுமி குபேர ஹோமம் நடைபெற்றது. பின்னர் மாலை 4 மணிக்கு ஆடிப்பூர லட்சார்ச்சனை விழா தொடங்கியது.
கோவில் தலைமை பட்டாச்சாரியார் ஸ்ரீதர் மற்றும் ராஜா ஆகியோர் தலைமையில் வேத விற்பன்னர்களை கொண்டு லட்சார்சனை நடத்தப்பட்டது. வருகின்ற 1-ந் தேதி (திங்கட்கிழமை) ஆடிப்பூரம் அன்று காலை லட்சார்ச்சனை விழா நிறைவு பெறுகின்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சுகுமார் (கூடுதல் பொறுப்பு) தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
- புதிதாக கல்குவாரி அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் டி.என்.பாளையத்தில் ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.
- கொங்கர்பாளையம் ஊராட்சியை சேர்ந்த கோவிலூர், வினோபாநகர் கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
டி.என்.பாளையம்:
டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கவுண்டன்பாளையம் வனப்பகுதியையொட்டிய பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஒருவர் புதிதாக கல்குவாரி அமைக்க அரசிடம் அனுமதி கேட்டு இருந்தார்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் டி.என்.பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.
கோபி தாசில்தார் ஆசியா, மாவட்ட சுற்றுச்சூழல் துறை பொறியாளர் உதயகுமார், சத்தியமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் புதிதாக அமைய உள்ள கல்குவாரி பற்றிய விபரங்களை அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கல்குவாரி அமைத்தால் நிலநடுக்கம் ஏற்படும், புலிகள் காப்பகம் என்பதால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் மற்றும் அணை பகுதிகள் பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஊராட்சி மன்றம் மற்றும் பொதுமக்கள் சிலர் கல்குவாரி அமைக்க ஆதரவும் தெரிவித்தனர். முடிவில் அதிகாரிகள் இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் எனக் கூறினர்.
குண்டேரிப்பள்ளம் பாசன விவசாயிகள் உள்பட கொங்கர்பாளையம் ஊராட்சியை சேர்ந்த கோவிலூர், வினோபாநகர் கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
- ஈரோடு அருகே கடுமையான வயிற்று வலியால் மனமுடைந்த கல்லூரி மாணவி விஷம் தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
- இது குறித்து தாலூகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு, ஜூலை. 29-
ஈரோடு அருகே செட்டிபாளையம் அண்ணாநகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மகள் அபிராமி (20).
இவர் திண்டலில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பி.பி.ஏ. படித்து வந்தார். கடந்த சில மாதங்களாக அபிராமிக்கு வயிற்று வலி பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று கடுமையான வயிற்று வலி வந்ததால் மனமுடைந்து எலி பேஸ்ட் (விஷம்)தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் பெற்றோர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அபிராமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தாலூகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஈரோடு மாவட்டத்தில் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
- இதில் 85 ஆயிரத்து 485 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு:
தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த 12 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா முதல் தவணை மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
மேலும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு அதன் மூலமும் பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான மக்களுக்கு கோவேக்சின், கோவிஷில்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் முதலில் 9 மாதம் கழித்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டது. தற்போது 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திய வர்களுக்கு 6 மாதம் கழித்து பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
முதலில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், முன்கள பணியாளர்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்ட, 60 வயதுக்குட்பட்ட மக்கள் அனைவருக்கும் இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி அவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
மக்கள் அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை ஆர்வத்துடன் போட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 11 லட்சத்து 57 ஆயிரத்து 895 பேர் பூஸ்டர் தடுப்பூசி போட தகுதி பெற்றுள்ளனர்.
இதில் கடந்த 26-ந் தேதி வரை 85 ஆயிரத்து 485 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இது 7 சதவீதமாகும்.
பூஸ்டர் தடுப்பூசி போட தகுதி பெற்றவர்கள் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ள சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
- வாலிபர் ஒருவர் பணத்தை சாலையில் வீசி சென்றார்.
- வாலிபரிடம் இருந்த பணத்தை கோவில் உண்டியலில் போட்டு விட்டு, வாலிபரை அந்தியூர் செல்லும் பஸ்சில் அனுப்பி வைத்தனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் 33 குக்கிராமங்கள் உள்ளன. இதில் கிழக்கு மலைப்பகுதியான மடம் என்ற பகுதியில் சுமார் 25 மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தனது கைகளில் 500, 200, 100, 50, 10 ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் வைத்துக்கொண்டு சாலையில் நடந்துகொண்டு வீசி சென்றார்.
இதைப்பார்த்த மலைவாழ் மக்கள் அதிர்ச்சி அடைந்து அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதையடுத்து பொதுமக்கள் சாலையில் வீசி சென்ற பணத்தை மீட்டு வாலிபரை பிடித்து வைத்தனர். பின்னர் இதுகுறித்து பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் அந்த வாலிபரிடம் பணம் எங்கிருந்து வந்தது? உனது பெயர் என்ன? என்று கேட்டனர். அதற்கு அந்த வாலிபர் பதில் எதுவும் சொல்லாமல் மவுனமாக இருந்தார்.
பின்னர் போலீசார் அந்தப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் விசாரித்தபோது பணத்துடன் இருந்த வாலிபர் மடம் பகுதியில் இருந்த ஒரு கோவில் அருகே நீண்ட நேரமாக இருந்ததாக தெரிவித்தனர். எனவே அந்த வாலிபர் கோவிலில் இருந்து பணத்தை எடுத்திருக்கலாம் என்று கூறினர்.
