என் மலர்
ஈரோடு
- 2 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.
- ஏராளமான ஏக்கரில் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
மண்ணச்சநல்லூர்:
மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள வாத்தலை கிராமத்தில் அய்யன் வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் முகொம்பு காவேரி ஆற்றில் இருந்து காவேரி, கொள்ளிடம் மற்றும் பாசனத்திற்காக புள்ளம்பாடி, அய்யன் என 2 பாசன வாய்க்காலாக பிரிகிறது.
வாத்தலை அருகே மனப்பாளையம், வேப்பந்துறை என 2 குக்கிராமங்கள் உள்ளன. இந்த 2 கிராமங்களை இணைக்கும் வகையில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் கிராம மக்கள் பயன்பாட்டிற்காக அய்யன் வாய்க்கால் குறுக்கே தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டு அதனை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
மேலும் தற்போது சில நாட்களாகவே பெய்ந்து வரும் மழையால் தரைபாலத்தில் சிறிது மழை நீர் தேங்கி இருந்தது. இந்த நிலையில் கொல்லிமலையில் கனமழை பெய்தது. இதனால் நீர்வரத்து அதிகரித்ததை அய்யன் வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக மக்கள் பயன்பாட்டிற்கு இருந்த தற்காலிக தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது.
இதனால் 2 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. அங்கு வசிக்கும் பொதுமக்கள் 7 கி.மீ தொலைவு வரை சுற்றி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் அய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அருகில் உள்ள வயல்வெளியில் தண்ணீர் சூழ்ந்து ஏராளமான ஏக்கரில் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சாலை விரிவாக்கம் செய்வதற்காக கரட்டடிபாளையம் மாரியம்மன் கோவில் இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டது.
- பணியாளர்கள் மூலம் கோவிலை இடிக்கும் பணி நடைபெற்றது.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையம் சத்தி-ஈரோடு மெயின் ரோட்டில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்வர்கள்.
இதையடுத்து ரோடு விரிவாக்கம் பணி செய்வதற்காக அந்த மாரியம்மன் கோவிலை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து இரு பிரிவினருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பொது மக்களிடம் சமரசம் செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாரியம்மன் கோவிலில் இருந்து அம்மன் சிலை, விநாயகர் சிலை மற்றும் உலோக சிலைகள் அகற்றப்பட்டது.
இந்த சாமி சிலைகள் கோபி அடுத்த பாரியூர் ஆதிநாராயண பெருமாள் கோவிலில் உள்ள பாதுகாப்பு அறையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அந்த அறை பூட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இதையடுத்து கரட்டடிபாளையம் மாரியம்மன் கோவில் மற்றும் சாமி சிலைகள் வைக்கப்பட்டு உள்ள பரியூர் ஆதி நாராயண பெருமாள் கோவில் என ஆகிய 2 கோவில்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் சாலை விரிவாக்கம் செய்வதற்காக கரட்டடிபாளையம் மாரியம்மன் கோவில் இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து இன்று காலை 6 மணி அளவில் நெடுஞ்சாலை துறையினர், வருவாய் துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
இதையடுத்து அவர்கள் முன்னிலையில் எந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பணியாளர்கள் மூலம் கோவிலை இடிக்கும் பணி நடைபெற்றது. தொடர்ந்து காலை கோவில் முழுவதும் இடித்து அகற்றப்பட்டது. இது பற்றி தகவல் கிடைத்ததும் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- பள்ளி குழந்தைகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
- குறுகலான சாலையில் வேன் இயக்கப்பட்டதால் விபத்து.
அம்மாப்பேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூர் பகுதியில் எம்.ஏ.எம். எக்ஸல் என்ற ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதி களை சேர்ந்த மாணவர்கள் பலர் படித்து வருகிறார்கள். அவர்களில் பலர் பள்ளி வேனில் அழைத்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பள்ளியில் படிக்கும் மாணவர்களை இன்று காலை வேனில் ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தது.
இதையடுத்து அந்த பள்ளி வேன் அம்மா பேட்டையில் இருந்து ஊமாரெட்டியூர் செல்லும் சாலையில் அரசு கால்நடை மருத்துவமனை வழியாக பள்ளி வேன் ஓட்டுநர் அம்மாபேட்டையை சேர்ந்த குணசேகரன் (வயது 38) என்பவர் வேனை ஓட்டி சென்று கொண்டு இருந்தார்.
