என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூரில், மனைவியின் கர்ப்பத்தை கலைக்க செய்து கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் சுப்புராயலுநகரை சேர்ந்த 24 வயது இளம்பெண்ணும், நெல்லிக்குப்பத்தை சேர்ந்த பாஸ்கரன் மகன் ரகுராமன் (வயது 27) என்பவரும் கடந்த 2012-ம் ஆண்டு கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தனர். அப்போது 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலிக்க தொடங்கினர். அதன்பிறகு கடந்த 2015-ம் ஆண்டு இருவரும் நாகப்பட்டினத்திற்கு சென்று, அங்கு பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

    பின்னர் ரகுராமன், அந்த இளம்பெண் வீட்டிலேயே தங்கி குடும்பம் நடத்தி வந்தார். இதனால் அந்த இளம்பெண் 2 மாத கர்ப்பிணியானார். இதை அறிந்த அவர் தன்னுடைய வீட்டில் தங்கை உள்ளதாகவும், அவருக்கு திருமணம் முடியும் வரை குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்று கூறி, கர்ப்பத்தை கலைக்க நிர்ப்பந்தப்படுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து அவரும் கருக்கலைப்பு செய்தார்.

    அதன்பிறகு ரகுராமன், அந்த இளம்பெண்ணிடம் பேசாமலும், அவரது வீட்டுக்கு செல்வதையும் தவிர்த்து விட்டு. தனது பெற்றோருடன் சென்று விட்டார். அங்கு அவருக்கு அவரது பெற்றோர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் செய்தனர். இதை அறிந்த இளம்பெண், ரகுராமன், அவரது தாய் கயல்விழி, தந்தை பாஸ்கரன் ஆகியோரிடம் சென்று நியாயம் கேட்டதாக தெரிகிறது.

    அப்போது அவர்கள், வேறு ஒரு பெண்ணை தான் ரகுராமனுக்கு திருமணம் செய்து வைப்போம் என்று கூறி, வாக்குவாதம் செய்தனர். பின்னர் ரகுராமன், கயல்விழி, பாஸ்கரன், உறவினர் ரஞ்சித் ஆகிய 4 பேரும் அந்த பெண்ணை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது பற்றி அந்த இளம்பெண் கடலூர் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ரகுராமன் உள்பட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த இளம்பெண் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்திலும், ரகுராமன் தொழிலாளியாகவும் வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
    சிதம்பரம் அருகே பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கி தராததால் மனமுடைந்த வாலிபர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அன்பரசன். இவருடைய மகன் பாலாஜி(வயது 22). இவர் தனது பெற்றோரிடம் தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கித்தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அவருடைய பெற்றோர் மறுத்துவிட்டதாக தெரிகிறது. 

    இதனால் மனமுடைந்த பாலாஜி, வீ்ட்டின் அருகே உள்ள மாட்டு கொட்டகையில் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த இவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்த புகாரின்பேரில் மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
    மந்தாரக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் டிராவல்ஸ் உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.
    மந்தாரக்குப்பம்:

    மந்தாரக்குப்பம் கங்கைகொண்டான் பேரூராட்சிக்குட்பட்ட எஸ்.பி.டி,எஸ், நகரை சேர்ந்தவர் ரபீக் (வயது 25) டிராவல்ஸ் உரிமையாளர். இவர் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரிக்கு சென்றார். அங்கு நிகழ்ச்சி முடிந்ததும் நேற்று காலை அவர் மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பினார். 

    மந்தாரக்குப்பம் அருகே குறவன்குப்பம் பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது, நெய்வேலியில் இருந்து வடலூர் நோக்கி வந்த லாரி ஒன்று முன்னால் சென்ற மற்றொரு லாரியை முந்தி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த லாரி எதிரே வந்த ரபீக் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்த தகவலின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரபீக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லாரி மோதியதில் டிராவல்ஸ் உரிமையாளர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு சாலை விபத்தில் 302 பேர் பலியாகி உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் கூறினார்.
    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் அவரது அலுவலகத்தில் நிருபர்களுக்‌கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கடந்த 2019-ம் ஆண்டு ரவுடியிசம் தொடர்பாக 7 கொலைகள் நடந்தது. ஆனால் கடந்த ஆண்டு (2020) ரவுடியிசம் தொடர்பாக கொலைகள் ஏதும் நடக்கவில்லை. இருப்பினும் முன்விரோதம், கள்ளக்காதல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக 50 கொலைகள் நடந்துள்ளது. 910 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    கடந்த 2019-ம் ஆண்டு 113 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு 130 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக 77 பேர், குற்ற வழக்கில் தொடர்புடைய 15 பேர், சாராயம் கடத்திய 29 பேர், மணல் கடத்திய 9 பேரும் அடங்குவர்.

