என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் அக்காள்-தம்பி பலியாகினர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடலூரில் நேற்று காலை முதல் மதியம் வரை கடும் வெயில் சுட்டெரித்தது. மாலை 4 மணி அளவில் வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது.
பின்னர் 5 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ½ மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. அதன் பிறகு தூறிக்கொண்டே இருந்தது.
இதேபோல் பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை, புவனகிரி மற்றும் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. இதற்கிடையே மின்னல் தாக்கியதில் அக்காள்-தம்பி பலியானார்கள். அதுபற்றிய விவரம் வருமாறு:-
மிபுதுப்பேட்டை அருகே உள்ள மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு நிஷா(வயது 13) என்ற மகளும், கவியரசன்(11) என்ற மகனும் இருந்தனர். நிஷா புதுப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பும், கவியரசன் மணப்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பும் படித்துள்ளனர்.
நேற்று நிஷாவும், கவியரசனும் தங்களுக்கு சொந்தமான மாடுகளை, அதே பகுதியில் உள்ள நிலத்தில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தனர். பின்னர் மாலையில் இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியதும், அவர்கள் மாடுகளை வீட்டுக்கு ஓட்டிக்கொண்டு வந்தனர். அந்த சமயத்தில் அவர்கள் 2 பேர் மீதும் திடீரென மின்னல் தாக்கியது.
இதில் நிஷாவும், கவியரசனும் சம்பவ இடத்திலேயே உடல்கருகி பலியாகினர். இதுபற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 2 பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மின்னல் தாக்கியதில் அக்காள்-தம்பி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடலூரில் நேற்று காலை முதல் மதியம் வரை கடும் வெயில் சுட்டெரித்தது. மாலை 4 மணி அளவில் வெயிலின் தாக்கம் குறைந்து, குளிர்ந்த காற்று வீசத்தொடங்கியது.
பின்னர் 5 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் ½ மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. அதன் பிறகு தூறிக்கொண்டே இருந்தது.
இதேபோல் பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம், சிதம்பரம், சேத்தியாத்தோப்பு, பரங்கிப்பேட்டை, புவனகிரி மற்றும் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக மழை பெய்தது. இதற்கிடையே மின்னல் தாக்கியதில் அக்காள்-தம்பி பலியானார்கள். அதுபற்றிய விவரம் வருமாறு:-
மிபுதுப்பேட்டை அருகே உள்ள மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு நிஷா(வயது 13) என்ற மகளும், கவியரசன்(11) என்ற மகனும் இருந்தனர். நிஷா புதுப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பும், கவியரசன் மணப்பாக்கம் அரசு நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பும் படித்துள்ளனர்.
நேற்று நிஷாவும், கவியரசனும் தங்களுக்கு சொந்தமான மாடுகளை, அதே பகுதியில் உள்ள நிலத்தில் மேய்ச்சலுக்காக விட்டிருந்தனர். பின்னர் மாலையில் இடி-மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியதும், அவர்கள் மாடுகளை வீட்டுக்கு ஓட்டிக்கொண்டு வந்தனர். அந்த சமயத்தில் அவர்கள் 2 பேர் மீதும் திடீரென மின்னல் தாக்கியது.
இதில் நிஷாவும், கவியரசனும் சம்பவ இடத்திலேயே உடல்கருகி பலியாகினர். இதுபற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 2 பேர் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மின்னல் தாக்கியதில் அக்காள்-தம்பி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பரங்கிப்பேட்டையில் பிளஸ்-2 மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவனகிரி:
பரங்கிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் 16 வயதுடைய பிளஸ்-2 மாணவி. கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடினர். இருப்பினும் கிடைக்கவில்லை. விசாரித்ததில் அவரை 2 பேர் கடத்தி சென்றது தெரிந்தது. இது குறித்து மாணவியின் தந்தை பரங்கிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் பரங்கிப்பேட்டை அருகே கரிக்குப்பத்தை சேர்ந்த அருள்பாலன் (25) மற்றும் சிவகுரு (20) ஆகியோர் மாணவியை கடத்தி சென்றது தெரிந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருள்பாலன், சிவகுரு ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து மாணவியையும் மீட்டனர்.
கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. அருண்மொழிதேவனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திட்டக்குடி:
கடலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அருண்மொழிதேவன்(வயது 52). கடலூர் நாடாளுமன்ற முன்னாள் எம்.பி.யான இவர், திட்டக்குடி வசதிஷ்டபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கொரோனா பரவலுக்கு மத்தியிலும் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல், கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காய்ச்சல், சளி தொல்லையால் முன்னாள் எம்.பி. அருண்மொழிதேவன் அவதிப்பட்டார். இதையடுத்து சுகாதாரத்துறையினர் நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இந்த பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் முன்னாள் எம்.பி. அருண்மொழிதேவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அவரது வீடு முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
கடலூரில் திருமணம் செய்து வைக்கக்கோரி காதலன் வீட்டு முன்பு குழந்தையுடன் பெண் என்ஜினீயர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 24). என்ஜினீயரான இவரும், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டையை சேர்ந்த மோனிஷா (23) என்ற பெண் என்ஜினீயரும் கடந்த 2017-ம் ஆண்டு என்.எல்.சி.யில் பயிற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது அருண்குமாருக்கும், மோனிஷாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மோனிஷாவுடன் வலுக்கட்டாயமாக அருண்குமார் உல்லாசத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் அவர் கர்ப்பமானார். ஆனால் அதன் பிறகு திருமணம் செய்யவில்லை. இதற்கிடையில் மோனிஷாவுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தையை அருண்குமார் மதுரையை சேர்ந்த சத்யா என்ற பெண்ணிடம் கொடுத்து வளர்க்க சொன்னதாக தெரிகிறது.
தற்போது அந்த குழந்தைக்கு 3 வயது ஆகிறது. இதற்கிடையில் அந்த பெண் என்ஜினீயர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அருண்குமாரிடம் வற்புறுத்தி வந்தார். அதற்கு அவர் மறுத்து, வெளிநாட்டுக்கு சென்று விட்டார்.
இது பற்றி மோனிஷா கடந்த 8-ந் தேதி கடலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் அருண்குமார், சத்யா ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், அருண்குமாருடன் திருமணம் செய்து வைக்கக்கோரி கூத்தப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டு முன்பு தனது 3 வயது குழந்தையுடன் மோனிஷா தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். இது பற்றி அறிந்ததும் அருண்குமாரின் பெற்றோர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டனர்.
இருப்பினும் மோனிஷா தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூரில் கள்ளக்காதலியுடன் தங்கி இருந்த டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
மதுரை மாவட்டம் கே.புதூர் அருகே உள்ள சம்பாகுளம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் சிவனேஸ்வரன் (வயது 35). டிரைவர். இவருடைய மனைவி சிவமலர். இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சிவனேஸ்வரனுக்கும், அவரது உறவினர் பெண் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியது. இதற்கிடையே சிவனேஸ்வரன், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அந்த பெண்ணுடன் வீட்டை விட்டு வெளியேறி கடலூருக்கு வந்தார். கடலூர் சுப்ராயலு நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இருவரும் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் சிவனேஸ்வரன் நேற்று முன்தினம் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதை தட்டிக்கேட்டதால் அந்த பெண்ணுக்கும், சிவனேஸ்வரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே அந்த பெண், வீட்டில் உள்ள ஒரு அறைக்குள் சென்று கதவை உள்புறமாக பூட்டிக் கொண்டார். இதனால் மனமுடைந்த சிவனேஸ்வரன், மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரத்திற்கு பிறகு அந்த பெண், தனது அறையில் இருந்து வெளியே வந்தார். அங்கு அவர் தூக்கில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட சிவனேஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம் அருகே சவ ஊர்வலத்தில் இரு தரப்பினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் நடுரோட்டில் பிணத்தை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்:
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியம் பரவளூர் ஊராட்சி மன்ற தலைவராக பூமாலை(வயது 52) உள்ளார். உள்ளாட்சி தேர்தலின் போது இவருக்கும், இவரை எதிர்த்து போட்டியிட்ட வக்கீல் காந்தி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் காந்தியின் ஆதரவாளர் சன்னியாசி(85) என்பவர் நேற்று உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். அவரது இறுதி ஊர்வலம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்தனர். பின்னர் வீட்டில் இருந்து இறுதி ஊர்வலம் சுடுகாட்டிற்கு புறப்பட்டது.
இதற்கிடையில் அந்த கிராமத்தில் உள்ள ஒரு தெருவில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே இந்த சாலை வழியாக இறுதி ஊர்வலம் வரக்கூடாது என்று ஊராட்சி மன்ற தலைவர் பூமாலை தரப்பினர் கூறினர்.
