என் மலர்
கடலூர்
கடலூரில் தமிழ்நாடு பெட்ரோல் வணிகர் சங்க தலைவர் முரளி நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 137 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு இல்லாமல் இருந்தது. 2017-ம் ஆண்டு தினம் தோறும் விலை மாற்றம் என்ற நிலை கொண்டுவரப்பட்ட பிறகு முதல் முறையாக தற்போதுதான் 137 நாட்களுக்கு விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது பொதுமக்களையும் டீலர்களையும் மகிழ்ச்சியில் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சில்லரை வர்த்தகத்தில் விலை உயராமல் இருந்தாலும் மொத்த வியாபாரத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படும் நிலையில், அந்த விலையில் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும், இந்த 137 நாட்களில் 22 ரூபாய் அளவிற்கு டீசல் விலை உயர்ந்துள்ளது.
மொத்த வியாபாரத்தில் இந்த 22 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில் இந்த விலை உயர்வு சில்லரை வியாபாரத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரையில் எந்த வித விலை உயர்வும் இல்லாததால் தற்போது இன்று உயர்த்தப்பட்ட பெட்ரோல் டீசல் விலை என்பது படிப்படியாக தொடர்ந்து உயர வாய்ப்புள்ளது.
ஏறத்தாழ 22 ரூபாய் அளவிற்கு இந்த விலை உயர்வு கொண்டுவரப்படும் என தெரிவித்த அவர் கடுமையான விலை உயர்வை பொதுமக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளதாகவும், ஆனால் பெட்ரோலிய வணிகர்களும் பொதுமக்களும் இதனை எதிர்கொண்டே ஆகவேண்டும். பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தாலும் அந்த பெட்ரோல் டீசலுக்கு எந்த ஒரு தட்டுப்பாடும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம், தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நில அளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.
மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மொத்தம் 480 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த இம்மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டும் மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும்.
பொதுமக்களின் குறை தீர்ப்பது தான் நம்முடைய தலையாய கடமையாகும். அவ்வாறு அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பொதுமக்கள் குறை தீர்வு கூட்டத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் மூலம் நீரில் மூழ்கி உயிரிழந்த பண்ருட்டி வட்டம், மேல்குமாரமங்கலம் கிராமத்தை சோர்ந்த சந்தோஷ் அவரது குடு ம்பத்தினருக்கு ஒரு லட்ச த்திற்க்கான காசோலையினையும், நீரில் மூழ்கி உயிரிழந்த புவனகிரி வட்டம், பால்வாத்துண்ணான் கிராமத்தைச் சோர்ந்த தாரணிஷா குடும்பத்தினருக்கு ஒரு லட்சத்திற்கான காசோலையினையும் வழங்கினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) ரஞ்ஜீத் சிங், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) கற்பகம் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர்:
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கரைமேடு கிராமத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம், தலைமையில் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ந் தேதியன்று உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. நீர்வளத்தை காப்பதும் அதனை பெருக்குவதும் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் உலக தண்ணீர் தினத்தின் நோக்கமாகும்.
மேலும் ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம் வீடுதோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மார்ச் 2024-ம் ஆண்டுக்குள் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தற்போது வரை கடலூர் மாவட்டத்தில் 63 கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இவ்வாறு 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சி என முறையாக அறிவிக்கப்படவேண்டும். இவ்வறிவிப்பினை கிராம சபை மூலம் மேற்கொள்ளவேண்டும்.
ஒரு ஊராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சி என அறிவிக்கும் முன்னர் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் குடிநீர் பரிசோதனை மூலம் அதன் தரத்தினை உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தவேண்டும். மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் தனிநபர் நீர் உறிஞ்சி குழி, சமுதாய நீர் உறிஞ்சி குழி போன்ற கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கிராமத்தில் உள்ள மாணவ-மாணவிகள் கல்வி இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கவேண்டும். குறிப்பாக பெண்கல்விக்கு முக்கியத்தும் அளித்து பெற்றோர்கள் பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக கிராமத்தில் உள்ள அனைத்து பெண்களும் கல்வியில் சிறந்து விளங்க உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர் பவன்குமார் கிரியப்பனவர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயற்பொறியாளர் சந்திரமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்தி, ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகா ராதாகிருஷ்ணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சுய உதவிக்குழுவினர், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு மழை பெய்து வந்த நிலையில் தற்போது காலநிலை மாற்றத்தின் காரணமாக வெயில் அதிகமாக அடிக்கத் தொடங்கியது.
குறிப்பாக கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. மேலும் கோடைகாலத்தில் இந்த வெயிலின் தாக்கம் எப்படி இருக்குமோ? என பொதுமக்களிடையே அச்சப்பட வைக்கிறது.
கடந்த வாரத்தில் ஒரு சில மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி பதிவானது. விழுப்புரம் மாவட்டத்தில் வெயிலின் அளவு 90 டிகிரி முதல் 99 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.
கடலூரில் அதிகமான வெயில் நிலவுகிறது. குறிப்பாக மதிய வேளைகளில் வெயிலின் தாக்கம் உக்கிரமாக உள்ளது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் மற்றும் நடந்து செல்பவர்கள் இந்த வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பாதிப்படைந்துள்ளனர்.
வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் பொதுமக்கள் ஆங்காங்கே உள்ள மரத்தின் நிழல் மற்றும் வெயிலின் தாக்கம் குறைந்த இடத்தில் சிறிது நேரம் நின்று செல்கின்றனர்.
சாலைகளில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்றனர். மேலும் பொதுமக்கள் குடை பிடித்தபடியும், துணியை தலை மற்றும் முகத்தில் கட்டியபடி சென்றதை காண முடிந்தது.
சீதோசன நிலை மாற்றத்தால் இரவில் பனிப்பொழிவாலும் பகலில் வெயில் சுட்டெரித்ததாலும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் காலநிலை மாற்றத்தால் முன்பு அதிகளவு மழை பெய்து பொதுமக்கள் அனைவரும் மிகவும் பாதிப்படைந்தனர்.
தற்போது மழை மற்றும் பணியின் தாக்கம் முடிந்த நிலையில் அடுத்த கட்டமாக கோடை காலம் ஆரம்பிக்க உள்ளதால் வெயிலின் தாக்கம் பொதுமக்களிடையே மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே பலாபட்டு திடீர் குப்பத்தை சேர்ந்தவர் வீரப்பன். இவரது கூரை வீடு திடீர் தீ பற்றி எரிந்தது இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜமுனாராணி தலைமையில் தீயணைப்புவீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்துஅணைத்தனர்.
சிதம்பரம்:
கடலூர் அருகே சாமியார்பேட்டை மறவாபள்ளம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். மீனவர். இவர் பரங்கிப்பேட்டை அருகே சின்னூர் தெற்கு மீனவ கிராமம் சுமங்கலி மண்டபம் பின்புறம் தைலகாட்டில் பிணமாக கிடந்தார். அவரது உடலை பரங்கிப்பேட்டை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் குடும்ப பிரச்சினையால் கோவிந்தன் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
சேத்தியாத்தோப்பு அருகே மிராளூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராசு மகன் சிவபெருமான் (வயது 27). ஓட்டல் தொழிலாளி. இவரது மகன் வித்தீஷ் (6). சிவபெருமான் வீட்டில் இருந்து பால் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் தனது மகனை அழைத்து கொண்டு சேத்தியாத்தோப்புக்கு புறப்பட்டார். சிறிது தூரம் சென்றபோது, எதிரே விருத்தாசலத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி சென்ற வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த சிவபெருமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த வித்தீசை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், வித்தீஷ் ஏற்கனவே இறந்துவிட்டான் என தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜாராமன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தந்தை-மகன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி, திருவதிகை செட்டிப்பட்டறை காலனியை சேர்ந்தவர் பிரபு, (வயது 37). ஆட்டோ டிரைவர், இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
இவர், பண்ருட்டி கடலூர் சாலை திருவதிகை அருகே குட்டை தெரு பஸ் நிறுத்தம் அருகே நேற்று இரவு ஆட்டோ ஓட்டி சென்றார்.
அப்போது அதிவேகமாக எதிரே வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்து பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனால் பண்ருட்டி கடலூர் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். விபத்தில் பலியான பிரபு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் அருணாசலம். இவர்கள் 2 பேரும் கூலி தொழிலாளிகள்.
நேற்று தங்களது குடும்பத்தினருடன் கூலி வேலைக்கு சென்று விட்டனர். மாலை 5 மணி அளவில் மின்கசிவு காரணமாக கலியமூர்த்தி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ அருகே இருந்த அருணாசலத்தின் வீட்டிலும் பரவியது.
இந்த தீ விபத்து தொடர்பாக ஸ்ரீமுஷ்ணம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் 2 வீடுகளும் முழுமையாக எரிந்து சாம்பலாகிவிட்டது.
இந்த தீவிபத்தில் 2 வீடுகளில் இருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியதாக கூறப்படுகிறது. 2 வீடுகளிலும் வசித்து வந்த 8 பேரும் வேலைக்கு சென்று விட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மேலும் அக்கம் பக்கம் உள்ள வீடுகளில் சிமெண்டு கூரை மற்றும் தகரத்தால் கூரை அமைக்கப்பட்டிருந்ததால் அந்த வீடுகளுக்கு தீ பரவவில்லை.
திட்டக்குடி:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு, சுற்றுப்பகுதியிலிருந்து, தினமும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள், பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள நம்பிக்கை மையம், ரத்த பரிசோதனை மையம் அருகில் கழிவுந்நீர் தொட்டி நிரம்பி வழிகிறது. இதனால் அந்த பகுதியில் கடந்த 2 மாதங்களாக பகுதியில் குளம் போல் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சுகாதார சீர்கேடு அதிகரித்து வருகிறது.ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளுக்கு கழிவறை வசதி முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.
தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற அரசு ஆஸ்பத்திரி முதன்மை மருத்துவரிடம் பலமுறை எடுத்துக் கூறியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்காவிட்டால் பொது மக்களை திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






