search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்மனுக்கு செய்யப்பட்டிருந்த மேரிமாதா அலங்காரம்.
    X
    அம்மனுக்கு செய்யப்பட்டிருந்த மேரிமாதா அலங்காரம்.

    ஆதிபராசக்தி அம்மனுக்கு மேரிமாதா அலங்காரம்-பாஜக, இந்து முன்னணியினர் போராட்டம்

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உள்ள அம்மனுக்கு மேரிமாதா அலங்காரம் செய்யப்பட்டதை கண்டித்து பாஜக மற்றும் இந்து முன்னணியினர் போராட்டம் நடத்தினர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் படைவீட்டு அம்மன் கோவில் தெருவில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் உள்ளது. இங்கு மார்கழி மாதத்தையொட்டி தினமும் காலையில் சிறப்பு பூஜை- வழிபாடு நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இன்று காலை கோவிலில் உள்ள மூலவர் ஆதிபராசக்தி அம்மனுக்கு மேரிமாதா அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த தகவல் அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு தெரிய வந்தது. உடனே பாரதிய ஜனதா, இந்து முன்னணி, இந்து மக்கள் முன்னணி, அய்யப்ப பாதுகாப்பு மன்ற நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கோவில் முன்பு திரண்டனர்.

    உடனே அவர்கள் அம்மனுக்கு செய்யப்பட்டு இருந்த மேரிமாதா அலங்காரத்தை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    பின்னர் அவர்கள் பாரதிய ஜனதா மண்டல பொறுப்பாளர் சக்தி கணபதி, கோட்ட பொறுப்பாளர் சுகுமார், அய்யப்ப பாதுகாப்பு மன்ற மாவட்ட தலைவர் நாராயணன், இந்து மக்கள் முன்னணி தேவா ஆகியோர் முன்னிலையில் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    கோவில் முன்பு திரண்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் அங்கு பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர்கள் ஆரோக்கியராஜ், ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாதுஉசேன் மற்றும் ஏராளமான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அவர்கள் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அம்மனுக்கு செய்யப்பட்டுள்ள மேரி மாதா அலங்காரத்தை அகற்ற வேண்டும். இல்லையென்றால் கோவிலின் கதவை திறந்து உள்ளே சென்று அலங்காரத்தை அகற்றுவோம் என்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

    இதன் பின்னர் போலீசார் கோவில் நிர்வாகிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் மூலம் கோவில் கதவு திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு செய்யப்பட்டிருந்த மேரி மாதா அலங்காரத்தை அகற்றினர்.

    அதனை தொடர்ந்து கோவில் முன்பு திரண்டிருந்த அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.
    Next Story
    ×