என் மலர்
கடலூர்
வடலூர் அருகே கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வடலூர்:
வடலூர் வள்ளலார் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 72). வாகனங்கள் சுத்தம் செய்யும் நிறுவனம் நடத்தி வந்தார். இவருடைய மனைவி சிவகாமி (66). சம்பவத்தன்று தட்சிணாமூர்த்திக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வடலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி தட்சிணாமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் சிவகாமி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதனிடையே தட்சிணாமூர்த்தியின் உடலை மருத்துவமனையில் இருந்து உறவினர்கள் வீட்டுக்கு கொண்டு வந்தனர்.
அப்போது தனது கணவரின் உடலை கட்டிப்பிடித்து அழுது கொண்டிருந்த சிவகாமி, சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து இறந்தார்.
இதை பார்த்து பதறிய உறவினர்கள், அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து தட்சிணாமூர்த்தி, சிவகாமி ஆகியோரின் உடலை உறவினர்கள் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பண்ருட்டி அருகே போலி டாக்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே கீழிருப்பு கிராமத்தில் ஒருவர் டாக்டருக்கு படிக்காமலேயே தனது வீட்டில் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததாக தெரிகிறது. இது குறித்த தகவலின் பேரில் காடாம்புலியூர் போலீசார், அந்த குறிப்பிட்ட வீட்டுக்கு சென்று அங்கிருந்த வைதேகி என்பவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள அவர் பண்ருட்டியில் உள்ள ஒரு மருத்துவமனையில் உதவியாளராக வேலை செய்து வந்ததும், பின்னர் அங்கு வேலைக்கு செல்லாமல் நின்றுவிட்டதும் தெரிந்தது.
மேலும் அந்த மருத்துவமனையில் வேலைபார்த்த அனுபவத்தை வைத்து அவர் தனது வீட்டிலேயே பொதுமக்களுக்கு அலோபதி மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஆனந்த கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வைதேகியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவரிடம் இருந்து மருந்து, மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.
பண்ருட்டி அருகே மொபட் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
பண்ருட்டி:
பண்ருட்டி சாமியார் தர்கா பகுதியை சேர்ந்தவர் சதாம் உசேன்(வயது 30). பெயிண்டர். இவருடைய மனைவி ஜோகிரபி(28). இந்த தம்பதிக்கு அசாருதீன்(10) என்ற மகனும், ஆப்ரின் பாத்திமா(8) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் ஜோகிரபி, தனது குழந்தைகளை மொபட்டில் அழைத்துக்கொண்டு கானஞ்சாவடிக்கு புறப்பட்டார். சாத்திப்பட்டு மெயின் ரோட்டில் சென்றபோது எதிரே வந்த லாரிக்காக ஒதுங்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி மோதியது. இதில் சுதாரித்துக்கொண்ட ஜோகிரபி தனது 2 குழந்தைகளையும் சாலையில் இருந்து வெளியே தள்ளி விட்டார். ஆனால் அவர் லாரியின் சக்கரத்தில் சிக்கினார்.
