search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை-அவினாசி சாலையில் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது
    X

    கோவை-அவினாசி சாலையில் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது

    • இதுவரை 280-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டு விட்டன.
    • போலீசார் ஆங்காங்கே நின்று வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை அவினாசி ரோடு உப்பிலிபாளையத்தில் இருந்து விமானநிலையத்தை தாண்டி கோல்டுவின்ஸ் பகுதி வரையிலும் 10 கி.மீட்டர் தூரம் வரை மேம்பால பணிகள் நடந்து வருகின்றன.

    இந்த பணிக்காக மொத்தம் 304 கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் இதுவரை 280-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள தூண்கள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.

    இந்தநிலையில் நவஇந்தியா சிக்னல், லட்சுமிமில்ஸ், எல்.ஐ.சி., உப்பிலிபாளையம் ஆகிய சிக்னல்களில் மட்டும் மேம்பால தூண்கள் அமைக்கப்பட வேண்டியது உள்ளது.

    எனவே கோவை-அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் சிக்னல், எல்.ஐ.சி.சிக்னல், அண்ணா சிலை சிக்னல் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தரப்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று இரவு முதல் போக்குவரத்து மாற்றம் அமலுக்கு வந்தது.

    போக்குவரத்து மாற்றத்தையொட்டி கோவை அவினாசி சாலை அண்ணா சிலை சிக்னலில் இருந்த பஸ் நிறுத்தம் தெற்கு தாலுகா அலுவலகத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது. இதற்கான அறிவிப்புகளையும் போலீசார் ஆங்காங்கே வைத்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

    போக்குவரத்து மாற்றம் காரணமாக சில இடங்களில் வாகன நெரிசலும் ஏற்பட்டது. போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.இதுகுறித்து மாநகர போலீஸ் துறையினர் கூறியதாவது:-

    அவினாசி சாலை பழைய மேம்பாலம், நஞ்சப்பா சாலை பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள், ஜே.எம். பேக்கரி சிக்னலில் வலது புறம் திரும்பி இம்மானுவேல் சர்ச் சாலை வழியாக செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

    அதற்கு பதிலாக வாகனங்கள் ஜே.எம்.பேக்கரி சிக்னலில் வலதுபுறமாக திரும்பாமல் நேராக சென்று எல்.ஐ.சி சந்திப்பில் வலதுபுறம் திரும்பி செல்லலாம்.

    ஓசூர் சாலையில் இருந்து எல்.ஐ.சி சந்திப்பு வழியாக அவினாசி சாலைக்கு வாகனங்கள் வருவது தடை செய்யப்பட்டு, அதற்கு பதில் ரெயில் நிலையம், கோர்ட்டு வளாகம் சாலையில் இருந்து காந்திபுரம், அவினாசி சாலை செல்லும் வாகனங்கள் ஜே.எம்.பேக்கரி சிக்னல் வந்து வலதுபுறமாக திரும்பி செல்லலாம்.

    நஞ்சப்பா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் ஜே.எம்.பேக்கரி சிக்னலில் யுடர்ன் செய்து பழைய மேம்பாலம் செல்லலாம். ஆடீஸ் வீதியில் இருந்து அவினாசி சாலை செல்லும் வாகனங்கள் இதுபுறமாக மட்டுமே செல்ல முடியும்.

    ஜே.எம். பேக்கரி சந்திப்பு வழியாக ஆடீஸ் வீதிக்கு செல்வது தடை செய்யப்பட்டு, அதற்கு பதில் கலெக்டர் அலுவலகம், பழைய அஞ்சல் நிலைய சாலை வழியாக அவினாசி சாலை பழைய மேம்பாலத்தின் கீழ் பகுதி தடத்தில் சென்று யுடர்ன் செய்து அவினாசி சாலையை அடைந்து ஜே.எம்.பேக்கரி சிக்னலில் இடதுபுறமாக திரும்பி ஆடீஸ் வீதிக்கு செல்லலாம்.

    அல்லது ஜே.எம்.பேக்கரி சந்திப்பில் வலதுபுறமாக திரும்பி, அவினாசி சாலை, வ.உ.சி மைதானம் முன்பு இடதுபுறமாக திரும்பி தங்களது பயணத்தை தொடரலாம்.

    காந்திபுரத்தில் இருந்து எல்.ஐ.சி சந்திப்புக்கு வரும் வாகனங்கள் வலதுபுறம் திரும்பி அவினாசி சாலையை அடைய தடை செய்யப்படுகிறது.

    அதற்கு பதிலாக காந்திபுரத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் இடதுபுறம் திரும்பி, அவினாசி சாலை, அண்ணா சிலை சந்திப்பை அடைந்து வலதுபுறமாக திரும்பி ஓசூர் சாலை வழியாக செல்லலாம்.

    அண்ணா சிலையில் இருந்து எல்.ஐ.சி சந்திப்பு வழியாக காந்திபுரம் செல்வது தடை செய்யப்படுகிறது.

    அதற்கு பதிலாக அண்ணா சிலையில் இருந்து வலதுபுறமாக திரும்பி பாலசுந்தரம் சாலையை அடைந்து காந்திபுரத்துக்கு செல்லலாம்.

    அண்ணா சிலையில் இருந்து நேரடியாக எல்.ஐ.சி சந்திப்பு நோக்கி வாகனங்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. காந்திபுரத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், டாக்டர் பாலசுந்தரம் சாலை வழியாக அண்ணா சிலை சந்திப்பு வந்து, அவினாசி சாலையில் வலதுபு றமாக திரும்பி எல்.ஐ.சி ஜங்ஷன் நோக்கி செல்வது தடை செய்யப்படுகிறது. அதற்கு பதில் பாலசுந்தரம் சாலையில் இருந்து வரும் வாகனங்கள் எல்.ஐ.சி சந்திப்பில் வலதுபுறமாக திரும்பாமல் நேரடியாக ஓசூர் சாலையை அடைந்து பயணத்தை தொடரலாம்.

    செஞ்சிலுவை சங்க சாலையில் இருந்து ஓசூர் சாலையில் இருந்து ஓசூர் சாலையில் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையம் வரை மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும். ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் இருந்து வலதுபுறமாக திரும்பி கே.ஜி.திரையரங்கு ஜங்ஷன் வழியாக செல்லலாம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×