என் மலர்
ஈரோடு
- ஒரே ஆட்சியில் மூன்றாவது முறையாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் வாக்களிக்க போகின்றனர்.
- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 14-ந்தேதி காலமானார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவித்து தேர்தல் ஆணையத்துக்கு சட்டசபை செயலகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து ஜனவரி அல்லது பிப்ரவரியில் டெல்லிக்கு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலோடு ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தமிழக தேர்தல் வரலாற்றில் ஒரே ஆட்சியில் மூன்றாவது முறையாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் வாக்களிக்க போகின்றனர்.
முன்னதாக, 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் இரண்டாவது மகனான ஈவேரா திருமகன் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன் முறையாக சட்டசபைக்குள் நுழைந்தார். இருப்பினும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதன் பின் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சமீபத்தில், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 14-ந்தேதி காலமானார்.
- ஈரோடு சோலார் புதிய பஸ் நிலையத்தில் நடக்கும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
- சோலாரில் ரூ.18 கோடியே 48 லட்சம் செலவில் கட்டப்பட உள்ள காய்கறி, பழங்கள், மளிகை என மொத்த சந்தை வளாகம் கட்டும் பணியை தொடங்கி வைக்கிறார்.
ஈரோடு:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம்தோறும் கள ஆய்வு செய்து அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி வளர்ச்சி குறித்து பேசி வருகிறார்.
அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்துக்கு வருகிற 19-ந்தேதி, 20-ந் தேதி என 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 19-ந் தேதி (வியாழக்கிழமை) சென்னையில் இருந்து காலை 10 மணி அளவில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து சாலை வழியாக ஈரோட்டுக்கு அங்கு 20-க்கும் மேற்பட்ட இடங்களில் முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் மதியம் 1 மணிக்கு முதலச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு விருந்தினர் மாளிகைக்கு சிறிது ஓய்வு எடுக்கிறார்.
பின்னர் மாலை 5 மணி அளவில் மேட்டுக்கடை பகுதியில் தங்கம் மகாலில் நடக்கும் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். மாலை 6 மணி அளவில் தி.மு.க. கொள்கை பரப்பு இணைச்செயலாளர் சந்திரக்குமார் இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்கிறார். இரவில் ஈரோடு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
அதைத்தொடர்ந்து 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு ஈரோடு சோலார் புதிய பஸ் நிலையத்தில் நடக்கும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். ஏற்கனவே முடிக்கப்பட்ட வளர்ச்சித்திட்ட பணிகளை திறந்து வைப்பதுடன், புதிய வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார்.
ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் ரூ.16 கோடி செலவில் கட்டப்பட்ட 6 தளங்கள் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகம், ஈரோடு பஸ் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாகம், நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்பட்ட வெளிவட்ட சுற்றுச்சாலை (ரிங்ரோடு), ஈரோடு வைராபாளையத்தில் அமைக்கப்பட்ட கூடுதல் உரக்கிடங்கு, சென்னிமலையில் சுத்திகரிப்பு நிலையம் போன்றவற்றை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
சோலாரில் ரூ.18 கோடியே 48 லட்சம் செலவில் கட்டப்பட உள்ள காய்கறி, பழங்கள், மளிகை என மொத்த சந்தை வளாகம் கட்டும் பணியை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து பல்வேறு துறைகளின் சார்பில் சுமார் 50 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
முதலமைச்சர் வருகையை முன்னிட்டு அமைச்சர் முத்துசாமி, மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் அதிகாரிகள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
- கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருமகன் திடீரென மரணம் அடைந்தார்.
- ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் மீண்டும் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங் கோவனின் மகன் திருமகன் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அவர் திடீரென மரணம் அடைந்தார். இதன் மூலம் 20 மாதங்கள் எம்.எல்.ஏ. வாக இருந்த திருமகன் மறைவுக்கு பிறகு கடந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றார். இவரும் சுமார் 20 மாதங்கள் மட்டுமே எம்.எல்.ஏ. பதவியில் இருந்து மரணம் அடைந்துள்ளார். இதன் மூலம் 3½ ஆண்டுகளில் 2-வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 1½ ஆண்டுகளே இருக்கும் நிலையில் இடைத்தேர்தலில் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. குறுகிய காலமே எம்.எல்.ஏ.வாக இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏதாவது ஒரு தொகுதியில் எம்.பி., எம்.எல்.ஏ.வாக இருப்பவர்கள் மரணம் அடைந்தால் அடுத்த 6 மாதத்துக்குள் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும். இதன் மூலம் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் மீண்டும் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளனர்.
- 2-ம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி தடப்பள்ளி, அரக்கன் கோட்டை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
- இன்று திறக்கப்பட்ட தண்ணீர் தொடர்ந்து 120 நாட்களுக்கு 8.5 டி.எம்.சி. அளவிற்கு வழங்கப்படும்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களில் 2-ம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் இருந்து ஆண்டு தோறும் தடப்பள்ளி, அரக்க ன்கோட்டை பாசன வாய்க்கால்களுக்கு இரண்டு போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கமாக உள்ளது.
இந்த நிலையில் 2-ம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி தடப்பள்ளி, அரக்கன் கோட்டை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். அரசு அதை ஏற்று தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை கொடிவேரி அணையில் இருந்து தடப்பள்ளி. அரக்கன்கோட்டை பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அதை பொதுப்பணித்துறை அதிகாரிகள், கொடிவேரி அணை பாசனதாரர் சங்க நிர்வாகிகள் மற்றும் கலந்து கொண்டு மதகை திருகி தண்ணீரை திறந்து விட்டனர். இதில் நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் கல்பனா, உதவி பொறியாளர்கள் குமார், ரத்தினகிரி உள்பட பலர் கலந்து கொண்டர். தண்ணீரானது சீறிப்பாய்ந்து வாய்க்காலில் சென்றது. கொடிவேரி அணை மூலம் 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் நிலையில் இன்று திறக்கப்பட்ட தண்ணீர் தொடர்ந்து 120 நாட்களுக்கு 8.5 டி.எம்.சி. அளவிற்கு வழங்கப்படும்.
உரிய காலத்தில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதைத்தொடர்ந்து பாசன சங்க நிர்வாகிகள் கூறும்போது, தமிழக அரசு தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனத்திற்கு உரிய காலத்தில் தண்ணீர் திறக்க உத்தரவிட்டதற்கு நன்றி தெரிவித்தனர்.
- கணவன்-மனைவி இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
- உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது.
ஈரோடு:
மதுரையைச் சேர்ந்த திருமலை செல்வனுக்கும், ஈரோடு, மாணிக்கம் பாளையம், முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த சுகன்யா (வயது 23) என்பவருக்கும் திருமணம் ஆகி 7 வயதில் ஒரு பெண் குழந்தையும், 4 வயதில் ஒரு மகனும் என 2 குழந்தைகள் உள்ளனர். சுகன்யா மதுரையில் கணவருடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் திருமலை செல்வன் அடிக்கடி மது அருந்திவிட்டு சந்தேகப்பட்டு சரண்யாவை அடித்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதால் சுகன்யா தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஒரு மாதத்திற்கு முன்பாக ஈரோடு மாணிக்கம் பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.
ஈரோட்டில் தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் தங்கி இருந்த சுகன்யா சாயப்பட்டறைக்கு வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு திருமலை செல்வன் மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக ஈரோடுக்கு வந்தார். சுகன்யாவை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.
அப்போது இது தொடர்பாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த திருமலை செல்வன் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை மனைவி மற்றும் இரு குழந்தைகள் மீது ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதில் சுகன்யா மற்றும் 7 வயது மகள் சுதாரித்து விலகிய நிலையில் 4 வயது மகன் மீது தீப்பிடித்தது. இதனால் மகன் வேதனையால் அலறினான்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுகன்யா கூச்சிலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர். அங்கு 70 சதவீத தீக் காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது.
இதுகுறித்து சுகன்யா ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன் பெயரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து திரு மலைச்செல்வனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- யானை கூட்டங்கள் அங்கு பயிரிடப்பட்டிருந்த ராகி பயிரை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தி உள்ளது.
- வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இவற்றில் தாளவாடி, ஆசனூர், கடம்பூர், திம்பம் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன.
அவ்வபோது யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது.
சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலை பகுதியில் உள்ள அருள்வாடி கிராமத்தை சேர்ந்தவர் சென்னப்பா. இவர் அவரது தோட்டத்தில் 4 ஏக்கர் ராகி பயிரிட்டு இருந்தார். இந்நிலையில் நள்ளிரவில் இவரது தோட்டத்தில் புகுந்த 10-க்கும் மேற்பட்ட யானை கூட்டங்கள் அங்கு பயிரிடப்பட்டிருந்த ராகி பயிரை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தி உள்ளது. சென்னப்பா இன்று காலை தோட்டத்தில் சென்று பார்த்த போது ராகி பயிரை யானை கூட்டங்கள் சேதப்படுத்தி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவர் தோட்டம் முழுக்க யானை சாணங்கள் அதிக அளவில் இருந்தன. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, கர்நாடக மாநிலத்திலிருந்து 40-க்கும் மேற்பட்ட யானை கூட்டம் தாளவாடி அடுத்த அருள்வாடி கிராமத்தில் முகாமிட்டுள்ளன.
இந்த யானை கூட்டங்கள் குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு மலை கிராமமாக சென்று பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாளவாடி அருகே உள்ள கிராமத்தில் சம்பங்கி பூந்தோட்டத்திற்குள் புகுந்த 10-க்கும் மேற்பட்ட யானைக் கூட்டங்கள் பூக்களை சேதப்படுத்தியது. அதே யானை கூட்டங்கள் தான் தற்போதும் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி இருக்கலாம் என கருதுகிறோம்.
எனவே தாளவாடி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராம மக்கள் கவனத்துடன் செல்ல வேண்டும். குறிப்பாக வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றனர்.
இந்நிலையில் விவசாயி சென்னப்பன் மற்றும் விவசாயிகள் அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் யானைகள் ஊருக்குள் புகாதவாறு பெரிய அகழி வெட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 7 ஆண்டுகளாக மிஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார்.
- நெஞ்சு வலிப்பதாக சக பணியாளர்களிடம் கூறியுள்ளார்.
அம்மாப்பேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பட்லூர் பாரதிநகரை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மகன் சரவண க்குமார் (வயது 29). இவர் பூனாச்சியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மில்லில் கடந்த 7 ஆண்டுகளாக மிஷின் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை 6 மணிக்கு வழக்கம்போல சரவணகுமார் வேலைக்கு சென்றுள்ளார்.
மில்லில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, நெஞ்சு வலிப்பதாக சகப் பணியாளர்களிடம் கூறிய சரவணக்குமார் மயங்கி கீழே விழுந்துள்ளார்.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பூனாச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த போது சரவணக்குமார் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சரவணகுமாரின் பெற்றோருக்கு தனியார் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுகுறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சரவணக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சரவணகுமாரின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று மதியம் பூனாச்சி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மில் முன்பு உயிரிழந்த சரவணகுமாரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு நிறுவனத்தை முற்றுகையிட முயன்றனர். தொடர்ந்து அவர்கள் நிறுவனத்தின் நுழைவுவாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் (பொ) தலைமையிலான போலீசார் சரவணகுமாரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டம் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் கைவிடப்பட்டது.
மேலும் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க பவானி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சந்திரசேகரன் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., இந்து முன்னணி உள்ளிட்ட இந்த அமைப்புகளின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
- இந்தக் கூட்டம் நாளை மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
ஈரோடு:
ஈரோடு வேப்பம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இந்து அமைப்புகள் பங்கேற்கும் கலந்தாய்வு கூட்டம் இன்று காலை தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் கலந்தாய்வுக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., இந்து முன்னணி உள்ளிட்ட இந்த அமைப்புகளின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் வட தமிழக ஆர்.எஸ்.எஸ். செயலாளர் ஜெகதீசன், இந்து முன்னணி காடேஸ்வர் சுப்பிரமணி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. முன்னாள் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்று உள்ளனர்.
இன்றும், நாளையும் என 2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் இந்து அமைப்புகளை வலுப்படுத்தும் வகையில் தலைமை பண்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்தக் கூட்டம் நாளை மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
- வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த காரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
- சொகுசு கார் மற்றும் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கஞ்சா பொட்டலங்களை சித்தோடு போலீசார் பறிமுதல் செய்தனர்.
சித்தோடு:
ஈரோடு மாவட்டம் பவானி கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை கேரள மாநிலத்திற்கு சொகுசு காரில் நாமக்கல் மாவட்ட எல்லையை கடந்து ஈரோடு மாவட்ட எல்லையான லட்சுமி நகர் பைபாஸ் வாகன சோதனை சாவடி வழியாக கடத்தி செல்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலை அடுத்து சித்தோடு அடுத்த லட்சுமி நகர் வாகன சோதனைச் சாவடியில் சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் பவானி போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையிலான போலீசார் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து அந்த வழியாக சென்ற அனைத்து வாகனங்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி தீவிர சோதனை செய்து வந்தனர். அப்போது கேரளா பதிவு எண் கொண்ட ஒரு கார் அந்த வழியாக வந்தது. அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டதை கண்டதும் காரில் வந்தவர் காரை தேசிய நெடுஞ்சாலையில் விட்டு சர்வீஸ் சாலையில் திருப்பி செல்ல முயன்றுள்ளார்.
இதை தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த காரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது காரின் பின்பக்க சீட்டுக்கு அடியில் ரகசிய அறை அமைத்து அதில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் காரை ஓட்டி வந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சாருங்கமகி (வயது 28) என்பதும், அவர் ஆந்திர மாநிலம் நெல்லுருவில் இருந்து 50 கிலோ எடை உள்ள கஞ்சாவை வாங்கி காரின் பின்பக்க சீட்டில் ரகசிய அறை அமைத்து அந்த கஞ்சாவை கேரள மாநிலம் கொச்சிக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது.
இதை தொடர்ந்து சொகுசு கார் மற்றும் காரில் கடத்தி வரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான 50 கிலோ கஞ்சா பொட்டலங்களை சித்தோடு போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட சாருங்கமகியை கைது செய்தனர். பின்னர் அவரை ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
- ஜாமினில் வெளியே வந்தவர்களில் யாரேனும் பல்லடம் கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
- கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சேமலைகவுண்டன் பாளையத்தில் தோட்ட வீட்டில் இருந்த தெய்வ சிகாமணி, அலமேலு, செந்தில்குமார் ஆகிய 3 பேரை நள்ளிரவில் மர்ம கும்பல் கொடூரமாக கொலை செய்தது. கொலையாளிகளை கண்டுபிடிக்க 14-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதே சம்பவம் போல் ஈரோடு மாவட்டம் சென்னிமலை, அரச்சலூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியாக தோட்ட வீட்டில் வசித்து வந்த வயதான தம்பதிகளை கொலை செய்து தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் நடந்தது. இந்த கொலை, கொள்ளை தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு 14 பேரை ஈரோடு மாவட்ட போலீசார் சிறையில் அடைத்தனர்.
சிறையில் இருந்த சிலர் ஜாமின் பெற்று வெளியே வந்துள்ளனர். ஜாமினில் வெளியே வந்தவர்களில் யாரேனும் பல்லடம் கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் பல்லடம் கொலை சம்பவமும், சென்னிமலை கொலை சம்பவங்களும் ஒரே மாதிரி நடந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருப்பூரை ஒட்டிய ஈரோடு மாவட்டத்தில் தோட்ட வீடுகளில் தனியாக வசிக்கும் வயதான தம்ப தியரை தாக்கி இதுபோல் கொலை நடக்க கூடும் என போலீசார் சந்தேகிப்பதால் கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை பெருந்துறை, சென்னிமலை, அரச்சலூர் போன்ற பகுதிகளில் இதுபோன்று தனியாக ஏராளமான தோட்ட வீடுகள் இருக்கின்றன. இந்த வீடுகளில் வயதான தம்பதிகள் வசித்து வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்ட போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் தனியாகவும் சாலையை ஒட்டி பகுதியில் 570 தோட்ட வீடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் பெருந்துறை பகுதியில் மட்டும் 270 வீடு கள் உள்ளன. இந்த 570 வீடுகளுக்கு முன்னுரிமை அளித்து இரவு நேரங்களில் அந்தந்த பகுதியில் உள்ள இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் நேரடியாக ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இரவு முதல் காலை வரை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதைப்போல் வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. சந்தேகப்படும்படி நபர்கள் யாராவது செல்கிறார்களா என போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- வங்கி கணக்கு எண், வங்கி கணக்கு பணம் இருப்பு விவரங்களை வீடியோ கால் மூலம் கேட்டறிந்துள்ளனர்.
- சீனிவாசன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
ஈரோடு:
தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்று இணையதளம் மோசடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. ஆன்லைனில் கவர்ச்சிகர விளம்பரம் என விதவிதமாக ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். இதே போல் ஈரோட்டை சேர்ந்த இருவர் மோசடியில் இழந்த ரூ.37 லட்சத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு அவர்களிடம் வழங்கி உள்ளனர்.