அப்போது சாலையில் சிறிய அளவிலான வளைவில் திருப்பும் போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் வலது புறம் சாலையை ஒட்டி உள்ள கரும்பு தோட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்கு ள்ளானது.
இந்த விபத்தில் பள்ளி வேனில் பயணம் செய்த பள்ளி குழந்தைகள் 10-க்கும் மேற்பட்டவர்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இதை கண்ட பள்ளி குழந்தைகள் கதறி அலறினர்.
இது பற்றி தகவல் அறிந்து அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்சு தகவல் கொடுத்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வாகனம் வருவதற்கு கால தாமதம் ஆனதாக கூறப்படுகிறது. அதற்குள் தகவல் கிடைத்ததும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து தங்கள் குழந்தைகள் விபத்தில் சிக்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பள்ளி வாகனத்தில் இருந்து தங்களது குழந்தைகளை மீட்டு இரு சக்கர வாகனங்களில் ஏற்றிக்கொண்டு அருகே உள்ள அம்மா பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு முதல் உதவி சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து பள்ளி குழந்தைகள் மேல் சிகிச்சைக்காக அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அம்மாபேட்டை அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான சம்பவம் பெற்றோர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் குறுகலான சாலையில் அதிக நீளமுடைய பள்ளி வேன் இயக்கப்பட்டதால் விபத்து நிகழ்ந்திருப்பதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தகவல் அறிந்து வந்த அம்மாபேட்டை போலீசார் விபத்திற்கு உள்ளான பள்ளி வேனை, கிரேன் எந்திரம் கொண்டு வந்து அப்புறப்படுத்தி விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
- வனத்துறையினர் யானைகள் ஊருக்குள் புகாதவாறு தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- யானைகள் ஊருக்குள் புகாதவாறு பட்டாசுகளை வெடித்து வருகிறோம்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு தாளவாடி, திம்பம் மலைப்பகுதியில் யானைகள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி அருகே உள்ள அருள்வாடி கிராமத்தில் நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து சுமார் 40-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் அருள்வாடி கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதிக்கு வந்தது.
இதை பார்த்த பொதுமக்கள் 40 யானைகள் ஊருக்குள் வந்து விடும் என அச்சத்தில் இது குறித்து வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் யானைகள் ஊருக்குள் புகாதவாறு தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, தற்பொழுது யானைகள் இடம்பெறும் காலம் என்பதால் யானைகள் கூட்டம் கூட்டமாக கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழக வனப்பகுதிக்கு வருகின்றது. அதே
போன்றுதான் கர்நாடக மாநிலத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் தாளவாடி வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. தொடர்ந்து யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம்.
யானைகள் ஊருக்குள் புகாதவாறு பட்டாசுகளை வெடித்து வருகிறோம். வனப்பகுதி ஒட்டி ஏராளமான மலை கிராமங்கள் உள்ளதால் மலை கிராம மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இரவு நேரம் தனியாக எங்கும் செல்ல வேண்டாம். சாலையோரம் முப்புதர்களில் யானைகள் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும் என்றனர்.
- தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ஈரோடு பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், குடோன்கள் கடையடைப்பில் பங்கேற்பார்கள்.
ஈரோடு:
மத்திய அரசு கடை வாடகைக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பை கடந்த அக்டோபர் மாதம் 10-ந்தேதி முதல் அமலாக்கி உள்ளது. இந்த முறையால் வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், இந்த வரி விதிப்பு முறையை முழுமையாக நீக்கம் செய்யக்கோரி வருகிற 29ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் கடையடைப்பு நடத்த அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடந்த நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார்.
பொதுச்செயலாளர் ரவிசந்திரன், பொருளாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தனர். இதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வாடகைக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பினை கண்டித்து வருகிற 29-ந்தேதி ஈரோடு மாவட்டம் முழுவதிலும் ஒரு நாள் கடையடைப்பு, தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் நிர்வாகிகள் கூறியதாவது:-
அனைத்து வகை வாடகை கட்டடங்கள், கடைகளுக்கு, 18 சதவீத ஜி.எஸ்.டி என்பது வணிகர்களை கடுமையாக பாதிக்கும். ரூ.10 ஆயிரம் வாடகையில் கடை நடத்தும் வியாபாரி ரூ.1,800 செலுத்த வேண்டி வரும். பெரிய வியாபாரிகள், வணிகர்கள், ஜிஎஸ்டி.யை 'இன்புட்' என்ற ரீதியில் திரும்ப பெற இயலும்.
