என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • இதுவரை 280-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டு விட்டன.
    • போலீசார் ஆங்காங்கே நின்று வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை அவினாசி ரோடு உப்பிலிபாளையத்தில் இருந்து விமானநிலையத்தை தாண்டி கோல்டுவின்ஸ் பகுதி வரையிலும் 10 கி.மீட்டர் தூரம் வரை மேம்பால பணிகள் நடந்து வருகின்றன.

    இந்த பணிக்காக மொத்தம் 304 கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் இதுவரை 280-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள தூண்கள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    இந்தநிலையில் நவஇந்தியா சிக்னல், லட்சுமிமில்ஸ், எல்.ஐ.சி., உப்பிலிபாளையம் ஆகிய சிக்னல்களில் மட்டும் மேம்பால தூண்கள் அமைக்கப்பட வேண்டியது உள்ளது.

    எனவே கோவை-அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் சிக்னல், எல்.ஐ.சி.சிக்னல், அண்ணா சிலை சிக்னல் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று இரவு முதல் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது.

    போக்குவரத்து மாற்றத்தையொட்டி கோவை அவினாசி சாலை அண்ணா சிலை சிக்னலில் இருந்த பஸ் நிறுத்தம் தெற்கு தாலுகா அலுவலகத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்புகளையும் போலீசார் ஆங்காங்கே வைத்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    போக்குவரத்து மாற்றம் காரணமாக சில இடங்களில் வாகன நெரிசலும் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.இதுகுறித்து மாநகர போலீஸ் துறையினர் கூறியதாவது:-

    அவினாசி சாலை பழைய மேம்பாலம், நஞ்சப்பா சாலை பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், ஜே.எம். பேக்கரி சிக்னலில் வலது புறம் திரும்பி இம்மானுவேல் சர்ச் சாலை வழியாக செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

    அதற்கு பதிலாக வாகனங்கள் ஜே.எம்.பேக்கரி சிக்னலில் வலதுபுறமாக திரும்பாமல் நேராக சென்று எல்.ஐ.சி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி செல்லலாம்.

    ஓசூர் சாலையில் இருந்து எல்.ஐ.சி சந்திப்பு வழியாக அவினாசி சாலைக்கு வாகனங்கள் வருவது தடை செய்யப்பட்டு, அதற்கு பதில் ரெயில் நிலையம், கோர்ட்டு வளாகம் சாலையில் இருந்து காந்திபுரம், அவினாசி சாலை செல்லும் வாகனங்கள் ஜே.எம்.பேக்கரி சிக்னல் வந்து வலதுபுறமாக திரும்பி செல்லலாம்.

    நஞ்சப்பா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஜே.எம்.பேக்கரி சிக்னலில் யுடர்ன் செய்து பழைய மேம்பாலம் செல்லலாம். ஆடீஸ் வீதியில் இருந்து அவினாசி சாலை செல்லும் வாகனங்கள் இதுபுறமாக மட்டுமே செல்ல முடியும்.

    ஜே.எம். பேக்கரி சந்திப்பு வழியாக ஆடீஸ் வீதிக்கு செல்வது தடை செய்யப்பட்டு, அதற்கு பதில் கலெக்டர் அலுவலகம், பழைய அஞ்சல் நிலைய சாலை வழியாக அவினாசி சாலை பழைய மேம்பாலத்தின் கீழ் பகுதி தடத்தில் சென்று யுடர்ன் செய்து அவினாசி சாலையை அடைந்து ஜே.எம்.பேக்கரி சிக்னலில் இடதுபுறமாக திரும்பி ஆடீஸ் வீதிக்கு செல்லலாம்.

    அல்லது ஜே.எம்.பேக்கரி சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி, அவினாசி சாலை, வ.உ.சி மைதானம் முன்பு இடதுபுறமாக திரும்பி தங்களது பயணத்தை தொடரலாம்.

    காந்திபுரத்தில் இருந்து எல்.ஐ.சி சந்திப்புக்கு வரும் வாகனங்கள் வலதுபுறம் திரும்பி அவினாசி சாலையை அடைய தடை செய்யப்படுகிறது.

    அதற்கு பதிலாக காந்திபுரத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் இடதுபுறம் திரும்பி, அவினாசி சாலை, அண்ணா சிலை சந்திப்பை அடைந்து வலதுபுறமாக திரும்பி ஓசூர் சாலை வழியாக செல்லலாம்.

