என் மலர்tooltip icon

    கடலூர்

    திட்டக்குடியில் ஆண் பச்சிளம் குழந்தையை வாயில் கவ்வியபடி ஓடி வந்த தெருநாயை பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திட்டக்குடி:

    திட்டக்குடியில் பச்சிளம் குழந்தையை தெருநாய் ஒன்று கவ்வி தூக்கி வந்தது. நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் குறித்து கூறப்படுவதாவது:-

    கடலூ்ா மாவட்டம் திட்டக்குடியில் உள்ளது அருந்ததியர் காலனி. இங்கு நேற்று காலை 11.30 மணிக்கு தெருநாய் ஒன்று ஒரு பச்சிளம் ஆண் குழந்தையை வாயில் கவ்வியபடி ஓடி வந்தது. அதன் பின்னால் 3 தெருநாய்கள் ஓடி வந்தன. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், குழந்தையை மீட்க நாய்களை விரட்டினர். இருப்பினும் நாய்கள் விட்டுவிடவில்லை. தொடர்ந்து கற்களை எடுத்து அப்பகுதி மக்கள் அடித்தனர். இதனால் அங்குள்ள முட்புதருக்கு அருகே குழந்தையை போட்டுவிட்டு நாய்கள் ஓடிவிட்டன.

    இதையடுத்து அருகே சென்று அப்பகுதி மக்கள் பார்த்த போது, நெஞ்சை உலுக்கும் விதமாக இருந்தது. பிறந்து சிலமணி நேரமே ஆன அந்த ஆண் குழந்தை, தொப்புள் கொடியுடன் இறந்த நிலையில் இருந்தது. மேலும் குழந்தையின் இடது கையை நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்து குதறி தின்றதற்கான அடையாளம் இருந்தது. இது பார்ப்பவர்களின் கண்களில் இருந்து கண்ணீரை வர செய்தது. பச்சிளம் குழந்தை நாய்களிடம் கிடைக்க செய்யும் வகையில் படுபாதக செயலில் ஈடுபட்ட அந்த கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? என்று அந்த பகுதி மக்கள் ஆதங்கப்பட்டனர். தகவல் அறிந்த, திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, குழந்தையின் உடலை பார்வையிட்டனர். பின்னர் குழந்தையின் உடலை கைப்பற்றி திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திட்டக்குடி பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கருக்கலைப்பு என்பது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. இதுபற்றி அதிகாரிகளும் கண்டும் காணாமல் இருந்து வருகிறார்கள். எனவே அதுபோன்ற கருக்கலைப்பின் போது, எடுக்கப்படும் குழந்தைகளை வெள்ளாற்றில் புதைத்து வருகிறார்கள். அதுபோன்று தான் இந்த குழந்தையையும் ஆற்றில் புதைத்து இருப்பார்கள். அதை நாய்கள் ஒன்று சேர்த்து தூக்கி வந்து இருக்கலாம். இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து, இனி இதுபோன்று துயரம் நிகழாமல் தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றனர் அப்பகுதி மக்கள்.

    இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக திட்டக்குடி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். அதன் முடிவில் தான் இறந்த குழந்தை யாருடையது? குழந்தை இறப்புக்கு காரணம் யார்? என்கிற மர்ம முடிச்சுகள் அவிழும். இந்த சம்பவம் திட்டக்குடி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
    விருத்தாசலம் அருகே வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே கம்மாபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் விடிய விடிய கன மழை பெய்தது. இதனால் கம்மாபுரம் பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வழிகிறது.