இதனால் பூமாலை தரப்பினருக்கும், காந்தி தரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் உருட்டு கட்டை, இரும்பு கம்பி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர்.
இதில் சவ ஊர்வலத்தில் வந்த தமிழ்செல்வி(42) என்ற பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி இந்த மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த காந்தி தரப்பினரும், இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற உறவினர்களும் சவப்பாடையுடன் உடலை நடுரோட்டில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், சவ ஊர்வலத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு சன்னியாசியின் உடலை அடக்கம் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூமாலை, சுரேஷ்(25), தங்கபாபு(27), பிரகாஷ்(33), வீரமுத்து(21), மூவேந்தன்(20), வினோத்(26), பெரியசாமி(32), ராமதாஸ்(37) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 7 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். சவ ஊர்வலத்தில் இரு தரப்பினர் பயங்கரமாக மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கடலூர் மாவட்டம் முழுவதும் விவசாய சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 26 பெண்கள் உள்பட 351 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர்:
அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம், வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம், விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் 2020 ஆகிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாய சங்கங்கள் சார்பில் 25-ந் தேதி மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கடலூரில் நேற்று காலை 10.30 மணி அளவில் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினரும், அவர்களுக்கு ஆதரவாக அனைத்து கட்சியினரும் ஜவான் பவன் சாலையில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் 11 மணி அளவில் அண்ணா பாலம் அருகே சாலையின் நடுவில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு மாவட்ட அமைப்பாளர் கோ.மாதவன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஆறுமுகம், இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சந்திரசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன், மாநில துணை செயலாளர் ஸ்ரீதர், நகர செயலாளர் செந்தில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் குளோப், தி.மு.க. பிரமுகரும், வி.ஆர்.அறக்கட்டளை நிறுவனருமான விஜயசுந்தரம் மற்றும் அனைத்து கட்சியினர் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரவன், மணிகண்டன் மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 59 பேரை கைது செய்து திருப்பாதிரிப்புலியூரில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் கைதான அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதேபோல் விவசாய சங்க ஒழுங்கிணைப்பு குழு சார்பில் புவனகிரி, விருத்தாசலம், பண்ருட்டி, சிதம்பரம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, பெண்ணாடம் உள்ளிட்ட 11 இடங்களில் சாலை மறியல் நடந்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக மொத்தம் 26 பெண்கள் உள்பட 381 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். புதிய வேளாண் மசோதா 2020-ஐ திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை கடலூர் அண்ணா பாலம் அருகில் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினர் நெல், கரும்பு, மரவள்ளி செடி உள்ளிட்ட விவசாய பயிர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஒருங்கிணைப்பாளர் வெண்புறா குமார் தலைமை தாங்கினார். மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் பாலு, மக்கள் பாதை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ், அச்சக உரிமையாளர் சங்க மாவட்ட தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக முற்போக்கு சிந்தனையாளர் இயக்கம் கு.பாலசுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் திருமார்பன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரை ஆற்றினர். இதில் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுதொடர்பாக 49 பேரை திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கைது செய்தனர்.
சம்பளம் உயர்த்தி வழங்குவதற்கு குடிநீர் தொட்டி இயக்குபவரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது செய்யப்பட்டார்.
சேத்தியாத்தோப்பு,
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள வட்டத்தூரை சேர்ந்தவர் ரவி மகன் மணிகண்டன் (வயது 25). இவர் அதே ஊராட்சியில் பகுதி நேர குடிநீர் தொட்டி இயக்குபவராக வேலை பார்த்து வருகிறார். இதற்காக அவர் மாதந்தோறும் சம்பளமாக ரூ.550 பெற்று வந்தார். இதற்கிடையே தமிழக அரசு பகுதி நேர குடிநீர் தொட்டி இயக்குபவர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி வழங்க உத்தரவிட்டது.
ஆனால் மணிகண்டனுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்கவில்லை என தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மணிகண்டன், வட்டத்தூர் ஊராட்சி செயலாளர் பழனிசாமியை (47) சந்தித்து, தனக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்கவும், ஏற்கனவே வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை உடனே வழங்கவும் நடவடிக்கை எடுங்கள் என கூறினார்.
