என் மலர்
கடலூர்
விவசாயத்தை அழித்து, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். கிராம சபை கூட்டத்தை ரத்து செய்த தமிழக அரசை கண்டித்தும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பன்குளத்தில் வயலில் இறங்கி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்துக்கு மாவட்ட குழு உறுப்பினர் பழனி தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் மாதவன், குடியிருப்போர் சங்க செயலாளர் மருதவாணன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கருப்பையன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் சுப்புராயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் அமர்நாத், வாலிபர் சங்க நகர செயலாளர் தமிழ்மணி, நகர்க்குழு செந்தில், பக்கீரான் மற்றும் விவசாயிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறும் வரை தொடர்ந்து போராடுவோம், விவசாயிகள் விரோத சட்டங்களை நடைமுறைப்படுத்த அனுமதிக்க மாட்டோம், வேளாண் சட்டங்களை ஆதரிக்கிற துரோகிகளை புறக்கணிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
ஸ்ரீமுஷ்ணம்:
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும்.
இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாயநிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. ராட்சத குழாய் மூலம் சென்னைக்கு வினாடிக்கு 62 கன அடிநீர் அனுப்பப்பட்டு வந்தது.
கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகம் காணப்பட்டதாலும் நீர் வரத்து குறைந்ததாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் குறைந்தது. இதனால் சென்னைக்கு அனுப்பப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
ஏற்கனவே வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு சுமார் 1100 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. தற்போது மழை பெய்ததின் காரணமாக 1,510 கனஅடி தண்ணீர் வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருக்கிறது.
கடந்த 29-ந் தேதி ஏரியின் நீர்மட்டம் 41.20 அடியாக இருந்தது. தற்போது ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 44.10 அடியாக உயர்ந்து உள்ளது.
ஏரியில் நீர்மட்டம் தொடர்நது உயர்ந்து வருவதாலும் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னைக்கு குடி நீருக்காக வீராணம் ஏரியிலிருந்து நேற்று முன் தினம் வரை 62 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. வீராணம் ஏரியின் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் இன்று 69 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டது.
வீராணம் நீர்மட்டம் மேலும் உயர்ந்தால் சென்னைக்கு அனுப்பப்படும் குடிநீரின் அளவும் உயர்த்தப்படும் என்றும், ஏரிக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் இந்த ஆண்டில் 8-வது முறையாக வீராணம் ஏரி நிரம்ப வாய்ப்புள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் முடிவுற்ற பணிகள் தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கடலூர் வந்தார். தொடர்ந்து அவர் கலெக்டர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் கூட்டுறவுத்துறைக்கு 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்கள், துறை ரீதியாக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து மாவட்டந்தோறும் சென்று ஆய்வு செய்து வருகிறோம். 7-வது மாவட்டமாக இங்கு ஆய்வு நடத்தி உள்ளோம். மற்ற மாவட்டங்களை விட கடலூர் மாவட்டத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளது.
ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் பொருட்கள், எடை குறைவாக இருப்பதாக புகார் வருவதாக கூறுகிறீர்கள். அப்படி எடை குறைவாக பொருட்கள் வழங்கினால், அதை விற்பனையாளர்கள் இறக்க வேண்டாம் என்று கூறி இருக்கிறோம். எடை போட்டு தான் வாங்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம். அதனால் எந்த கடையிலும் குறைவான எடையில் பொருட்கள் வழங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு வராது.
பயோ மெட்ரிக் முறை இன்று (வியாழக்கிழமை) முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் அமல்படுத்தப்படுகிறது. இது பற்றி பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. பயோ மெட்ரிக் முறையில் பிரச்சினை ஏற்பட்டால் கூடுதலாக சர்வர் பயன்படுத்தப்படும். அதேபோல் ஓ.டி.பி. எண் வழங்குகிறோம். அதுவும் இல்லையென்றால் ஆதார் கார்டை காண்பிக்கலாம். ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வரும் யாரையும் விற்பனையாளர்கள் திருப்பி அனுப்பமாட்டார்கள். உரிய பொருட்களை வாங்கி செல்லலாம்.
புதிய வேளாண்மை திட்டம் வந்தால் பொது வினியோக திட்டம் ரத்தாகும், அனைத்து ரேஷன் கடைகளும் மூடப்படும் என்ற குற்றச்சாட்டு உள்ளதாக கேட்கிறீர்கள். வேண்டும் என்றே இந்த திட்டத்தை குறை சொல்வதற்காக சொல்கிறார்கள். பொது வினியோக திட்டத்தை பொறுத்தவரை இந்தியாவிலேயே தமிழகம் தான் முன்னோடியாக உள்ளது. புதிய வேளாண்மை திட்டத்தால் மாநில உரிமைகள் பறிபோகும் என்ற யூகத்திற்கு பதில் சொல்ல முடியாது. பொது வினியோக திட்டம் தொடரும். எந்த பாதிப்பும் வராது.
