என் மலர்tooltip icon

    கடலூர்

    சிதம்பரத்தில் காதலித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    சிதம்பரம்:

    ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சுரேஷ் சிங் (வயது 20). இவர் தற்போது சிதம்பரம் மேட்டு தெருவில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள கவரிங் கடையில் வேலை பார்த்து வந்தார். சுரேஷ் சிங் தனது ஊரில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. இதனால் மனமுடைந்த சுரேஷ்சிங், சம்பவத்தன்று சயனைடு தின்றார். 

    இதில் மயங்கிய அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுரேஷ் சிங் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்த புகாரின்பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூரில் மூதாட்டியை கொன்று நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் பாதிரிக்குப்பம் கொய்யாத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பச்சையம்மாள் (வயது 65). இவரது கணவர் இறந்துவிட்டார்.

    பச்சையம்மாள் அவரது உறவினரான தாயார் அம்மாள் (70). என்பவருடன் ஒரு வீட்டில் வசித்து வந்தார். இதை நோட்டமிட்ட மர்ம மனிதர்கள் சிலர் அதிகாலையில் அவரது வீட்டுக்குள் புகுந்தனர். அவர்களை கண்டதும் வீட்டில் இருந்த பச்சையம்மாள், தாயார் அம்மாள் 2 பேரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    மூதாட்டிகள் அணிந்திருந்த நகையைக் கழற்றி தருமாறு மர்ம மனிதர்கள் கூறினர். இதில் அதிர்ச்சி அடைந்த பச்சையம்மாள் திருடன்...திருடன்...என்று அலறினார். உடனே அந்த மர்ம கும்பல் பச்சையம்மாள் மற்றும் தாயார் அம்மாளை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த பச்சையம்மாள் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    தாயாரம்மாள் காயம் காயம் அடைந்து மயங்கி விழுந்தார். உடனே அந்த மர்ம கும்பல் மூதாட்டிகள் இருவரும் அணிந்திருந்த மூக்குத்தி, கம்மல் என 1 சவரன் நகை மற்றும் வீட்டில் இருந்த பொங்கல் பரிசுத் தொகை ரூ.2500 கொள்ளையடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

    பச்சையம்மாளின் பேரன் ஆகாஷ் வீட்டுக்கு சென்றார். அங்கு பச்சையம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் தாயாரம்மாள் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    உடனே அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு தாயார் அம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபடுகிறது.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மர்ம நபர்கள் தாக்கியதில் பலியான பச்சையம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து மூதாட்டியை கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    வீராணம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு இன்று காலை 582 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    மேலும் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து பல்வேறு ஓடைகள் வழியாக வரும் நீரும் வீராணம் ஏரியை வந்தடைந்தது. இதனால் ஏரியின் நீர்மட்டம் உயர தொடங்கியது.

    நேற்று வீராணம் ஏரியின் நீர்மட்டம் 46.30 அடியாக இருந்தது. ஏரியின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் ஏரியில் இருந்து வெளியேற்றப்பட்டது. மேலும் வடவாறில் இருந்து வீராணம் ஏரிக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    நேற்று இரவு முதல் காட்டுமன்னார் கோவில் பகுதியில் மழை சற்று குறைந்தது. இதனால் ஏரிக்கு வரும் நீரின் அளவும் குறைய தொடங்கியது. இதனால் ஏரியின் நீர்மட்டம் இன்று காலை 45.08 அடியாக இருந்தது.

    இதைத்தொடர்ந்து வீராணம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டு இன்று காலை 582 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னை குடிநீருக்காக ஏரியில் இருந்து ராட்சதகுழாய் மூலம் 55 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
    மனைவி இறந்த கவலையில் கிராம நிர்வாக அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கடலூர்:

    கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தாலுகா வல்லன்குமாரன்விளை பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் மகன் பினுகுட்டன்(வயது 36). இவர், கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் கொடிக்களம், திருவட்டத்துறை பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி ரோசி. இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகளும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ரோசி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆகஸ்டு மாதம் இறந்தார். 