இதில் ஜோகிரபியின் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். 2 குழந்தைகளும் காயமின்றி உயிர் தப்பினர். இதை பார்த்து 2 குழந்தைகளும் கதறி அழுதனர். இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீசார் விரைந்து சென்று ஜோகிரபியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம் அருகே சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாள். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணாமலைநகர்:
மயிலாடுதுறை அருகே செம்பனார் கோவில் பகுதியை சேர்ந்தவர் கலியமூர்த்தி மனைவி வனசுந்தரி. இவருடைய தங்கை சரஸ்வதியின் மகள் பவித்ரா (வயது 14). இவளுடைய பெற்றோர் இறந்துவிட்டதால் பவித்ரா வனசுந்தரியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தாள். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக சிதம்பரம் அருகே உள்ள கீழ்அனுவம்பட்டு சாலக்கரை பகுதியை சேர்ந்த வனசுந்தரியின் உறவினரான கார்த்திகேயன் மனைவி சாந்தி என்பவரின் வீட்டில் பவித்ரா வசித்து வந்தாள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை சாந்தியும், கார்த்திகேயனும் பவித்ராவை நல்ல உடை உடுத்தி சுத்தமாக இருக்காவிட்டால், உன்னை வனசுந்தரியின் வீட்டில் கொண்டு விட்டுவிடுவோம் என்று கூறி திட்டியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த பவித்ரா விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தாள்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பவித்ரா பரிதாபமாக இறந்தாள். இது குறித்த புகாரின் பேரில் கிள்ளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமிராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வருகிற 1-ந்தேதி முதல் கைரேகை பதிவுசெய்யும் எந்திரம் மூலம் பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ரேஷன் கடைகளுக்கு கைரேகை பதிவு செய்யும் எந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி, ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் கைரேகை பதிவு செய்யும் எந்திரங்களை வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், பொது வினியோக திட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசால் அனைத்து மாவட்டங்களிலும் பயோ மெட்ரிக் கைரேகை பதிவு எந்திரத்தினை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில், அனைத்து ரேஷன் கடைகளிலும் உள்ள விற்பனை முனைய எந்திரத்தில், கைரேகை பதிவு செய்யும் கருவி பொருத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த பணி வருகிற 30-ந் தேதிக்குள் முடிக்கப்படவுள்ளது.
தற்போது அடுத்த மாதத்திற்கான (அக்டோபர்) அத்தியாவசிய பொருட்கள் 1-ந் தேதி முதல் வழங்கப்பட உள்ளதால், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கைரேகை பதிவுசெய்யும் எந்திரத்தினை பயன்படுத்தி பொருட்கள் வழங்கப்படும். இதனால் குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள, குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் ரேஷன் கடைகளில் உள்ள பயோ மெட்ரிக் கைரேகை பதிவு எந்திரத்தில், கைரேகையை பதிவு செய்து அத்தியாவசிய பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம்.
விற்பனையாளர்கள் ஒவ்வொரு முறையும் பொருட்கள் வழங்கும் முன்பு கிருமிநாசினி கொண்டு கைரேகை பதிவுசெய்யும் எந்திரத்தை சுத்தப்படுத்த வேண்டும். அதேபோல் பொருட்கள் வாங்க வருபவர்கள், தங்களது விரல்களை கடையில் வைக்கப்பட்டிருக்கும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தினால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்தியா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் வெற்றிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ரேஷன் கடைகளுக்கு கைரேகை பதிவு செய்யும் எந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி, ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் கைரேகை பதிவு செய்யும் எந்திரங்களை வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், பொது வினியோக திட்டத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசால் அனைத்து மாவட்டங்களிலும் பயோ மெட்ரிக் கைரேகை பதிவு எந்திரத்தினை வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில், அனைத்து ரேஷன் கடைகளிலும் உள்ள விற்பனை முனைய எந்திரத்தில், கைரேகை பதிவு செய்யும் கருவி பொருத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த பணி வருகிற 30-ந் தேதிக்குள் முடிக்கப்படவுள்ளது.
தற்போது அடுத்த மாதத்திற்கான (அக்டோபர்) அத்தியாவசிய பொருட்கள் 1-ந் தேதி முதல் வழங்கப்பட உள்ளதால், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கைரேகை பதிவுசெய்யும் எந்திரத்தினை பயன்படுத்தி பொருட்கள் வழங்கப்படும். இதனால் குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள, குடும்ப உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் ரேஷன் கடைகளில் உள்ள பயோ மெட்ரிக் கைரேகை பதிவு எந்திரத்தில், கைரேகையை பதிவு செய்து அத்தியாவசிய பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம்.
