search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சர் ஆவார்: முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுசாமி பேட்டி
    X

    எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சர் ஆவார்: முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுசாமி பேட்டி

    • அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்துள்ளது.
    • நல்ல தீர்ப்பை வழங்கிய இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அ.தி.மு.க. சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    கோவை,

    அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க தொண்டர்கள் உற்சாகம் அடைந்து இதனை கொண்டாடி வருகிறார்கள்.

    கோவை மாவட்டத்திலும் அ.தி.மு.கவினர் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி தலைமையில் மாவட்ட தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

    பின்னர் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரால் உருவாக்கப்பட்டு, வழிநடத்தப்பட்டு வந்த இயக்கம் தான் அ.தி.மு.க. இந்த இயக்கம் உருவாகி 50 ஆண்டுகளை கடந்து சென்று கொண்டிருக்கிறது.

    அ.தி.மு.கவின் தொண்டர்கள், கிளை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள் என அனைவரின் ஆதரவோடும் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். தொண்டரும் தலைவர் ஆகலாம் என்பது அ.தி.மு.கவில் மட்டுமே நடக்கும். அது தற்போது நடந்துள்ளது.

    பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அதனை அங்கீகரிக்க கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

    அது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்திய இந்திய தேர்தல் ஆணையம் தற்போது அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்துள்ளது. ஏற்கனவே நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கி இருந்தது.

    தற்போது ஒன்றரை கோடி தொண்டர்களின் உணர்வை மதித்து, எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்து இருப்பது எங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இந்த நல்ல தீர்ப்பை வழங்கிய இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அ.தி.மு.க. சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

    எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தே இந்த இயக்கத்திற்கு சில புல்லுருவிகள் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வந்தனர். அதனை எல்லாம் தகர்த்தெறிந்து அ.தி.மு. க.வை அவர்கள் இருவரும் சிறப்பாக வழி நடத்தினர்.

    அவர்களது மறைவுக்கு பிறகு தற்போது கூட ஒரு சில புல்லுருவிகள் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைக்கு எதிராக இடர்பாடுகளை ஏற்படுத்தி வந்தனர். இருந்தாலும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையம் ஆகியவை ஜனநாயக முறைப்படி தொண்டர்களின் ஆதரவோடு தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது.

    எடப்பாடி பழனிசாமி எங்களை போன்ற எளிய தொண்டர். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருபவர், 4 ஆண்டுகாலம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் வழியில் சிறப்பான ஆட்சியை நடத்தி, மக்களுக்கு நல்ல திட்டங்களையும் கொண்டு வந்தார்.

    ஆட்சி மட்டுமின்றி கட்சியையும் சிறப்பான முறையில் வழிநடத்தி வரக்கூடிய அவரை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருப்பது தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றியாக மட்டுமின்றி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் நாட்டுக்கு அளித்த சிறப்பான திட்டங்களுக்கு கிடைத்த வெற்றியாகவும் கருதுகிறோம்.

    இனி வரக்கூடிய தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அ.தி.மு.க. இயக்கம் பெறும். அதுமட்டுமின்றி சாதாரண கிளைசெயலாளராக இருந்து பொதுச்செயலாளராக உயர்ந்துள்ள எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×