    அண்ணா சிலையில் இருந்து எல்.ஐ.சி சந்திப்பு வழியாக காந்திபுரம் செல்வது தடை செய்யப்படுகிறது.

    அதற்கு பதிலாக அண்ணா சிலையில் இருந்து வலதுபுறமாக திரும்பி பாலசுந்தரம் சாலையை அடைந்து காந்திபுரத்துக்கு செல்லலாம்.

    அண்ணா சிலையில் இருந்து நேரடியாக எல்.ஐ.சி சந்திப்பு நோக்கி வாகனங்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. காந்திபுரத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், டாக்டர் பாலசுந்தரம் சாலை வழியாக அண்ணா சிலை சந்திப்பு வந்து, அவினாசி சாலையில் வலதுபு றமாக திரும்பி எல்.ஐ.சி ஜங்ஷன் நோக்கி செல்வது தடை செய்யப்படுகிறது. அதற்கு பதில் பாலசுந்தரம் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் எல்.ஐ.சி சந்திப்பில் வலதுபுறமாக திரும்பாமல் நேரடியாக ஓசூர் சாலையை அடைந்து பயணத்தை தொடரலாம்.

    செஞ்சிலுவை சங்க சாலையில் இருந்து ஓசூர் சாலையில் இருந்து ஓசூர் சாலையில் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் வரை மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் இருந்து வலதுபுறமாக திரும்பி கே.ஜி.திரையரங்கு ஜங்ஷன் வழியாக செல்லலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • 10 பேரும் சேர்ந்து சஞ்சீவியிடம் ரூ. 30 லட்சம் பணம் வேண்டும் என மிரட்டினர்.
    • சஞ்சீவி கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    கோவை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் சஞ்சீவி (வயது 42). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கியிருந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது குடும்பத்தினர் சென்னையில் வசித்து வருகின்றனர்.

    கடந்த 8-ந் தேதி சஞ்சீவி நிலம் வாங்குவதற்காக கிருஷ்ணகிரிக்கு சென்றார். பின்னர் அங்கு உள்ள ஓட்டலில் தங்கி இருந்து நிலம் வாங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார். 10-ந் தேதி சஞ்சீவி அறையில் இருந்தபோது 7 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் தங்களை கேரளா மற்றும் மதுரையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் என அறிமுகம் செய்து கொண்டனர்.

    சஞ்சீவியிடம் நீங்கள் இரிடியத்தை மறைத்து வைத்து பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய்வதாக புகார் வந்துள்ளது. இது குறித்து விசாரிக்க வேண்டும் எனக் கூறி அவரை மிரட்டினர். பின்னர் அவர்கள் விசாரணை என்ற அடிப்படையில் சஞ்சீவியை அவரது காரில் கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மிரட்டி அழைத்து சென்றனர். அங்கிருந்து அவரை கோவைக்கு கடத்தி வந்தனர். காந்திபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர்.

    அங்கு கேரளாவைச் சேர்ந்த சிபின் என்பவர் தான் கேரள போலீஸ் எனக் கூறிக் கொண்டு அங்கு வந்தார். அவருடன் கிப்சன், சமீர் முகமது ஆகியோரும் வந்திருந்தனர். இவர்கள் 10 பேரும் சேர்ந்து சஞ்சீவியிடம் ரூ. 30 லட்சம் பணம் வேண்டும் என மிரட்டினர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை ஏற்பாடு செய்து தருவதாக கூறினார்.

    பின்னர் அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டனர். மேலும் அவர் அணிந்திருந்த 16 பவுன் தங்க செயின், 10 பவுன் கைச்செயின், 4 பவுன் மோதிரம் உள்பட 30 பவுன் தங்க நகைகளை மிரட்டி பறித்தனர். பின்னர் அந்த கும்பல் சஞ்சீவியை காரில் ஏற்றி சேலம் பைபாஸ் ரோட்டில் உள்ள டோல்கேட் அருகே இறக்கிவிட்டு விட்டு ரூ.30 லட்சம் பணத்தை ஏற்பாடு செய்து விட்டு அழைக்குமாறு கூறி விட்டு சென்றனர்.