குறைந்த வர்த்தகத்தில் தொழில் செய்யும், 'கன்சல்டேட்டேட்' முறையில் ஜி.எஸ்.டி.யாக, 1 சதவீதம் செலுத்தும் வணிகர்கள், 18 சதவீத ஜி.எஸ்.டி தொகையை திரும்ப பெற இயலாது. தவிர மிக மிக குறைந்த அளவிலும், பில் இன்றி பரிமாற்றம் செய்யப்படும் வணிகத்தில் உள்ளோரும் கடுமையாக பாதிப்பார்கள்.
எனவே 18 சதவீத ஜி.எஸ்.டி.யை வணிகர்களுக்கு முழுமையாக நீக்க கோரி வருகிற 29-ந் தேதி ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தை ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேசன் மற்றும் இதனுடன் இணைந்த அமைப்புகளும் நடத்துகிறது. ஈரோடு பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள், குடோன்கள் கடையடைப்பில் பங்கேற்பார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த போராட்டத்திற்கு ஈரோடு நகை வியாபாரிகள் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் பல்வேறு சங்கத்தினரும் அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
- 20-க்கும் அதிகமான சேவல்கள், 10-க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகள் இறந்து கிடந்தது.
- நாய்கள் அங்கு இருந்த சேவல்கள், கோழிகளை கடித்து இறந்தது தெரிய வந்தது என்றார்.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா நெருஞ்சிப்பேட்டை குண்டாங்கல் தோட்டத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 44). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் குருவரெட்டியூர் அடுத்த பாலமலை அடிவாரத்தில் உள்ளது.
அங்கு சிறிய அளவில் கொட்டகை மற்றும் கம்பி வேலி அமைத்து அதில் 200-க்கும் மேற்பட்ட நாட்டு சேவல் மற்றும் கோழிகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.
இந்த நிலையில் வழக்கம் போல் கோழிகளை இரவு கொட்டகையில் அடைத்து விட்டு வீட்டிற்கு சென்று
விட்டார். இதையடுத்து காலை தோட்டத்திற்கு வந்தார். அப்போது, கோழிகள் ஆங்காங்கே உயிரிழந்த நிலையில் ரத்த காயங்களுடன் கிடந்ததுள்ளன. இதனை கண்டு விவசாயி முருகேசன் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ஆரியாகவுண்டனுார் வி.ஏ.ஓ. வீரமுத்துவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.
இதுகுறித்து விவசாயி முருகேசன் கூறும் போது,
இந்த பகுதியிவல் கடந்த 10 ஆண்டுகளாக கொட்டகை அமைத்து சுற்றிலும் கம்பிவேலி போட்டு கட்டு சேவல், நாட்டுக்கோழி வளர்த்து வருகிறேன். இதை தொடர்ந்து கொட்டகையில் அடைத்து வைத்திருந்த 20-க்கும் அதிகமான சேவல்கள், 10-க்கும் மேற்பட்ட நாட்டுக்கோழிகள் இறந்து கிடந்தது.
கம்பிவேலிக்கு அடியில், துளையிட்டு உள்ளே நுழைந்த நாய்கள் அங்கு இருந்த சேவல்கள், கோழிகளை கடித்து இறந்தது தெரிய வந்தது என்றார்.
மேலும் இதுகுறித்து கொளத்தூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோழிகளை வெறிநாய் கடித்ததா அல்லது மர்ம விலங்குகள் ஏதேனும் கடித்ததா என்பது குறித்தும், சேலம் மாவட்டம் கொளத்தூர் வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
- சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
- மக்களுக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு அதிகரித்துள்ளது.
ஈரோடு:
தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை பரவலாக செய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு, டைபாய்டு, மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல், சளி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நாள்தோறும் சளி, காய்ச்சல் பாதிப்புடன் ஏராள மானோர் சிகிச்சை பெற வருகின்றனர்.
குறிப்பாக மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பிரிவில் நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதில் டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல் அறிகுறி கண்டறியப்பட்டு அவர்களுக்கு அரசு மருத்துவ மனைகளில் காய்ச்சல் வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 20 நாட்களில் மட்டும் ஈரோடு மாநகராட்சி பகுதியில் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் தற்போது சுகாதாரத் துறையினர் கண்காணிப்பில் உள்ளனர்.
