என் மலர்
உள்ளூர் செய்திகள்

மோடி மீண்டும் பிரதமராக வேண்டி பக்தர்களிடம் மடிப்பிச்சை ஏந்தி பா.ஜ.க. பெண் நிர்வாகி நேர்த்திக்கடன்
- பழனி திருஆவினன்குடி கோவிலில் இன்று பா.ஜ.க. பெண் நிர்வாகி சரஸ்வதி பக்தர்களிடம் மடிப்பிச்சை ஏந்தி யாசகம் பெற்றார்.
- கோவில் வாசலில் அண்ணாமலை படத்துடன் அமர்ந்து யாசகம் பெற்ற பெண் நிர்வாகி அந்த காணிக்கை பொருட்களை பழனி கோவில் உண்டியலில் செலுத்தி வழிபட்டார்.
பழனி:
பாராளுமன்ற தேர்தல் நிறைவுபெற உள்ள நிலையில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். வருகிற 1ம் தேதி இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுகிறது.
தேர்தலில் வெற்றி பெறுவது யார்? என்று அரசியல் கட்சியினரிடையே தற்போதே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பழனி திருஆவினன்குடி கோவிலில் இன்று பா.ஜ.க. பெண் நிர்வாகி சரஸ்வதி பக்தர்களிடம் மடிப்பிச்சை ஏந்தி யாசகம் பெற்றார். கோவில் வாசலில் அண்ணாமலை படத்துடன் அமர்ந்து யாசகம் பெற்ற அவர் பின்னர் அந்த காணிக்கை பொருட்களை பழனி கோவில் உண்டியலில் செலுத்தி வழிபட்டார்.
நாடு முழுவதும் மோடி அலைவீசுகிறது. எனவே மீண்டும் 3வது முறையாக மோடி பிரதமராக வேண்டும். கோவை தொகுதியில் அண்ணாமலை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும் என பழனி முருகனிடம் வேண்டுதல் வைத்து அதனை இன்று நிறைவேற்றினேன். தேர்தலில் மோடி வெற்றிபெற்று 3வது முறையாக பதவியேற்கும் நாளில் மீண்டும் முருகனிடம் எனது காணிக்கையை வழங்குவேன் என்றார்.






