என் மலர்tooltip icon

    கடலூர்

    நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் 3-வது சுரங்கம் அமைப்பதற்காக எதிர்ப்பு தெரிவித்து விருத்தாசலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    விருத்தாசலம்:

    நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் 3-வது சுரங்கம் அமைப்பதற்காக கம்மாபுரம் மற்றும் புவனகிரி பகுதியில் உள்ள கிராமங்களின் நிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில் கம்மாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கம்மாபுரம், சிறுவரப்பூர், க.புத்தூர், ஓட்டிமேடு, சாத்தப்பாடி, பெருந்துரை, பெருவரப்பூர், விளக்கப்பாடி, தர்மநல்லூர், ஊ.அகரம், கோபாலபுரம், சு.கீரனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அந்த அந்த கிராமங்களில் ஆங்காங்கே என்.எல்.சி நிறுவனத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் விருத்தாசலம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன், மாவட்ட செயலாளர் மாதவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்துக்கு 3-வது சுரங்க விரிவாக்கம் திட்டத்துக்கு 30-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டத்தை முற்றிலும் கைவிட வேண்டும். நெல், கரும்பு, வாழை, பூ, காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து பயிர்கள் விளையும் பூமியை பாதுகாத்திட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

    கடந்த காலங்களில் என்.எல்.சி. காலாவதியான சட்டத்தின் மூலம் விவசாயிகளின் நிலம், வீடு உட்பட அனைத்தும் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடும், வேலை வாய்ப்பும் கொடுக்காமல் ஏமாற்றி வரும் என்.எல்.சி. நிர்வாகத்தை வன்மையாக கண்டித்தும் கோ‌ஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து விருத்தாசலம் போலீசார் விவசாயிகளை சமாதானப்படுத்தினார்கள்.

    பின்னர் விவசாயிகள் சப்-கலெக்டரை சந்தித்து மனு கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே இன்று அதிகாலை லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 2 டிரைவர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
    வேப்பூர்:

    சென்னையில் இருந்து மது பாட்டில்களை ஏற்றி கொண்டு திருச்சியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு நேற்று இரவு ஒரு லாரி புறப்பட்டு வந்தது.

    இந்த லாரியை திண்டிவனத்தை சேர்ந்த ராமதாஸ் (வயது 31) என்பவர் ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 5 மணிக்கு அந்த லாரி கடலூர் மாவட்டம் வேப்பூர்-கழுதூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது எதிரே மணல் ஏற்றிக் கொண்டு மற்றொரு லாரி வந்தது. அந்த லாரியை திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மேட்டுப்பட்டியை சேர்ந்த செல்வமணி (23) என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த லாரி திடீரென்று நிலைதடுமாறி சாலையில் இருந்த தடுப்புக்கட்டையை தாண்டி எதிரே மதுப்பாட்டில்களை ஏற்றி வந்த லாரி மீது கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது.

    இதில் மதுப்பாட்டில்கள் ஏற்றி வந்த லாரி தீப்பிடித்து எரிய தொடங்கின. உள்ளே இருந்த மதுப்பாட்டில்கள் டமார்... டமார்... என்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. சிறிது நேரத்தில் மணல் ஏற்றி வந்த லாரியின் முன்பகுதியிலும் தீப்பிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் மதுப்பாட்டில்கள் ஏற்றி வந்த லாரியில் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது.

    2 லாரிகள் தீப்பிடித்து எரிந்ததால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இது குறித்த தகவல் வேப்பூர் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது.

    உடனே வேப்பூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடம் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    ஆனால், லாரியில் இருந்த மது பாட்டில்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து நாலாபுறமும் சிதறியதால் தீயை அணைக்க முடியாமல் அவர்கள் தவித்தனர். 1 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது.

    வேப்பூர் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர். அங்கு உடல் கருகி கிடந்த லாரி டிரைவர்கள் ராமதாஸ், செல்வமணி ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த தீ விபத்தில் மதுப்பாட்டில்கள் ஏற்றி வந்த லாரியில் 20 ஆயிரம் மதுப்பாட்டில்கள் இருந்தன. இவை அனைத்தும் எரிந்து நாசமானது. இவற்றின் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.