    இதையடுத்து பினுகுட்டன், பெண்ணாடம் பஸ் நிலையம் அருகே தனியாக அறை எடுத்து தங்கி வசித்து வந்தார். குழந்தைகள் இருவரும் மதுரையில் உள்ள ரோசியின் தந்தை வீட்டில் வசித்து வருகின்றனர். மனைவி ரோசி இறந்தது முதல், பினுகுட்டன் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் பினுகுட்டன் தான் தங்கியிருந்த அறையில் உள்ள மின்விசிறியில் கைலியால் தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போலீசார், பினுகுட்டுவின் உடலை பார்ததபோது அவரது இடது கை அறுக்கப்பட்டு ரத்தம் வடிந்தது தெரியவந்தது. பினுகுட்டன் தனது கையை பிளேடால் அறுத்துக்கொண்டு பின்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
    விருத்தாசலம் பகுதியில் உள்ள 3 தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுபோக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது.

    இதன் காரணமாக விருத்தாசலம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி நின்றது. அதேபோல் அந்த பகுதிகளில் உள்ள ஓடைகளிலும் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான பகுதியில் உள்ள குடியிருப்புகளையும் மழை வெள்ளம் சூழ்ந்தது.

    இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் மணிமுக்தா அணை அதன் முழுகொள்ளளவை எட்டியது. அதனை தொடர்ந்து அணையில் இருந்து 24 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

    கோமுகி அணை நிரம்பியதால் அதில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இந்த 2 அணைகளின் நீரும் மணிமுக்தாற்றில் கலந்தது.

    மேலும் தொடர் மழை காரணமாக பல்வேறு ஓடைகளில் இருந்து வந்த மழைநீரும் சேர்ந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள மே.மாத்தூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.

    இதனால் அணை திறந்து விடப்படக்கூடிய சூழ்நிலை உருவானதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் அணையில் இருந்து 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் மணிமுக்தாற்றில் திறந்து விடப்பட்டது.

    இதனால் மணிமுக்தாற்றின் இருகரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    இந்த வெள்ளத்தின் காரணமாக விருத்தாசலத்தை அடுத்த விலாங்காட்டு- மன்னம்பாடி தரைப்பாலம் மற்றும் மன்னம்பாடி-எடையூர் தரைப்பாலங்கள் மூழ்கியது. இதனால் அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டன.

    இதனால் அந்த பகுதியில் மன்னம்பாடி, எடையூர், கோவிலூர் உள்பட 15-க்கும் கிராமங்கள் துண்டிக்கப்பட்டது. அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள்.

    இதேபோல் விருத்தாசலம்-பெண்ணாடம் சாலையில் உள்ள சாத்துக்கூடல் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தீவனூர் பகுதியில் அமைக்கப்பட்டு வந்த தரைப்பாலமும் மூழ்கியது.

     மன்னம்பாடி-எடையூர் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்ற மழை வெள்ளம்.


    இதனால் தீவனூரை சுற்றியுள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. விருத்தாசலம் அடுத்த உச்சிமேடு பகுதியில் உள்ள தரைப்பாலமும் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

    இதனால் ஆலிச்சகுடி, இளமங்கலம், சாத்துக்கூடல் பட 5 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    15 ஆண்டுகளுக்கு பின்னர் மணிமுக்தாற்றில் இருகரைகளையும் தொட்டபடி மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அந்த பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர்.

    விருத்தாசலம் பகுதியில் உள்ள 3 தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பொதுபோக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

    தொடர் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக விருத்தாசலம் பகுதியில் உள்ள ஓட்டிமேடு, பெருந்துறை, ஒட்டுமலை, கார்கூடல், டி.குமாரமங்கலம், கோ.ஆதனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 1,5000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெல் மற்றும் உளுந்து பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி அழுகியது. இதனால் விவசாயிகள் மனவேதனை அடைந்துள்ளனர்.

    விருத்தாசலம் பாலக்கரையோரம் முல்லாத் தோட்டத்தில் ஆற்றங்கரையோரம் உள்ள 4 வீடுகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று அங்கிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.

    தாழ்வான இடங்களில் உள்ள பொதுமக்களை அங்கிருந்து வெளியேறும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை கலைச்செல்வன் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார்.
    கடலூரில் பெய்து வரும் தொடர் மழையால் புளியமரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் ஸ்கூட்டரில் சென்ற தனியார் நிறுவன உரிமையாளர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
    கடலூர்:

    சிதம்பரம் அருகே மேல்புவனகிரி கோட்டைதெருவை சேர்ந்தவர் குமணன் (வயது 51) . இவர் புதுச்சேரி கிருமாம்பாக்கத்தில் அட்டை பெட்டிகள் தயாரிக்கும் (பேக்கிங்) நிறுவனம் வைத்து நடத்தி வந்தார். இவருடைய மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஆதித்யன் (19) என்ற மகன் உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்சி, படித்து வருகிறார்.

    குமணன் தற்காலிகமாக கடலூர் சாவடி சம்பந்தம் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருவதோடு, தன்னுடைய நிறுவனத்திற்கு ஸ்கூட்டரில் சென்று வருவது வழக்கம். அதன்படி நேற்று வீட்டில் இருந்து புறப்பட்ட குமணன் காலை 9.55 மணி அளவில் ஆல்பேட்டை மெயின்ரோட்டில் புதுச்சேரி நோக்கி தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது தொடர்ந்து மழை பெய்து வந்ததால், சாலையோரம் நின்ற பழமைவாய்ந்த புளிய மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து ஸ்கூட்டரில் சென்ற குமணன் தலையில் விழுந்தது. அவருக்கு பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த வெள்ளப்பாக்கம் நாராயணமூர்த்தி மகன் வினோத் (21), சிதம்பரம் கொத்தவாச்சாவடி கிருஷ்ணமூர்த்தி நகர் உமாசங்கர் மகன் விஜயேஸ்வரன் (25) ஆகிய 2 பேர் மீதும் மரக்கிளைகள் விழுந்தன.

    இதை பார்த்ததும் அக்கம், பக்கத்தினர் மற்றும் வாகனங்களில் சென்றவர்கள் ஓடிச்சென்று அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் எழில்தாசன் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனுவாசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மரம் அறுக்கும் எந்திரங்கள் மூலம் கிளைகளை வெட்டி ஒரு புறம் உள்ள பகுதியை மட்டும் அப்புறப்படுத்தி, அவர்களை மீட்டனர்.

    ஆனால் மரம் விழுந்ததில் உடல் நசுங்கி குமணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயத்துடன் போராடிய மற்ற 2 பேரையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு, சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே இறந்த குமணன் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பழமைவாய்ந்த மரம் சாலையின் குறுக்கே விழுந்து கிடந்ததால், போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. இதையடுத்து அந்த மரத்தை சுமார் 1½ மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள், போலீசார், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் வெட்டி அப்புறப்படுத்தினர். இருப்பினும் கடலூர் ஆல்பேட்டை நேதாஜி ரோடு- புதுச்சேரி சாலையில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    முன்னதாக தாசில்தார் பலராமன், கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமன் மற்றும் வருவாய்த்துறையினரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இது பற்றி குமணன் மனைவி லட்சுமி கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    கடலூர் மாவட்டத்தில் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புதுக்குப்பம், கண்டியாங்குப்பம், அம்புஜவல்லிபேட்டை, எசனூர், மதகளிர் மாணிக்கம் உள்பட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பலத்த மழை பெய்தது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வங்க கடலில் இருந்து ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசை காற்று தமிழகம் நோக்கி வீசுவது வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    கடலூர், விழுப்புரம் உள்பட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையமும் அறிவித்திருந்தது.

    கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    கடலூர், திருப்பாதிரிப்புலியூர், வண்டிப்பாளையம், பாதிரிக்குப்பம், கூத்தப்பாக்கம், மஞ்சக்குப்பம், புதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்ய தொடங்கியது.

    நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரித்து பலத்த மழை கொட்டியது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. அதேபோல் சாலைகளிலும் நீர் கரைபுரண்டு ஓடியது.

    மாவட்டத்தில் ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான புதுக்குப்பம், கண்டியாங்குப்பம், அம்புஜவல்லிபேட்டை, எசனூர், மதகளிர் மாணிக்கம் உள்பட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் பலத்த மழை பெய்தது.

    இந்த மழை இன்று காலை வரை நீடித்தது. இதனால் ஆதிவராகநல்லூர் காலனி பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கி நின்றது. சிலரது வீட்டுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர்.

    இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் வடிகால் வாய்கால்கள் சரிவர பராமரிக்கப்படாமல் இருப்பதால் மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாமல் வீடுகளை சூழ்ந்துள்ளது. பலரது வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது.

    தொடர் மழை காரணமாக கடந்த சில மாதங்களாகவே எங்கள் பகுதியில் இதேநிலை நீடிக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்று காலை வரை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.

    பாதசாரிகள் மற்றும் பொதுமக்கள் மழையில் நனைந்தபடியும், குடைகளை பிடித்தபடியும் செல்வதை காண முடிந்தது.

    சிதம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான அண்ணாமலைநகர், புதுச்சத்திரம், கிள்ளை உள்பட பல்வேறு பகுதியிலும் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மழை நீடித்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கியது. பல வீடுகளையும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

    விழுப்புரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்தது.

    மரக்காணம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அந்த பகுதி விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் திருக்கனூர், புதுக்குப்பம், நடுக்குப்பம், ஓமிப்பேர், ஆலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 20 ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிட்டிருந்த மணிலா பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகின. இதனால் அந்த பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    பாதிப்புக்குள்ளான பயிர்களை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி விவசாய சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கடலூர்:

    நிவர் மற்றும் புரெவி புயலால் பாதிக்கப்பட்ட நெல், மணிலா, உளுந்து, வாழை, கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை முறையாக கணக்கெடுத்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும், அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டுத் தொகை உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இதற்கு மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர்கள் மெய்யழகன், குமரகுருபரன், பஞ்சாட்சரம், சம்பத்குமார், காந்தி, மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். 

    இதில் மாவட்ட துணை செயலாளர் சரவணன், ஜெகதீசன், செயலாளர் தென்னரசு, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பின்னர் அனைவரும் ஊர்வலமாக சென்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

    கடலூர் அருகே காரில் 150 லிட்டர் சாராயம் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக காரில் சாராயம் கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ்வுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி, சிறப்பு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் கடலூர் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பதிவெண் இல்லாமல் வந்த காரை வழிமறித்து சோதனை செய்தனர். 

    அதில் அந்த காரில் 5 சாக்கு மூட்டைகளை இருந்தன. பின்னர் சாக்கு மூட்டைகளை சோதனை செய்ததில் சாராய பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் குறவன்பாளையத்தை சேர்ந்த ராஜா மகள் வனிதா (வயது 33) , கிருஷ்ணமூர்த்தி மகன் சிவமணி (31) என்பதும், புதுச்சேரியில் இருந்து குறவன்பாளையத்துக்கு சாராயம் கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வனிதா, சிவமணி ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 150 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது.
    புவனகிரியில் அழுகிய நிலையில் பெண் பிணமாக மீட்கப்பட்ட வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். திருமணத்துக்கு வற்புறுத்தியதால் கள்ளக்காதலியை கொன்றதாக அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
    புவனகிரி:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த புவனகிரி கடை வீதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தின் மாடிப்பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நிர்வாணமாக அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த பெண், புதுச்சேரி மாநிலம் திருபுவனையை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சத்யா(வயது 37) வயது என்பது தெரியவந்தது.