விற்பனையாளர்கள் ஒவ்வொரு முறையும் பொருட்கள் வழங்கும் முன்பு கிருமிநாசினி கொண்டு கைரேகை பதிவுசெய்யும் எந்திரத்தை சுத்தப்படுத்த வேண்டும். அதேபோல் பொருட்கள் வாங்க வருபவர்கள், தங்களது விரல்களை கடையில் வைக்கப்பட்டிருக்கும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தினால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்தியா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் நந்தகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் வெற்றிவேல் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
புவனகிரி அருகே பசுமை வீடுகள் திட்டத்தில் முறைகேடு காரணமாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
புவனகிரி:
மேல்புவனகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி, மருதூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த 2015-2016-ம் நிதியாண்டில் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தில் அம்பாள்புரம் ஊராட்சியில் பசுமை வீடு ஒதுக்கப்படாத ஒரு நபருக்கு 5 காசோலைகள் மூலம் ரூ.1 லட்சத்து 46 ஆயிரத்து 150 வழங்கப்பட்டுள்ளது.
இந்த முறைகேடுக்கு காரணமான அப்போதைய அம்பாள்புரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த சோபனா, துணை தலைவராக இருந்த கணேசன், ஊராட்சி செயலாளராக இருந்த ஜெகன்நாதன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன் பேரில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சோபனா, முன்னாள் துணை தலைவர் கணேசன் உள்ளிட்ட 3 பேர் மீது மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மங்கலம்பேட்டை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 2 பேர் பலியானார்கள்.
விருத்தாசலம்:
சென்னை ராயப்பேட்டை 1-வது தெருவை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மனைவி பாத்திமுத்து ஜொகாரா(வயது 30). இவர் தனது குடும்பத்துடன் காரில் சென்னையில் இருந்து ராமநாதபுரத்திற்கு புறப்பட்டார். காரை முகமதுநஸ்ருல்லா(28) என்பவர் ஓட்டினார். இவர்களது கார், கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அடுத்த மாவிடந்தல் பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் இரவு வந்தது. அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் கார் டிரைவர் முகமது நஸ்ருல்லா சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் காரில் பயணம் செய்த பாத்திமுத்து ஜொகாரா, அவரது மகன் முகமது உசைன் உல்லா புதின்(13), மகள்கள் ஷாஜிதரா பாதுஷா, சூரியா மரியம் ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர்கள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முகமது உசைன் உல்லா புதின் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூரில், யூ டியூப்பை பார்த்து நாட்டுத்துப்பாக்கி தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் திருவந்திபுரம் குமாரப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் நாட்டுத்துப்பாக்கி தயாரிப்பதாக திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அந்த பகுதியை சேர்ந்த தேவதாஸ் மகன் பந்தல் வேலை செய்யும் ஆறுமுகம் (வயது 34) என்பவர் வீட்டுக்குள் புகுந்து அதிரடியாக சோதனை செய்தனர்.
அப்போது அங்கு ஆறுமுகம், திருமாணிக்குழி நரிக்குறவர் காலனியை சேர்ந்த மிளகாய்தோட்டம் என்பவரது மகன் சங்கர் என்கிற சுரேஷ் (30) ஆகிய 2 பேரும் நாட்டுத்துப்பாக்கி தயாரித்துக்கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களிடம் விசாரித்த போது, கொக்கு, குருவிகளை வேட்டையாடுவதற்காக யூ டியூப்பை பார்த்து, 2 பேரும் நாட்டுத்துப்பாக்கியை தயாரித்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் நாட்டுத்துப்பாக்கி தயாரிக்க வைத்திருந்த துப்பாக்கி கட்டை, சிங்கிள் பேரல், சுத்தியல், இழைப்பான், உளி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இருப்பினும் யூ டியூப்பை பார்த்து நாட்டுத்துப்பாக்கி தயாரித்து, 2 பேர் கைதான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அண்ணாமலைநகர் அருகே பயணிகள் நிழற்குடையில் மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணாமலைநகர்:
சிதம்பரம் அருகே உள்ள மேலக்குண்டலப்பாடி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி ஜெயம் (வயது 70). இவருடைய கணவர் இறந்துவிட்டார். இதையடுத்து ஜெயம் தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் சிதம்பரம் புறவழிச்சாலை அம்மன் கோவில் பஸ் நிறுத்தத்தில் ஜெயம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குப்பதிவு ஜெயம் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.