    லாரிகள் மோதி தீ பிடித்த சம்பவத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    காட்டுமன்னார்கோவில் அருகே சப்-இன்ஸ்பெக்டர் மருமகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மகள் சாவில் மர்மம் உள்ளதாக பெற்றோர் போலீசில் புகார் செய்ததால் கணவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பழஞ்சநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் சோழத்தரம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் செல்வகுமார் (வயது 29). இவர் என்ஜினீயரிங் படித்துள்ளார். இவருக்கும், நாகை மாவட்டம் வக்காரமாரி கிராமத்தை சேர்ந்த அனுசுயா (23) என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அனுசுயா எம்.ஏ. படித்துள்ளார். தற்போது அனுசுயா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

    இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கூடுதல் வரதட்சணை கேட்டதால் அனுசுயா கோபித்து கொண்டு தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் இருவீட்டினரும் சமாதானம் பேசி செல்வகுமாருடன் அனுசுயாவை அனுப்பி வைத்தனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தியும், அவரது மனைவியும் சிகிச்சைக்காக சென்னைக்கு சென்று விட்டனர். வீட்டில் அனுசுயாவும், செல்வகுமாரும் இருந்தனர்.

    அப்போது கணவன்- மனைவிக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இரவில் வீட்டில் உள்ள ஒரு அறையில் அனுசுயா தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இது குறித்து செல்வகுமார் தனது தந்தை மூர்த்திக்கு தகவல் தெரிவித்தார். உடனே மூர்த்தி, அனுசுயாவின் பெற்றோருக்கு இது குறித்து கூறியுள்ளார்.

    அனுசுயா இறந்த தகவல் அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பழஞ்சநல்லூர் கிராமத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு வீட்டில் அனுசுயா தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து கதறி அழுதனர்.

    இதற்கிடையே இந்த தகவல் காட்டுமன்னார் கோவில் போலீசுக்கு தெரிந்தது. சேத்தியாத் தோப்பு துணை சூப்பிரண்டு ஜவகர்லால், காட்டு மன்னார்கோவில் இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் அனுசுயாவின் உடலை கைப்பற்றி காட்டு மன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் செல்வகுமாரை தேடினர். அவரை காணவில்லை. அவர் தலைமறைவாகி விட்டார்.

    இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட அனுசுயாவின் பெற்றோர் தனது மகள் சாவில் மர்மம் உள்ளதாக காட்டுமன்னார் கோவில் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    அதனை தொடர்ந்து அனுசுயாவின் பெற்றோர், உறவினர்கள் காட்டு மன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு சென்றனர்.

    அவர்கள் அனுசுயாவின் சாவில் சந்தேகம் உள்ளது. அவள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம். இந்த பிரச்சினையில் போலீசார் ஒருதலைப்பட்சமாக விசாரணை நடத்துகின்றனர். எனவே, அனுசுயாவின் சாவுக்கு காரணமான அவரது கணவர் செல்வகுமாரை கைது செய்ய வேண்டும் என்று கூறி ஆஸ்பத்திரி முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் அவர்கள் மறியலை கைவிட்டனர். பின்னர் அனுசுயாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் அனுசுயாவின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.

    இந்த நிலையில் தலைமறைவாகி விட்ட அனுசுயாவின் கணவர் செல்வகுமாரை பிடிக்க சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால் உத்தரவின் பேரில் காட்டுமன்னார் கோவில் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தலைமறைவாகி விட்ட செல்வகுமாரை தேடிவருகின்றனர்.

    செல்வகுமார் பிடிபட்டால்தான் அனுசுயாவின் சாவில் உள்ள உண்மை நிலை தெரியவரும்.

    வீராணம் ஏரி நேற்று மாலை தனது முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. இந்த ஆண்டில் முதல் முறையாக வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டி இருக்கிறது. #VeeranamLake
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த நீர்மட்டம் 47.50 அடி ஆகும். இந்த ஏரியானது விவசாயிகளின் உயிர் நாடியாகவும், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது.

    இந்த ஏரி மூலமாக சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஏரிக்கு கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர்வரும். பருவமழை காலங்களில் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் 47 அடி வரை உயர்ந்தது.

    ஆனால் கடந்த சிலநாட்களாக வீராணம் ஏரியின் சுற்றி உள்ள பகுதிகளில் சரிவர மழை பெய்யாததால் ஏரிக்கு நீர் வரத்து குறைந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் 45.25 அடியாக குறைந்தது.

    ஏரியின் நீர்மட்டம் 39 அடிக்கு குறையாமல் இருந்தால் தான், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு தண்ணீரை அனுப்பிவைக்க முடியும். கோடைகாலத்தில் சென்னைக்கு அதிக அளவில் தண்ணீர் தேவைப்படும். இந்த நிலையில் ஏரியின் நீர்மட்டம் குறைய தொடங்கியதால், ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக கூடுதலாக தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டது.

    கீழணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. கடந்த 4 நாட்களாக வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நேற்று மாலை ஏரி முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. இந்த ஆண்டில் முதல் முறையாக வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டி இருக்கிறது.

    தற்போது பாசன பகுதியில் சம்பா பயிர் அறுவடை காலம் நெருங்கி விட்டதால், பாசனத்திற்கான தண்ணீர் தேவை குறைந்து உள்ளது. எனவே ஏரியில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 24 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் சென்னை குடிநீருக்காக வினாடிக்கு தொடர்ந்து 74 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. #VeeranamLake

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் செல்லூர்ராஜு பதில் அளித்துள்ளார். #Gajacyclone #SellurRaju #EdappadiPalaniswami
    கடலூர்:

    கடலூருக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று வருகை தந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்ய வேண்டுமானால் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொள்கை முடிவின்படி தான் நடவடிக்கை எடுக்க முடியும். கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர்கள் நேரில் சென்றனர்.

    குழு அமைத்து பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டது. சேத மதிப்பீடு குறித்து கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. இவர்கள் தங்களது அறிக்கையை முதலமைச்சரிடம் தெரிவித்த பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலமாக 4 லட்சத்து 19 ஆயிரம் பேரை இணைத்துள்ளோம். பாதிக்கப்பட்ட விவசாயிகள் பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

    கூட்டுறவு சங்கங்களில் கடன் வாங்கியவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 19 ஆயிரம்.

    இதுபோக வெளியிடங்களிலும் வெளி நபர்களிடம் பலர் கடன் வாங்கியுள்ளனர். அனைவரையும் பயிர் காப்பீடு திட்டத்தில் இணைத்துள்ளோம்.

    மேலும் தமிழக அரசின் பயிர் காப்பீட்டு திட்டம் மற்றும் பாரத பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் ஆகிய 2 திட்டங்கள் மூலம் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சலுகைகள் கிடைக்க உள்ளது. ஆகையால் இந்த அரசு விவசாயிகள்அரசு என்று எடுத்துக் காட்டுகிறது.


    ஜெயலலிதா அரசு பதவி ஏற்ற பிறகு தான் கூட்டுறவுத்துறை லாபத்தில் இயங்கி வருகிறது. தமிழகத்தில் 147 நலிவடைந்த கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு நிதி ஒதுக்கி கொடுத்து அதன்மூலம் வரவு செலவு செய்து வருகின்றனர். ரே‌ஷன் கடை பணியாளர்களை நியமிக்க வேண்டுமானால் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அமைத்த பிறகு ரே‌ஷன் கடை பணியாளர்களுக்கு பணியாளர்கள் நியமிக்கப்படுவர்.

    கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு வரலாறு காணாத அளவிற்கு சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை தனிப்பட்ட நிர்வாக அமைப்பு. இதனால் தமிழக அரசு நிதி ஒதுக்க முடியாது மேலும் கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். ஆனால் அந்த அமைப்பின் நிர்வாகக் குழு தீர்மானம் செய்து அவர்கள் நிதி ஒதுக்குவார்கள்.

    தமிழகத்தில் 22 ஆயிரத்து 265 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடந்து முடிந்துள்ளது.

    இந்த தேர்தலில் ஒரு சில இடங்களில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்திருக்கும். ஆனால் கடந்த தி.மு.க ஆட்சியில் கூட்டுறவு சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டு பெரிய அளவிலான பிரச்சனைகள் ஏற்பட்டு அதன் காரணமாக கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறாமல் இருந்தது. ஆனால் விவசாய குடும்பத்தை சேர்ந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சத்தமில்லாமல் சாமர்த்தியமாக கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தி உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார். #Gajacyclone #SellurRaju #EdappadiPalaniswami
    பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    கடலூர்:

    தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் உட்பிரிவு பட்டா மாறுதல் கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரையை கட்டாயமாக்க வேண்டும்.

    கிராம நிர்வாக அலுவலர்கள் கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயனுள்ள கணினி மற்றும் இணைய தள வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தம் கடந்த 10 முதல் தொடங்கியது.