    இது குறித்து சஞ்சீவி கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து கேரளாவை சேர்ந்த சிபின், கிப்சன், சமீர் முகமது மற்றும் தஞ்சையைச் சேர்ந்த குமார் என்ற மீன் சுருட்டி குமார் (வயது 42) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 124 கிராம் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • அட்சய திருதியை நாளில் நகை வாங்கினால் அந்த ஆண்டு முழுவதும் செல்வம் அதிகரிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
    • கடந்த 2 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அட்சய திருதியை விற்பனை சிறப்பாக உள்ளது.

    கோவை:

    பல ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு அட்சயதிருதியை 2 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்றும், இன்று அட்சய திருதியை கொண்டாடப்பட்டது.

    அட்சய திருதியை நாளில் நகை வாங்கினால் அந்த ஆண்டு முழுவதும் செல்வம் அதிகரிக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இதனால் ஆண்டுதோறும் அட்சய திருதியை நாளான நேற்றும், இன்றும் கோவையில் உள்ள நகைக்கடைகளில் தங்க நகை விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

    அட்சய திருதியையொட்டி நகைக்கடைகளிலும் தள்ளுபடி விற்பனை செய்யப்பட்து. நகைக்கடைகளிலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கு அவர்கள் தங்களுக்கு பிடித்தமான நகைகளை தேர்வு செய்து, அதனை அணிந்து பார்த்து வாங்கி சென்றனர்.

    கோவை மாநகரில் நேற்று ஒரே நாளில் 60 கிலோ எடை கொண்ட ரூ.36 கோடி மதிப்பிலான தங்க நகை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு 2 நாட்கள் அட்சய திருதியை கொண்டாடப்படுவதாகவும், வியாபாரம் சிறப்பாக உள்ளதாகவும் தொழில்துறையினர் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-

    கடந்த 2 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அட்சய திருதியை விற்பனை சிறப்பாக உள்ளது. நேற்று ஒரு சவரன் ரூ.44,840க்கு விற்பனையானது.

    விலை அதிகரிப்பு காரணமாக மக்களின் வாங்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. சிறிய வகையிலான நகைகளை வாங்கவே மக்கள் ஆர்வம் காட்டினர். வளையல், பிரேஸ்லெட், தோடு, தொங்கல் உள்ளிட்ட நகைகள் தான் அதிகம் விற்பனை செய்யப்பட்டன.

    கோவை மாநகரில் நேற்று ஒரே நாளில் ரூ.36 கோடி மதிப்பிலான 60 கிலோ தங்க நகை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இன்று விற்பனை சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இதனால் இந்த ஆண்டு மொத்த விற்பனை 100 கிலோவுக்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தங்க நகை கடையில் நகை வாங்க வந்த மக்கள் கூறியதாவது:-

    அட்சய திருதியை தினத்தில் விலை அதிகரித்தாலும் தங்கம் வாங்கினால் அந்த ஆண்டு முழுவதும் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

    தங்கத்தில் முதலீடு செய்வது என்றும் பயன்தரக்கூடியது.

    தங்கம் சிறந்த முதலீடாகவே காலம் காலமாக கருதப்படுகிறது. அட்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்குவதால் தங்க நகை சேமிப்புக்கு வழிவகை செய்வதாகவே கருதுகிறோம்.

    எங்களது பொருளாதார நிலைக்கு ஏற்ப அரை கிராம், ஒரு கிராம் தங்க நகைகளை வாங்கி உள்ளோம். விலை அதிகம் என்ற போதும் பெண் குழந்தைகள் உள்ள வீட்டில் நகைகள் வாங்கித்தான் ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நோயாளியை இறக்குவதற்குள் ஆம்புலன்ஸ் திடீரென பின்னோக்கி சென்றது.
    • போலீஸ் குடியிருப்பில் இருந்த தண்ணீர் தொட்டியில் மோதி பள்ளத்தில் விழுந்தது.

    கோவை:

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே பாரளை எஸ்டேட் பகுதியில் இருந்து சிவக்குமார் என்பவரை சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அழைத்து வந்தனர். சிவக்குமாருடன் அவரது மனைவி சாந்தி, மகன் மணிகண்டன் ஆகியோரும் வந்தனர்.

