என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் 4,316 மாணவ-மாணவிகள் நேற்று ‘நீட்’ தேர்வு எழுதினர். அவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
கடலூர்:
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ எனும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது முக்கியம் ஆகும். இத்தேர்வு மத்திய அரசால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, கடந்த மே மாதம் 3-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் கொரோனா தொற்று காரணமாக ஜூலை 26-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அப்போதும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மீண்டும் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து செப்டம்பர் 13-ந்தேதி (அதாவது நேற்று) நீட் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி நேற்று நீட் தேர்வு நடந்தது.
கடலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை எழுதுவதற்காக மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளி, சி.கே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நெய்வேலி கேந்திரிய வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, ஜவகர் மேல்நிலைப்பள்ளி, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரிஸ்டோ பப்ளிக் பள்ளி, அங்குசெட்டிபாளையம் அன்னை வேளாங் கண்ணி பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய 10 இடங்களில் நீட் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் கிருமி நாசினி தெளித்தல் போன்ற பல்வேறு முன்னேற்பாடு பணிகளும் நடைபெற்றது.
தேர்வு நாளான நேற்று மாணவ-மாணவிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு காலை 10 மணி முதலே வரத்தொடங்கினர். பின்னர் தேர்வு மையங்களின் நுழைவு வாயில் பகுதியில் அதிகாரிகள் நின்று கொண்டு, மாணவ-மாணவிகளை தெர்மல் ஸ்கேனர் மூலம் அவர்களது உடல்வெப்ப நிலையை பரிசோதனை செய்தனர். பின்னர் மாணவர்களின் கைகளில் கிருமிநாசினி தெளித்து, மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் மாணவர்களை முழுமையாக சோதனை செய்தனர். தொடர்ந்து முக கவசம் அணிந்த மாணவ-மாணவிகள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே பெரும்பாலான மாணவிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு கம்மல், கொலுசு, செயின், துப்பட்டா அணிந்து வந்தனர். இதை பார்த்த அதிகாரிகள் மாணவிகளின் பெற்றோர் மூலம் நகைகளை கழற்ற வைத்தனர். அதன்பிறகே தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்களின் ஹால் டிக்கெட்டோடு கட்டுப்பாடுகள் மற்றும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இணைக்கப்பட்டு இருந்தன. அதன்படி தேர்வர்கள் 50 மில்லி அளவுகொண்ட கிருமிநாசினி திரவம், வெளிப்படையான வாட்டர் பாட்டில், கையுறைகள், தேர்வுக்கு தேவையான ஆவணங்களை எடுத்துச்சென்றனர்.
பின்னர் தேர்வு அறையில் மாணவ-மாணவிகளுக்கு முக கவசம் வழங்கப்பட்டது. அதனால் மாணவர்கள் தாங்கள் ஏற்கனவே அணிந்து வந்த முக கவசத்தை அகற்றிவிட்டு, தேர்வு அறையில் கொடுத்த முக கவசத்தை அணிந்து தேர்வு அறைக்குள் சென்றனர். தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கியது.
இத்தேர்வு மாலை 5 மணி வரை நடைபெற்றது. மாவட்டத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 5,227 பேரில் 4,316 மாணவ-மாணவிகள் மட்டுமே தேர்வு எழுதினர். 911 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு வந்து செல்லும் வகையில் நேற்று கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஒவ்வொரு தேர்வு மையங்கள் முன்பும் தலா 38 போலீசார் வீதம், மாவட்டம் முழுவதும் மொத்தம் 380 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக 150 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை 31-ந்தேதி வரை பிரதம மந்திரியின் கிசான் நிதி உதவி திட்டத்தில் 80 ஆயிரத்து 737 பேர் சேர்ந்துள்ளனர். இதில் முறைகேட்டில் ஈடுபட்ட 3 ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் விவசாய திட்டத்தில் வேலை செய்ய தகுதி இல்லாத 10 ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்தில் பி.எம்.கிசான் திட்டத்தில் பயன்பெறுவதற்காக கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை வரை மொத்தம் 80,737 மனுக்கள் வரப்பெற்றது.
இதில் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டத்தை சேர்ந்த மனுக்கள் மட்டும் 35,231 ஆகும். இந்த மனுக்கள் அந்தந்த மாநில, மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மொத்தம் 70,709 பேர் விவசாயிகள் என்ற போர்வையில் போலியாக விண்ணப்பித்து இத்திட்டத்தில் சேர்ந்துள்ளதும், 3,483 பேர் மட்டுமே உண்மையான விவசாயிகள் என்பதும் தெரிய வந்தது. இதில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 43,075 பேரும், வெளிமாவட்டங்களை சேர்ந்த 27,634 பேரும் போலி பயனாளிகள். மீதமுள்ள 6,545 பயனாளிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக வேளாண்மை அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து, விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விருத்தாசலம், பண்ருட்டி, அண்ணாகிராமம் பகுதிகளை சேர்ந்த கணினி மைய உரிமையாளர்கள், அட்மா திட்ட ஒப்பந்த ஊழியர்கள் என 10 பேரைநேற்று காலை கடலூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடந்தது. பின்னர் மாலையில் அனைவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரி ஒருவர் கூறுகையில், விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை யார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தில் சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் விசாரணை முழுமையாக முடிவடைந்த பிறகே முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் குறித்த விவரம் தெரியவரும் என்றார்.
பெண்ணாடம் அருகே அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து வயலில் இறங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
பெண்ணாடம்:
பெண்ணாடம் அருகே கொள்ளத்தங்குறிச்சி, திருமலைஅகரம், மேலூர், மருதாத்தூர், ஏரப்பாவூர், அருகேரி, கொத்தட்டை, வடகரை, நந்தி மங்கலம், கோனூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால் மின் மோட்டார்களை இயக்கி வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று அப்பகுதி விவசாயிகள் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் கொள்ளத்தங்குறிச்சியில் உள்ள ஒரு வயலில் இறங்கி அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்தும், ஏற்கனவே வழங்கியது போல் மும்முனை மின்சாரம் வழங்கக்கோரியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் போராட்டம் நடத்தினர்.
அப்போது, தொடர் மின்வெட்டால் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், கடந்த ஒரு வாரமாக எந்த ஒரு விவசாய பணியும் செய்ய முடியவில்லை என்றும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து கலைந்து சென்றனர். இருப்பினும் விவசாயிகளின் இந்த போராட்டத்தில் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூரில் ரூ.1¼ கோடி மதிப்புள்ள புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைதான வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கடலூர்:
கடலூர் கே.என்.பேட்டை திருப்பதி நகரில் உள்ள ஒரு வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி மற்றும் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் திருப்பதி நகரில் உள்ள வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் 1 கோடியே 21 லட்சத்து 12 ஆயிரத்து 740 ரூபாய் மதிப்புள்ள சுமார் 7 டன் 753 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வியாபாரியான பாரதி (வயது 35), சரவணன்(49), ராம்குமார்(19), பிரசாந்த், தேவநாதன், கணபதி ஆகியோர் திருப்பதி நகரில் வீடு வாடகைக்கு எடுத்து, அங்கு புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
தொடர்ந்து பாரதி, சரவணன், ராம்குமார் உள்ளிட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கைதான பாரதி மீது திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதையடுத்து அவரது குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில், பாரதியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவின்பேரில் பாரதியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.
நடுவீரப்பட்டு அருகே பாட்டிலில் பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தை மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லிக்குப்பம்:
நடுவீரப்பட்டு அருகே பாலூரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருடைய மனைவி கிரிஜா. இவர்களுக்கு 1½ வயதில் ஷஷ்மிதா என்கிற பெண் குழந்தை இருந்தது. இந்த குழந்தைக்கு சம்பவத்தன்று கிரிஜா பாட்டிலில் பால் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த குழந்தைக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கியது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஷஷ்மிதாவை சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஷஷ்மிதா பரிதாபமாக உயிரிழந்தாள்.
