என் மலர்tooltip icon

    கடலூர்

    சேத்தியாத்தோப்பு அருகே பணத்தை எண்ணி தருவதாக கூறி முதியவரிடம் மர்ம நபர் பணம் அபேஸ் செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேத்தியாத்தோப்பு:

    கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பூதங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 70) இவர் சம்பவத்தன்று சேத்தியாதோப்பு தனியார் வங்கியில் ரூ. 39 ஆயிரம் எடுத்து கொண்டு வெளியே வந்தார்.

    அப்போது அங்கு நின்று கொண்டிருந்த போது மர்ம நபர் கவனித்தார். உடனே அந்த நபர் சாமிநாதனிடம் பணத்தை எண்ணி தருவதாக கூறி வாங்கி ரூ. 20 ஆயிரம் பணத்துடன் ஓடினார். மீதம் ரூ. 19 ஆயிரம் மட்டுமே சாமிநாதனிடம் இருந்தது.

    அதிர்ச்சி அடைந்த சாமிநாதன் இதுபற்றி சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் சேத்தியாதோப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன், குற்றப் பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    குமாரக்குடி அருகே சந்தேகத்திற்கிடமாகநின்ற நபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த நபர், தான் சாமிநாதனிடம் பணத்தை பறித்து சென்றதை ஒப்புகொண்டார். உடனே போலீசார் அவரை கைது செய்தனர். அவரது பெயர் கொளஞ்சி (50) என தெரிய வந்தது.

    அரசு பஸ்கள் நிலை குறித்து உயர் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்று பயணிகள் கூறினர்.
    திட்டக்குடி:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் பெரும்பாலானவை போதிய பராமரிப்பு இல்லாததால் பஸ்கள் அடிக்கடி நடுவழியில் பழுதடைந்து நின்றுவிடுகிறது.

    இதனால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    திட்டக்குடியில் இருந்து பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டு புலிவலம், கீரனூர் வழியாக ஆவடி கூட்டு ரோடுவரை சென்றது. பெருமுளை பெட்ரோல் பங்க் அருகில் வளைவில் திடீரென நடுவழியில் பஸ் பழுதடைந்தது.

    இதைத்தொடர்ந்து பயணிகள் அனைவரும் பஸ்சை விட்டு கீழே இறங்கினர். தொடர்ந்து அவ்வழியே வந்த வேறு பஸ்சில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுகுறித்து பயணிகள் கூறும்போது அரசு பஸ்கள் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது. முறையாக பராமரிக்க வேண்டும். அரசு பஸ்கள் நிலை குறித்து உயர் அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை. இதனால் நடுவழியில் பழுதாகி நின்று பயணிகள் அவதி அடையும் நிலை தொடருகிறது என அவர்கள் கூறினர்.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 4 வீடுகள் எரிந்து நாசமானது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புதுப்பேட்டை ஏ.பி.குப்பம் காலனி மேற்கு தெருவை சேர்ந்தவர் வீரன். கூலி தொழிலாளி. இவரது கூரை வீட்டில் நேற்று திடீரென்று மின்கசிவு காரணமாக தீ பிடித்தது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் தீ அக்கம்பக்கம் உள்ள கோவிந்தன், குபேந்திரன், பிரகலாதன் ஆகியோரது வீடுகளிலும் பற்றியது. அப்போது கியாஸ் சிலிண்டர்கள் பயங்கரமாக வெடித்து சிதறியது. இதனால் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து பண்ருட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனாராணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

    எனினும் 4 வீடுகள் மற்றும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராமநத்தம் அருகே சாராயம் விற்ற பெண்ணை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    ராமநத்தம்:

    ராமநத்தம் அருகே உள்ள பட்டாக்குறிச்சி பகுதியில் ராமநத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் மனைவி மீனா(வயது 34) என்பவர் தனது வீட்டிலும், வீட்டின் அருகிலும் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்துகொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதை அடுத்து மீனாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 5 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    பங்குனி மாதம் தொடங்கி நான்காவது நாளில் பங்குனி உத்திரத் திருவிழாவான இன்று காலை முதலே கடும் பனிப்பொழிவு இருந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் அவ்வப் போது காலைப் பொழுதில் கடும் பனி மூட்டம் ஏற்படுகிறது. இந்த பனி மூட்டத்தால் சாலைகளில் கடும் பனி சூழ்ந்து சாலைகளில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மழை பொழிகிறது. இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    இந்த கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் தங்களின் முகப்பு விளக்குகளை எரிய விட்ட வண்ணம் வாகனங்களை ஓட்டிச் சென்றனர். பங்குனி மாதம் தொடங்கி நான்காவது நாளில் பங்குனி உத்திரத் திருவிழாவான இன்று காலை முதலே கடும் பனிப்பொழிவு இருந்தது.

