என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தில் முறைகேடு: 150 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை
கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக 150 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை 31-ந்தேதி வரை பிரதம மந்திரியின் கிசான் நிதி உதவி திட்டத்தில் 80 ஆயிரத்து 737 பேர் சேர்ந்துள்ளனர். இதில் முறைகேட்டில் ஈடுபட்ட 3 ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் விவசாய திட்டத்தில் வேலை செய்ய தகுதி இல்லாத 10 ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டத்தில் பி.எம்.கிசான் திட்டத்தில் பயன்பெறுவதற்காக கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூலை வரை மொத்தம் 80,737 மனுக்கள் வரப்பெற்றது.
இதில் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்டத்தை சேர்ந்த மனுக்கள் மட்டும் 35,231 ஆகும். இந்த மனுக்கள் அந்தந்த மாநில, மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மொத்தம் 70,709 பேர் விவசாயிகள் என்ற போர்வையில் போலியாக விண்ணப்பித்து இத்திட்டத்தில் சேர்ந்துள்ளதும், 3,483 பேர் மட்டுமே உண்மையான விவசாயிகள் என்பதும் தெரிய வந்தது. இதில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 43,075 பேரும், வெளிமாவட்டங்களை சேர்ந்த 27,634 பேரும் போலி பயனாளிகள். மீதமுள்ள 6,545 பயனாளிகள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக வேளாண்மை அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து, விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விருத்தாசலம், பண்ருட்டி, அண்ணாகிராமம் பகுதிகளை சேர்ந்த கணினி மைய உரிமையாளர்கள், அட்மா திட்ட ஒப்பந்த ஊழியர்கள் என 10 பேரைநேற்று காலை கடலூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடந்தது. பின்னர் மாலையில் அனைவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரி ஒருவர் கூறுகையில், விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக கடலூர் மாவட்டத்தில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை யார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விவசாயிகள் நிதிஉதவி திட்டத்தில் சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் விசாரணை முழுமையாக முடிவடைந்த பிறகே முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் குறித்த விவரம் தெரியவரும் என்றார்.
Next Story