search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை

    கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததையடுத்து அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.
    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.

    நேற்று நள்ளிரவு கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மஞ்சக்குப்பம், திருப்பாதிரிபுலியூர், முதுநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அதிகாலையிலும் மழை லேசாக தூறி கொண்டிருந்தது.

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான வண்டிகேட், அண்ணாமலை நகர், பி.முட்லூர், கீரப்பாளையம், புவனகிரி, காட்டுமன்னார் கோவில், பரங்கிபேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 10 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல மழையின்வேகம் அதிகரித்து பலத்த மழை கொட்டியது.

    இதனால் அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. கனமழை காரணமாக நள்ளிரவு 12 மணி அளவில் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    இன்று காலை வரை மின் வினியோகம் வழங்கப்படவில்லை. தொடர் மழை மற்றும் மின்வெட்டு காரணமாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதியடைந்தனர்.

    பெண்ணாடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான முருகன்குடி, கோனூர், வெண்கரும்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை 3 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மிதமான மழை காலை 8 மணிவரை நீடித்தது. இதனால் சாலைகளில் செல்லும் பொதுமக்கள் மழையில் நனைந்தபடியும், குடை பிடித்த படியும் செல்வதை காணமுடிந்தது.

    பெண்ணாடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தொடர்மழை காரணமாக அறுவடை செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஆதிவராகநல்லூர், டி.நெடுஞ்சேரி, கண்டியாங்குப்பம், தேத்தாம்பட்டு, நாச்சியார்பேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு 12 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இன்று காலைவரை மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

    தொடர் மழை காரணமாக ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள வானமாதேவி பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனர்.

    Next Story
    ×