    இதனையொட்டி கடலூர் மாவட்டத்தில் 462 கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து கடந்த 17 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் 17 வது நாளான இன்று கடலூர் தாசில்தார் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வட்டத் தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் ஜெயராமமூர்த்தி, இணை செயலாளர் லட்சுமி தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இணை செயலாளர் சுரேஷ், உறுப்பினர்கள் பிரதாப், ஞானமணி தணிகாசலம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் உள்ள சுனாமி நினைவு தூணில் பல்வேறு தரப்பினரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். #Tsunami #MemorialDay
    கடலூர்:

    கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி இந்தோனேஷியாவில் உள்ள சுமத்திரா தீவில் கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டது.

    இதனால் சுனாமி எனும் ஆழிப்பேரலை எழுந்து கடற்கரையோர பகுதிகளை சூறையாடியது. இந்தோனேசியா, இலங்கை, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கடற்கரை யோரம் வசித்து வந்த 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் பலியானார்கள்.

    கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, சிங்காரத்தோப்பு, சொத்திக்குப்பம், அக்கரைக்கோரி, கிள்ளை, பரங்கிப்பேட்டை, அன்னங்கோயில், புதுகுப்பம் எம்.ஜி.ஆர். திட்டு, பில்லுமேடு உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சுனாமி பேரலை தாக்கியது.

    கடலூர் தேவனாம்பட்டினத்தில் நடைபயிற்சிக்கு வந்தவர்களை கடல் அலை இழுத்துசென்றது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் மண்ணோடு மண்ணாக புதைந்தனர். கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் சுனாமியின் கோரத்தாண்டவத்தில் 610 பேர் உயிரிழந்தனர்.

    மேலும் 7 ஆயிரம் கட்டு மரங்கள், பைபர் படகுகள், விசைப்படகுகள், 4 ஆயிரம் மீன்பிடி வலைகள், 650 ஹெக்டேர் நிலங்கள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதும் சேதமடைந்தது.

    சுனாமி பேரலை தாக்கி 14-வது ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்று சுனாமியால் பலியானவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்தது.

    தேவனாம்பட்டினம் அரசு கலைக்கல்லூரி அருகே மீனவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் கடற்கரைக்கு கண்களில் கண்ணீரையும், நெஞ்சத்தில் சோகத்தையும் சுமந்தபடி ஆண்கள், பெண்கள் மவுன ஊர்வலமாக பூக்கூடைகளையும், பால் குடங்களையும் ஏந்தியபடி கடற்கரைக்கு சென்றனர். அவர்கள் கண்ணீர் மல்க கடலில் பாலை ஊற்றி, கூடைகளில் கொண்டுவந்த பூக்களை கடலில் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

    அப்போது இறந்தவர்களை நினைத்து பெண்கள் கதறித்துடித்தனர். இது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சுனாமி நினைவு தூண் உள்ளது. அங்கு பல்வேறு தரப்பினரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். கடலூர் தேவனாம்பட்டினம் உள்ளிட்ட அனைத்து மீனவ கிராமங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மேலும் கடலூர் சிங்காரத்தோப்பு பகுதியில் அந்தப் பகுதி மீனவர்கள் சுனாமி நினைவு தினம் அனுசரித்தனர். இதையொட்டி தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். பெண்கள் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள். கடலூர் மாவட்டத்தில் கடற்கரையோரங்களில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் இன்று மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். சுனாமி நினைவு தினத்தையொட்டி இன்று மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க செல்லவில்லை.

    விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம், கூனிமேடு, கூனிமேடுகுப்பம், அனுமந்தைகுப்பம், எக்கியார்குப்பம், கீழ்புத்துபட்டு குப்பம் உள்பட 19 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு சுனாமி தாக்கியபோது ஏராளமானோர் பலியானார்கள்.

    இதையொட்டி இன்று மரக்காணம் பகுதியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுனாமியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மீனவர்கள் கடல் பகுதிக்கு சென்று பால் ஊற்றினர். பின்பு கடலில் மலர் தூவி கண்ணீர்அஞ்சலி செலுத்தினர். சுனாமியில் இறந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுதனர்.

    சுனாமியின்போது காரைக்கால் பகுதியில் உள்ள பட்டனம்சேரி, கீழ் தான்குடி உள்பட 11 கிராமங்களில் உள்ள 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பலியானார்கள். அவர்களின் நினைவாக கடற்கரையில் நினைவிடம் கட்டப்பட்டுள்ளது.