இவ்வாறு தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நிலக்கரி எடுக்க 1959-ம் ஆண்டு சுரங்கம் தோண்டப்பட்டது.
அதன் பின்னர் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன் பேரில் நெய்வேலியில் 1962-ம் ஆண்டு முதல் அனல் மின் நிலையம் தொடங்கப்பட்டது.
இதில் இருந்து 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்த அனல் மின் நிலையம் ஜெர்மன் மற்றும் ரஷ்யா தொழில் நுட்பங்களுடன் கூடிய பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்டது. இந்த அனல் மின் நிலையத்துக்கு 25 ஆண்டுகள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் அதன் தரத்திற்கேற்ப ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது.
இந்த அனல் மின் நிலையம் ஒரு சில முறை புதுப்பிக்கப்பட்டு மீண்டும் இயங்க தொடங்கியது. உலக அளவில் ஒரு அனல் மின் நிலையம் 20 ஆண்டுகளுக்கு மேல் இயங்க கூடாது என வரையறை செய்யப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து மத்திய பசுமை தீர்ப்பாயம் ஆயுட்காலம் முடிந்த நிலையில் உள்ள நெய்வேலி முதலாவது என்.எல்.சி அனல் மின் நிலையத்தை மூடுவதற்கு உத்தரவிட்டது. அதன் பேரில் நெய்வேலி என்.எல்.சி முதலாவது அனல் மின் நிலையம் இன்று முதல் மூடப்பட்டது.
இந்த அனல் மின் நிலையத்தை மூடுவதால் ஏற்படும் மின் உற்பத்தி இழப்பை ஈடு செய்யும் வகையில் தற்போது புதிய அனல் மின் நிலையம் செயல்பட தொடங்கி உள்ளது. அந்த மின் நிலையத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது 500 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கி செயல்பட்டு வருகிறது. மீதமுள்ள 500 மெகாவாட் மின் உற்பத்தி விரைவில் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். முதலாவது அனல்மின் நிலையம் மூடப்பட்டுள்ளதால் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் மற்ற அனல் மின் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலூரில் நடந்த தி.மு.க.கூட்டணி கட்சி ஆர்ப்பாட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி பேசினார். இதில் எம்.பி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தடையை மீறி ஆர்ப்பாட்டடம் செய்ததாக கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. , ரமேஷ் எம்.பி, முன்னாள் எம்.எல்.ஏ. இள.புகழேந்தி, நகர தி.மு.க. செயலாளர் ராஜா, த.மு.மு.க. மாவட்ட செயலாளர் ஷேக் தாவூத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாதவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குளோப் உள்பட 250 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம் அருகே உள்ள பழைய நல்லூரை சேர்ந்தவர் அறிவானந்தம் (வயது 53), விவசாயி. இவர் நேற்று இரவு பழைய கொள்ளிடம் ஆற்றுக்கு குளிக்க சென்றார். பின்னர் அவர் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த ராட்சத முதலை ஒன்று, குளித்துக் கொண்டிருந்த அறிவானந்தத்தின் காலை கடித்தது. இதில் பதறிய அவர் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என கூச்சலிட்டார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த முதலை, அறிவானந்தத்தை தண்ணீருக்குள் இழுத்து சென்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கூச்சலிட்டனர்.
இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் தண்ணீருக்குள் இறங்கி, முதலை இழுத்து சென்ற அறிவானந்தத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், அண்ணாமலை நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அறிவானந்தத்தை தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளனர். இதற்கிடையே அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இருப்பினும் இரவு நீண்ட நேரமாகவும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள், அறிவானந்தத்தை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே அறிவானந்தத்தை தேடுவதற்கு படகு கொண்டு வரக்கோரி கிராம மக்கள் வேளக்குடி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் மற்றும் போலீசார் விரைந்து வந்து, தற்போது மழை கடுமையாக பெய்வதாலும், இருளில் தேட முடியாது என்பதாலும் நாளை(அதாவது இன்று) காலை படகுகள் மூலம் தேடப்படும் என கூறினார். இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் சிதம்பரம்-சீர்காழி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






