என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
யூ டியூப்பை பார்த்து நாட்டுத்துப்பாக்கி தயாரித்த 2 பேர் கைது
கடலூரில், யூ டியூப்பை பார்த்து நாட்டுத்துப்பாக்கி தயாரித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் திருவந்திபுரம் குமாரப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் நாட்டுத்துப்பாக்கி தயாரிப்பதாக திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அந்த பகுதியை சேர்ந்த தேவதாஸ் மகன் பந்தல் வேலை செய்யும் ஆறுமுகம் (வயது 34) என்பவர் வீட்டுக்குள் புகுந்து அதிரடியாக சோதனை செய்தனர்.
அப்போது அங்கு ஆறுமுகம், திருமாணிக்குழி நரிக்குறவர் காலனியை சேர்ந்த மிளகாய்தோட்டம் என்பவரது மகன் சங்கர் என்கிற சுரேஷ் (30) ஆகிய 2 பேரும் நாட்டுத்துப்பாக்கி தயாரித்துக்கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களிடம் விசாரித்த போது, கொக்கு, குருவிகளை வேட்டையாடுவதற்காக யூ டியூப்பை பார்த்து, 2 பேரும் நாட்டுத்துப்பாக்கியை தயாரித்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் நாட்டுத்துப்பாக்கி தயாரிக்க வைத்திருந்த துப்பாக்கி கட்டை, சிங்கிள் பேரல், சுத்தியல், இழைப்பான், உளி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இருப்பினும் யூ டியூப்பை பார்த்து நாட்டுத்துப்பாக்கி தயாரித்து, 2 பேர் கைதான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story






