என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியானார்கள். டாக்டர்கள் உள்பட 254 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 17 ஆயிரத்து 295 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானதில் புதிதாக 254 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களில் கடலூர், நெய்வேலி, குமராட்சியை சேர்ந்த 3 கர்ப்பிணிகள், சிதம்பரத்தை சேர்ந்த 2 டாக்டர்கள், கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 98 பேர், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 151 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 549 ஆக உயர்ந்தது. நேற்று 292 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இது வரை 15 ஆயிரத்து 81 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். நேற்று முன்தினம் வரை 183 பேர் கொரோனாவுக்கு பலியான நிலையில், நேற்று 5 பேர் பலியானார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-

    கடலூரை சேர்ந்த 65 வயது முதியவர் கடலூர் அரசு மருத்துவமனையிலும், பண்ருட்டியை சேர்ந்த 59 வயது ஆண் அங்குள்ள தனியார் மருத்துவமனையிலும், நெய்வேலியை சேர்ந்த 36 வயது பெண் சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவமனையிலும், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 59 வயது பெண் சென்னை தனியார் மருத்துவமனையிலும், நல்லூரை சேர்ந்த 55 வயது ஆண் திருச்சி தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

    அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் நோய் தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் 5 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 188 ஆக உயர்ந்தது. கொரோனா பாதித்த 2002 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 278 பேர் வெளி மாவட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 ஆயிரத்து 448 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
    விருத்தாசலத்தில் கற்பழிக்கப்பட்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்கு காரணமானவரை ஆவியாக வந்து பழிவாங்குவேன் என்று அவர் கடிதத்தில் எழுதியுள்ளார்.
    பெண்ணாடம்:

    விருத்தாசலத்தில் கற்பழிக்கப்பட்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்கு காரணமானவரை ஆவியாக வந்து பழிவாங்குவேன் என்று அவர் கடிதத்தில் எழுதியுள்ளார். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மணலூரை சேர்ந்தவர் வேல்முருகன். இவர், ராஜேந்திரபட்டிணத்தில் கிராம நிர்வாக அலுவலராக உள்ளார். இவருக்கும், மணவாளநல்லூரை சேர்ந்த செம்பாயி(வயது 30) என்பவரும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. கணவர்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதன் காரணமாக செம்பாயி, தனது கணவரை விட்டு பிரிந்து 4 ஆண்டுகளாக மணவாளநல்லூரில் உள்ள தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி வீட்டில் இருந்த அவரை, அதே பகுதியை சேர்ந்த விவசாயி சின்னகுட்டி என்கிற ராஜேந்திரன் (42) என்பவர் வலுக்கட்டாயமாக அங்குள்ள தீவனத்தோட்டத்துக்கு தூக்கி சென்று, கற்பழித்துள்ளார். இதில், அவர் கூச்சல்போடவே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு ஓடிவந்தனர். அதற்குள் ராஜேந்திரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இதையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தாய் அரசியிடம் கூறினார். அப்போது அவர், தன்னை ராஜேந்திரன் கற்பழித்து விட்டு, வாழ்க்கையை நாசமாக்கிவிட்டதாக கூறி கதறி அழுதுள்ளார். இதுபற்றி போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறி செம்பாயியை அவர் சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து சென்றார். இருப்பினும் தனக்கு நேர்ந்த இந்த கொடூரத்தை எண்ணி செம்பாயி, வேதனையில் இருந்துள்ளார்.

    மறுநாள்(11-ந்தேதி) தனது வீட்டின் பின்புறம் உள்ள மாமரத்தில் செம்பாயி தூக்குப்போட்டு கொண்டார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல், அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது பற்றி அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனதுக்கு நேர்ந்த கொடூரம் சம்பவம் குறித்து செம்பாயி, ஒரு நோட்டு புத்தகத்தில் கடிதமாக எழுதி வைத்திருந்தார். அதனை போலீசார் கைப்பற்றினர். அதில், எனது சாவுக்கு காரணம் சின்னகுட்டிதான். நான் இறந்து, அவனை ஆவியாக வந்து பழிவாங்குவேன் என்று குறிப்பிட்டு எழுதி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அரசி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னகுட்டி என்கிற ராஜேந்திரனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் விருத்தாசலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    நெய்வேலியில் என்எல்சி தொமுச சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 9 அடி உயர முழுஉருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை திமுக தலைவர் முக ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்து பேசினார்.