    மருத்துவமனையை நெருங்கியதும் ஆம்புலன்சை நிறுத்திவிட்டு, நோயாளியை இறக்குவதற்காக டிரைவர் காளிதாஸ், பின்பக்கமாக வந்து கதவை திறந்தார். முதலில் சாந்தி, மணிகண்டன் இருவரும் இறங்கி ஆம்புலன்ஸ் அருகில் நின்றிருந்தனர்.

    நோயாளி சிவக்குமாரை இறக்குவதற்குள் ஆம்புலன்ஸ் பிரேக் பிடிக்காமல் பின்னோக்கி நகர்ந்தது. ஆம்புலன்ஸ் இடித்ததில் சாந்தி, மணிகண்டன் காயமடைந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் ஆம்புலன்ஸ், அருகில் போலீஸ் குடியிருப்பில் இருந்த தண்ணீர் தொட்டியில் மோதி பள்ளத்தில் விழுந்தது. நோயாளி சிவக்குமார் மற்றும் டிரைவர் காளிதாஸ்  மீது ஆம்புலன்ஸ் ஏறியது. இதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக சுந்தரம் லாரியை நிறுத்தி சோதனை செய்தார்.
    • லாரிக்கு அபராதமாக ரூ. 56 ஆயிரம் விதிக்கப்படும் என தெரிவித்தார்.

    சூலூர்,

    கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பிராங்கிளின் என்பவருக்கு சொந்தமான லாரியில் காவல் கிணறு பகுதியில் இருந்து கோவைக்கு செங்கல் பாரம் ஏற்றிக்கொண்டு மார்த்தாண்டத்தை சேர்ந்த பிஜு (47) என்பவர் ஓட்டி வந்தார். சூலூர் அருகே லாரி வந்தபோது சூலூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக சுந்தரம் வாகன சோதனையில் ஈடுபட்ட போது லாரியை நிறுத்தினார். அப்போது லாரியின் ஓட்டுநர் லாரியில் இருந்து தப்பி ஓடினார். லாரியின் பாரத்தை பரிசோதித்த போது லாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 18 டன் அளவு அதிக பாரம் ஏற்றி வந்தது தெரிய வந்தது. உடனே லாரியை சூலூர் போலீஸ் நிலைய வளாகத்தில் கொண்டு வந்து நிறுத்தினார். மேலும் லாரிக்கு அபராதமாக ரூ. 56 ஆயிரம் விதிக்கப்படும் என தெரிவித்தார்.  

    • அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்துள்ளது.
    • நல்ல தீர்ப்பை வழங்கிய இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அ.தி.மு.க. சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    கோவை,

    அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க தொண்டர்கள் உற்சாகம் அடைந்து இதனை கொண்டாடி வருகிறார்கள்.

    கோவை மாவட்டத்திலும் அ.தி.மு.கவினர் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி தலைமையில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

    பின்னர் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரால் உருவாக்கப்பட்டு, வழிநடத்தப்பட்டு வந்த இயக்கம் தான் அ.தி.மு.க. இந்த இயக்கம் உருவாகி 50 ஆண்டுகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

    அ.தி.மு.கவின் தொண்டர்கள், கிளை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள் என அனைவரின் ஆதரவோடும் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். தொண்டரும் தலைவர் ஆகலாம் என்பது அ.தி.மு.கவில் மட்டுமே நடக்கும். அது தற்போது நடந்துள்ளது.

    பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அதனை அங்கீகரிக்க கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

    அது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்திய இந்திய தேர்தல் ஆணையம் தற்போது அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளது. ஏற்கனவே நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கி இருந்தது.

    தற்போது ஒன்றரை கோடி தொண்டர்களின் உணர்வை மதித்து, எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்து இருப்பது எங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இந்த நல்ல தீர்ப்பை வழங்கிய இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அ.தி.மு.க. சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தே இந்த இயக்கத்திற்கு சில புல்லுருவிகள் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வந்தனர். அதனை எல்லாம் தகர்த்தெறிந்து அ.தி.மு. க.வை அவர்கள் இருவரும் சிறப்பாக வழி நடத்தினர்.

    அவர்களது மறைவுக்கு பிறகு தற்போது கூட ஒரு சில புல்லுருவிகள் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைக்கு எதிராக இடர்பாடுகளை ஏற்படுத்தி வந்தனர். இருந்தாலும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையம் ஆகியவை ஜனநாயக முறைப்படி தொண்டர்களின் ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    எடப்பாடி பழனிசாமி எங்களை போன்ற எளிய தொண்டர். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவர், 4 ஆண்டுகாலம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் வழியில் சிறப்பான ஆட்சியை நடத்தி, மக்களுக்கு நல்ல திட்டங்களையும் கொண்டு வந்தார்.

