search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கிசான் திட்டத்தில் மோசடி- கூட்டுறவு கடன் சங்க தலைவர் உள்பட 8 பேர் கைது

    கிசான் திட்டத்தில் மோசடி செய்த 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    மத்திய அரசின் பிரதம மந்திரியின் கிசான் நிதி உதவி திட்டம் மூலம் நலிவடைந்த விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணையாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.6 ஆயிரம் செலுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தில் விவசாயிகள் அல்லாதோர் பணம் பெற்று முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இந்த முறைகேடு கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அதிகளவு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    எனவே அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி மாவட்ட கலெக்டர் சந்திரசேகர்சாகமூரி தலைமையில் வேளாண் குழுவினர் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.

    விசாரணையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை 31-ந்தேதி வரை மாவட்டத்தில் 80 ஆயிரத்து 752 பேர் கிசான் நிதி உதவி திட்டத்தில் சேர்ந்தனர். இத்திட்டத்தில் விவசாயிகள் அல்லாதவர்களும் சேர்ந்து உதவித்தொகை பெற்று முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து நடந்த ஆய்வில் 37 ஆயிரம் பேர் விவசாயிகள் அல்லாதவர்கள் என்று தெரிந்தது. இதைத்தொடர்ந்து அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும் அவர்களை இந்த திட்டத்தில் சேர்த்த அட்மாதிட்ட ஒப்பந்த ஊழியர்கள் 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இது தவிர பணியில் திறமையில்லாத மேலும் 10 ஒப்பந்த ஊழியர்களையும் கலெக்டர் பணி நீக்கம் செய்தார்.

    இதற்கிடையில் விவசாயிகள் அல்லாதவர்களிடம் இருந்து முதல் கட்டமாக ரூ.4 கோடியே 20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து பறிமுதல் நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக கடலூர் வேளாண்மை துறை இணை இயக்குனர் முருகன் கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த திட்டத்தில் முறைகேடு தொடர்பாக கடலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் இறங்கினர்.

    அப்போது விருத்தாசலம் அருகே விஜயமாநகரம் கிராமத்தை சேர்ந்த மார்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்க தலைவர் ஆராமுதன், மருதுபாண்டியன், அவரது மனைவி வெண்ணிலா, அரங்கநாதன், மனோகரன், அருள்குமார், ராஜசேகர் உள்பட 8 பேரை பிடித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடலூர் அழைத்துவந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இவர்கள் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்வதற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து 8 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் 8 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×