என் மலர்tooltip icon

    கடலூர்

    மங்கலம்பேட்டை பகுதியில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
    பெண்ணாடம்:

    கோ.பூவனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மங்கலம்பேட்டை, பள்ளிப்பட்டு, சமத்துவபுரம், ரூபநாராயணநல்லூர், கோ.பூவனூர், விஜயமாநகரம், சின்னவடவாடி, பெரியவடவாடி, மாத்தூர், கோ.பவழங்குடி, மணக்கொல்லை, பாலக்கொல்லை, ஆலடி, எடக்குப்பம், சித்தேரிக்குப்பம், முத்தனங்குப்பம், குருவன்குப்பம், ராமநாதபுரம், புலியூர், கலர்குப்பம் மற்றும் நடியபட்டு ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை விருத்தாசலம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சுகன்யா தெரிவித்துள்ளார்.
    விருத்தாச்சலம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பெண்கள் உள்பட 4 பேர் பலியாகினர்.
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம்  அருகே மீன் லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 3 பெண்கள் உள்பட 4 பேர் பலியாகினர்.

    கோவிலுக்கு சென்றபோது நிகழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள், லாரி ஓட்டுநர் பலியாகி உள்ளனர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திட்டக்குடி அருகே கொரோனா பாதித்த கணவரை விட்டு தனியாக வசித்த பெண், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திட்டக்குடி:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வ.கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக அவரது மனைவி கற்பகம் (வயது 28) கடலூர் மாவட்டம் திட்டக்குடி பெரியார் நகரில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்தார். சம்பவத்தன்று உடல் நலக்குறைபாடு காரணமாக மனவேதனை அடைந்த அவர் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கற்பகம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெய்வேலி, வேப்பூரில் கஞ்சா விற்பனை செய்து வந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெய்வேலி

    நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் மற்றும் போலீசார் இந்திராநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகமான முறையில் 3 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்த போது, அவர்கள் இந்திராநகர் பீ 2 பிளாக் மாற்று குடியிருப்பு பகுதியை சேர்ந்த சேகர் மகன் ரகு என்கிற பாஸ்கர் (வயது 29), வடக்குத்து மாருதி நகரைச்சேர்ந்த லூர்துசாமி மகன் வினோத் (24), ஏ பிளாக் மாற்றுக்குடியிருப்பை சேர்ந்த முருகேசன் மகன் எலி என்கிற அய்யப்பன் (24) ஆகிய 3 பேர் என்றும், அவர்கள் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது. 

    இதையடுத்து அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா, 500 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்து, 3 பேரையும் கைது செய்தனர். வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் நேற்று கண்டப்பங்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கோ.கொத்தனூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 32) என்றும், அவர் சுற்றுப்புற கிராமங்களில் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரை சோதனைசெய்த போது, அவரிடம் 100 கிராம் கஞ்சா இருந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
    கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தொழிலாளி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று காலை 11.30 மணி அளவில் 57 வயது மதிக்கத்தக்க ஒருவர், தனது மனைவி மற்றும் 3 மகள்களுடன் மனு கொடுக்க வந்தார். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, அங்கு வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் மனுவை போடுமாறு கூறினர். இதற்கிடையே அந்த நபர் தான் கேனில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், அவரது கையில் இருந்த மண்எண்ணெய் கேனை பிடுங்கி, அவர் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர்.

    பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள தங்களிக்குப்பம் பகுதியை சேர்ந்த தொழிலாளி சுப்பிரமணியன் என்கிற அர்ஜூனன் (வயது 57) என்பதும், இவர் வசித்து வரும் வீட்டை அதே பகுதியை சேர்ந்த 2 பேர், தங்களுக்கு சொந்தமான இடம் என்று கூறி, வீட்டை காலி செய்யுமாறு மிரட்டி வருவதும் தெரிந்தது. மேலும் வீட்டை காலி செய்யாவிட்டால், உடனே இடித்து விடுவோம் என்றும் கூறியுள்ளனர்.

