search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கடலூரில், ரூ.1¼ கோடி புகையிலை பொருட்கள் பறிமுதல் - வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

    கடலூரில் ரூ.1¼ கோடி மதிப்புள்ள புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைதான வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
    கடலூர்:

    கடலூர் கே.என்.பேட்டை திருப்பதி நகரில் உள்ள ஒரு வீட்டில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி மற்றும் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் திருப்பதி நகரில் உள்ள வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் 1 கோடியே 21 லட்சத்து 12 ஆயிரத்து 740 ரூபாய் மதிப்புள்ள சுமார் 7 டன் 753 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பண்ருட்டி அடுத்த கணிசப்பாக்கத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வியாபாரியான பாரதி (வயது 35), சரவணன்(49), ராம்குமார்(19), பிரசாந்த், தேவநாதன், கணபதி ஆகியோர் திருப்பதி நகரில் வீடு வாடகைக்கு எடுத்து, அங்கு புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

    தொடர்ந்து பாரதி, சரவணன், ராம்குமார் உள்ளிட்ட 6 பேரையும் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கைதான பாரதி மீது திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இதையடுத்து அவரது குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில், பாரதியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவின்பேரில் பாரதியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர்.

    Next Story
    ×