என் மலர்
செய்திகள்

லண்டனில் இருந்து தமிழகத்துக்கு கொரோனா தடுப்பூசி வரவழைப்பு- விஜயபாஸ்கர் தகவல்
கடலூர்:
கடலூரில் புதிதாக 108 ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழா நடந்தது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியை ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிற மாநிலங்கள், பிறநாடுகளை போல் இல்லாமல் கொரோனா வைரஸ் நம்நாட்டில் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தமிழகம்தான் முன்மாதிரியாக உள்ளது.
பல்வேறு வளர்ந்த நாடுகளிலேயே கொரோனா தொற்று முடிவுகள் தெரிய 7 நாட்கள் ஆகும். ஆனால், தமிழகத்தில் 24 மணி நேரத்தில் இருந்து 48 மணி நேரத்துக்குள் முடிவுகள் தெரிய வருகிறது.
கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசின் ஐ.சி.எம்.ஆர். கொரோனா தொற்றை தமிழகத்தில் சமூக பரவலாக அறிவிக்க வில்லை.
தளர்வுகள் அதிகம் அறிவிக்கப்பட்டாலும் பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை தொடர வேண்டும். அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை முடிவுகள் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கும் முறை அனைத்து மாவட்டங்களிலும் அமல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் கொரோனா மருந்து தட்டுப்பாடு கிடையாது.
கொரோனாவை தடுப்பதற்காக லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் இருந்து தமிழகத்துக்கு 300 தடுப்பூசி மருந்துகள் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து இன்னும் 2 நாட்களில் போரூர் ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் ஆரோக்கியமாக உள்ள தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.