    ஆட்சி மட்டுமின்றி கட்சியையும் சிறப்பான முறையில் வழிநடத்தி வரக்கூடிய அவரை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருப்பது தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றியாக மட்டுமின்றி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் நாட்டுக்கு அளித்த சிறப்பான திட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாகவும் கருதுகிறோம்.

    இனி வரக்கூடிய தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அ.தி.மு.க. இயக்கம் பெறும். அதுமட்டுமின்றி சாதாரண கிளைசெயலாளராக இருந்து பொதுச்செயலாளராக உயர்ந்துள்ள எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
    • போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வழிதெரியாமல் போக்குவரத்து போலீசார் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    சமவெளி பகுதிகளில் தற்போது கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால் மக்கள் குளு,குளு சீசன் நிலவக்கூடிய இடங்களை தேடி சென்று வருகிறார்கள்.

    அந்த வகையில் குளு, குளு சீசன் நிலவி வரும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    நீலகிரிக்கு தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்து வந்தாலும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வந்து தான் செல்ல வேண்டும். மேட்டுப்பாளையத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு 2 சாலைகள் செல்கிறது. ஒன்று குன்னூர் வழியாகவும், மற்றொன்று கோத்தகிரி வழியாகவும் செல்கிறது.

    இந்த 2 சாலைகளையும் நீலகிரி மக்கள் மட்டுமின்றி அங்கு வரும் சுற்றுலா பயணிகளும் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் இந்த 2 சாலைகளிலும் எப்போது போக்குவரத்து அதிகமாக காணப்படும்.

    தற்போது கோடைகாலம் தொடங்கி உள்ளதால் சுற்றுலா வாகனங்கள் அதிகமாக வரும் என்பதால் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும் மாவட்ட காவல்துறை போக்குவரத்து மாற்றமும் செய்துள்ளது.

    அதன்படி கோத்தகிரியில் இருந்து கீழே வரும் வாகனங்கள், ராமசாமி நகர், ஊமைப்பாளையம், மச்சினாம்பாளையம் பகுதி வழியாக மேட்டுப்பாளையம் வந்து, பின்னர் தங்கள் பகுதிகளுக்கு செல்லாம்.

    இதேபோன்று, குன்னூர் மார்க்கமாக வரக்கூடிய வாகனங்கள் சிறுமுகை சாலையில் தென்திருப்பதி நால்ரோடு வழியாக வந்து, அந்தந்த ஊர்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆனால் மாற்றுப்பாதை சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, உள்ளூர் மக்களுக்கும் தெரிவதில்லை. இதனால் அவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.

    இந்த நிலையில் இன்று சனிக்கிழமை வாரவிடுமுறை என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் நீலகிரிக்கு செல்வதற்காக மேட்டுப்பாளையம் பகுதிக்கு வந்துள்ளனர்.

    இதனால் காலை 7 மணி முதலே மேட்டுப்பாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வழிதெரியாமல் போக்குவரத்து போலீசார் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

    போக்குவரத்து நெரிசலால் அன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் ஜடையாம்பாளையம் புதுமார்க்கெட் வரை 6 கி.மீ வரையும், மேட்டுப்பாளையம்-கோவை சாலையில் குட்டையூர் வரை 4 கி.மீ வரையும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    3 மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் நின்ற இடத்தை விட்டு நகராமல் அப்படியே நிற்பதால் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் அவதி அடைந்துள்ளனர். அவர்கள் காரை விட்டு இறங்க முடியாமல் காருக்குள்ளேயே இருக்கும் நிலை உள்ளது.

    எனவே போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வாகன ஓட்டிகளிடம் எழுந்துள்ளது. இதுதவிர மேட்டுப்பாளையம் அண்ணாஜி ராவ், ஊட்டி செல்லும் சாலைகள் மிகவும் குறுகலான சாலை. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த சாலைகளை விரிவுபடுத்த வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஈகை பெருநாளான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது.
    • ஆயிரக்கணக்கானோர் புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர்.

