search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடலூர் போராட்டம்"

    • கடலூர் கம்மியம்பேட்டையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு லாரிகளை சிறை பிடித்தனர்.
    • மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் கம்மியம்பேட்டையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஏராளமாக உள்ளது.

    இங்குள்ள பள்ளிகளில் மாணவ-மாணவிகளை காலை நேரத்தில் பள்ளியில் விடவும், மாலை நேரத்தில் அவர்களை அழைத்து செல்லவும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் பெற்றோர்கள் வந்து செல்கிறார்கள்.

    இதனால் இப்பகுதியில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதியில் ரெயில்வே கேட் உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

    மேலும் இங்குள்ள ஜவான் பவான் பைபாஸ் சாலை வழியாக ஏராளமான கனரக வாகனங்கள் இங்குள்ள சிப்காட் பகுதிக்கு வந்து செல்கின்றன.

    இந்த கனரக வாகனங்கள் அதிக அளவு பாரத்தை ஏற்றி வருவதுடன் அதி வேகமாகவும் செல்கிறது. இதனால் மாணவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் கனரக வாகனங்கள் வந்து செல்வதை தடை செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் போலீசில் புகார் செய்தனர்.

    ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்தும் கனரக வாகனங்களை அனுமதிக்க கூடாது என வலியுறுத்தியும் கவுன்சிலர் சரவணன் தலைமையில் இன்று அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அந்த வழியாக வந்த லாரிகளையும் சிறை பிடித்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்க கூடாது. இதனை செயல்படுத்தாவிட்டால் போராட்டம் தொடரும் என்றனர்.

    மறியல் குறித்த தகவல் கிடைத்ததும் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.

    இதனை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ×