search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை பட்டதாரி வாலிபரிடம் ரூ.11½ லட்சம் மோசடி
    X

    கோவை பட்டதாரி வாலிபரிடம் ரூ.11½ லட்சம் மோசடி

    • பிரசாந்த் உத்தமன் அரசு வேலை வாங்கி கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
    • சாய்பாபா காலனி போலீசார் பிரசாந்த் உத்தமன் மற்றும் அவரது மனைவி வானதி ஆகியோரை கைது செய்தனர்.

    கோவை,

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியை சேர்ந்தவர் ராஜேஸ்குமார் (வயது37). பட்டதாரி.

    இவர் மத்திய, மாநில அரசு வேலைக்கு முயற்சி செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு இவருடைய நண்பர் மூலம் கோவை வீரகேரளத்தை சேர்ந்த பிரசாந்த் உத்தமன் (40) என்பவரின் நட்பு ஏற்பட்டது.

    அப்போது பிரசாந்த் உத்தமன் தான் சாரணர் இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும், பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு சாரணர் குறித்த பயிற்சி அளிக்க ஆட்கள் தேவைப்படுகிறது.

    இதற்கு மத்திய அரசு மூலம் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளார். மேலும் தனக்கு உயர் அதிகாரிகள் தெரியும் என்பதால் வேலை வாங்கி கொடுப்பதாகவும் ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது.

    இதனை உன்மை என்று நம்பிய ராஜேஸ் குமார் தனக்கு அந்த வேலை வாங்கி தரும்படி தெரிவித்து உள்ளார். அதற்கு பிரசாந்த் உத்தமன் ரூ.12 லட்சம் வரை செலவாகும் என்று தெரிவித்தாக கூறப்படுகிறது.

    இதனை நம்பிய ராஜேஸ் குமார் பல்வேறு தவணைகளாக ரூ.11½ லட்சம் பணத்தை பிரசாந்த் உத்தமனிடம் வழங்கியுள்ளார்.

    இதையடுத்து பிரசாந்த் உத்தமன் அவருக்கு போலியாக பணி ஆணை வழங்கி உள்ளார். ஆரம்பத்தில் பணி ஆணையை உண்மை என்று ராஜேஸ் குமார் நம்பினார்.

    ஆனால் அதன் பின்னர் தான், தனக்கு கொடுக்கப்பட்டது போலி பணி ஆைண என்பதும், பிரசாந்த் உத்தமன் தன்னை ஏமாற்றி பணத்தை மோசடி செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து தனது பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்தார்.

    இதுகுறித்து ராஜேஸ்குமார் கோவை சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    விசாரணையில், பிரசாந்த் உத்தமன் தனது மனைவியுடன் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.இதையடுத்து போலீசார் பிரசாந்த் உத்தமன் மற்றும் அவரது மனைவி வானதி ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து தம்பதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்த தம்பதி மீது மதுரையை சேர்ந்த அசோக்குமார் என்பவரும் ரூ.9 லட்சம் மோசடி செய்து விட்டதாக புகார் அளித்துள்ளார்.

    Next Story
    ×