    கோவை,

    கோவை கரும்புக்கடை பகுதியில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் தொழுகையில் ஈடுபட்டனர்.

    ஈகை பெருநாளான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. கோவையில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதிகளான உக்கடம், கரும்புக்கடை, கோட்டை மேடு, போத்தனூர், குனியமுத்தூர், சாய்பாபா காலனி ஆகிய பகுதிகளில் ரம்ஜானை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்து ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக கோவை கரும்புக்கடையில் உள்ள இஸ்லாமிய பள்ளி மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இந்த தொழுகையில் மஸ்ஜித் ஹூதா பள்ளிவாசல் இமாம் இஸ்மாயில் இம்தாதி தொழுகை நடத்தி சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.

    இதில் ஆயிரக்கணக்கானோர் புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்றனர். இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறி கொள்கின்றனர். ஏழைகளுக்கு நல உதவிகளையும் செய்தனர்.

    இஸ்லாமியர்களில் பெரும்பான்மை பிரிவான சுன்னத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதேபோல கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்டங்களில் பல இடங்களில் இஸ்லாமியர்கள் ஒன்று கூடி ரம்ஜான் தொழுகையில் ஈடுபட்டனர்.

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் புகழ்பெற்ற ஈத்கா பள்ளிவாசல் அமைந்துள்ளது. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று இப்பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 22 பள்ளிவாசல்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெருமக்கள் இந்த சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    சிறப்பு தொழுகையினை மேட்டுப்பாளையம் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் ஹாஜி. ஹலீபுல்லா பாசில் பாகவி துவக்கி வைத்தார்.

    சிறப்பு பயான் உரையை வேலூர் அல் பாக்கியத்துல் ஷாலிகாத் பள்ளிவாசலின் பேராசிரியர் ஹாஜி.அப்துல் ஹமீது ஆற்றினார்.

    பின்னர்,தொழுகை முடிந்தவுடன் இஸ்லா மியர்கள் ஒருவரை யொருவர் ஆரத்தழுவி தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    சிறப்புத் தொழுகை யினை முன்னிட்டு ஊட்டி சாலையில் சற்று நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்த சிறப்புத்தொழுகையில் புத்தாடை அணிந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.  

    • பிரசாந்த் உத்தமன் அரசு வேலை வாங்கி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
    • சாய்பாபா காலனி போலீசார் பிரசாந்த் உத்தமன் மற்றும் அவரது மனைவி வானதி ஆகியோரை கைது செய்தனர்.

    கோவை,

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியை சேர்ந்தவர் ராஜேஸ்குமார் (வயது37). பட்டதாரி.

    இவர் மத்திய, மாநில அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு இவருடைய நண்பர் மூலம் கோவை வீரகேரளத்தை சேர்ந்த பிரசாந்த் உத்தமன் (40) என்பவரின் நட்பு ஏற்பட்டது.

    அப்போது பிரசாந்த் உத்தமன் தான் சாரணர் இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும், பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு சாரணர் குறித்த பயிற்சி அளிக்க ஆட்கள் தேவைப்படுகிறது.

    இதற்கு மத்திய அரசு மூலம் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளார். மேலும் தனக்கு உயர் அதிகாரிகள் தெரியும் என்பதால் வேலை வாங்கி கொடுப்பதாகவும் ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது.

    இதனை உன்மை என்று நம்பிய ராஜேஸ் குமார் தனக்கு அந்த வேலை வாங்கி தரும்படி தெரிவித்து உள்ளார். அதற்கு பிரசாந்த் உத்தமன் ரூ.12 லட்சம் வரை செலவாகும் என்று தெரிவித்தாக கூறப்படுகிறது.

    இதனை நம்பிய ராஜேஸ் குமார் பல்வேறு தவணைகளாக ரூ.11½ லட்சம் பணத்தை பிரசாந்த் உத்தமனிடம் வழங்கியுள்ளார்.

    இதையடுத்து பிரசாந்த் உத்தமன் அவருக்கு போலியாக பணி ஆணை வழங்கி உள்ளார். ஆரம்பத்தில் பணி ஆணையை உண்மை என்று ராஜேஸ் குமார் நம்பினார்.

    ஆனால் அதன் பின்னர் தான், தனக்கு கொடுக்கப்பட்டது போலி பணி ஆைண என்பதும், பிரசாந்த் உத்தமன் தன்னை ஏமாற்றி பணத்தை மோசடி செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து தனது பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.