கடலூரில் வாலிபரை கத்தியால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே மேற்கு ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடேசன் மகன் லட்சுமணன் (வயது 31) . இவருடைய வயலும், அவரது சித்தப்பா வேல்முருகன் (55) என்பவரது நிலமும் அருகருகே உள்ளது. இந்நிலையில் 2 பேருக்கும் பொதுவாக உள்ள மோட்டார் பம்பு செட்டில் இருந்து லட்சுமணன் தன்னுடைய வயலுக்கு அடிக்கடி தண்ணீர் பாய்ச்சி வந்ததாக தெரிகிறது. இதனால் வேல்முருகன் தன்னுடைய வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. இதில் ஆத்திரமடைந்த அவர் நேற்று முன்தினம் அவரது உறவினர் காசிநாதன் மகன் ராஜேஷ் (31) ஆகிய 2 பேரும் லட்சுமணனிடம் சென்று அவரிடம் தகராறு செய்தனர். பின்னர் 2 பேரும் சேர்ந்து அவரை கத்தியால் வெட்டினர். இதில் காயமடைந்த அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து லட்சுமணன் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேல்முருகன், ராஜேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
விருத்தாசலம் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
பெண்ணாடம்:
விருத்தாசலம் அருகே உள்ள எருமனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ். இவருடைய மனைவி ரேவதி (வயது33). பாக்கியராஜ், விருத்தாசலத்தில் பழ வியாபாரம் செய்து வந்தார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த 5 மாதமாக பழ வியாபாரம் பாதிக்கப்பட்டது. போதிய வருமானம் இல்லாததால் கணவர்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
சம்பவத்தன்றும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ரேவதி, வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரது வாயில் இருந்து நுரை வெளியேறியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர், கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ரேவதி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொரோனா பரவலை தடுக்க கோட்ட அளவில் வாணொலி காட்சி மூலம் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி அறிவித்துள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வருகிற 30-ந்தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதை கருத்தில் கொண்டு பொது மக்களிடம் நோய் பரவாமலும், அவர்களின் நலன் கருதியும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று, காணொலி காட்சி மூலம் குறைகேட்பு கூட்டம் கடந்த மாதம் 3-ந்தேதி முதல் கலெக்டர் தலைமையில் நடைபெற்று வருகிறது.
தற்போது பஸ் போக்குவரத்து வசதி காரணமாக பொதுமக்கள் காணொலி காட்சி மூலம் நடக்கும் குறைகேட்பு கூட்டத்தில், அதிக அளவில் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வருகின்றனர். இதன் காரணமாக கொரானா நோய் தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆகவே பொதுமக்களை நோய் தொற்றில் இருந்து பாதுகாத்திடவும், பொதுமக்களின் குறைகளை விரைவாக தீர்வு காணவும், மற்றும் அவர்களின் போக்குவரத்தை குறைத்திடவும், கோட்ட அளவில் பிரதி வாரம் திங்கட்கிழமை தோறும் காணொலி காட்சி மூலம் குறைகேட்பு கூட்டத்தை நடத்த தொடர்புடைய கடலூர் கோட்டாட்சியர், சிதம்பரம் சப்-கலெக்டர் மற்றும் விருத்தாசலம் சப்-கலெக்டர் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, மேற்படி நோய் தொற்று பரவாமல் கவனமாக இருக்கவும், கோட்டத்திற்கு உட்பட்ட வட்டங்களில் வசிக்கும் பொதுமக்கள் திங்கட்கிழமை தோறும் தொடர்புடைய கோட்டாட்சியர் மற்றும் சப்-கலெக்டர்கள் அலுவலகத்தில் நடைபெறும் காணொலி காட்சி குறை கேட்பு கூட்டத்தில் மனு செய்து பயன் பெற வேண்டும்.
மேற்கண்ட தகவலை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.






