search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கிசான் திட்ட முறைகேடு வழக்கு: கடலூரில் கணினி மைய உரிமையாளர் உள்பட 3 பேர் கைது

    கிசான் திட்ட முறைகேடு வழக்கில் கணினி மைய உரிமையாளர் உள்பட 3 பேரை கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
    கடலூர்:

    பிரதம மந்திரியின் கிசான் நிதி உதவி திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் அல்லாத 70,709 பேர் போலியாக விண்ணப்பித்து இத்திட்டத்தில் சேர்ந்து ரூ.14 கோடியே 26 லட்சம் வரை பெற்று முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இதில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் அடங்குவர்.

    அவர்களிடம் இருந்து இது வரை ரூ.5 கோடிக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களிடம் வேளாண்மை துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இது வரை ஒப்பந்த பணியாளர்கள் 13 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையில் இதுதொடர்பாக வேளாண்மை இணை இயக்குனர் முருகன் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்கள் பண்ருட்டி, அண்ணாகிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த கணினி மைய உரிமையாளர்கள், அட்மா திட்ட ஒப்பந்த ஊழியர்கள் என 150-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

    இந்நிலையில் திருத்துறையூரை சேர்ந்த ராமலிங்கம் மகன் தனுசு (வயது 33), அக்கடவல்லியை சேர்ந்த பாண்டுரங்கன் மகன் அழகேசன் (53), கண்டரக்கோட்டை வேலாயுதம் மகன் குமரகுரு (48) ஆகிய 3 பேரையும் போலீசார் பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில், தனுசு கணினி மையம் நடத்தி வருவதாகவும், அழகேசன், குமரகுரு ஆகிய 2 பேரும் விவசாயிகள் அல்லாத பட்டியலை கொடுத்து சேர்க்க சொல்லி, 3 பேரும் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று தெரிகிறது.
    Next Story
    ×