search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சவ ஊர்வலத்தில் பயங்கர மோதல்: பெண்ணுக்கு அரிவாள் வெட்டு - நடுரோட்டில் உடலை வைத்து போராட்டம்

    விருத்தாசலம் அருகே சவ ஊர்வலத்தில் இரு தரப்பினரிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் நடுரோட்டில் பிணத்தை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியம் பரவளூர் ஊராட்சி மன்ற தலைவராக பூமாலை(வயது 52) உள்ளார். உள்ளாட்சி தேர்தலின் போது இவருக்கும், இவரை எதிர்த்து போட்டியிட்ட வக்கீல் காந்தி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் காந்தியின் ஆதரவாளர் சன்னியாசி(85) என்பவர் நேற்று உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். அவரது இறுதி ஊர்வலம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை உறவினர்கள் செய்தனர். பின்னர் வீட்டில் இருந்து இறுதி ஊர்வலம் சுடுகாட்டிற்கு புறப்பட்டது.

    இதற்கிடையில் அந்த கிராமத்தில் உள்ள ஒரு தெருவில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனவே இந்த சாலை வழியாக இறுதி ஊர்வலம் வரக்கூடாது என்று ஊராட்சி மன்ற தலைவர் பூமாலை தரப்பினர் கூறினர்.

    இதனால் பூமாலை தரப்பினருக்கும், காந்தி தரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் உருட்டு கட்டை, இரும்பு கம்பி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர்.

    இதில் சவ ஊர்வலத்தில் வந்த தமிழ்செல்வி(42) என்ற பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அது மட்டுமின்றி இந்த மோதலில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    இதனால் ஆத்திரமடைந்த காந்தி தரப்பினரும், இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற உறவினர்களும் சவப்பாடையுடன் உடலை நடுரோட்டில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், சவ ஊர்வலத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், இது தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு சன்னியாசியின் உடலை அடக்கம் செய்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பூமாலை, சுரேஷ்(25), தங்கபாபு(27), பிரகாஷ்(33), வீரமுத்து(21), மூவேந்தன்(20), வினோத்(26), பெரியசாமி(32), ராமதாஸ்(37) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 7 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். சவ ஊர்வலத்தில் இரு தரப்பினர் பயங்கரமாக மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×