    இந்த கடும் பனிப்பொழிவால் மோட்டார் வாகனங்களில் செல்பவர்கள் கடும் குளிரில் நடுங்கியபடி மோட்டார் வாகனங்களை ஓட்டிச் சென்றனர். கடலூர் மாவட்டத்தில் நடுவீரப்பட்டு, வான்பாக்கம், மேல் பட்டாம்பாக்கம், வெள்ளக்கரை பில்லாலிதொட்டி திருவந்திபுரம், நெல்லிகுப்பம், போன்று பெரிய கங்கனாங்குப்பம், நகர் பகுதியான கூத்தப்பாக்கம், பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், புதுப் பாளையம், மஞ்ச குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிகவும் அதிகமான கடும் பனிப் பொழிவு ஏற்பட்டது.

    கடலூர் பஸ் நிலையத்தில் நின்ற அரசு பஸ்சை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் மந்தகரையை சேர்ந்தவர் அய்யனார். அவரது மகன் அருண் (வயது 22). தனியார் நிறுவன ஊழியர்.

    இவர் கடந்த 8.8.2013 அன்று தனது நண்பர் கவுதமுடன் மோட்டார் சைக்கிளில் கடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவர்கள் அங்குள்ள பெட்ரோல் பங்க் அருகில் வந்த போது, எதிரே வந்த அரசு பஸ் அவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் ரோட்டோரம் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயமடைந்தனர். இதில் அருண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கவுதம் காயத்துடன் உயிர் தப்பினார்.

    இது பற்றி நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் இந்த விபத்தில் நஷ்ட ஈடு கேட்டு அருணின் தாய் லட்சுமி, அக்கா ஆனந்தி, தங்கை அனிதா ஆகிய 3 பேரும் மூத்த வக்கில் சிவமணி. வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜவஹர், இந்த விபத்தில் விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நஷ்டஈடாக, வட்டியுடன் சேர்த்து ரூ.24 லட்சத்து 37 ஆயிரத்து 9வழங்க உத்தரவிட்டார். ஆனால் இதுவரை அரசு போக்குவரத்து கழகம் நஷ்ட ஈடு தொகையை வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது.

    அதன்படி நேற்று கடலூர் பஸ் நிலையத்தில் நின்ற அரசு பஸ்சை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர்.

    ஸ்ரீமுஷ்ணத்தில் தீ விபத்தில் பேன்சி ஸ்டோரில் உள்ள ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமானது.

    காட்டுமன்னார்கோவில்:

    காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் கடை வீதியில் பேன்சி ஸ்டோர் ஒன்று உள்ளது. நேற்று இரவு 9 மணி அளவில் மின்கசிவு காரணமாக இந்த கடையில் தீ விபத்து ஏற்பட்டது.

    தீ மளமளவென பரவியதில் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. இதுகுறித்து ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து சுமார் 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.

    மேலும் அருகில் உள்ள கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் பேன்சி ஸ்டோரில் உள்ள ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமானது.

    இந்த தீ விபத்து குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி அருகே வரதட்சணை கேட்டு பெண் சித்ரவதை செய்த புகாரில் மாமனார், மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
    பண்ருட்டி:

    விழுப்புரம் மாவட்டம் கலிஞ்சிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீனா (வயது 21). இவருக்கும் பண்ருட்டி அருகே பில்லாலி தொட்டி கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (30) என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    திருமணம் நடந்த 2-வது மாதத்திலிருந்து அதிகமாக வரதட்சணை கேட்டு பிரவீனாவை கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்தது.