    மேலும் நெய்வேலி என்.எல்.சி. சுரங்க பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் வெளியேற வழியில்லாமல் கம்மாபுரம் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அதோடு வயல்வெளிகளுக்குள் தண்ணீர் பாய்ந்ததால் விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் அந்த பகுதியில் உள்ள மக்கள் விடிய விடிய தூங்காமல் தவித்தனர். எனவே இன்று காலை கம்மாபுரம் பகுதி மக்கள் ஒன்று திரண்டனர். அவர்கள் விருத்தாசலம்- பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் விரைந்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

    கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதமாகி உள்ளது.
    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக கனமழை நீடித்தது. குறிப்பாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மழை கொட்டி தீர்த்ததால் அங்குள்ள கிராமங்கள் தனித்தீவானது. இதனால் மக்கள் கடும் சோகத்தை சந்தித்தனர். தற்போது மழை வெள்ளம் வடிந்துள்ளது.

    இந்த சோகத்தில் இருந்து மக்கள் விடுபடுவதற்குள் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.

    ஒரே நாளில் பரங்கிபேட்டை, கொத்தவாச்சேரி பகுதியில் தலா 28 செ.மீ. மழை பொழிந்துள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விளைநிலங்களில் மழைநீர் புகுந்துள்ளது.

    கனமழையால் குறிஞ்சிப்பாடி, ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, குமராட்சி, சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதமாகி உள்ளது.

    நெல்மணிகள் அனைத்தும் தரையோடு தரையாக சாய்ந்து கிடப்பதால் அவை முளைக்கும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.

    குமராட்சி அருகே உள்ள நலன்புத்தூர் கிராமத்தில் சூறாவளியுடன் கனமழை பெய்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்தன. ஒருசில வீடுகளின் ஓடுகள் காற்றில் பறந்தது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இதுதவிர ஸ்ரீமுஷ்ணம், புதுகுளம், எசனூர், கொக்கரசன்பேட்டை, குணமங்கலம், நகரபாடி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் பெலாந்துரை வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கனமழை காரணமாக கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த ஏரியின் நீர்மட்டம் 47.50 அடி ஆகும். தற்போது 3000 கனஅடி நீர் வருகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் உயர தொடங்கியது. எனவே பாதுகாப்பு கருதி வீராணம் ஏரிக்கு வரும் 3000 கனஅடி உபரிநீர் அப்படியே திறந்துவிடப்படுகிறது.

    இதனால் வீராணம் ஏரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வலியுறுத்தினர்.

    ஏற்கனவே கடந்த மாதம் புயல் மழையால் வீராணம் ஏரி கரையோர மக்கள் கடும் இன்னல்களை சந்தித்தனர். தற்போதும் தொடர்மழை பெய்துவருவதால் இந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    கடலூர் மாவட்டத்தில் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் 25.96 செ.மீ. மழை கொட்டி தீர்த்து உள்ளது.
    கடலூர்:

    இலங்கை மற்றும் குமரிக்கடல் அருகே நிலவிய மேலடுக்கு வளிமண்டல சுழற்சி மேற்கு நோக்கி அரபிக்கடல் அருகே நிலவுகிறது. இந்த வளிமண்டல சுழற்சி வலுவாக இருந்த காரணத்தால் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் கடலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை மற்றும் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தற்போது குடியிருப்பு பகுதிகள் மற்றும் நிலப்பகுதிகளில் தண்ணீர் தேங்கி வருகிறது.

    கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாதோப்பு, சிதம்பரம், பரங்கிப்பேட்டை, புவனகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

    நேற்றுஇரவு விடிய விடிய சிதம்பரம், புவனகிரி, சேத்தியாதோப்பு, பரங்கிப்பேட்டை, கொத்தவாச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த கனமழை பெய்து உள்ளது.

    இதன்காரணமாக சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் முழுவதும் சாய்ந்து வீணாகி உள்ளது. தற்போது பொங்கல் பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடுவது விவசாயிகள் ஆகும்.

    ஆனால் இந்த ஆண்டு தொடர் மழை காரணமாக லட்சக்கணக்கான ஏக்கரில் தண்ணீரில் மூழ்கி பயிர்கள் வீணாகி விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாக்கி உள்ளது.