    நெய்வேலி:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. தொ.மு.ச. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 9 அடி உயர முழுஉருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    இதனை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-

    மத்திய-மாநில அரசுகள் தொழிலாளர்களின் துரோக அரசுகளாக உள்ளன. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மட்டுமே 2 அரசுகளும் செயல்படுகிறது.

    தொழிலாளர்களுக்காக பிரதமர் அறிவிக்கும் பல கோடி ரூபாய் திட்டங்கள் வாக்குறுதிகளாகவே உள்ளது. நானும் விவசாயிதான் என்று கூறும் தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் 8 வழிச்சாலை போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்தவர்.

    நீட் தேர்வு காரணமாக இறந்த மாணவர்களின் மரணம் தற்கொலை அல்ல. அது மத்திய-மாநில அரசுகள் நடத்திய கொலைகள். ஆனால், இந்த தற்கொலைக்கு காரணம் தி.மு.க.தான் என்று சட்டசபையில் முதல்- அமைச்சர் பேசுகிறார்.

    மத்தியில் பாரதிய ஜனதா மற்றும் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி செய்த 2016-ம் ஆண்டுதான் முதன் முதலில் நீட் தேர்வு நடந்தது. இந்த விசயத்தில் அ.தி.மு.க. திட்டமிட்டு பொய்பிரசாரம் செய்து வருகிறது. 2013-ம் ஆண்டு மே 5-ந் தேதி கருணாநிதி நீட்தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

    பின்னர் 7 மாநில முதல்-அமைச்சர்கள் சுப்ரீம் கோர்ட்டில் நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தாக்கல் போது தமிழக அரசு ஏன் இணையவில்லை.

    முதல்-அமைச்சர் பழனிசாமியின் ஆட்சி இன்னும் 6 மாதங்கள் மட்டுமே. அதன்பின்னர் ஆட்சி மாற்றம் உறுதியாகி விட்டது. மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகி விட்டனர். அதற்கேற்றவாறு நாம் தேர்தல் பணிகளை முன்னெடுக்க இருக்கிறோம். எனவே, எவரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஏதுவாக தேர்தல் பணிக்கு தயாராகுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கடலூர், புவனகிரியில் கொரோனா கட்டுப்பாட்டை மீறிய 4 கடை உரிமையாளர்களுக்கு கலெக்டர் உத்தரவின்பேரில் அலுவலர்கள் அபராதம் விதித்தனர்.
    கடலூர் முதுநகர்:

    கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கடலூர் முதுநகர் பகுதியில் நேற்று மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள வெல்டிங் ஒர்க்‌ஷாப்பில், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் ஊழியர்கள் இருந்தனர்.

    இதையடுத்து அவர்களுக்கு முக கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து அறிவுரை வழங்கி, கடை உரிமையாளருக்கு நகராட்சி மூலம் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்க உத்தரவிட்டார். மேலும் முக கவசம் அணியாமல் வேலை பார்த்த கடை ஊழியர்கள் 2 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் அருகில் உள்ள முட்டை கடை, ஜெராக்ஸ் கடை உரிமையாளருக்கும் தலா ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்க கலெக்டர் உத்தரவிட்டார். முக கவசம் அணியாமல் நின்ற ஜெராக்ஸ் கடை ஊழியர்கள் 2 பேருக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் நகராட்சி அலுவலர்கள் அபராதம் விதித்தனர்.

    அதன்பிறகு புவனகிரி பஸ் நிலையத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் இருந்த பயணிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் டிரைவர், கண்டக்டர்களிடம் முக கவசம் அணியாமல் வரும் பயணிகளை பஸ்களில் அனுமதிக்கக்கூடாது என்று எச்சரிக்கை செய்தார்.

    தொடர்ந்து அங்கிருந்து சிறிய செல்போன் கடைக்குள் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் கூட்டமாக இருந்ததை கண்டு, கொரோனா தொற்று பரவுவது குறித்து அறிவுரை வழங்கி, அந்த செல்போன் கடை உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்க பேரூராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். அதன்படி பேரூராட்சி அலுவலர்கள் அபராதம் விதித்தனர்.