    சம்பவத்தன்று 10 பவுன் நகை, ரொக்கம் ஒரு லட்சம் வேண்டும் என்று கணவர் மிரட்டியுள்ளார். இதுகுறித்து பிரவீனா அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் பேரில் போலீ சார் ராஜசேகர், அவரது தந்தை விநாயகம் (65) தாயார் மல்லிகா ஆகியோர் மீது வழக்கு பதிந்தனர். இதில் ராஜசேகரின் தாய்- தந்தை கைதானார்கள். ராஜ சேகரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கடலூர் முதுநகரை சேர்ந்த சிறுமியை கடத்தி கட்டாய திருமணம் செய்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் முதுநகர்:

    கடலூர் முதுநகரை சேர்ந்தவர் குணசேகரன் மகன் கருணை ஜோதி (வயது 28). இவருக்கும் கடலூர் பச்சையாங்குப்பத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுமிக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் முடிவு செய்தனர். இதில் சிறுமிக்கு விருப்பமில்லை என கூறப்படுகிறது. இதனால் கருணை ஜோதி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் அந்த சிறுமியை கடத்திச் சென்று மேல்மலையனூரில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதற்கு சிறுமியின் பெற்றோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

    இதுபற்றி அறிந்த சிறுமியின் அக்காள், அவர்களை தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கருணைஜோதி மற்றும் அவரது உறவினர்கள் சிறுமியின் சகோதரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து அவர் கடலூர் துறைமுகம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் கருணை ஜோதி, குணசேகரன் (62), இவரது மனைவி நாகமணி, மகன் கருணாகரன் (38), பாலு மனைவி அன்னலட்சுமி, சிறுமியின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கருணைஜோதி, குணசேகரன் மற்றும் சிறுமியின் தாய், தந்தை ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தம்பியை அண்ணன் குத்தி கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள முத்தாண்டிகுப்பத்தை சேர்ந்தவர் தனசேகர் (வயது 34). இவர் தனியார் பால் விற்பனை நிலையத்தில் வேன் ஓட்டி வருகிறார். இவருக்கு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.

    இவரது தம்பி நீலமேகம் (32). இவருக்கு திருமணம் ஆகவில்லை. வேலை எதற்கும் செல்லாமல் பலரிடம் கடன் வாங்கி குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவார். இவருக்கு கடன் கொடுத்தவர்கள் வீட்டில் வந்து தினசரி பணத்தை திருப்பிகேட்டு தொந்தரவு கொடுப்பார்கள்.

    இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒருவரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கிய நீலமேகம் அந்த பணத்தை வைத்துக்கொண்டு குடித்துவிட்டு தினசரி வீட்டில் வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.

    நேற்று இரவு இதேபோல குடிபோதையில் வீட்டுக்கு வந்த நீலமேகம் தனது பெற்றோரிடமும், தனசேகரிடமும் தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த தனசேகர் அருகே கிடந்த கத்தியை எடுத்து நீலமேகத்தை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த நீலமேகம் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பிணமானார்.

    இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

    தம்பியை குத்திக் கொன்ற தனசேகரை கைது செய்த போலீசார் இந்த கொலை தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தம்பியை அண்ணன் குத்தி கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த என்ஜினீயர் கப்பலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்தவர் அரவிந்த்குமார் (வயது 27). மரைன் என்ஜினீயர். இவர் இந்திய அரசுக்கு சொந்தமான கப்பலில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த கப்பல் அந்தமான் பகுதிக்கு சென்று உள்ளது. எனவே யாரும் இல்லாமல் சமயத்தில் அரவிந்த்குமார் கப்பலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதனை பார்த்த மற்ற ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுபற்றி பண்ருட்டியில் உள்ள அரவிந்த்குமாரின் பெற்றோருக்கு தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் பண்ருட்டி நகர்மன்ற தலைவர் கிருஷ்ணராஜ் தலைமையில் பண்ருட்டி தாசில்தார் சிவா கார்த்திக்கேயனிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அரவிந்த்குமார் உடலை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
    விருத்தாச்சலம் அருகே தடுப்பு கட்டையில் பஸ் மோதி பயணிகள் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருத்தாச்சலம்:

    சேலத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி அரசு பஸ் ஒன்று நேற்று இரவு சென்றது. இந்த பஸ் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கட்டை மீது மோதியது. இதனால் பஸ்ஸின் முன்பகுதி பெரிதும் சேதமானது. இந்த விபத்தில் பஸ்ஸில் இருந்த கண்டக்டர் உட்பட 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.

    இதைப் பார்த்து அந்த வழியாகச் சென்ற அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து விருதாச்சலம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவலறிந்த விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயரங்கன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து நடந்த பஸ்சை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×