என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • டீக்கடைகள், பெட்டிக்கடைகள் ஆகியவற்றில் இந்த சமோசா விற்கப்பட்டு வருகிறது.
    • உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் கெட்டுப் போன நிலையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பேகம்பூர், அரண்மனைக்குளம் ரோடு, தெற்கு ரத வீதி, பாறைமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட சமோசா தயாரிக்கும் கடைகள் செயல்பட்டு வருகிறது.

    இங்கிருந்து திண்டுக்கல் மற்றும் இதனை சுற்றியுள்ள 20 கி.மீ. சுற்றளவில் உள்ள கிராம பகுதிகளிலும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதிகாலை முதல் இருசக்கர வாகனத்தில் கடைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். டீக்கடைகள், பெட்டிக்கடைகள் ஆகியவற்றில் இந்த சமோசா விற்கப்பட்டு வருகிறது. பஸ் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் விற்கப்பட்டு வருகிறது. இதனை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் சுகாதாரமற்ற முறையில் சமோசாக்கள் தயாரிக்கப்படுவதாக பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதன்படி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர்கள் நகர் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    இன்று காலை 27 வது வார்டுக்கு உட்பட்ட தெற்கு ரதவீதி, நாராயணபிள்ளை தெருவில் சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, பாலமுருகன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். தங்கவேல், பரமசிவம் என்ற 2 நபர்களின் கடைகளில் சுகாதாரமற்ற முறையில் சமோசா தயாரித்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    மேலும் உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் கெட்டுப் போன நிலையில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுமட்டுமின்றி சாக்கடையின் அருகே காய்கறிகள் வைத்து சுகாதாரமற்ற முறையில் பயன்படுத்தி வந்தனர். இதனை அடுத்து 2 கடைகளுக்கும் சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவு திண்பண்டங்களை சுகாதார மற்ற முறையில் தயாரித்து வினியோகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    • இளைஞர்கள் போட்டிபோட்டு மீன்களை ஆர்வத்துடன் பிடித்துச் சென்றனர்.
    • ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு குளத்துக்குள் இறங்கி மீன்களை பிடித்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே உள்ள தாமரைப்பாடி பெரிய மந்தை குளத்தில் 20 வருடங்களுக்குப் பிறகு சமத்துவ மீன்பிடி திருவிழா இன்று நடந்தது. ஊர் பொதுமக்கள் சார்பில் நடத்தப்பட்ட இந்த மீன்பிடித் திருவிழாவில் திண்டுக்கல், வடமதுரை, பெரியகோட்டை, முள்ளிப்பாடி, சீலப்பாடி, ம.மு. கோவிலூர், வேடசந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு குளத்துக்குள் இறங்கி மீன்களை பிடித்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகமாக சிறிய வலைகள் மற்றும் கூடைகளை பயன்படுத்தி மீன்பிடித்தனர்.

    இதில் ஜிலேபி, கட்லா, ரோகு, மீசை விறா, கெழுத்தி உள்ளிட்ட பல்வேறு மீன்கள் பிடிபட்டது. ஒரு கிலோ முதல் 20 கிலோ வரையிலான மீன்கள் வலையில் சிக்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மீன்பிடி திருவிழாவில் 1½ டன் வரை மீன்கள் பிடிக்கப் பட்டதாக விழாக்குழுவினர் தெரிவித்தனர்.

    விழாவில் கலந்து கொண்ட சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் போட்டிபோட்டு மீன்களை ஆர்வத்துடன் பிடித்துச் சென்று தங்கள் வீடுகளுக்கு கொண்டு சென்றனர்.

    • கொடைக்கானலில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
    • மழையால் அருவிகள் மற்றும் நீர் வீழ்ச்சிகளில் நீர்வரத்தும் தற்போது அதிகரித்துள்ளது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    கோடை விடுமுறை இன்றுடன் முடிவடையும் நிலையில் நாளை தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இருந்தபோதும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் முக்கிய சுற்றுலா இடங்களான குணா குகை, பைன்பாரஸ்ட், மோயர்பாய்ண்ட், தூண்பாறை, பசுமை பள்ளத்தாக்கு கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரியும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரியும் செய்து மகிழ்ந்தனர்.

    கொடைக்கானலில் கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தொடர் மழையால் அருவிகள் மற்றும் நீர் வீழ்ச்சிகளில் நீர்வரத்தும் தற்போது அதிகரித்துள்ளது.

    இந்த சூழலில் கொடைக்கானல் நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ள வெள்ளி நீர்வீழ்ச்சியில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக நீர்வரத்து ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது . தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதை கண்டு சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து வருவதுடன் அருவியின் முன்பு நின்று புகைப்படம் எடுத்து தங்களது இன்பசுற்றுலாவை அனுபவித்து மகிழ்ந்து வருகின்றனர் .

    மேலும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் இங்கு நிலவும் குளிரையும் அனுபவித்து வருகின்றனர். மேலும் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கிளாவரை, பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கும் செறு குளு குளு சீதோசணத்தை அனுபவித்தவாறு இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர்.

    • கடந்த மாதம் வைகாசி திருவிழா விமரிசையாக தொடங்கியது.
    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    பழனி:

    பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி கே.வேலூரில் அமைந்துள்ள மண்டு காளியம்மன், உச்சி காளியம்மன் கோவிலில் கடந்த மாதம் வைகாசி திருவிழா விமரிசையாக தொடங்கியது. திருவிழாவின் ஒரு பகுதியாக சண்முகநதியில் இருந்து மேளதாளங்களுடன் புனித நீர் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    இரவு அம்மன் ரத ஊர்வலம் நடைபெற்றது. இன்று காலை நடைபெற்ற பூக்குழி இறங்கும் விழாவில் 5000க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சுமார் 4 மணி நேரம் நடந்த பூக்குழி திருவிழாவை ஏராளமான பொதுமக்கள் கண்டு பரவசமடைந்தனர்.

    கோயில் முறைகாரர் முதலில் இறங்கியவுடன் பக்தர்கள் வரிசையாக பூக்குழி இறங்கினர். 2 கைகளிலும் தீச்சட்டி, குழந்தைகள், கரும்பு தொட்டிலில் குழந்தை, அம்மன் வேடமணிந்து என பல்வேறு வகையில் பக்தர்கள் பூக்குழி இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். மேலும் ஒரு பக்தர் நாதஸ்வரம் இசைத்தபடியே பூக்குழி இறங்கினார். தொடர்ந்து கிடா வெட்டுதல், பொங்கல் வைத்தல் என விழா நடைபெற்றது.

    இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். பக்தர்களின் வருகை அதிகமாக காணப்பட்டதால் இன்ஸ்பெக்டர் தென்னரசு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணசாமி நேற்று இரவு உயிரிழந்தார்.
    • உறவினர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி கிருஷ்ணசாமி (வயது 100). கடந்த 1923ம் ஆண்டு ஆக.15-ல் பிறந்த இவர் பல்வேறு சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டவர். இவருக்கு ராஜம்மாள் என்ற மனைவியும், 2 மகன் மற்றும் 1 மகளும் உள்ளனர்.

    கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணசாமி நேற்று இரவு உயிரிழந்தார். அவருக்கு உறவினர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை வேடசந்தூரில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

    • டயர் கழன்று ஓடி அருகில் உள்ள கால்வாயில் விழுந்தது.
    • டிரைவர் சாமர்த்தியமாக நிறுத்தியதால் 30 பேர் உயிர் பிழைத்தனர்.

    பழனி:

    கரகாட்டக்காரன் படத்தில் நடிகர் ராமராஜன் தனது குழுவினருடன் காரில் செல்லும்போது ஒரு டயர் முன்பாக உருண்டு செல்லும். அப்போது நமது கார் முன்பாக சிறுவன் டயர் ஓட்டி விளையாடுகிறான் என அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பார்கள். அப்போது காரின் சக்கரம்தான் கழன்று ஓடுகிறது என பின்னால் தெரியவரும். தற்போது அதேபோன்ற ஒரு சம்பவம் பழனியில் இன்று நடந்துள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து 80க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்று காலை 10.15 மணியளவில் பழனி பஸ் நிலையத்திலிருந்து தீர்த்த கவுண்டர் வலசு கிராமத்திற்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சை பாண்டி என்பவர் ஓட்டிச் சென்றார். சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில் அரசு பஸ் அமர பூண்டி என்ற இடத்திற்கு அருகே சென்றபோது முன்பக்க சக்கரம் கழன்று பேருந்துக்கு முன்பாக ஓடியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர் சாமர்த்தியமாக பஸ்சை சாலையோரத்தில் நிறுத்தினார்.

    தொடர்ந்து கழன்று ஓடிய சக்கரம் சாக்கடை கால்வாயில் விழுந்தது. சக்கரம் கழன்று ஓடியதை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்து அவசர அவசரமாக கீழே இறங்கினர். அவர்கள் பின்னர் வேறு பஸ்சில் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதால் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலும் தரமற்ற அரசு பஸ்களே இயக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள், பயணிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கொடைக்கானல், பன்றிமலை, ஆடலூர், பெரும்பாறை உள்ளிட்ட மலைக்கிராமங்களுக்கு தரமற்ற பஸ்கள் இயக்கப்படுவதால் நடுவழியில் பழுதாகி நின்று விடுகிறது. மேலும் சில பஸ்கள் தரமற்ற முறையில் இருப்பதால் பயணிகளே இறங்கி தள்ளினால்தான் நகரும் நிலை ஏற்படுகிறது.

    மாவட்டத்தில் இதுபோன்ற அவலம் தொடரும் நிலையில் இனிமேலாவது தரமான அரசு பஸ்களை இயக்க பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    • கோவில் திருவிழாவில் கரகாட்ட நிகழ்ச்சி நடை பெற்றது.
    • தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் ஆபாசமாக ஆடினார்.

    ஒட்டன்சத்திரம்:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பல்வேறு கோவில்களில் வைகாசி திருவிழா நடை பெற்று வருகிறது. திருவிழா வில் கரகாட்டம், ஆடலும்-பாடலும், இன்னிசை கச்சேரி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் ஒட்டன்சத்திரம் ஒன்றியம் தொப்பம்பட்டி பகுதியில் நடந்த கோவில் திருவிழாவில் கரகாட்ட நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் பெண் கலைஞர்கள் ஆடி க்கொண்டு இருந்த போது தொப்பம்பட்டி தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் பழனிச்சாமி அவர்களுடன் சேர்ந்து ஆபாசமாக ஆடினார்.

    இதனை அங்கிருந்தவர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர். தி.மு.க. கவுன்சிலர் கரகாட்ட பெண் கலைஞருடன் உற்சாக மிகுதியில் ஆடிய நடனம் சமூக வலைதளங்களில் வேகமாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
    • வியாபாரிகள் உள்பட சுற்றுலா தொழிலை நம்பி உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    மே மாதத்தில் அக்னிநட்சத்திரத்தின் போது அதிக அளவு மழைப்பொழிவு இருந்தது. மேலும் கொடைக்கானலுக்கு வர சுற்றுலா பயணிகள் இ-பாஸ் எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்தது. மேலும் கோடை விழா மலர் கண்காட்சியிலும் குறைந்த அளவே சுற்றுலா பயணிகள் மலர்களை கண்டு ரசித்தனர்.

    இருந்தபோதும் கட்டணம் உயர்த்தப்பட்டதால் அதிக அளவு வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் வருகிற 6ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் கோடை வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் 10ந் தேதிக்கு பள்ளிகள் திறப்பை தள்ளி வைப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்தது.


    தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்தது. முக்கிய சுற்றுலா இடங்களான மோயர் சதுக்கம், குணா குகை, பைன் பாரஸ்ட், தூண்பாறை, கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததால் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து சுற்றுலா தலங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.

    இருந்தபோதிலும் வெயிலின் தாக்கம் குறைந்து மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனர். மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கிளாவரை உள்ளிட்ட இடங்களில் தற்போது இதமான சீதோசனம் நிலவி வருகிறது. எனவே சுற்றுலா பயணிகள் அங்கும் படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

    இதனால் வியாபாரிகள் உள்பட சுற்றுலா தொழிலை நம்பி உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • மோடி வருகைக்கு தமிழகத்தில் காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
    • திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்.

    திண்டுக்கல்:

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவுபெறும் நிலையில் பிரதமர் மோடி 2 நாள் தியானம் செய்வதற்காக கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார். அங்குள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தங்கி தியானம் மேற்கொள்ள உள்ளார்.

    மோடி வருகைக்கு தமிழகத்தில் காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழகத்தை வஞ்சித்த மோடிக்கு தியானம் செய்ய மட்டும் தமிழகத்தில் இடம் தேவைப்படுகிறதா? என்று கண்டன போஸ்டர்களும் ஒட்டப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் மற்றும் கன்னியாகுமரி நோக்கி போராட்டத்துக்கு செல்லப்போவதாக அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.

    • பழனி திருஆவினன்குடி கோவிலில் இன்று பா.ஜ.க. பெண் நிர்வாகி சரஸ்வதி பக்தர்களிடம் மடிப்பிச்சை ஏந்தி யாசகம் பெற்றார்.
    • கோவில் வாசலில் அண்ணாமலை படத்துடன் அமர்ந்து யாசகம் பெற்ற பெண் நிர்வாகி அந்த காணிக்கை பொருட்களை பழனி கோவில் உண்டியலில் செலுத்தி வழிபட்டார்.

    பழனி:

    பாராளுமன்ற தேர்தல் நிறைவுபெற உள்ள நிலையில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். வருகிற 1ம் தேதி இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுகிறது.

    தேர்தலில் வெற்றி பெறுவது யார்? என்று அரசியல் கட்சியினரிடையே தற்போதே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பழனி திருஆவினன்குடி கோவிலில் இன்று பா.ஜ.க. பெண் நிர்வாகி சரஸ்வதி பக்தர்களிடம் மடிப்பிச்சை ஏந்தி யாசகம் பெற்றார். கோவில் வாசலில் அண்ணாமலை படத்துடன் அமர்ந்து யாசகம் பெற்ற அவர் பின்னர் அந்த காணிக்கை பொருட்களை பழனி கோவில் உண்டியலில் செலுத்தி வழிபட்டார்.

    நாடு முழுவதும் மோடி அலைவீசுகிறது. எனவே மீண்டும் 3வது முறையாக மோடி பிரதமராக வேண்டும். கோவை தொகுதியில் அண்ணாமலை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும் என பழனி முருகனிடம் வேண்டுதல் வைத்து அதனை இன்று நிறைவேற்றினேன். தேர்தலில் மோடி வெற்றிபெற்று 3வது முறையாக பதவியேற்கும் நாளில் மீண்டும் முருகனிடம் எனது காணிக்கையை வழங்குவேன் என்றார்.

    • பல லட்சம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் கவரும் விதமாக அமைந்திருந்தது.
    • கோவில் வளாகம் முழுவதும் பல வண்ண மலர்களால் கோலங்கள் போடப்பட்டும், விதவிதமான அலங்காரம் செய்யப்பட்டும் இருந்தது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த 17-ந்தேதி முதல் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. வருகிற 26-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இந்த கோடைவிழாவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து சிறப்பித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தினந்தோறும் வெவ்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    இதன் ஒரு பகுதியாக கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவிலில் இன்று மலர் கண்காட்சியை சிறப்பிக்கும் விதமாக மலர் வழிபாடு நடைபெற்றது. இதில் முருகன் தேரில் இருப்பது போல் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பல லட்சம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் கவரும் விதமாக அமைந்திருந்தது. கோவில் வளாகம் முழுவதும் பல வண்ண மலர்களால் கோலங்கள் போடப்பட்டும், விதவிதமான அலங்காரம் செய்யப்பட்டும் இருந்தது.

    இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் குறிஞ்சி ஆண்டவர் முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • 100-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர்.
    • அதிர்ஷ்டவசமாக அந்த வழியாக அப்பொழுது யாரும் செல்லாத காரணத்தால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் 284 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக வேடசந்தூரில் 8 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதில் அங்குள்ள காம்பவுண்டு சுவர் இடிந்து தரைமட்டமானது.

    வேடசந்தூர் அருகே தனியார் நிறுவனத்தின் சோப்பு தயாரிக்கும் ஆலை உள்ளது. இந்த ஆலையின் எதிரே தொழிலாளர்கள் தங்கும் விடுதி உள்ளது. 100-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் தங்கி கம்பெனியில் வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு இங்கு திடீரென பயங்கர சத்தத்துடன் இடி தாக்கியது. இதில் தொழிலாளர்கள் தங்கும் விடுதியில் காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்ததுடன் கற்கள் 15 மீ. தூரம் தூக்கி வீசப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அந்த வழியாக அப்பொழுது யாரும் செல்லாத காரணத்தால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

    இன்று அதிகாலை அந்த வழியாக சென்றவர்கள் காம்பவுண்டு சுவர் இடிந்து சிதறி கிடப்பதை கண்டு கம்பெனி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அந்த கற்களை அங்கிருந்து ஊழியர்கள் அகற்றினர். இடி தாக்கி காம்பவுண்டு சுவர் தூக்கி வீசப்பட்ட சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×