    தற்போது கடலூர் மாவட்டத்தில் மீண்டும் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று புரியாமல் விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு மத்தியில் பொங்கல் பண்டிகையை எப்படி கொண்டாடுவது என்று புரியாமல் தவித்து வருவதை காணமுடிந்தது.

    கடலூர் மாவட்டத்தில் மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு:-

    கொத்தவாச்சேரி-284., பரங்கிப்பேட்டை-283.20, சேத்தியாதோப்பு-208.60, புவனகிரி- 196.00, ஸ்ரீமுஷ்ணம்-186.20, சிதம்பரம்-156.80, பெல்லாந்துரை-145.50, குறிஞ்சிப்பாடி- 120.00, அண்ணாமலைநகர்-116.60, காட்டுமயிலூர்-100, வேப்பூர்- 98.00,விருத்தாசலம்-96.40, கீழ்செருவாய்-91, குப்பநத்தம்-86.40, லால்பேட்டை-81.10, காட்டுமன்னர்கோவில்-71, தொழுதூர்-66, மீ.மாத்தூர்-58, லக்கூர்-52, வடக்குத்து-52, எஸ்.ஆர்.சி குடிதாங்கி-10.50, பண்ருட்டி-10, கடலூர்-9.80, வானமாதேவி-9, கலெக்டர் அலுவலகம்-8.60, அதன்படி கடலூர் மாவட்டத்தில் ஒட்டு மொத்தமாக ஒரே நாளில் 25.96 செ.மீ. மழை கொட்டி தீர்த்து உள்ளது.
    கடலூரில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் பிரகாஷ். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நித்யா(வயது 30). இந்த தம்பதிக்கு விஜய் தண்டபாணி (1) என்ற மகன் மற்றும் ஒரு மாத பெண் குழந்தை இருந்தது. பிரசவத்திற்கு வந்ததில் இருந்தே நித்யா எஸ்.என்.சாவடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்தார்.

    நேற்று மாலை வீட்டில் நித்யா தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது இரு குழந்தைகளும் தரையில் இறந்து கிடந்தன. நித்யா தனது குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அவரது இந்த விபரீத முடிவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    கடலூர் அருகே சாராயம் விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர்:

    கடலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) தாரகேஸ்வரி தலைமையிலான போலீசார் நேற்று கிழக்கு ராமாபுரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள சுடுகாடு அருகே வாலிபர் ஒருவர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் பெரியகாரைக்காட்டை சேர்ந்த விஜயக்குமார் மகன் செந்தில்குமார் (வயது 23) என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 60 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
    விருத்தாசலத்தில் சாலையில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் நீதிபதியின் கணவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் பகுதியில் இருந்து விருத்தாசலம் நோக்கி நேற்று மதியம் 1 மணியளவில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த கார், விருத்தாசலம் புறவழிச்சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலம் அருகே வந்த போது, திடீரென காரில் இருந்து கரும்புகை வெளியேறியது.

    உடன் காரை ஓட்டி வந்தவர் சாலையோரம் நிறுத்திவிட்டு இறங்க முற்பட்டார். அதற்குள் கார் முழுவதும் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. தீ ஜூவாலைக்குள் சிக்கிய அவரால் வெளியே வர முடியவில்லை.

    இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் விருத்தாசலம் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து, உள்ளே சிக்கி இருந்தவரை மீட்க முயன்றனர். ஆனால் இறுதியாக அவர் தீயில் கருகி பலியானார்.

    இதுபற்றி அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். காரில் வந்தவர் உடல் முழுவதும் எரிந்து எலும்பு கூடாக இருந்ததால், அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பதை போலீசாரால் அடையாளம் காணமுடியவில்லை.

    இதைத்தொடர்ந்து, காரின் பதிவு எண்ணை அறிந்து, அதன் மூலம் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். அதில், வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த கவியரசு(வயது 37) என்பது தெரியவந்தது. இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மணிமேகலை (35). இவர் விருத்தாசலம் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதியாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த 3 மாதங்களாக கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள ராமச்சந்திரன் பேட்டையில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.