    இதுகுறித்து ராஜேஸ்குமார் கோவை சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    விசாரணையில், பிரசாந்த் உத்தமன் தனது மனைவியுடன் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் பிரசாந்த் உத்தமன் மற்றும் அவரது மனைவி வானதி ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து தம்பதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த தம்பதி மீது மதுரையை சேர்ந்த அசோக்குமார் என்பவரும் ரூ.9 லட்சம் மோசடி செய்து விட்டதாக புகார் அளித்துள்ளார்.

    • ரமலான் மாதம் இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படுகிறது.
    • 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர்.

    சரவணம்பட்டி,

    ரமலான் மாதம் இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து ரமலான் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

    ரமலான் பண்டிகையையொட்டி கோவையை அடுத்த சர்க்கார் சாமகுளம் பேரூராட்சி கோவில்பாளையத்தில் உள்ள மதரஸா மஸ்ஜிதேநூர் பள்ளி வாசலில் முன்பு உள்ள சாலையில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    இதில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். புத்தாடைகள் அணிந்து தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி ரமலான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

    • தொழுகை முடிந்தவுடன் இஸ்லாமியர்கள் ஒருவரையொருவர் ஆரத்தழுவி தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
    • சிறப்புத்தொழுகையில் புத்தாடை அணிந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் புகழ்பெற்ற ஈத்கா பள்ளிவாசல் அமைந்துள்ளது. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இன்று இப்பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

    மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 22 பள்ளிவாசல்களை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெருமக்கள் இந்த சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    சிறப்பு தொழுகையினை மேட்டுப்பாளையம் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் ஹாஜி. ஹலீபுல்லா பாசில் பாகவி துவக்கி வைத்தார்.

    சிறப்பு பயான் உரையை வேலூர் அல் பாக்கியத்துல் ஷாலிகாத் பள்ளிவாசலின் பேராசிரியர் ஹாஜி.அப்துல் ஹமீது ஆற்றினார்.

    பின்னர்,தொழுகை முடிந்தவுடன் இஸ்லாமியர்கள் ஒருவரை யொருவர் ஆரத்தழுவி தங்களது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

    சிறப்புத் தொழுகையினை முன்னிட்டு ஊட்டி சாலையில் சற்று நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்த சிறப்புத்தொழுகையில் புத்தாடை அணிந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

    • இந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
    • 3 யானைகளும் ஊருக்குள் உலா வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம்-வனபத்ரகாளியம்மன் கோவில் செல்லும் சாலையில் சமயபுரம் பகுதி உள்ளது.

    இந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    சமயபுரம் பகுதி அடர் வனப்பகுதியை ஒட்டி அமைந்திருப்பதால் காட்டு யானை, மான், காட்டு மாடு உள்ளிட்ட பல்வேறு வகை வனவிலங்குகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை நாசம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.

    கடந்த பல நாட்களாகவே பாகுபலி என்று மக்களால் செல்லமாக அழைக்கப்படும் ஒற்றைக்காட்டு யானை நடமாட்டம் இந்த பகுதியில் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் இன்று அதிகாலையும் வழக்கம் போல பாகுபலி யானை சமயபுரம் ஊருக்குள் புகுந்தது. ஆனால் இதுவரை ஒற்றையாக வந்த பாகுபலி யானை தற்போது குட்டியுடன் கூடிய மேலும் 3 காட்டு யானைகளுடன் வந்தது.

    அதிகாலை வேளையில் சமயபுரம் பகுதிக்குள் உள்ள சாலைகளில் காட்டு யானைகள் சர்வசாதாரணமாக சுற்றி திரிந்தன.

    இதை பார்த்த பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    கடந்த பல நாட்களாகவே பாகுபலி யானையின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வரும் நிலையில் தற்போது குட்டியுடன் கூடிய மேலும் 3 யானைகளும் ஊருக்குள் உலா வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து வனத்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மேலும், பாகுபலி யானை இதுவரை பொதுமக்களை தாக்கியது இல்லை என்றாலும் தற்போது பாகுபலியுடன் வேறு சில யானைகளும் வருவதால் மனித - வன உயிரின மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது.

    அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்னர் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், வனத்துறையினர் இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களைத் திரட்டி அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    ×