search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவையில் தொழில் அதிபரை காரில் கடத்திய 4 பேர் கைது- 124 கிராம் தங்க நகைகள் மீட்பு
    X

    கோவையில் தொழில் அதிபரை காரில் கடத்திய 4 பேர் கைது- 124 கிராம் தங்க நகைகள் மீட்பு

    • 10 பேரும் சேர்ந்து சஞ்சீவியிடம் ரூ. 30 லட்சம் பணம் வேண்டும் என மிரட்டினர்.
    • சஞ்சீவி கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    கோவை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் சஞ்சீவி (வயது 42). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தங்கியிருந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது குடும்பத்தினர் சென்னையில் வசித்து வருகின்றனர்.

    கடந்த 8-ந் தேதி சஞ்சீவி நிலம் வாங்குவதற்காக கிருஷ்ணகிரிக்கு சென்றார். பின்னர் அங்கு உள்ள ஓட்டலில் தங்கி இருந்து நிலம் வாங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தார். 10-ந் தேதி சஞ்சீவி அறையில் இருந்தபோது 7 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தனர். அவர்கள் தங்களை கேரளா மற்றும் மதுரையைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் என அறிமுகம் செய்து கொண்டனர்.

    சஞ்சீவியிடம் நீங்கள் இரிடியத்தை மறைத்து வைத்து பொதுமக்களை ஏமாற்றி விற்பனை செய்வதாக புகார் வந்துள்ளது. இது குறித்து விசாரிக்க வேண்டும் எனக் கூறி அவரை மிரட்டினர். பின்னர் அவர்கள் விசாரணை என்ற அடிப்படையில் சஞ்சீவியை அவரது காரில் கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மிரட்டி அழைத்து சென்றனர். அங்கிருந்து அவரை கோவைக்கு கடத்தி வந்தனர். காந்திபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கினர்.

    அங்கு கேரளாவைச் சேர்ந்த சிபின் என்பவர் தான் கேரள போலீஸ் எனக் கூறிக் கொண்டு அங்கு வந்தார். அவருடன் கிப்சன், சமீர் முகமது ஆகியோரும் வந்திருந்தனர். இவர்கள் 10 பேரும் சேர்ந்து சஞ்சீவியிடம் ரூ. 30 லட்சம் பணம் வேண்டும் என மிரட்டினர். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை ஏற்பாடு செய்து தருவதாக கூறினார்.

    பின்னர் அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டனர். மேலும் அவர் அணிந்திருந்த 16 பவுன் தங்க செயின், 10 பவுன் கைச்செயின், 4 பவுன் மோதிரம் உள்பட 30 பவுன் தங்க நகைகளை மிரட்டி பறித்தனர். பின்னர் அந்த கும்பல் சஞ்சீவியை காரில் ஏற்றி சேலம் பைபாஸ் ரோட்டில் உள்ள டோல்கேட் அருகே இறக்கிவிட்டு விட்டு ரூ.30 லட்சம் பணத்தை ஏற்பாடு செய்து விட்டு அழைக்குமாறு கூறி விட்டு சென்றனர்.

    இது குறித்து சஞ்சீவி கோவை காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதையடுத்து கேரளாவை சேர்ந்த சிபின், கிப்சன், சமீர் முகமது மற்றும் தஞ்சையைச் சேர்ந்த குமார் என்ற மீன் சுருட்டி குமார் (வயது 42) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 124 கிராம் தங்க நகைகளை போலீசார் மீட்டனர். மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×