    இது தொடர்பாக அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, தீக்குளிக்க முயன்றது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார், அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    பண்ருட்டி அருகே தமிழக வாழ்வுரிமை கட்சி நகர நிர்வாகியை அடித்துக்கொன்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை எடப்பாளையம் தெருவை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் சாந்தகுமார் (வயது 22). சிற்பி வேலை செய்து வந்தார். மேலும் இவர் பண்ருட்டி நகர தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகியாகவும் இருந்து வந்தார். இவருடைய உறவினர் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் சக்திவேல்(25). சக்திவேல் அதே பகுதியை சேர்ந்த 21 வயதான கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து உல்லாசம் அனுபவித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்ததாக தெரிகிறது. இதையடுத்து சக்திவேலை கடந்த 2-ந்தேதி பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சாந்தகுமார், அதே பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த கல்லூரி மாணவியின் அண்ணனான பெயிண்டர் ஞானவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சாந்தகுமாரை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் பலத்த காயமடைந்த சாந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதையடுத்து ஞானவேல் மற்றும் அவரது ஆதரவாளர்களை பண்ருட்டி போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர்கள் தட்டாஞ்சாவடியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தட்டாஞ்சாவடி விரைந்து சென்று, அங்கிருந்த ஞானவேல்(20), திருவதிகை சரநாராயண நகர் குமரன் என்கிற குணசேகரன் (20), திடீர்குப்பம் கோபி என்கிற கோபாலகிருஷ்ணன் (20), திருவதிகை மண்டப தெருவை சேர்ந்த கோவில் சிற்பி விஜயகுமார் (23), சரநாராயணநகர் பிரகாஷ் (19), சுண்ணாம்புகார தெரு பிரதீப் (19) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.19½ லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஆயுதப்படை போலீஸ்காரரை தேடி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பம் புதுஉப்பலவாடியை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் ஜானகிராமன் (வயது 27). இவர் தற்போது சென்னை அய்யப்பன் தாங்கல் பகுதியில் வசித்து வருகிறார். கல்லூரி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை பெற்று தரும் மையம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் கடலூர் பாரதிசாலையில் உள்ள செயல்பட்டு வரும் அடகு வைத்த நகைகளை மீட்டு விற்பனை செய்து வரும் தனியார் நிறுவனத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்த கிளை மேலாளர் விஸ்வநாதன் (33) என்பவரிடம் தன்னுடைய 629 கிராம் நகைகளை (78½ பவுன்) இம்பீரியல் சாலையில் உள்ள தனியார் வங்கியில் அடகு வைத்துள்ளதாகவும், அந்த நகைகளை மீட்டு மீதியுள்ள நகைகளுக்கு பணத்தை தருமாறு கேட்டார். இதை நம்பிய கிளை மேலாளர் விஸ்வநாதன், சம்பந்தப்பட்ட தனியார் வங்கி கிளைக்கு ரூ.19 லட்சத்து 47 ஆயிரத்தை அனுப்பினார். பின்னர் நகையை வாங்குவதற்காக சம்பந்தப்பட்ட வங்கிக்கு ஜானகிராமனுடன் விஸ்வநாதன் சென்றார்.

    அப்போது அவருடன் சென்னை டி.பி.சத்திரம் மகாலிங்கம் மகன் முத்துக்குமார், சென்னை ஆவடி 2-வது தெரு ரமேஷ் மகன் ரியல் எஸ்டேட் அதிபர் முருகன் (42) ஆகிய 2 பேரும் உடன் சென்றனர். பின்னர் வங்கிக்கு சென்று ஜானகிராமன் நகைகளை மீட்டு விஸ்வநாதனிடம் கொடுக்காமல், அவரது நண்பர்கள் முத்துக்குமார், முருகனிடம் கொடுத்து அனுப்பி மோசடி செய்து விட்டு 3 பேரும் தலைமறைவாகி விட்டனர்.

    இது பற்றி விஸ்வநாதன் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் தேடி வந்தனர். மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் சென்னையில் பதுங்கி இருந்த ஜானகிராமன், முருகன் ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான முத்துக்குமாரை தேடி வருகின்றனர். ஆயுதப்படை போலீஸ்காரரான இவர் டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் ஈடுபட்டு தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    சிதம்பரம் அருகே ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அண்ணாமலைநகர்:

    சிதம்பரம் அருகே உள்ள சகுந்தலாம்பாள் நகரில் வசித்து வருபவர் கபிலன்(வயது31). இவர் மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விளையாட்டு பயிற்சியளிக்கும் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது அவரது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 5½ பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. திருடுபோன நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
    பண்ருட்டி அருகே வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    பண்ருட்டி அருகே வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பயங்கர சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திருவதிகை எடப்பாளையம் தெருவை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் சாந்தகுமார் (வயது 22). இவரும் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் சக்திவேல்(25) என்பவரும் நண்பர்கள் ஆவர். சக்திவேல் அதே பகுதியை சேர்ந்த 21 வயதான கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.

