என் மலர்
உள்ளூர் செய்திகள்

பர்கூர் மலைப்பகுதியில் ரோட்டில் ரூபாய் நோட்டுகளை வீசி சென்ற வாலிபரால் பரபரப்பு
- வாலிபர் ஒருவர் பணத்தை சாலையில் வீசி சென்றார்.
- வாலிபரிடம் இருந்த பணத்தை கோவில் உண்டியலில் போட்டு விட்டு, வாலிபரை அந்தியூர் செல்லும் பஸ்சில் அனுப்பி வைத்தனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் 33 குக்கிராமங்கள் உள்ளன. இதில் கிழக்கு மலைப்பகுதியான மடம் என்ற பகுதியில் சுமார் 25 மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தனது கைகளில் 500, 200, 100, 50, 10 ரூபாய் நோட்டுகளை அதிக அளவில் வைத்துக்கொண்டு சாலையில் நடந்துகொண்டு வீசி சென்றார்.
இதைப்பார்த்த மலைவாழ் மக்கள் அதிர்ச்சி அடைந்து அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதையடுத்து பொதுமக்கள் சாலையில் வீசி சென்ற பணத்தை மீட்டு வாலிபரை பிடித்து வைத்தனர். பின்னர் இதுகுறித்து பர்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் அந்த வாலிபரிடம் பணம் எங்கிருந்து வந்தது? உனது பெயர் என்ன? என்று கேட்டனர். அதற்கு அந்த வாலிபர் பதில் எதுவும் சொல்லாமல் மவுனமாக இருந்தார்.
பின்னர் போலீசார் அந்தப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் விசாரித்தபோது பணத்துடன் இருந்த வாலிபர் மடம் பகுதியில் இருந்த ஒரு கோவில் அருகே நீண்ட நேரமாக இருந்ததாக தெரிவித்தனர். எனவே அந்த வாலிபர் கோவிலில் இருந்து பணத்தை எடுத்திருக்கலாம் என்று கூறினர்.
இதையடுத்து அந்த வாலிபரிடம் இருந்த பணத்தை கோவில் உண்டியலில் போட்டு விட்டு அந்த வாலிபரை அந்தியூர் செல்லும் பஸ்சில் அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