    சுனாமி தினத்தை யொட்டி கடற்கரையில் உள்ள நினைவிடத்தில் கலெக்டர் கேசவன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    அதன்பின்பு சுனாமியின்போது இறந்தவர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட நன்டலாறு, பட்டினச் சேரி ஆகிய பகுதிகளில் அவர்களது உறவினர்கள் மெழுகுவர்த்தி ஏற்றியும், மலர் தூவியும் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர். அப்போது பல பெண்கள் கதறி அழுதனர். இதை பார்க்க பரிதாபமாக இருந்தது. #Tsunami #MemorialDay

    சிதம்பரம் அருகே லாரி டிரைவரை கத்தியால் குத்தி பணம் மற்றும் பொருட்கள் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் கீழரதவீதியில் வசித்து வருபவர் சையுப்அன்சாரி. இவர் சிதம்பரத்தில் உள்ள ஒரு அரசு வங்கியில் மேனேஜராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் இவர் சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் வீட்டு பொருட்களை ஏற்றி செல்வதற்காக சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த சங்கர் (வயது 47). என்பவரின் லாரியை வாடகைக்காக சிதம்பரம் வரவழைத்தார்.

    அதன்படி சங்கர் நேற்று காலை சென்னையில் இருந்து சிதம்பரத்திற்கு புறப்பட்டார். மேலும் வீட்டு பொருட்களை ஏற்றுவதற்கு உதவிக்காக பீகார் மாநிலம் முசாப்பூர் பகுதியை சேர்ந்த சந்தன் குமார் (20), சோனு (19) ஆகிய இருவரையும் உடன் அழைத்து கொண்டு லாரியில் சிதம்பரம் நோக்கி வந்தார்.

    நேற்று நள்ளிரவு லாரி சிதம்பரம் கீழ்பாலம் புறவழி சாலை அருகே வந்தபோது டிரைவர் சங்கருக்கு தூக்கம் வந்தது. இதனால் லாரியை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு சங்கர், சந்தன்குமார், சோனு ஆகிய 3 பேரும் லாரியிலேயே படுத்து தூங்கினர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள், சாலை ஓரமாக லாரி நிற்பதை பார்த்தனர். பின்னர் அவர்கள் லாரி அருகே சென்று பார்த்த போது லாரியில் வந்தவர்கள் அசந்து தூங்கி கொண்டிருப்பது தெரியவந்தது.

    உடனே மர்ம நபர்கள் 3 பேரும் லாரியின் கண்ணாடியை உடைத்து கொண்டு லாரிமீது ஏறினர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த கத்தியால் டிரைவர் சங்கரை சரமாரியாக குத்தினர். இதில் சங்கர் நிலைகுலைந்து போனார். அந்தசமயத்தில் அவரிடமிருந்த ரூ.8 ஆயிரம் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் பறித்தனர்.

    மேலும் லாரியில் வந்த வடமாநில வாலிபர்களையும் மிரட்டி அவர்களிடமிருந்து ரூ.800 மற்றும் செல்போன், ஆதார்அட்டை உள்ளிட்டவைகளை பறித்தனர். பின்னர் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

    இது குறித்து சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்தனர். காயமடைந்த சங்கர் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.

    சாலை ஓரமாக நிறுத்தி வைத்திருந்த லாரியை சேதப்படுத்தி டிரைவரை கத்தியால் குத்தி பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உள்ள அம்மனுக்கு மேரிமாதா அலங்காரம் செய்யப்பட்டதை கண்டித்து பாஜக மற்றும் இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் படைவீட்டு அம்மன் கோவில் தெருவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் உள்ளது. இங்கு மார்கழி மாதத்தையொட்டி தினமும் காலையில் சிறப்பு பூஜை- வழிபாடு நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை கோவிலில் உள்ள மூலவர் ஆதிபராசக்தி அம்மனுக்கு மேரிமாதா அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த தகவல் அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு தெரிய வந்தது. உடனே பாரதிய ஜனதா, இந்து முன்னணி, இந்து மக்கள் முன்னணி, அய்யப்ப பாதுகாப்பு மன்ற நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கோவில் முன்பு திரண்டனர்.

