என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு- கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் தகவல்
கடலூர்:
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கரைமேடு கிராமத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம், தலைமையில் நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22-ந் தேதியன்று உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. நீர்வளத்தை காப்பதும் அதனை பெருக்குவதும் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும் உலக தண்ணீர் தினத்தின் நோக்கமாகும்.
மேலும் ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம் வீடுதோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மார்ச் 2024-ம் ஆண்டுக்குள் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தற்போது வரை கடலூர் மாவட்டத்தில் 63 கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
இவ்வாறு 100 சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சி என முறையாக அறிவிக்கப்படவேண்டும். இவ்வறிவிப்பினை கிராம சபை மூலம் மேற்கொள்ளவேண்டும்.
ஒரு ஊராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்ட ஊராட்சி என அறிவிக்கும் முன்னர் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் குடிநீர் பரிசோதனை மூலம் அதன் தரத்தினை உறுதிப்படுத்த வேண்டும்.
இந்த கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்தவேண்டும். மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் நீர் ஆதாரத்தை பெருக்கும் வகையில் தனிநபர் நீர் உறிஞ்சி குழி, சமுதாய நீர் உறிஞ்சி குழி போன்ற கட்டமைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கிராமத்தில் உள்ள மாணவ-மாணவிகள் கல்வி இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கவேண்டும். குறிப்பாக பெண்கல்விக்கு முக்கியத்தும் அளித்து பெற்றோர்கள் பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக கிராமத்தில் உள்ள அனைத்து பெண்களும் கல்வியில் சிறந்து விளங்க உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர் பவன்குமார் கிரியப்பனவர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயற்பொறியாளர் சந்திரமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சக்தி, ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகா ராதாகிருஷ்ணன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், சுய உதவிக்குழுவினர், பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