இது பற்றி நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் பால் குடித்தபோது மூச்சு திணறி குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
பண்ருட்டி அருகே தொழிலாளியை குத்துவிளக்கால் அடித்துக் கொன்ற வழக்கில் கோவில் பூசாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நடு மேட்டுக்குப்பம் முத்துமாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் ரத்தினசாமி மகன் ரவி (வயது 43). தொழிலாளி. கடந்த 9-ந் தேதியன்று நடு மேட்டுக்குப்பத்தில் உள்ள நொண்டி வீரன் அய்யனார் கோவிலில் நடந்த ஊரணி பொங்கல் படையலில் ரவி கலந்துகொண்டு கறி விருந்து சாப்பிட்டார். பின்னர் மது குடித்த அவரை, மர்ம மனிதர்கள் குத்துவிளக்கால் அடித்துக்கொலை செய்து விட்டு சென்று விட்டனர்.
இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று சின்ன காட்டுப்பாளையம் வெள்ளவாரி ஓடை அருகில் பதுங்கியிருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், நடுமேட்டுக்குப்பத்தை சேர்ந்த கோவில் பூசாரியான வைரமணி (64) மற்றும் அதே ஊரை சேர்ந்த சிவலிங்கம் மகன் சிவகுரு (24) ஆகியோர் என்பதும் ரவியை அவர்கள் இருவரும் சேர்ந்து அடித்து கொன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து அவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
ஊரணி பொங்கல் படையல் விழாவில் கலந்து கொண்டவர்களில் ரவியை தவிர அனைவரும் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இதன் பின்னர் நாங்கள் இருவரும் கோவிலில் அமர்ந்து மதுகுடித்தோம். அப்போது அங்கிருந்த ரவி எங்களிடம் மது தருமாறு கேட்டார். இதற்கு நாங்கள் மறுப்பு தெரிவித்தோம். இதனால் அவர் எங்களிடம் தகராறில் ஈடுபட்டு, ஆபாசமாக திட்டினார். இதில் ஆத்திரம் அடைந்த நாங்கள் கோவிலில் இருந்த மணி மற்றும் குத்துவிளக்கால் அடித்து ரவியை கொலை செய்ததாக தெரிவித்தனர்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நேரடி படிப்பு மற்றும் தொலை தூரக் கல்வி இறுதி பருவ மாணவருக்கு வரும் 21 முதல் 30 ஆம் தேதி வரை இணைய வழி மூலமாக தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நேரடி படிப்பு மற்றும் தொலை தூரக் கல்வி இறுதி பருவ மாணவருக்கு வரும் 21 முதல் 30 ஆம் தேதி வரை இணைய வழி மூலமாக தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இதற்கான அட்டவணையை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் செல்வ நாராயணன் நேற்று வெளியிட்டுள்ளார்.
தேர்வு அட்டவணை மற்றும் மாணவர்களுக்கான அறிவுரைகளை பல்கலைக்கழக இணையதளம் மற்றும் அந்தந்த துறைகள் மூலம் தெரியப்படுத்தபட உள்ளதாக தெரிவித்த அவர், இணையவழி தேர்வு தொடர்பாக மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய துறை தலைவர்களை தொடர்பு கொள்ளலாம் என்றும், மாணவர்களின் நலன் கருதி "மாதிரி தேர்வு" இணையதளம் வழியாக அடுத்த வாரத்தில் நடத்தப்பட உள்ளதாகவும், பதிவாளர் ஆர். ஞானதேவன் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நேரடி படிப்பு மற்றும் தொலை தூரக் கல்வி இறுதி பருவ மாணவருக்கு வரும் 21 முதல் 30 ஆம் தேதி வரை இணைய வழி மூலமாக தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இதற்கான அட்டவணையை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் செல்வ நாராயணன் நேற்று வெளியிட்டுள்ளார்.