இதையடுத்து அந்த வாலிபரிடம் இருந்த பணத்தை கோவில் உண்டியலில் போட்டு விட்டு அந்த வாலிபரை அந்தியூர் செல்லும் பஸ்சில் அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு:
ஈரோடு தெற்கு கோட்டத்திற்கு உட்பட்ட வெண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
இதனால் வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட், நொச்சிகாட்டு வலசு, சோலார், சோலார் வலசு, நகராட்சி நகர், ஜீவா நகர், போக்குவரத்து நகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல் துறை, கருக்கம்பாளையம், நாடார் மேடு (முழுவதும்), 46 புதூர் (16 ரோடு பகுதி) மற்றும் சாஸ்திரி நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் முத்துவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
- மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு கவுரவ நிதி திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.
- இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள மொடக்குறிச்சி வட்டார விவசாயிகளுக்கு இதுவரை 11 தவணை உதவித்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு:
மொடக்குறிச்சி வேளாண் உதவி இயக்குனர் வேலுசாமி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு கவுரவ நிதி திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் நிலம் உள்ள அனைத்து விவசாயிக ளுக்கும் விவசாய நிதி தேவைக்காக 4 மாதங்களுக்கு ஒரு முறை தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள மொடக்குறிச்சி வட்டார விவசாயிகளுக்கு இதுவரை 11 தவணை உதவித்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போது 12-வது தவணை தொகை பெறுவதற்கு வரும் 31-ந் தேதிக்குள் விவசாயிகள் தங்களது நில ஆவணங்களை சரி பார்ப்பு பணிக்கு வழங்க வேண்டும்.
இப்பணி மொடக்குறிச்சி வட்டார வேளாண் உதவி இயக்குனர் மற்றும் தோட்ட க்கலை உதவி இயக்குனர் மூலம் மேற்கொள்ள ப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் நில ஆவணங்களை தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண் அலுவ லர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்களிடம் சமர்பித்து கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்கு முன்பே தங்களுக்கு நிலம் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
நில ஆவணங்களை உறுதி செய்த பின்னரே அடுத்த தவணை தொகை விடுவிக்கப்படும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- சென்னிமலை அருகே வீட்டில் இருந்த ரூ.80 ஆயிரம் மதிப்பிலான பணம், நகை திருட்டு.
- இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னிமலை:
சென்னிமலை- ஊத்துக்குளி ரோடு புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்தான கிருஷ்ணன் (58). விவசாயி. இவரது மனைவி விஜய குமாரி. இந்த கிராமத்தில் இவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் வீடு உள்ளது. விஜயகுமாரியின் தம்பி கிருஷ்ணமூர்த்தி வீட்டை பராமரித்து வருகிறார்.
கணவன்-மனைவி 2 பேரும் கடந்த 25 ஆண்டு களாக புதுச்சேரியில் குடியிருந்து வருகின்றனர். ஆண்டுக்கு ஒரு சில முறை மட்டும் அவர்கள் சொந்த ஊருக்கு வருவார்கள். அப்போது அவர்கள் தோட்டத்தின் வீட்டில் தங்குவது வழக்கம்.
இந்நிலையில் அந்த வீட்டின் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் பூஜை செய்வதற்காக சென்னிமலையை சேர்ந்த சம்பந்த குருக்கள் அங்கு வந்தார். அப்போது சந்தானகிருஷ்ணனின் வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து வீட்டை பராமரித்து வரும் கிருஷ்ணமூர்த்தியிடம் தகவல் சொன்னார். இதையடுத்து அவர் அங்கு சென்று பார்த்த போது வீட்டின் பீரோ, உள் லாக்கர் ஆகியவை உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது.
அப்போது வீட்டில் இருந்த ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் அரை பவுன் எடையுள்ள 3 மூக்குத்திகள் மற்றும் 10 ராசி கற்கள் ஆகியவை திருட்டுப் போனது தெரியவந்தது. திருட்டுப்போன பணம் மற்றும் பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.80 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து சென்னி மலை போலீசில் கிருஷ்ண மூர்த்தி புகார் செய்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு திருட்டு பற்றி ஆய்வு செய்யப்பட்டது.
இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சத்தியமங்கலத்தில் வனத்துறையினர் சார்பில் புலிகள் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது.
- இந்த பேரணியை பவானிசாகர் வனச்சரக சிவக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சத்தியமங்கலம்:
சர்வதேச புலிகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து சத்தியமங்கலத்தில் வனத்துறையினர் சார்பில் புலிகள் குறித்த விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது.
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய இந்த பேரணியை பவானிசாகர் வனச்சரக சிவக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் கலந்து கொண்ட மாணவர்கள் புலிகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடியும், முகத்தில் புலி மாஸ்க் அணிந்தும் பேரணியாக சென்றனர்.
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய பேரணி வடக்குப்பேட்டை, ஆற்றுப்பாலம், பஸ்நிலையம் வாய்க்கால் மேடு வழியாக மாவட்ட வன அலுவலகத்தை அடைந்தது.
இந்த பேரணியில் சத்தியமங்கலம் வன அலுவலர் தீபக்குமார் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