இது குறித்து மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர்.கார்த்திகேயன் கூறியதாவது:-
ஈரோடு மாநகராட்சியில் 11 நகர்புற சுகாதார நிலையம், 17 நகர்புறநல வாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழையால் மாநகராட்சி பகுதியில் நான்கு மண்டல பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும் போதுமான மருந்துகள் இருக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதில் கடந்த 20 நாட்களில் மட்டும் 4 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் வசிக்கும் பகுதியில் மக்களுக்கு காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு உள்ளதா என கண்டறியும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது.
நோய் பாதிப்பு கண்டறியப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியில் கொசு மருந்து ஒழிப்பு மற்றும் காய்ச்சல் கண்டறியும் முகாமும் நடத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு குறைவு தான். டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பனி மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளிலும் தீவிர படுத்தப்பட்டுள்ளது.
மக்கள் முடிந்த அளவு வீடுகளில் தண்ணீர் தேங்கி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மழைக்காலம் என்பதால் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். காய்ச்சல் இரும்பல், சளி இருந்தால் சுயமாக மருந்து எடுத்துக் கொள்ளாமல் அருகில் இருக்கும் மருத்துவர்களை கலந்து ஆலோசித்து மருத்துவர்கள் கூறும் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆண்டு ஒன்றுக்கு 30 முதல் 35 உடல்கள் சத்தியமங்கலம் கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய நிலை உள்ளது.
- 2021-ம் ஆண்டு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் மருத்து பெட்டகத்தை பொதுமக்களுக்கு கொடுத்து தொடங்கி வைத்தார்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் ஆசனூர் அடுத்த அரேப்பாளையம் மைராடா வளாகத்தில் திராவிட கழகத்தலைவர் கி.வீரமணியின் 92-வது பிறந்தநாளை முன்னிட்டு பழங்குடி மக்களுக்கான இலவச மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், வீட்டுவசத்தித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பெரியார் மருத்துவர் அணி, திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் திருச்சி அஸ்வமித்ரா புற்றுநோய் மருத்துவமனை ஆகியவை ஒருங்கிணைந்து கி.வீரமணியின் 92-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தாளவாடி ஆசனூர் பகுதியில் மருத்துவ முகாம் தொடங்கப்பட்டது.
இப்பகுதியில் 118 கிராமங்கள் உள்ளன. இதில் 47 கிராமங்களில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். நாங்கள் கடந்த முறை வந்த போது இப்பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இப்போது அந்த கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக தாளவாடி பகுதியில் அரசு மருத்துவமனையில் ஒரு பிணவறை வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மலைப்பகுதியில் மாதத்திற்கு 2 அல்லது 3 இறப்பு ஏற்படுகிறது. அந்த உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆண்டு ஒன்றுக்கு 30 முதல் 35 உடல்கள் சத்தியமங்கலம் கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய நிலை உள்ளது.
எனவே தாளவாடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிணவறை கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இன்று நானும் அமைச்சர் முத்துசாமியும் ஸ்டேஷன் நகரில் ஒரு துணை சுகாதார நிலையம், தாளவாடியில் ஒரு பிணவறை கட்டிடம், உக்கரம் நகரில் ஒரு பொது சுகாதார கட்டிடம், புஞ்சை புளியம்பட்டியில் ஒரு செவிலியர் குடியிருப்பு, நம்பியூரில் ஒரு பொது சுகாதார கட்டிடம், திங்களூரில் ஒரு பொது சுகாதார கட்டிடம், பவானியில் மண் தொழிலாளர் பகுதியில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் என ரூ.3 கோடியே 31 லட்சம் மதிப்பிலான 7 கட்டிடங்களை திறந்து வைத்துள்ளோம்.
தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி இந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 1333 கட்டிடங்கள் புதிய கட்டித் தரப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையை பொறுத்தவரை 8 ஆயிரத்து 713 துணை சுகாதார நிலையங்கள், 2 ஆயிரத்து 286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு அறிக்கை வெயிட்டுள்ளார். அதில் 2023-ம் ஆண்டு தவறான சிகிச்சையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். எலி மருந்துக்கு பதிலாக மாற்ற ஊசி போடப்பட்டது என கூறும் அவரிடம் போய் சொல்லுங்கள் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 12 ஆயிரத்து 317 பேர் இதய நோயாளிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
2021-ம் ஆண்டு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் மருத்து பெட்டகத்தை பொதுமக்களுக்கு கொடுத்து தொடங்கி வைத்தார். இன்றுடன் அந்த திட்டத்தில் 2 கோடி பொதுமக்கள் பயனடைந்துள்ளனர். வரும் 29-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 2 கோடியாவது பயனாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பைக்கை ஓட்டி வந்த குருசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த அய்யகவுண்டன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி (வயது 73) விவசாயி. இவரது மனைவி சரஸ்வதி (72). இவர்களுக்கு பெரியசாமி (50) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இன்று காலை குருசாமி தனது மனைவி சரஸ்வதியுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிலிருந்து கிளம்பி மொடக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
வண்டியை குருசாமி ஓட்ட பின்னால் சரஸ்வதி அமர்ந்திருந்தார். இவர்கள் ஈரோடு-முத்தூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அய்யகவுண்டன்பாளையம் அருகே செல்லும் போது சாலையில் பனி மூட்டமாக இருந்ததால் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியவில்லை.
குமாரசாமி ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் ரோட்டின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நஞ்சை ஊத்துக்குளி தனியார் தீவன ஆலைக்கு சொந்தமான வேன் மீது பயங்கரமாக மோதியது. இதில் பைக்கை ஓட்டி வந்த குருசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். மனைவி சரஸ்வதிக்கு காலில் காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மொடக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குமாரசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் காயம் அடைந்த சரஸ்வதியை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பல்வேறு ரசாயன வேதிப்பொருட்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
- மாசுபட்டு வரும் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா, பட்டக்காரன்பாளையம் கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் பிரபல தனியார் பால் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யும் பாலை பதப்படுத்தி பாக்கெட்டுகளில் அடைத்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கிறது.
அதுமட்டுமின்றி தயிர், மோர், வெண்ணெய், பன்னீர், மசாலா பால், மசாலா மோர் போன்றவற்றை தயாரிப்பு பிளாஸ்டிக் கப்புகளில் அடைத்து விற்பனை செய்து வருகிறது. இது தவிர பல்வேறு நிறங்களில் உயர்தரமான ஐஸ்கிரீம் வகைகளையும் உற்பத்தி செய்து நாடு முழுவதும் விற்பனைக்காக அனுப்பி வைக்கிறது. விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் பாலை சுத்திகரித்து, கெட்டுப்போகாமல் பதப்படுத்த பல்வேறு ரசாயன வேதிப்பொருட்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
இவ்வாறு ரசாயனங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பால் மற்றும் அதன் உற்பத்தி சார்ந்த பொருட்களுக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. இருப்பினும் இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த கழிவுநீர் போர்வெல் மூலமாக பூமிக்குள் இறங்குவதாக புகார் எழுந்துள்ளது.
இந்த ரசாயனம் கலந்த கழிவுநீர் நிலத்தடிநீரை பெரிதும் மாசுபடச் செய்கிறது என்றும், இதன் காரணமாக இந்த பகுதியை சுற்றியுள்ள பல கிணறுகளின் தண்ணீரை எதற்கும் பயன்படுத்த முடியவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இங்குள்ள கிராமங்களில் உள்ள கிணறுகளின் தண்ணீர் பால் போன்று வெள்ளை நிறத்தில் மாறி விட்டதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
அண்மைகாலமாக பெருமாபாளையம், சுள்ளி பாளையம், கணக்கம் பாளையம், பள்ளக்காட்டூர், பட்டக்காரன்பாளையம், மலை சீனாபுரம், ஓலப்பாளையம் போன்ற கிராம பகுதிகளில் உள்ள கிணறுகளின் தண்ணீர் வெள்ளை நிறத்தில் பால் போன்று காட்சியளிக்கிறது. இந்த தண்ணீரில் ரசாயனம் கலந்த பால் வாடை தான் அதிகமாக இருக்கிறது. இந்த தண்ணீரை குடிப்பதற்கோ, விவசாயத்திற்கோ பயன்படுத்த முடியவில்லை. அருகில் உள்ள பிரபல பால் கம்பெனியில் பிரமாண்டமான அளவில் பாலை பதப்படுத்தி பால் உற்பத்தி சார்ந்த பொருட்களை தயாரிக்கிறார்கள்.