    310 திருட்டு வழக்குகளில் 267 வழக்குகளில் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளன. கடந்த 2019-ம் ஆண்டில் சாலை விபத்தில் 423 பேர் உயிரிழந்தனர். 2 ஆயிரத்து 815 விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த ஆண்டு 302 பேர் சாலை விபத்தில் பலியானார்கள். 2 ஆயிரத்து 602 விபத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இது கடந்த 2019-ம் ஆண்டை விட குறைவாகும்.

    2019 -ம் ஆண்டு 4 லட்சத்து 62 ஆயிரத்து 913 மோட்டார் வாகன வழக்குகளும், கடந்த ஆண்டு 4 லட்சத்து 19 ஆயிரத்து 969 மோட்டார் வாகன வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம் ரூ.2 கோடியே 4 லட்சத்து 12 ஆயிரத்து 200 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

    போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 8 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்துள்ளது. இதில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது. சைபர் கிரைம் போலீசார் 7 வழக்குகளில் துப்பு துலக்கி குற்றவாளிகளை கைது செய்ய உதவி செய்துள்ளனர். சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவிட்டதாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறியதாக 33 ஆயிரத்து 914 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 42 ஆயிரத்து 194 பேர் கைது செய்யப்பட்டனர். 8 லட்சத்து 28 ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 15 ஆயிரத்து 959 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இவ்வாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் தெரிவித்தார்.
    கடலூரில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கடலூர்:

    கடலூர் பாதிரிக்குப்பத்தில் உள்ள திரவுபதிஅம்மன் கோவில் அருகே இருந்த மரத்தில் நேற்று காலை முதியவர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தூக்கில் பிணமாக தொங்கிய முதியவரின் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர், திருப்பாதிரிப்புலியூர் நத்தவெளி பகுதியை சேர்ந்த நாகப்பன் (வயது 65) என்பது தெரிய வந்தது. ஆனால் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்த விவரம் தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகப்பன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் மாவட்டத்தில் நாளை(திங்கட்கிழமை) முதல் வழங்குவதற்காக பொங்கல் பரிசு தொகுப்பு தயார் நிலையில் உள்ளன.
    கடலூர்:

    பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் அகதிகளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு முழு கரும்பு, பச்சரிசி, சர்க்கரை ஆகியவை தலா ஒரு கிலோ, முந்திரி, திராட்சை ஆகியவை தலா 20 கிராம், ஏலக்காய் 5 கிராமுடன் ரொக்கமாக ரூ.2 ஆயிரத்து 500 நிதி உதவி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    கடலூர் மாவட்டத்தில் இலங்கை தமிழர் 433 குடும்பங்களுக்கும், 7 லட்சத்து 33 ஆயிரத்து 509 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிதிஉதவி மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதன் முதற்கட்டமாக அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக கடலூர் சாவடியில் உள்ள கூட்டுறவு கடன் சங்க குடோனில் ஊழியர்கள் பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்டவைகளை துணிப்பைகளில் பொட்டலம் போடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்த பரிசு தொகுப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூட்டுறவு விற்பனை சங்கம், கூட்டுறவு பண்டக சாலை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. பின்னர் அவை நாளை (திங்கட்கிழமை) முதல் அனைத்து ரேஷன் கடைகள் மூலமாகவும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகம் செய்யப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
    சிதம்பரம் அருகே உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சிதம்பரம்:

    சிதம்பரம் அருகே உள்ள வேலங்கிராயன்பேட்டை கிராமத்தில் சடலம் ஒன்று புதைக்கப்பட்டடு, கை மட்டும் வெளியே தெரிந்ததை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தாசில்தார் சுமதி மற்றும் போலீசார் முன்னிலையில் உடலை தோண்டி எடுத்தனர். அதில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரின் உடல் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இறந்த வாலிபரின் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு காயம் இருந்தது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இறந்த வாலிபர் சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பெரிய நற்குணம் கிராமத்தைச் சேர்ந்த சத்யராஜ் (வயது32). கார் டிரைவர் என்பது தெரிய வந்தது.

    இவருக்கு திருமணமாகி தீபா (30) என்ற மனைவியும், 2 குழந்தைகள் இருப்பதும், சத்யராஜ் கொலை செய்யப்பட்டு இந்த பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. சத்யராஜ் கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சத்யராஜிம், சேத்தியாத்தோப்பு வடக்கு சென்னி நத்தம் பகுதியை சேர்ந்த அய்யப்பன் (29) என்பவரும் நண்பர்கள் என்பதும், அந்த பழக்கத்தில் அடிக்கடி சத்யராஜ் வீட்டுக்கு வந்து செல்லும் அய்யப்பனுக்கும், சத்யராஜ் மனைவி தீபாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி விட்டது. கள்ளக்காதலை சத்யராஜ் கண்டுபிடித்து இருவரையும் எச்சரித்து உள்ளார்.