    கவியரசுக்கு நேர்ந்த கோர விபத்து குறித்து, நீதிபதி மணிமேகலைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைகேட்டதும், அதிர்ச்சியடைந்த அவர் கண்ணீர் விட்டு அழுதபடி, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு வந்தார்.

    ஆனால், போலீசார் கவியரசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டனர். இதையடுத்து மருத்துவமனையில் இருந்து நீதிபதி மணிமேகலை கண்ணீருடன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    கவியரசு நேற்று தனது காரை எடுத்துக்கொண்டு விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக சென்றார். அங்கு தரிசனத்தை முடித்த அவர், பின்னர் காரில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது புறவழிச்சாலை வழியாக சென்ற அவர், விபத்தில் சிக்கி உடல் கருகி உயிரிழந்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததையடுத்து அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.

    நேற்று நள்ளிரவு கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மஞ்சக்குப்பம், திருப்பாதிரிபுலியூர், முதுநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அதிகாலையிலும் மழை லேசாக தூறி கொண்டிருந்தது.

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வண்டிகேட், அண்ணாமலை நகர், பி.முட்லூர், கீரப்பாளையம், புவனகிரி, காட்டுமன்னார் கோவில், பரங்கிபேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 10 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழையின்வேகம் அதிகரித்து பலத்த மழை கொட்டியது.

    இதனால் அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. கனமழை காரணமாக நள்ளிரவு 12 மணி அளவில் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இன்று காலை வரை மின் வினியோகம் வழங்கப்படவில்லை. தொடர் மழை மற்றும் மின்வெட்டு காரணமாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதியடைந்தனர்.

    பெண்ணாடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான முருகன்குடி, கோனூர், வெண்கரும்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை 3 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மிதமான மழை காலை 8 மணிவரை நீடித்தது. இதனால் சாலைகளில் செல்லும் பொதுமக்கள் மழையில் நனைந்தபடியும், குடை பிடித்த படியும் செல்வதை காணமுடிந்தது.

    பெண்ணாடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தொடர்மழை காரணமாக அறுவடை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆதிவராகநல்லூர், டி.நெடுஞ்சேரி, கண்டியாங்குப்பம், தேத்தாம்பட்டு, நாச்சியார்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு 12 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இன்று காலைவரை மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

    தொடர் மழை காரணமாக ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வானமாதேவி பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர்.

    சிறப்பு சுருக்க திருத்த பணிகள் குறித்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று வாக்குச்சாவடி முகவர்களுக்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சஜ்ஜன்சிங் சு.சவான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    கடலூர்:

    இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலர் ஆகியோரது ஆணையின்படி கடலூர் மாவட்டத்தில் 2021-ம் ஆண்டிற்கான சிறப்பு சுருக்க முறை திருத்த பணியினை கண்காணித்திட சஜ்ஜன்சிங் சு.சவான், வாக்காளர் பட்டியல் பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர், கடந்த மாதம் 18-ந் தேதி மற்றும் கடந்த 5-ந் தேதி கடலூர் மாவட்டத்திற்கு வருகை வந்து வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

    அதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தம் தொடர்பான 3-வது கட்ட ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் அருண் சத்யா, சிதம்பரம் சப்-கலெக்டர் மதுபாலன், கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சஜ்ஜன்சிங் சு.சவான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், வருகிற 20-ந் தேதி தேர்தல் ஆணையத்தால் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. பட்டியல் வெளியிட்ட பின்னரும் வாக்காளர்கள், இணைய வழியாகவும், நேரிடையாகவும் விண்ணப்பித்து தங்கள் பெயர்களை சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்த பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளலாம்.

