search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கிசான் திட்டத்தில் மோசடி: தம்பதி உள்பட 6 பேர் கைது

    கடலூர் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் மோசடி செய்த தம்பதி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கிசான் நிதி உதவி திட்டத்தில் 80,737 பேர் சேர்ந்துள்ளனர். இதில் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட 3 ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் விவசாய திட்டத்தில் வேலை செய்ய தகுதி இல்லாத 10 ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

    மேலும் மாவட்டத்தில் பி.எம். கிசான் திட்டத்தில் பயன்பெறுவதற்காக கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை வரை மொத்தம் 80,737 மனுக்கள் பெறப்பட்டது. இதில் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டத்தை சேர்ந்த மனுக்கள் 35,231 ஆகும். இவை அந்தந்த மாநில, மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    அதன் அடிப்படையில் மொத்தம் 70,709 பேர் விவசாயிகள் என்ற போர்வையில் போலியாக விண்ணப்பித்து இந்த திட்டத்தில் சேர்ந்துள்ளனர். இதில் 3,483 பேர் மட்டுமே விவசாயிகள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதுதொடர்பாக வேளாண்மை அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர்கள் விருத்தாசலம், பண்ருட்டி, அண்ணா கிராமம் பகுதிகளை சேர்ந்த கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர்கள், அட்மா திட்ட ஒப்பந்த ஊழியர்கள் என 150 பேரிடம் விசாரணை நடத்தினர். அதில் 3 பேர் பிரதமரின் கிசான் திட்ட மோசடியில் அதிகபடியாக ஈடுபட்டிருப்பதை கண்டு பிடித்தனர்.

    அவர்கள் 3 பேரையும் விழுப்புரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்கு அழைத்து சென்று சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரி விசாரணை நடத்தினார்.

    இதைதொடர்ந்து நடந்த விசாரணையில் கடலூர் மாவட்டம் திருத்துறையை சேர்ந்த தனுஷ் (வயது 33), அக்கடவல்லியை சேர்ந்த அழகேசன் (53), கண்டரக்கோட்டையை சேர்ந்த குமரகுரு (48), கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டையை சேர்ந்த தம்பதி உள்பட 6 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இதில் தனுசு மற்றும் எல வரன்கோட்டையை சேர்ந்த ஒருவர் கம்ப்யூட்டர் மையம் நடத்தியவர் என்பது குறிப் பிடத்தக்கது.

    மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில் எலவனாசூர்கோட்டையை சேர்ந்த தம்பதி கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து போலியான ஆவணங்களை பெற்று வந்து கம்ப்யூட்டரில் பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

    மேலும் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களிலும் இதே தம்பதியினர் மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.

    இந்த வழக்கு தொடர்பாக கடலூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் வேல்விழி என்பவர் விழுப்புரம் மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    கிசான் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் அல்லாதவர்களும் சேர்ந்து ரூ.14 கோடியே 26 லட்சம் வரை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து இதுவரை 5 கோடியே 70 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×