    ஆய்வின்போது கடலூர் தாசில்தார் செல்வக்குமார், சிதம்பரம் தாசில்தார் ஹரிதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    பண்ருட்டியில் ஓய்வுபெற்ற தாசில்தார் வீட்டில் ரூ.15 லட்சம் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.என்.புரம் முத்தையாநகரை சேர்ந்தவர் கோதண்டபாணி. பா.ம.க. பிரமுகரான இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி மங்களம்(வயது 60). இவர், தாசில்தாராக பணிபுரிந்து ஓய்வுபெற்றவர் ஆவார். இந்த தம்பதிக்கு சூர்யகுமார் என்ற மகனும், சுகன்யாதேவி என்ற மகளும் உள்ளனர்.

    இதில் சூர்யகுமார், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராகவும், சுகன்யாதேவி அசாம் மாநிலத்தில் உள்ள அரசு கல்லூரியில் பேராசிரியையாகவும் உள்ளனர். எல்.என்.புரத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த மங்களம், கடந்த 10-ந் தேதி சென்னையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றார். வீட்டில் வளர்த்து வரும் நாய்களுக்கு, வேலைக்காரர்கள் தினமும் வந்து உணவு வைத்துவிட்டு செல்வார் கள்.

    அந்த வகையில் நேற்று காலையில் நாய்களுக்கு உணவு வைப்பதற்காகவும், வீட்டு வளாகத்தை சுத்தம் செய்வதற்காகவும் வேலைக்காரர்கள் வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கேட் பூட்டும், கதவும் உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது பற்றி, மங்களத்துக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். அதன்படி மங்களம், தனது மகனுடன் வீட்டிற்கு வந்து, உள்ளே சென்று பார்த்தார். அங்கு வீட்டின் அறைகளில் இருந்த 6 பீரோக்கள் உடைக்கப்பட்டு கிடந்தன. அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் கீழே சிதறிக்கிடந்தன.

    பீரோக்களில் வைத்திருந்த நகை-பணம் உள்ளதா? என்று மங்களம் பார்த்தார். ஆனால் அங்கு வைத்திருந்த 31 பவுன் நகைகள், 6 கிலோ வெள்ளிப்பொருட்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    விசாரணையில், வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டு கதவை உடைத்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச்சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் இந்த வழக்கில் துப்பு துலக்குவதற்காக கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளை நடந்த வீட்டில் மோப்பமிட்ட அந்த நாய், அங்கிருந்து சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நர்சரி வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

    மேலும் கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் நேரில் வந்து கதவு, பீரோக்களில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை சேகரித்தனர். இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஓய்வுபெற்ற தாசில்தார் வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் மோசடி செய்த தம்பதி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கிசான் நிதி உதவி திட்டத்தில் 80,737 பேர் சேர்ந்துள்ளனர். இதில் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட 3 ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் விவசாய திட்டத்தில் வேலை செய்ய தகுதி இல்லாத 10 ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

    மேலும் மாவட்டத்தில் பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெறுவதற்காக கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை வரை மொத்தம் 80,737 மனுக்கள் பெறப்பட்டது. இதில் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டத்தை சேர்ந்த மனுக்கள் 35,231 ஆகும். இவை அந்தந்த மாநில, மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    அதன் அடிப்படையில் மொத்தம் 70,709 பேர் விவசாயிகள் என்ற போர்வையில் போலியாக விண்ணப்பித்து இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இதில் 3,483 பேர் மட்டுமே விவசாயிகள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதுதொடர்பாக வேளாண்மை அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர்கள் விருத்தாசலம், பண்ருட்டி, அண்ணா கிராமம் பகுதிகளை சேர்ந்த கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர்கள், அட்மா திட்ட ஒப்பந்த ஊழியர்கள் என 150 பேரிடம் விசாரணை நடத்தினர். அதில் 3 பேர் பிரதமரின் கிசான் திட்ட மோசடியில் அதிகபடியாக ஈடுபட்டிருப்பதை கண்டு பிடித்தனர்.