    மேலும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளை சார்ந்த வாக்குச்சாவடி முகவர்களும், தங்கள் பகுதியை சேர்ந்த வாக்காளர்களுக்கு சிறப்பு சுருக்க திருத்த பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு விடுபட்ட வாக்காளர்களின் விவரத்தினை தெரிவித்து சுருக்க திருத்த பணிகளை மேற்கொள்ள உதவிட வேண்டும் என்றார்.

    இதில் தாசில்தார் பலராமன், தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர் லெனின், பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர்கள் செல்வகணபதி, விக்னேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயசங்கர், பகுஜன் சமாஜ் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் சுரேஷ், காங்கிரஸ் கட்சி குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாதவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி குளோப் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என நியாயவிலைக்கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
    கடலூர்:

    தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் நேற்று கடலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா டி.வேலூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில், அங்குள்ள அரசியல் கட்சியினர் நாங்கள் தான் பொருட்களை கொடுப்போம் என்று கூறி தகராறு செய்து வருகின்றனர். ஆளுங்கட்சியை சேர்ந்த அவர்கள் 2 கோஷ்டிகளாக உள்ளனர்.

    இதில் யார் ரேஷன் கடையில் பொருட்களை கொடுப்பது என தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒன்றிய கவுன்சிலர், மாற்றுத்திறனாளியான ரேஷன் கடை பணியாளர் சுரேசை தாக்கியுள்ளார். அரசியல் கட்சியினர் நிர்வாகத்தின் மூலம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமே தவிர, நிர்வாகத்தை தாங்களே கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவது நாகரிகமான செயல் அல்ல.

    மேலும் ரேஷன் கடை பணியாளரை தாக்கியவரை உடனே கைது செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும், மாவட்ட தலைநகரங்களில் கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் நாளை (திங்கட்கிழமை) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அரசியல் கட்சி பிரமுகர்கள் இவ்வாறு தவறு செய்வதை முதல்-அமைச்சர் தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். அப்போது மாநில தலைவர் சரவணன் உடனிருந்தார்.
    திட்டக்குடியில் மரத்தில் ஏறி நின்று வெலிங்டன் ஏரி பாசன விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திட்டக்குடி:

    திட்டக்குடியில் வெலிங்டன் ஏரி உள்ளது. 30 கனஅடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது 25.30 கன அடி தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் ஏரியில் இருந்து தண்ணீரை திறப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்றதாக தெரிகிறது. ஆனால் இந்த ஆலோசனை கூட்டத்தில் வெலிங்டன் ஏரி பாசன சிறு, குறு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியை சேர்ந்த ஆதிதிராவிட விவசாயிகளை அழைக்கவில்லை. இதுகுறித்து திட்டக்குடி தாசில்தார் சையத் அபுதாகிரிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த வெலிங்டன் ஏரி பாசன விவசாயிகள் தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியை சேர்ந்த ஆதிதிராவிட விவசாயிகள் நேற்று காலை தாலுகா அலுவலகம் முன்பு உள்ள மரத்தின் மீது ஏறி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு, சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும்வரை மரத்தில் இருந்து இறங்க மாட்டோம் என்று கூறி தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து தாசில்தார் சையது அபுதாகிர் சங்க நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் விவசாயிகள் மரத்தில் இருந்து கீழே இறங்கினர். தொடர்ந்து தாசில்தார் சையது அபுதாகிர், திட்டக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதை ஏற்று விவசாய சங்கத்தினர் அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    நடுவீரப்பட்டு அருகே குட்டையில் குளித்த டிரைவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நெல்லிக்குப்பம்:

    நடுவீரப்பட்டு அடுத்த கீழ்பத்திரக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜ் (வயது 35). பொக்லைன் எந்திர டிரைவர் சம்பவத்தன்று இவர் குழந்தைகுப்பம் பகுதியில் உள்ள குட்டையில் குளிக்க சென்றார். அப்போது அவர் திடீரென நீாில் மூழ்கினார். 

    இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று ராஜியை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இது குறித்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×