என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
மங்கலம்பேட்டை அருகே கார் மீது லாரி மோதல் - சிறுவன் உள்பட 2 பேர் பலி
மங்கலம்பேட்டை அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 2 பேர் பலியானார்கள்.
விருத்தாசலம்:
சென்னை ராயப்பேட்டை 1-வது தெருவை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மனைவி பாத்திமுத்து ஜொகாரா(வயது 30). இவர் தனது குடும்பத்துடன் காரில் சென்னையில் இருந்து ராமநாதபுரத்திற்கு புறப்பட்டார். காரை முகமதுநஸ்ருல்லா(28) என்பவர் ஓட்டினார். இவர்களது கார், கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை அடுத்த மாவிடந்தல் பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் இரவு வந்தது. அப்போது எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.
இந்த விபத்தில் கார் டிரைவர் முகமது நஸ்ருல்லா சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் காரில் பயணம் செய்த பாத்திமுத்து ஜொகாரா, அவரது மகன் முகமது உசைன் உல்லா புதின்(13), மகள்கள் ஷாஜிதரா பாதுஷா, சூரியா மரியம் ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர். இவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர்கள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முகமது உசைன் உல்லா புதின் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