    அவர்கள் 3 பேரையும் விழுப்புரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு அழைத்து சென்று சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரி விசாரணை நடத்தினார்.

    இதைதொடர்ந்து நடந்த விசாரணையில் கடலூர் மாவட்டம் திருத்துறையை சேர்ந்த தனுஷ் (வயது 33), அக்கடவல்லியை சேர்ந்த அழகேசன் (53), கண்டரக்கோட்டையை சேர்ந்த குமரகுரு (48), கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டையை சேர்ந்த தம்பதி உள்பட 6 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இதில் தனுசு மற்றும் எல வரன்கோட்டையை சேர்ந்த ஒருவர் கம்ப்யூட்டர் மையம் நடத்தியவர் என்பது குறிப் பிடத்தக்கது.

    மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் எலவனாசூர்கோட்டையை சேர்ந்த தம்பதி கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து போலியான ஆவணங்களை பெற்று வந்து கம்ப்யூட்டரில் பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

    மேலும் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் இதே தம்பதியினர் மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக கடலூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் வேல்விழி என்பவர் விழுப்புரம் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    கிசான் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் அல்லாதவர்களும் சேர்ந்து ரூ.14 கோடியே 26 லட்சம் வரை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து இதுவரை 5 கோடியே 70 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள கடற்கரை, ஆறு, குளம் ஆகிய நீர் நிலை பகுதிகள் மற்றும் பொது இடங்களில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
    கடலூர் :

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை (வியாழக்கிழமை) மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பார்கள்.

    ஆனால் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச், கிள்ளை கடற்கரை, மஞ்சக்குப்பம் தென்பெண்ணையாறு, வல்லம்படுகை கொள்ளிடம் ஆறு, விருத்தாசலம் மணிமுக்தாறு என்று மாவட்டத்தில் உள்ள கடற்கரை, ஆறு, குளம் ஆகிய நீர் நிலை பகுதிகள் மற்றும் பொது இடங்களில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது.

    ஆகவே பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே தர்ப்பணம் செய்து கொள்ள வேண்டும் என்று, கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    கடலூரில் ரெயில்வே ஊழியர் வீட்டில் ரூ.6 லட்சம் நகையை கொள்ளையடித்த முகமூடி அணிந்த நபர், வங்கியிலும் திருட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர்:

    கடலூர் செம்மண்டலம் வரதராஜன்நகர் ஸ்டேட் பேங்க் காலனியில் கடந்த 3 மாதங்களாக தனியார் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. கடந்த 12-ந்தேதி மாலையில் பணி முடிந்ததும் ஊழியர்கள் வங்கியை பூட்டி விட்டு சென்று விட்டனர்.

    இந்நிலையில் நேற்று ஊழியர் ஒருவர், வங்கியை திறப்பதற்காக வந்தார். அப்போது முன்பக்கம் உள்ள இரும்பு கேட், பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மெயின் கதவை திறக்க சென்றார். அப்போது அந்த கதவின் ஒரு பகுதி சேதமடைந்து இருந்தது. இது பற்றி அவர், உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து, கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள தனி அறையில் அவர்கள் வைத்திருந்த ரூ.50 ஆயிரம் அப்படியே இருந்தது. இதைத்தொடர்ந்து வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமராவை வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் பார்த்தனர். அதில் நேற்று முன்தினம் நள்ளிரவு முகமூடி அணிந்த நபர் ஒருவர், எதிரே உள்ள வீட்டில் இருந்து குதித்து வங்கிக்கு வருகிறார்.

    பின்னர் வங்கி முன்பக்கம் உள்ள இரும்பு கதவு பூட்டை உடைத்து விட்டு மெயின் கதவை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் பூட்டு உடையாததால் கொள்ளையடிக்க முடியாமல் சென்று விட்டார். அப்போது அங்கிருந்த கேமராவை திருப்பி வைத்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அந்த கேமராவில் பதிவாகி உள்ளது.