    மேலும் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியுடன் அவர், உல்லாசம் அனுபவித்து விட்டு திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி கொடுத்த புகாரின் பேரில், பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேலை கடந்த 2-ந் தேதி கைது செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு சாந்தகுமார், அதே பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கல்லூரி மாணவியின் அண்ணனான ஞானவேல் என்பவர், சாந்தகுமாரிடம், சக்திவேலின் காதலுக்கு நீ தானே உடந்தையாக இருந்தாய் என கூறி அவருடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த ஞானவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து சாந்தகுமாரை பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், சாந்தகுமாரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சாந்தகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார் தலைமறைவாக உள்ள ஞானவேல் மற்றும் அவரது ஆதரவாளர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ரெட்டிச்சாவடி பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
    கடலூர்:

    நல்லாத்தூர் துணை மின்நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான, நல்லாத்தூர், செல்லஞ்சேரி, கீழ் குமாரமங்கலம், நல்லவாடு, காட்டுப்பாளையம், ராசாப்பாளையம், புதுபூஞ்சோலைக்குப்பம், தென்னம்பாக்கம், சந்திக்குப்பம், ரெட்டிச்சாவடி, காரணப்பட்டு, புதுக்கடை, குட்டியாங்குப்பம், மதலப்பட்டு, இருசாம்பாளையம், கிளிஞ்சிக்குப்பம், புதுக்குப்பம், தூக்கணாம்பாக்கம், சிங்கிரிகுடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைக்கும் மின்சாரம் வினியோகம் இருக்காது. 

    மேற்கண்ட தகவலை கடலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
    கிசான் திட்டத்தில் மோசடி செய்த 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    மத்திய அரசின் பிரதம மந்திரியின் கிசான் நிதி உதவி திட்டம் மூலம் நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணையாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.6 ஆயிரம் செலுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தில் விவசாயிகள் அல்லாதோர் பணம் பெற்று முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இந்த முறைகேடு கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிகளவு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    எனவே அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி மாவட்ட கலெக்டர் சந்திரசேகர்சாகமூரி தலைமையில் வேளாண் குழுவினர் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.

    விசாரணையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை 31-ந்தேதி வரை மாவட்டத்தில் 80 ஆயிரத்து 752 பேர் கிசான் நிதி உதவி திட்டத்தில் சேர்ந்தனர். இத்திட்டத்தில் விவசாயிகள் அல்லாதவர்களும் சேர்ந்து உதவித்தொகை பெற்று முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து நடந்த ஆய்வில் 37 ஆயிரம் பேர் விவசாயிகள் அல்லாதவர்கள் என்று தெரிந்தது. இதைத்தொடர்ந்து அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும் அவர்களை இந்த திட்டத்தில் சேர்த்த அட்மாதிட்ட ஒப்பந்த ஊழியர்கள் 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இது தவிர பணியில் திறமையில்லாத மேலும் 10 ஒப்பந்த ஊழியர்களையும் கலெக்டர் பணி நீக்கம் செய்தார்.

    இதற்கிடையில் விவசாயிகள் அல்லாதவர்களிடம் இருந்து முதல் கட்டமாக ரூ.4 கோடியே 20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து பறிமுதல் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக கடலூர் வேளாண்மை துறை இணை இயக்குனர் முருகன் கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த திட்டத்தில் முறைகேடு தொடர்பாக கடலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் இறங்கினர்.

    அப்போது விருத்தாசலம் அருகே விஜயமாநகரம் கிராமத்தை சேர்ந்த மார்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்க தலைவர் ஆராமுதன், மருதுபாண்டியன், அவரது மனைவி வெண்ணிலா, அரங்கநாதன், மனோகரன், அருள்குமார், ராஜசேகர் உள்பட 8 பேரை பிடித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடலூர் அழைத்துவந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இவர்கள் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்வதற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொரோனாவை தடுப்பதற்காக லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் இருந்து தமிழகத்துக்கு தடுப்பூசி மருந்துகள் வரவழைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    கடலூர்:

    கடலூரில் புதிதாக 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா நடந்தது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியை ஆய்வு செய்தார்.

    அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிற மாநிலங்கள், பிறநாடுகளை போல் இல்லாமல் கொரோனா வைரஸ் நம்நாட்டில் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தமிழகம்தான் முன்மாதிரியாக உள்ளது.

    பல்வேறு வளர்ந்த நாடுகளிலேயே கொரோனா தொற்று முடிவுகள் தெரிய 7 நாட்கள் ஆகும். ஆனால், தமிழகத்தில் 24 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரத்துக்குள் முடிவுகள் தெரிய வருகிறது.

    கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசின் ஐ.சி.எம்.ஆர். கொரோனா தொற்றை தமிழகத்தில் சமூக பரவலாக அறிவிக்க வில்லை.

    தளர்வுகள் அதிகம் அறிவிக்கப்பட்டாலும் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை தொடர வேண்டும். அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கும் முறை அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் கொரோனா மருந்து தட்டுப்பாடு கிடையாது.

    கொரோனாவை தடுப்பதற்காக லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் இருந்து தமிழகத்துக்கு 300 தடுப்பூசி மருந்துகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து இன்னும் 2 நாட்களில் போரூர் ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் ஆரோக்கியமாக உள்ள தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×