என் மலர்
செய்திகள்

தபால் நிலைய பெண் ஊழியர் அருள்மொழி
பண்ருட்டி அருகே பெண் தபால் ஊழியர் வெட்டிக் கொலை
பண்ருட்டி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு பெண் தபால் ஊழியரை வெட்டிக் கொலை செய்த வக்கீலை போலீசார் தேடி வருகிறார்கள்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுதொண்டமாதேவி வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலதண்டாயுதம் (வயது 44). வக்கீல். அவருடைய மனைவி அருள்மொழி (38). இந்த தம்பதிக்கு முல்லை வனநாதன்(8), கோகுலகிருஷ்ணன் (6) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். குறிஞ்சிப்பாடி அருகே உள்ள கொளக்குடி தபால் நிலையத்தில் அருள்மொழி தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் பாலதண்டாயுதத்துக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக கணவர், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பும் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் தனது கணவரிடம் கோபித்து கொண்டு அருள்மொழி ஆபத்தாரணபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். அதன் பிறகு பெற்றோர் தனது மகளை சமாதானப்படுத்தி பாலதண்டாயுதம் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டுச்சென்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பாலதண்டாயுதத்துக்கும், அருள்மொழிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பாலதண்டாயுதம் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தனது மனைவி என்றும் பாராமல் சரமாரியாக வெட்டினார். இதில் அவரது கழுத்து, தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அருள்மொழியின் இடது கை துண்டானது. இதையடுத்து பாலதண்டாயுதம் அங்கிருந்து தப்பிச்சென்றார். உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அருள்மொழியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருள்மொழி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலதண்டாயுதத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story