    இதையடுத்து எதிரே உள்ள வீட்டில் வசித்து வரும் ஜெயராமன் மகன் மகாராஜா (வயது 38) என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெளியூருக்கு சென்றிருந்த அவர் தனது வீட்டுக்கு வந்து பார்த்தார். அங்கே அவரது வீட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் வீட்டில் இருந்த 2 பீரோக்களும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள், துணிமணிகள் சிதறிக்கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 16 பவுன் நகைகளை காணவில்லை. அதனை முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் கொள்ளையடித்து சென்று விட்டது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

    கடலூர் முதுநகர் ரெயில் நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வரும் மகாராஜா கடந்த 12-ந்தேதி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊரான குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆபத்தாரணபுரத்திற்கு சென்றிருந்தார். அந்த நேரத்தில் தான் மர்மநபர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்றுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி, குற்றவாளியை உடனடியாக கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    மேலும் வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தார். முன்னதாக கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் முக்கிய தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரூ.6 லட்சம் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூரில் பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வழங்கினார்.
    கடலூர்:

    தேசிய குடற்புழு நீக்க வாரத்தை முன்னிட்டு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு குடற் புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி, மாணவிகளுக்கு குடற் புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.

    பின்னர் இது பற்றி மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கூறியதாவது:-

    நாடு முழுவதும் 1 முதல் 19 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வருகிற 28-ந்தேதி வரை 3 சுற்றுகளாக வழங்கப்படுகிறது. இதில் முதல் சுற்று வருகிற 19-ந்தேதி வரையிலும், 2-ம் சுற்று வருகிற 21-ந்தேதி முதல் வருகிற 26-ந்தேதி வரையிலும் (திங்கள், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்) மற்றும் 3-ம் சுற்றாக விடுபட்ட குழந்தைகளுக்கு சிறப்பு முகாம் வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங் கள் மூலமாக இலவசமாக வழங்கப்படுகிறது.

    5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 50 சதவீதம் உடல் வளர்ச்சி குன்றியும், 43 சதவீதம் எடை குறைவாகவும் உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 6 லட்சத்து 884 குழந்தைகளுக்கு 2,023 அங்கன்வாடி மையங்களிலும், 319 துணை சுகாதார நிலையங்களிலும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கப்பட உள்ளது.

    இதில் 1 முதல் 2 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 200 எம்.ஜி கொண்ட அல்பெண்டசோல் மாத்திரையும், 2 முதல் 19 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு 400 எம்.ஜி கொண்ட அல்பெண்டசோல் மாத்திரையும் வழங்கப்படும். இந்த மாத்திரைகளை வழங்கும் பணியில் 3 ஆயிரத்து 655 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

    நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கீதா, நகராட்சி சுகாதார அலுவலர் அரவிந்த்ஜோதி, மாவட்ட தாய்- சேய் நல அலுவலர் சசிகலா, திருப்பாதிரிப்புலியூர் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கிறிஸ்டி மற்றும் பலர் உள்ளனர்.
    பண்ருட்டியில் விவசாயி வீட்டில் ரூ.6 லட்சம் கொள்ளைபோன வழக்கில் திடீர் திருப்பமாக மனைவிக்காக சின்னத்திரை தொடர் தயாரிக்க சொந்த வீட்டிலேயே நகை-பணம் திருடிய மகனை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மாளிகைமேடு மாரியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் தேசிங்கு (வயது 55), விவசாயி. இவர் சம்பவத்தன்று காலை தனது குடும்பத்தினருடன் அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்றார். பின்னர் அவர் மாலையில் திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அப்போது வீட்டில் உள்ள அலமாரிகள் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன.

    மேலும் அலமாரிகளில் வைத்திருந்த 18 பவுன் நகை, 300 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தையும் காணவில்லை. அதனை யாரோ திருடிச்சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.6 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாத், இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே தேசிங்கு மகன் மணிகண்டனின்(24) நடத்தையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் சொந்த வீட்டிலேயே நகை-பணத்தை மணிகண்டன் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார்.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில், மணிகண்டன் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து விவாகரத்து செய்துள்ளார். பின்னர் அவர் சென்னையை சேர்ந்த சின்னத்திரை நடிகையான பரமேஸ்வரி என்கிற சுசித்ராவை காதலித்து 2-வது திருமணம் செய்து கொண்டு சென்னையிலேயே வசித்து வந்தார். கொரோனா ஊரடங்கால் வருமானமின்றி தவித்த அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

    இந்நிலையில் பரமேஸ்வரிக்கு சின்னத்திரையில் நாடகத்தை இயக்கி, நடிக்க பணம் தேவைப்பட்டதாக தெரிகிறது. மேலும் சூதாட்ட பழக்கமுடைய மணிகண்டனுக்கு, சூதாட்டத்திற்கும் பணம் தேவைப்பட்டுள்ளது.