தேர்வு அட்டவணை மற்றும் மாணவர்களுக்கான அறிவுரைகளை பல்கலைக்கழக இணையதளம் மற்றும் அந்தந்த துறைகள் மூலம் தெரியப்படுத்தபட உள்ளதாக தெரிவித்த அவர், இணையவழி தேர்வு தொடர்பாக மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய துறை தலைவர்களை தொடர்பு கொள்ளலாம் என்றும், மாணவர்களின் நலன் கருதி "மாதிரி தேர்வு" இணையதளம் வழியாக அடுத்த வாரத்தில் நடத்தப்பட உள்ளதாகவும், பதிவாளர் ஆர். ஞானதேவன் தெரிவித்துள்ளார்.
நெய்வேலியில் தலைமை ஆசிரியையிடம் 9 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெய்வேலி:
நெய்வேலி 3-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருபவர் மகேந்திரன்(வயது 60). ஓய்வுபெற்ற என்.எல்.சி. தொழிலாளி. இவருடைய மனைவி வெண்ணிலா(54). இவர் வடலூர் அருகே காட்டுக்கொல்லையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று வெண்ணிலா வேலை சம்பந்தமாக பள்ளிக்கூடத்துக்கு சென்று விட்டு வீட்டுக்கு மொபட்டில் திரும்பி வந்து கொண்டிருந்தார். நெய்வேலி வேலுடையான்பட்டு சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் அருகில் வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் ஒருவர், திடீரென வெண்ணிலா ஓட்டி வந்த மொபட் மீது மோதினார். இதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அந்த மர்மநபர், வெண்ணிலா அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்துக்கொண்டு, அதே மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். நிலை தடுமாறி கீழே விழுந்த வெண்ணிலா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின்பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகையை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
பண்ருட்டி அருகே தொழிலாளி குத்துவிளக்கால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கோவில் பூசாரி உள்பட 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள நடு மேட்டுக்குப்பம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரத்தினசாமி மகன் ரவி (வயது 43), கூலித் தொழிலாளி. இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், விஜயகுமார், விஜயபாரதி ஆகிய மகன்களும், பிரதீபா என்ற மகளும் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயந்தி சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து ரவி மதுவுக்கு அடிமையானதோடு, சரி வர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் அதேஊரில் முந்திரி தோப்பில் உள்ள நொண்டிவீரன் கோவிலில் ஊரணி பொங்கல் வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. அப்போது ரவி அங்கு குடிபோதையில் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று மாலை ரவி நொண்டி வீரன் கோவில் முன்பு தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதைபார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதுபற்றி காடாம்புலியூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரவியின் உடலை பார்வையிட்டு, அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மர்மநபர் யரோ கோவிலில் இருந்த குத்துவிளக்கை எடுத்து ரவி தலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கொலை செய்யப்பட்ட ரவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து, குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ரவி அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக நொண்டி வீரன் கோவில் பூசாரி உள்பட 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பண்ருட்டி அருகே படிக்க சொல்லி தந்தை திட்டியதால் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே அரசடிகுப்பத்தை சேர்ந்தவர் ரமேஷ். தையல் தொழிலாளி. இவருடைய மகள் கவிமணி (வயது 16). பண்ருட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் கவிமணி வீட்டிலேயே இருந்து வந்தார்.
இந்த நிலையில் கவிமணி வீட்டில் செல்போனில் படம் பார்த்து கொண்டிருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த ரமேஷ் ஆன்லைனில் பாடம் படிக்காமல், ஏன் படம் பார்த்து கொண்டு இருக்கிறாய். ஒழுங்காக பாடங்களை படி என கூறி திட்டியதாக தெரிகிறது இதில் மனமுடைந்த கவிமணி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி வீட்டில் இருந்த வயிற்று வலி சிகிச்சைக்கான மாத்திரைகளை அதிக அளவில் எடுத்து சாப்பிட்டதாக தெரிகிறது. அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்.
அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கவிமணி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குறிஞ்சிப்பாடி அருகே பரவனாற்று பாலம் கட்டும் பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டார்.