    மேலும் நிதி நிறுவனத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை சோதனை செய்தபோது, அதில் கடந்த 29-ந்தேதி இரவு 7 மணியளவில் புவனகிரியில் தனியார் கணினி மையத்தில் பணிபுரியும் புவனகிரி அருகே உள்ள ஆயிபுரம் கிராமத்தை சேர்ந்த எழிலரசன் மகன் முரசொலி மாறன்(வயது 29) என்பவர் சத்யாவை மாடிக்கு அழைத்து சென்றதும், இரவு 10 மணியளவில் முரசொலிமாறன் மட்டும் தனியாக கீழே இறங்கி வந்ததும் தெரிந்தது. இதனால் அவரை முரசொலி மாறன் கற்பழித்து கொன்று இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து முரசொலிமாறனை போலீசார் தேடினர். இதையறிந்த அவர் தலைமறைவாகிவிட்டார்.

    இதைத்தொடர்ந்து முரசொலி மாறனை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் முரசொலி மாறனை தேடி வந்தனர். இந்த நிலையில் முரசொலி மாறன் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவினாசி விரைந்தனர். இதற்கிடையே போலீசார் வருவதை அறிந்த முரசொலி மாறன் தனது காதில் விஷத்தை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அதற்குள் போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டு அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் முரசொலிமாறன் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நானும், சத்யாவும் புதுச்சேரி திருபுவனை பகுதியில் உள்ள நூல் நிறுவனத்தில் வேலைபார்த்தோம். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து பேசி வந்தோம். இந்த நிலையில் எனக்கு புவனகிரியில் வேலை கிடைக்க நான் அங்கிருந்து வந்துவிட்டேன். இருப்பினும் எங்களது பழக்கம் தொடர்ந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 29-ந்தேதி சத்யா, என்னை பார்ப்பதற்காக புவனகிரிக்கு வந்தார். பின்னர் நான் சத்யாவை தனியார் நிதிநிறுவனத்தின் மாடிக்கு அழைத்து சென்றேன். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்தோம்.

    அப்போது அவர் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் அதற்கு நான் மறுத்துவிட்டேன். இதனால் அவர் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான், சத்யாவின் கழுத்தை நெரித்துக்கொன்றேன். பின்னர் அங்கிருந்து நான் தப்பி ஓடிவிட்டேன். இருப்பினும் போலீசார் என்னை பிடித்து விட்டனர். இவ்வாறு முரசொலி மாறன் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து முரசொலிமாறனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுப்பேட்டையில் லாட்டரி சீட்டுகள் விற்ற 4 பேரையும் போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
    புதுப்பேட்டை:

    புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் பண்டரக்கோட்டை, கோட்லாம்பாக்கம், புதுப்பேட்டை கடைவீதி ஆகிய இடங்களில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது தனித்தனி இடத்தில் நின்று கொண்டிருந்த 4 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் புதுப்பேட்டை நண்பர்கள் நகரை சேர்ந்த கோபு (வயது 38), கோட்லாம்பாக்கம் ராஜேந்திரன் (46), பண்டரக்கோட்டை சிவப்பிரகாசம் (37), புதுப்பேட்டை சங்கர் (47) ஆகியோர் என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கோபு உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
    புதுப்பேட்டையில் அரசு ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    புதுப்பேட்டை:

    பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை பஜனைமட தெருவை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 50). இவர் கடலூர் செம்மண்டலத்தில் தங்கியிருந்து கடலூரில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். அப்போது விஷத்தை குடித்து விட்டதாக தெரிகிறது.

    இதில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீ்ட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கோபிநாத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிநாத் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
    ×