    இதனால் பரமேஸ்வரியும், மணிகண்டனும் தங்களுக்கு தேவையான பணத்தை எப்படி திரட்டலாம் என ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது தான் மணிகண்டனும், பரமேஸ்வரியும் சொந்த வீட்டிலேயே கொள்ளையடிக்க முடிவு செய்து சதித்திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி சம்பவத்தன்று காலை தேசிங்கு வீட்டை பூட்டி, சாவியை வீட்டின் வெளியே வைத்து விட்டு தோட்டத்திற்கு சென்ற பிறகு, மணிகண்டன் வீட்டின் சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்று அலமாரிகளை உடைத்து நகைகளையும், பணத்தையும் கொள்ளையடித்துள்ளார்.

    பின்னர் கொள்ளையடித்த நகைகளை வீட்டின் பின்புறம் மண்ணில் புதைத்து வைத்துவிட்டு, தனக்கு ஒன்றும் தெரியாதது போல் நாடகமாடியுள்ளார். இதற்கிடையே மணிகண்டன், பண்ருட்டி ராஜாஜி ரோட்டில் உள்ள ஒரு கடைக்கு சென்று நகைகளை விற்க முயன்ற போது, போலீசில் சிக்கினார்.

    தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும் அவர் மண்ணில் புதைத்து வைத்திருந்த நகை மற்றும் பணத்தை போலீசார் மீட்டனர். தொடர்ந்து கொள்ளை சம்பவத்துக்கு சதித்திட்டம் தீட்டி உடந்தையாக இருந்த பரமேஸ்வரியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மனைவி சின்னத்திரையில் நடிக்கவும், தான் சூதாடவும் சொந்த வீட்டிலேயே வாலிபர் பணத்தை திருடிய சம்பவம் பண்ருட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    மங்கலம்பேட்டை அருகே ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு போன சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
    பெண்ணாடம்:

    விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள கோணாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜான்அந்துவான். இவர் கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன், மங்கலம்பேட்டையில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று இவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, திறந்த நிலையில் கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஜான்அந்துவான், உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த பீரோ கதவு பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த 6 பவுன் நகைகள் திருடு போய் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மங்கலம்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    கிசான் திட்ட முறைகேடு வழக்கில் கணினி மைய உரிமையாளர் உள்பட 3 பேரை கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    பிரதம மந்திரியின் கிசான் நிதி உதவி திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் அல்லாத 70,709 பேர் போலியாக விண்ணப்பித்து இத்திட்டத்தில் சேர்ந்து ரூ.14 கோடியே 26 லட்சம் வரை பெற்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இதில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் அடங்குவர்.

    அவர்களிடம் இருந்து இது வரை ரூ.5 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களிடம் வேளாண்மை துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது வரை ஒப்பந்த பணியாளர்கள் 13 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையில் இதுதொடர்பாக வேளாண்மை இணை இயக்குனர் முருகன் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் பண்ருட்டி, அண்ணாகிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கணினி மைய உரிமையாளர்கள், அட்மா திட்ட ஒப்பந்த ஊழியர்கள் என 150-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இந்நிலையில் திருத்துறையூரை சேர்ந்த ராமலிங்கம் மகன் தனுசு (வயது 33), அக்கடவல்லியை சேர்ந்த பாண்டுரங்கன் மகன் அழகேசன் (53), கண்டரக்கோட்டை வேலாயுதம் மகன் குமரகுரு (48) ஆகிய 3 பேரையும் போலீசார் பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில், தனுசு கணினி மையம் நடத்தி வருவதாகவும், அழகேசன், குமரகுரு ஆகிய 2 பேரும் விவசாயிகள் அல்லாத பட்டியலை கொடுத்து சேர்க்க சொல்லி, 3 பேரும் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று தெரிகிறது.
    ×