    உடனே அவர்கள் அம்மனுக்கு செய்யப்பட்டு இருந்த மேரிமாதா அலங்காரத்தை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    பின்னர் அவர்கள் பாரதிய ஜனதா மண்டல பொறுப்பாளர் சக்தி கணபதி, கோட்ட பொறுப்பாளர் சுகுமார், அய்யப்ப பாதுகாப்பு மன்ற மாவட்ட தலைவர் நாராயணன், இந்து மக்கள் முன்னணி தேவா ஆகியோர் முன்னிலையில் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கோவில் முன்பு திரண்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் அங்கு பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாதுஉசேன் மற்றும் ஏராளமான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அவர்கள் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அம்மனுக்கு செய்யப்பட்டுள்ள மேரி மாதா அலங்காரத்தை அகற்ற வேண்டும். இல்லையென்றால் கோவிலின் கதவை திறந்து உள்ளே சென்று அலங்காரத்தை அகற்றுவோம் என்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

    இதன் பின்னர் போலீசார் கோவில் நிர்வாகிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் மூலம் கோவில் கதவு திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு செய்யப்பட்டிருந்த மேரி மாதா அலங்காரத்தை அகற்றினர்.

    அதனை தொடர்ந்து கோவில் முன்பு திரண்டிருந்த அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.
    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் உயர்மின் அழுத்தம் காரணமாக 30 டி.வி.க்கள், செல்போன்கள் தீயில் கருகியது. சேதமடைந்த பொருட்களை பொதுமக்கள் சாலையில் வீசினர்.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் பேரூராட்சிக்குட்பட்ட 9-வது வார்டு பகுதியை சேர்ந்தது சோழன்நகர். இந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள்.

    நேற்று மாலை 5 மணி அளவில் இந்த பகுதியில் திடீரென்று உயர் மின் அழுத்தம் ஏற்பட்டது. இதனால் வீடுகளில் ஓடி கொண்டிருந்த டெலிவி‌ஷன்கள், கிரைண்டர்கள் மற்றும் மின்சாதன பொருட்கள் தீயில் கருகி எரிந்து புகையாகின. இதையறிந்து வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    உயர்மின் அழுத்தம் காரணமாக 30 டி.வி.க்கள், 5 கிரைண்டர்கள், 2 மிக்‌ஷிகள், 10 செல்போன்கள், 15 மின்விசிறிகள் தீயில் கருகி எரிந்து நாசமானது. மேலும் சார்ஜில் போடப்பட்டிருந்த 5 செல்போன் வெடித்து சிதறின.

    சேதமடைந்த டெலிவிஷன், கிரைண்டர், மிக்‌ஷி போன்றவற்றை அப்பகுதி பொதுமக்கள் சாலையில் வீசினர்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

    எங்கள் பகுதியில் பழமையான மின்மாற்றி உள்ளது. இதன் காரணமாக இங்கு அடிக்கடி மின்அழுத்தம் ஏற்பட்டு வருகிறது.

    இது குறித்து அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயர்மின் அழுத்தம் காரணமாக வீட்டில் இருந்த மின்சாதன பொருட்கள் சேதமாகி வருகிறது. இனியும் இந்த மின்மாற்றியை மாற்றவில்லை என்றால் பெண்ணாடத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றனர்.
    மந்தாரக்குப்பம் அருகே குடிபோதையில் தனியார் பஸ் கண்டக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    நெய்வேலி:

    கடலூர் டி.என்.பாளையத்தை சேர்ந்தவர் சுந்தர மூர்த்தி (வயது 35). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை கடலூரில் இருந்து விருத்தாசலம் சென்ற பஸ்சில் பணியாற்றி கொண்டிருந்தார். அந்த பஸ் வடலூரை அடுத்த மேட்டுக்குப்பம் என்ற இடத்தில் நின்றது.

    அப்போது விருத்தாசலம் காமராஜர் நகரை சேர்ந்த முருகன் (28) என்பவர் அந்த பஸ்சில் ஏறினார். அவரிடம் கண்டக்டர் சுந்தரமூர்த்தி டிக்கெட் கொடுத்து பணம் கேட்டார். அப்போது முருகன் பணம் கொடுக்க மறுத்து கொலை மிரட்டல் விடுத்தார். அப்போது முருகன் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து டிரைவர் பஸ்சை மந்தாரக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு ஓட்டி சென்றார். பின்பு கண்டக்டர் சுந்தரமூர்த்தி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த முருகனை கைது செய்தார்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அழகப்ப சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் பெரியநாயகம் (வயது 38), விவசாயி. இவரது மனைவி அருள்ஜெயா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று மாலை பெரியநாயகம் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் அங்கிருந்த வி‌ஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை பெரியநாயகம் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து பெரியநாயகம் எதற்காக வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×