என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  கடலூர் மாவட்டத்தில் ‘நீட்’ தேர்வை 4,316 மாணவர்கள் எழுதினர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடலூர் மாவட்டத்தில் 4,316 மாணவ-மாணவிகள் நேற்று ‘நீட்’ தேர்வு எழுதினர். அவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
  கடலூர்:

  மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ எனும் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறுவது முக்கியம் ஆகும். இத்தேர்வு மத்திய அரசால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு, கடந்த மே மாதம் 3-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது.

  ஆனால் கொரோனா தொற்று காரணமாக ஜூலை 26-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அப்போதும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மீண்டும் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து செப்டம்பர் 13-ந்தேதி (அதாவது நேற்று) நீட் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி நேற்று நீட் தேர்வு நடந்தது.

  கடலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை எழுதுவதற்காக மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளி, சி.கே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விருத்தாசலம் ஜெயப்பிரியா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நெய்வேலி கேந்திரிய வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, ஜவகர் மேல்நிலைப்பள்ளி, கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரிஸ்டோ பப்ளிக் பள்ளி, அங்குசெட்டிபாளையம் அன்னை வேளாங் கண்ணி பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய 10 இடங்களில் நீட் தேர்வுக்கான மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் கிருமி நாசினி தெளித்தல் போன்ற பல்வேறு முன்னேற்பாடு பணிகளும் நடைபெற்றது.

  தேர்வு நாளான நேற்று மாணவ-மாணவிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு காலை 10 மணி முதலே வரத்தொடங்கினர். பின்னர் தேர்வு மையங்களின் நுழைவு வாயில் பகுதியில் அதிகாரிகள் நின்று கொண்டு, மாணவ-மாணவிகளை தெர்மல் ஸ்கேனர் மூலம் அவர்களது உடல்வெப்ப நிலையை பரிசோதனை செய்தனர். பின்னர் மாணவர்களின் கைகளில் கிருமிநாசினி தெளித்து, மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் மாணவர்களை முழுமையாக சோதனை செய்தனர். தொடர்ந்து முக கவசம் அணிந்த மாணவ-மாணவிகள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையே பெரும்பாலான மாணவிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு கம்மல், கொலுசு, செயின், துப்பட்டா அணிந்து வந்தனர். இதை பார்த்த அதிகாரிகள் மாணவிகளின் பெற்றோர் மூலம் நகைகளை கழற்ற வைத்தனர். அதன்பிறகே தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

  மேலும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்களின் ஹால் டிக்கெட்டோடு கட்டுப்பாடுகள் மற்றும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இணைக்கப்பட்டு இருந்தன. அதன்படி தேர்வர்கள் 50 மில்லி அளவுகொண்ட கிருமிநாசினி திரவம், வெளிப்படையான வாட்டர் பாட்டில், கையுறைகள், தேர்வுக்கு தேவையான ஆவணங்களை எடுத்துச்சென்றனர்.

  பின்னர் தேர்வு அறையில் மாணவ-மாணவிகளுக்கு முக கவசம் வழங்கப்பட்டது. அதனால் மாணவர்கள் தாங்கள் ஏற்கனவே அணிந்து வந்த முக கவசத்தை அகற்றிவிட்டு, தேர்வு அறையில் கொடுத்த முக கவசத்தை அணிந்து தேர்வு அறைக்குள் சென்றனர். தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கியது.

  இத்தேர்வு மாலை 5 மணி வரை நடைபெற்றது. மாவட்டத்தில் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 5,227 பேரில் 4,316 மாணவ-மாணவிகள் மட்டுமே தேர்வு எழுதினர். 911 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு வந்து செல்லும் வகையில் நேற்று கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் ஒவ்வொரு தேர்வு மையங்கள் முன்பும் தலா 38 போலீசார் வீதம், மாவட்டம் முழுவதும் மொத்தம் 380 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
  Next Story
  ×