கடலூர்:
வடகிழக்கு பருவமழையையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய ஏரிகள், வாய்க்கால்கள், விபத்து ஏற்படக்கூடிய இடங்களை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். அதன்படி குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றிய பகுதியான கொளக்குடி ஊராட்சியில் உள்ள ஏரி, பரவனாறு வாய்க்காலை என்.எல்.சி. நிர்வாகம் தூர்வாரி கரையை பலப்படுத்தி உள்ளது.
இந்த பணியை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கல்குணம் கிராமத்தில் செங்கால் ஓடையும், பரவனாறும் இணையும் இடத்தை பார்வையிட்டு உடனடியாக அங்கு தடுப்புச்சுவர் அமைக்க உத்தரவிட்டார்.
அதன்பிறகு கல்குணம்- டி.வி.நல்லூர் செல்லும் சாலையில் உள்ள பரவனாற்று பாலம் கடந்த ஆண்டு பெய்த கனமழையினால் துண்டித்து போனது. அதில் தற்காலிக பாலம் அமைத்து பொதுமக்கள் சென்று வருகின்றனர். தற்போது அதில் நபார்டு வங்கி மூலம் ரூ.2½ கோடி மதிப்பில் பாலம் கட்டும் பணி நடைபெற உள்ளது. அந்த இடத்தையும் கலெக்டர் பார்வையிட்டு விரைவில் பணிகளை தொடங்க உத்தரவிட்டார். ஆய்வின் போது குறிஞ்சிப்பாடி தாசில்தார் கீதா, ஒன்றிய ஆணையாளர் சதீஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முகசிகாமணி மற்றும் நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறையினர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் மேலும் ஒரு பெண் உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 8ஆக உயர்ந்தது.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குறுங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை மனைவி காந்திமதி. இவர் அப்பகுதி நாரைக்கால் ஏரியோரம் வயலில் உள்ள ஒரு கட்டிடத்தில் வாணவெடி மற்றும் நாட்டு வெடிகள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக இந்த தொழிற்சாலை இயங்கவில்லை.
இந்த நிலையில் ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்த நிலையில், கடந்த 4-ந்தேதி தொழிற்சாலை திறக்கப்பட்டு, நாட்டு வெடிகள் தயாரிக்கும் பணியில் 9 பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது வெடி செய்வதற்கான மருந்தை தொழிலாளர்கள் பக்குவப்படுத்தி, இடித்தனர். அந்த நேரத்தில் வெடி மருந்து திடீரென வெடித்தது.
அதில் இருந்து எழுந்த தீப்பொறிகள், அருகில் இருந்த வெடி மருந்துகள் மற்றும் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த வெடிகள் மீது விழுந்தது. இவை ஒட்டுமொத்தமாக பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்த கட்டிடத்தின் சுவர்கள் அனைத்தும் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
இந்த பயங்கர விபத்தில் தொழிற்சாலை உரிமையாளர் காந்திமதி(வயது 58), அதே ஊரை சேர்ந்த பெருமாள் மனைவி மலர்க்கொடி(65), காந்திமதியின் மகளும், நம்பியார் என்பவரின் மனைவியுமான லதா(40), உத்திராபதி மனைவி சித்ரா(45), மாதவன் மனைவி ராசாத்தி(48), ருக்மணி (38), ரத்னாயாள்(60) ஆகிய 7 பேரும் உடல் கருகி பலியாகினர்.
தீக்காயமடைந்த காந்திமதியின் மருமகளும், முத்துவின் மனைவியுமான தேன்மொழி (35), நம்பியார் மகள் அனிதா(22) ஆகியோர் சிகிச்சைக்காக காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக 2 பேரும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் சிகிச்சை பலனின்றி அனிதா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இவர் இந்த விபத்தில் இறந்த காந்திமதியின் பேத்தியும், லதாவின் மகளும் ஆவார். இதையடுத்து பலி எண்ணிக்கை 8ஆக உயர்ந்தது. படுகாயமடைந்துள்ள தேன்மொழிக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இருப்பினும் அனிதா இறந்த செய்தியை கேட்டதும் அப்பகுதி மக்களை மேலும் வேதனையில் ஆழ்த்தியது.