இதற்காக அதிக அளவில் ரசாயன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. அப்போது வெளியாகும் ரசாயனம் கலந்த கழிவுநீர் எந்தவித சுத்திகரிப்பும் இல்லாமல் பூமிக்குள் ஆழ்குழாய் மூலம் இறக்கி விடுவதாக சந்தேகிக்கிறோம். இதன் காரணமாகவே இந்த பால் கம்பெனியை சுற்றியுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர் பெரிதும் மாசுபட்டு உள்ளது. இதுவரை நாங்கள் பயன்படுத்தி வந்த கிணற்று தண்ணீர் வெள்ளை நிறத்தில் பால் போன்று மாறிவிட்டது. அதிலிருந்து ஒருவிதமான துர்நாற்றம் கலந்த பால் வாடையும் வீசுகிறது. இதனால் சுற்று ப்பகுதியில் உள்ள கிணற்று தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை. எனவே இந்த பகுதியில் மாசுபட்டு வரும் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சிவகிரி காவல் நிலைய சரகம் பாரப்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
- போலீசார் சோதனை செய்தபோது அதில் 500 கிலோ ரேசன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
சிவகிரி:
கோவை மண்டலம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின் படி, ஈரோடு சரகம் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜபாண்டியன் மேற்பார்வையில் ஈரோடு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சுதா தலைமையில் போலீசார் சிவகிரி காவல் நிலைய சரகம் பாரப்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு ஆம்னி வேன் வந்தது. அந்த ஆம்னிவேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது அதில் 500 கிலோ ரேசன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து வேனில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது அவர்கள் ஈரோடு மாவட்டம் கொடுமுடி, வி.அருக்கம்பாளையம், போற காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்த ரவி(34), திருப்பூர் மாவட்டம் முத்தூர் ரோடு அரிமொழி நகரைச் சேர்ந்த சுரேஷ் (40) ஆகியோர் என்பதும், இவர்கள் ரேசன் அரிசியை ஒத்தப்பனை, தாண்டாம்பாளையம் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் வாங்கி 3 ரோடு எம்மாம்பாளையம் பகுதியில் உள்ள நார் மில் மற்றும் ஸ்பின்னிங் மில்களில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பதற்காக வாங்கி ஆம்னி வேனில் கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்து.
இதனையடுத்து ரவி மற்றும் சுரேஷை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 500 கிலோ ரேசன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆம்னி வேனையும் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
- வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளும் நிரம்பியுள்ளன.
- தாளவாடி, கடம்பூர் வனப்பகுதியில் யானை, புலிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
கடந்த சில நாட்களாக திம்பம், தாளவாடி, ஆசனூர், கடம்பூர் வனப்பகுதியில் மழை பரவலாக பெய்து வருவதால் வனப்பகுதியில் பசுமையான சூழ்நிலை உள்ளது. மரம், செடி, கொடிகள் பசுமையாக காட்சியளிக்கின்றன. வனப்பகுதியில் உள்ள நீர் நிலைகளும் நிரம்பியுள்ளன.
இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்த கடம்பூரில் இருந்து குத்தியாலத்தூர் செல்லும் சாலையில் வாகன ஓட்டிகள் சென்று கொண்டு இருந்தனர். அப்போது குத்தியாலத்தூரில் வனப்பகுதியில் இருந்து சாலையை கடந்து ஒரு புலி மற்றொரு வனப்பகுதிக்கு சென்றது.
இதை கண்ட வாகன ஓட்டிகள் பீதியடைத்தனர். பின்னர் தங்களது வாகனங்களை சிறிது தூரம் முன்பே நிறுத்தி விட்டனர். அந்த புலி மெதுவாக சாவகாசமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலையில் சிறிது தூரம் நடமாடி பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
புலி வனப்பகுதிக்குள் சென்றவுடன் வாகன ஓட்டிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர். புலி சாலையை கடந்து செல்லும் காட்சியை வாகன ஓட்டி ஒருவர் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தாளவாடி, கடம்பூர் வனப்பகுதியில் யானை, புலிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தற்போது குத்தியாலத்தூர் வனப்பகுதியில் புலி நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் இந்த பகுதியை கடந்து செல்லும் போது கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் சொல்லும் வாகன ஓட்டிகள் எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் என்றனர்.