அதற்கு பழனிசாமி, சம்பளத்தை உயர்த்தி, நிலுவைத்தொகை வழங்க வேண்டுமானால் தனக்கு லஞ்சமாக ரூ.50 ஆயிரம் தரவேண்டும், இல்லையெனில் நடவடிக்கை எடுக்கமாட்டேன் என கூறியதாக தெரிகிறது. அப்போது மணிகண்டன், தன்னால் ரூ.50 ஆயிரம் கொடுக்க இயலாது என கூறியுள்ளார். உடனே பழனிசாமி, முதல் தவணையாக ரூ.20 ஆயிரம் கொடுக்குமாறும், நிலுவை தொகை வந்ததும் மீதி தொகையை தரும்படியும் கூறினார். ஆனால் லஞ்சம் கொடுத்து சம்பள உயர்வு மற்றும் நிலுவைத்தொகை பெற விரும்பாத மணிகண்டன், இதுதொடர்பாக கடலூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மெல்வின் ராஜாசிங் கூறிய அறிவுரையின்படி மணிகண்டன் ரசாயன பொடி தடவிய ரூ.20 ஆயிரத்துடன் நேற்று மதியம் வட்டத்தூர் சென்றார். பின்னர் அவர், பழனிசாமியை செல்போனில் தொடர்பு கொண்டு தான் ரூ.20 ஆயிரத்துடன் வட்டத்தூர் ரேஷன் கடை அருகில் நிற்பதாக கூறினார். உடனே பழனிசாமி, அங்கு சென்றார்.
பின்னர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கூறிய அறிவுரையின்படி மணிகண்டன், ரூ.20 ஆயிரத்தை ஊராட்சி செயலாளர் பழனிசாமியிடம் கொடுத்தார். அந்த சமயத்தில் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மெல்வின் ராஜாசிங் தலைமையிலான போலீசார், லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் பழனிசாமியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநத்தம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 நண்பர்கள் பலியானார்கள். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
ராமநத்தம்:
புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் ராஜா மகன் ரகு(வயது 30). இவர், தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் முத்துக்குமரன்(30), பிரான்சிஸ், தினேஷ், பிரபு ஆகியோர் நேற்று திருச்சிக்கு காரில் சென்றனர். அங்குள்ள அரசு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த நண்பர் ஒருவரை பார்த்து விட்டு, அதே காரில் அவர்கள் புதுச்சேரிக்கு புறப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ள காந்திநகர் பகுதியில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மாலை 5 மணியளவில் இவர்களது கார் வந்து கொண்டிருந்தது. அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கார் ஒன்று, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு, எதிரே ரகு மற்றும் அவரது நண்பர்கள் வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ரகு உள்ளிட்டோர் வந்த கார் அப்பளம்போல் நொறுங்கியது.
இந்த கோர விபத்தில் ரகு, முத்துக்குமரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தினேஷ், பிரான்சிஸ், பிரபு, மற்றொரு காரில் வந்த பாஸ்கரன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்ததும் வேப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பலியான ரகு, முத்துக்குமரன் ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேப்பூர் அருகே திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்திய சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வேப்பூர்:
விருத்தாசலம் அருகே உள்ள இருசளாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் அருண். இவர் கீழக்குறிச்சி கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக தெரிகிறது.
இதற்கு கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன், நடேசன் (31) ஆகியோர் உதவியாக இருந்துள்ளனர். இது குறித்து அந்த சிறுமியின் பெற்றோர் வேப்பூர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் அருண் உள்பட 3 பேர் மீது இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து நடேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
ஆலப்பாக்கம் பகுதியில் நாளை பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
கடலூர்:
கடலூர் செம்மங்குப்பம் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் செம்மங்குப்பம், பூண்டியாங்குப்பம், திருச்சோபுரம், சிப்காட் தொழிற்பேட்டை முழுவதும், சங்கொலி குப்பம், ஆலப்பாக்கம், சிறுபாலையூர், தானூர், சம்பாரெட்டிப்பாளையம், காரைக்காடு, கண்ணாரப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும்.
மேற்கண்ட தகவலை கடலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நெல்லிக்குப்பம் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நெல்லிக்குப்பம்:
நெல்லிக்குப்பம் அருகே மேல்பட்டாம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நெல்லிக்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டின் மாடியில் ஏராளமான அட்டை பெட்டிகளில் பட்டாசுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக வீட்டின் உரிமையாளரான பிரபாகரன் (வயது 50) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அனுமதியின்றியும், உரிய ஆவணங்கள் இல்லாமலும் விற்பனைக்காக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பிரபாகரனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்து திருக்கண்டேஸ்வரம் பகுதியில் ஊர் ஒதுக்குபுறத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் பாதுகாப்பாக வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