இதைப்பற்றிய சம்பவம் வருமாறு:-
ஈரோட்டை சேர்ந்தவர் செல்வன். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது பேஸ்புக்கில் அறிமுகமான நபர் ஷேர் மார்க்கெட்டில் பணத்தை முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என நம்பி செல்வன் ரூ.42 லட்சத்தை பல்வேறு தவணை முறைகளில் செல்வனுக்கு அனுப்பி உள்ளார்.
பின்னர் பேஸ்புக்கில் அறிமுகமான நபர் திடீரென தனது கணக்கை முடித்து விட்டார். இதனால் ஷேர் மார்க்கெட்டில் தன்னை முதலீடு செய்ய அறிவுறுத்திய நபர் குறித்த முழு விவரம் தெரியவில்லை. இதுகுறித்து செல்வன் ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இதைப்போல் ஈரோட்டில் ஜவுளி வியாபாரம் செய்து வரும் சீனிவாசனிடம் வீடியோ காலில் பேசிய நபர், மும்பை அந்தேரி பகுதியிலிருந்து இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணைய அதிகாரி பேசுவதாகவும், உங்கள் ஆதார் கார்டு மற்றும் சிம் கார்டு எண்ணை பயன்படுத்தி பல லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. எனவே உங்கள் ஆதார் கார்டு முடக்கப்படும்.
எனவே உங்கள் எப்.ஐ. ஆர் பதிவு செய்திருப்பதாகவும், விரைவில் உங்களை கைது செய்வோம் என்று கூறியுள்ளார். மேலும் வங்கி கணக்கு எண், வங்கி கணக்கு பணம் இருப்பு விவரங்களை வீடியோ கால் மூலம் கேட்டறிந்துள்ளனர். இதை உண்மை என்று நம்பி சீனிவாசனும் அந்த நபரிடம் வங்கியின் பணம் இருப்பு விவரங்களை தெரிவித்துள்ளார்.
பின்னர் சிறிது நேரத்தில் சீனிவாசன் வங்கி சேமிப்பில் இருந்து ரூ.27 லட்சம் எடுக்கப்பட்டதாக அவருக்கு எஸ்.எம்.எஸ் வந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஈரோடு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இந்த இரு வழக்குகளையும் ஈரோடு சைபர் கிரைம் போலீசார் விசாரித்து பணத்தை எடுத்துக் கொண்ட வங்கியில் பேசி அந்த வங்கி கணக்கை உடனடியாக முடக்கினர். செல்வன் இழந்த தொகையில் ரூ.10 லட்சத்து 17 ஆயிரம், சீனிவாசன் இழந்த முழு தொகையான ரூ.27 லட்சத்தையும் மீட்டனர். இந்தத் தொகையை சைபர் கிரைம் போலீஸ் ஏ.டி.எஸ்.பி வேலுமணி ஈரோடு எஸ்.பி. ஜவகர் முன்னிலையில் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
- பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்களை சாப்பிட்டும், மிதித்தும் சேதப்படுத்தியது.
- வனப்பகுதியையொட்டி அகழிகளை அமைத்து யானைகள் கிராமத்திற்குள் புகாத வண்ணம் தடுக்க வேண்டும்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. சமீப காலமாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் அருகில் இருக்கும் மலை கிராமங்களில் தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் பர்கூர் மலைப்பகுதியில் உள்ள தம்முரெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தன். இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார், இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சித்தனின் மக்காச்சோள தோட்டத்திற்குள் புகுந்தது.
தொடர்ந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்களை சாப்பிட்டும், மிதித்தும் சேதப்படுத்தியது. சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்களை சேதப்படுத்திய யானை அதிகாலை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
யானை வனப்பகுதியில் இருந்து மலை கிராமங்களுக்கு வருவதை தடுக்கும் பொருட்டு வனப்பகுதியையொட்டி அகழிகளை அமைத்து யானைகள் கிராமத்திற்குள் புகாத வண்ணம் தடுக்க வேண்டும் என விவசாயி கோரிக்கை விடுத்ததோடு சேதமான பயிருக்கும் உரிய இழப்பீடு அரசு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து உள்ளார்.