    இதைத்தொடர்ந்து கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த சத்யராஜை அவரது மனைவி தீபா, கள்ளக்காதலன் அய்யப்பனுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தீபா, அய்யப்பன் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து போலீசாரிடம் அய்யப்பன் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது நண்பரான சத்யராஜின் வீட்டுக்கு நான் அடிக்கடி சென்றுவந்தேன். அப்போது எனக்கும் சத்யராஜின் மனைவி தீபாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. அதன் பின்னர் நாங்கள் இருவரும் தனிமையில் சந்தித்து உலலாசமாக இருந்தோம். எங்களது கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்த சத்யராஜ் எங்களை கண்டித்தார்.

    அதனால் சத்யராஜ் உயிரோடு இருந்தால் நாங்கள் நிம்மதியாக இருக்க முடியாது என நினைத்தோம். இதனால் நாங்கள் சத்யராஜை கொலை செய்ய திட்டமிட்டோம்.

    அதன்படி கடந்த 17-ந் தேதி சத்யராஜை மதுகுடிக்கலாம் என்று கூறி சாத்தமங்கலம் அருகிலுள்ள வாழைத் தோப்புக்குள் அழைத்து சென்றேன்.

    பின்னர் எனது நண்பர்களுடன் சேர்ந்து சத்யராஜை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தேன். பின்னர் அவரது உடலை அங்கேயே புதைக்க முயன்றோம். அப்போது மழையால் தண்ணீர் அதிகமாக இருந்ததால் அங்கு புதைக்க முடியவில்லை.

    இதையடுத்து காரில் சத்யராஜ் உடலை ஏற்றி பரங்கிப்பேட்டை அருகே உள்ள வேலங்கிராயப்பேட்டை கடற்கரை பகுதிக்கு எடுத்து சென்றேன். அங்கு குழிதோண்டி சத்யராஜின் உடலை புதைத்தோம். சில நாள் கழித்து மீண்டும் சடலம் புதைத்த இடத்தில் சென்று பார்த்தபோது அந்த இடத்தில் சடலம் மேலே வருவது போல் இருந்தது. பின்னர் நர்சரி கார்டன் சென்று புல் வாங்கி வந்து உடல் புதைக்கப்பட்ட இடத்தின் மேல் வைத்தோம். இருப்பினும் நாட்கள் செல்ல செல்ல புதைக்கப்பட இடத்தில் இருந்து கை வெளியே தெரிந்ததால் நாங்கள் சிக்கி கொண்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக சத்யராஜின் மனைவி தீபா, அய்யப்பன் மற்றும் அவரது நண்பர்களான வினோத், சுபாஷ், அருண், கார்த்தி ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    புத்தாண்டையொட்டி கடலூர் மாவட்டத்தில் ரூ.4½ கோடிக்கு மது விற்பனையானது.
    கடலூர் முதுநகர்:

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், தீபாவளி, புத்தாண்டு மற்றும் பொங்கல் போன்ற பண்டிகையின் போது மது பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மதுவகைகளை வாங்கி குடித்து மகிழ்வார்கள். இதனால் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை ஜோராக நடக்கும்.

    எனவே பண்டிகைகளின் போது தட்டுப்பாடின்றி ஒவ்வொரு டாஸ்மாக் கடைக்கும் அதிகளவில் மதுவகைகள் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    அதே போல் இந்த ஆண்டும் ஆங்கில புத்தாண்டு பண்டிகையையொட்டி சில நாட்களுக்கு முன்பே ஒவ்வொரு கடைக்கும் அதிகளவில் டாஸ்மாக் மதுபானங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

    கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மது பிரியர்கள் டாஸ்மாக் கடைகளுக்கு சென்று தங்களுக்கு பிடித்த மது பானங்களை வாங்கினர். இதனால் டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

    கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 144 சில்லரை டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. இது தவிர தற்போது பத்துக்கும் மேற்பட்ட பார்கள் இயங்கி வருகின்றன. இங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.4 கோடியே 44 லட்சத்து 98 ஆயிரத்து 80-க்கு மது விற்பனையானது.
    புவனகிரியில் அழுகிய நிலையில் பெண் பிணமாக கிடந்தார். அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புவனகிரி:

    சிதம்பரம் அடுத்த புவனகிரி கடைவீதியில் தனியார் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை திறப்பதற்காக நிறுவனத்தின் காவலாளி பெருமாத்தூரை சேர்ந்த செந்தில்குமார்(வயது 45) என்பவர் நேற்று காலை வந்தார். அப்போது நிறுவனத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்து இதுபற்றி நிதி நிறுவன அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாண்டிச்செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நிதி நிறுவனத்தை சோதனை செய்தனர். அப்போது நிதி நிறுவனத்தில் மாடிப்பகுதியில் நிர்வாணமாக அழுகிய நிலையில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார்.

    இதையடுத்து போலீசார், இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் புதுச்சேரி பகுதியை சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க பெண் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் நிதி நிறுவனத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் சோதனை செய்தனர். அதில் அருகில் உள்ள தனியார் கணினி மையத்தில் கணக்காளராக வேலை பார்த்து வரும் ஆயிபுரம் கிராமத்தை சேர்ந்த எழிலரசன் மகன் முரசொலி மாறன் (29) என்பவர், கடந்த 29-ந்தேதி இரவு 7 மணியளவில் ஒரு பெண்ணுடன், நிதி நிறுவனத்தின் மாடிப்படிக்கு ஏறிச்செல்லும் காட்சியும், இரவு 10 மணியளவில் முரசொலி மாறன் மட்டும் தனியாக கீழே இறங்கி வந்த காட்சியும் பதிவாகி இருந்தது.

    இதனால் முரசொலி மாறன் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரிக்க சென்றபோது, அவர் ஏற்கனவே தலைமறைவாகி இருந்தார் என்பது தெரியவந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த பெண்ணை முரசொலி மாறன் கற்பழித்து கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தறைமறைவாக உள்ள கணினி மைய ஊழியர் முரசொலிமாறனை தேடி வருகின்றனர். இச்சம்பவம் புவனகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சிதம்பரம் அருகே செல்போனில் விளையாடியதை தாய் கண்டித்ததால் விஷம் குடித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள பூவாலை கிராமத்தை சேர்ந்தவர் ஜவகர மகள் நந்தாதேவி (வயது 19). இவா் கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று நந்தாதேவி படிக்காமல் வீட்டில் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைபார்த்த அவரது தாய் ஏன் படிக்காமல் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறாய்? எனக்கேட்டு கண்டித்ததோடு, செல்போனை பிடுங்கி கொண்டதாகவும் தெரிகிறது. இதனால் மனமுடைந்த நந்தாதேவி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து, வீட்டில் இருந்த விஷத்தை எடு்த்து குடித்து விட்டார்.

    இதில் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நந்தாதேவி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    காட்டுமன்னார்கோவில் அருகே விவசாயியின் மோட்டார்சைக்கிளில் இருந்து ரூ.72 ஆயிரம் திருட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காட்டுமன்னார்கோவில்:

    காட்டுமன்னார்கோவில் அருகே கண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 55), விவசாயி. இவர் நேற்று மதியம் காட்டுமன்னார்கோவில் கச்சேரி சாலையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தனது நகையை ரூ.72 ஆயிரத்துக்கு அடகு வைத்தார். அதன்பிறகு அடகு வைத்து பெற்ற தொகையை துணிப்பையில் போட்டு, மோட்டார் சைக்கிளில் தொங்கவிட்டு,விட்டு அருகே உள்ள கடைக்கு பழம் வாங்க சென்றார்.

    பின்னர் மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தபோது, அதில் வைக்கப்பட்டிருந்த பணப்பையை காணவில்லை. அதனை மர்மநபர் யாரோ? திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்த புகாரின்பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பணப்பையை திருடிச் சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    விருத்தாசலம் அருகே பொருட்கள் வாங்காமலேயே குறுந்தகவல் வந்ததால் ரேசன் கடை விற்பனையாளரை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கவணை கிராமத்தில் ரேசன் கடை அமைந்துள்ளது. அப்பகுதி மக்கள் தங்களுக்கு தேவையான ரேசன் பொருட்களை வாங்கி பயனடைந்து வந்தனர்.

    நேற்று காலை அப்பகுதி மக்களுக்கு அரிசி, எண்ண உள்ளிட்ட 5 பொருட்கள் வழங்கப்பட்டதாக குறுஞ் செய்தி வந்துள்ளது. ஆனால் அப்பகுதி மக்கள் பொருட்கள் எதுவும் வாங்காத நிலையில் குறுஞ்செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே கிராம மக்கள் ரேசன் கடைக்கு வந்தனர்.

    அப்போது ரேசன் கடையை திறந்த ஊழியர் சர்க்கரை வழங்குவதாக தெரிவித்துள்ளார். ஆனால் அங்கு சென்ற அப்பகுதி மக்கள் தங்களது ரேசன் கார்டை எடுத்து சென்று தங்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்காமல் எப்படி எங்களுக்கு குருஞ்செய்தி வந்தது எனக் கேட்டு விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது ரேசன் கடை ஊழியர் உரிய பதில் அளிக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கடை விற்பனையாளரை கடையின் உள்ளே வைத்து பூட்டி சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் ரேசன் கடை ஊழியரை மீட்டு பொதுமக்களிடம் தங்களுக்கு குறுஞ் செய்தியில் அனுப்பப்பட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

    ×