என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • ஆனந்தகுமாருக்கு குடிபழக்கம் இருந்து வந்தது.
    • மாமியாரிடம் உங்கள் மகளை என்னுடன் சேர்ந்து வாழ அனுப்புமாறு கூறினர்.

    கோவை,

    கோவை ஆனைமலை அருகே சமத்தூரை சேர்ந்தவர் 33 வயது இளம்பெண். கூலி தொழிலாளி.

    இவருடைய இளைய மகளை அதே பகுதியை சேர்ந்த ஆனந்த குமார் (33) என்பவருக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்தார்.

    இந்த நிலையில் ஆனந்தகுமாருக்கு குடிபழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதில் கோபம் அடைந்த இவரது மனைவி 15 நாட்களுக்கு முன்பு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    சம்பவத்தன்று ஆனந்த குமார் குடிபோதையில் அவரது மனைவி வீட்டிற்கு சென்றார்.

    அங்கு ஆனந்தகு மாரின் மனைவி மற்றும் மாமியார் இருந்தனர். இதையடுத்து ஆனந்தகுமார் மாமியாரிடம் உங்கள் மகளை என்னுடன் சேர்ந்து வாழ அனுப்புங்கள் என கூறினர்.

    அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த, ஆனந்தகுமார் அவரை தகாத வார்த்தைகளால் திட்டினார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்து அவரது தலையில் தாக்கினார். மேலும் கொலை மிரட்டல் விடுத்து தப்பிவிட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த அவர் வலி தாங்க முடியாமல் கத்தினார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் காயம் அடைந்தவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதுகுறித்து அவர் கோட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற ஆனந்த குமாரை தேடி வருகின்றனர்.

    • உலகளவில் மிகுதியாக வெங்காய உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
    • மலேசியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    கோவை,

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது.

    உலகளவில் மிகுதியாக வெங்காய உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகியவை சின்ன வெங்காயம் பயிரிடும் முக்கிய மாநிலங்களாகும்.

    தமிழ்நாட்டில், திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அதிகளவு உற்பத்தி செய்யப்படுகிறது.

    சின்ன வெங்காயம் உற்பத்தியில் அதிக பங்கு உள்நாட்டு நுகர்வுக்கே பயன்படுவதால் உள்நாட்டு தேவைக்கு ஏற்ப கர்நாடகா ஆந்திரபிரதேசத்திலிருந்து சின்ன வெங்காயம் தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

    தமிழ்நாட்டில் இருந்து சின்ன வெங்காயம், மேற்கு ஆசியா, இலங்கை, பங்களதேஷ், மலேசியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்தியாவில், சின்ன வெங்காயத்தின் முக்கிய உற்பத்தியாளராக தமிழ்நாடு உள்ளது. தற்போது திருச்சி மற்றும் திண்டுக்கல் சந்தைக்கு பெரம்பலூர், தாராபுரம், பல்லடம் ஆகிய இடங்களிலிருந்தும் மற்றும் கர்நாடகாவிலிருந்தும் சின்ன வெங்காயம் வரத்து உள்ளது.

    விலை முன்னறிவிப்பு திட்டமானது, கடந்த 23 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயம் விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.

    ஆய்வுகளின் அடிப்படையில், தரமான சின்ன ெவங்காயத்தின் சராசரி பண்ணை விலை அறுவடையின் போது (மே முதல் ஜூன் வரை) கிலோ ரூ.30 முதல் ரூ.32 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் சந்தை அடிப்படையில், விற்பனை முடிவுகளை எடுக்கலாம் என பரிந்துரைக்கப்படுகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஐ.பி.எல். போன்ற விளையாட்டு போட்டிகளில் மதுபானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • ஏற்கனவே மற்ற மாநிலங்களில் விளையாட்டுப் போட்டிகளில் மதுபானங்களுக்கு அனுமதி உள்ளது.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    சர்வதேச தரத்தில் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறபோது இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களிலும் விளையாட்டு மைதானங்களில் மது அருந்த அனுமதி உள்ளது.

    சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் நடைபெற வேண்டும் என்றால் மற்ற மாநிலங்களை போல் தமிழ்நாட்டிலும் நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதால் அதற்கான அனுமதிகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையில் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் சர்வதேச நிகழ்வு, போட்டிகள் நடைபெறும் இடங்களில் மது அருந்த அனுமதி கேட்டதால் தரப்பட்டுள்ளது. ஐ.பி.எல் போட்டி நடக்கும் சேப்பாக்கம் மைதானத்திலும் மது அருந்துவதற்கான அனுமதியை வாங்கி வைத்துள்ளனர்.

    ஆனால் திருமண மண்டபங்கள் மற்றும் திருமணம் உள்ளிட்ட இதர நிகழ்ச்சிகளில் மது பரிமாற ஒருபோதும் அனுமதி அளிக்கப்பட மாட்டாது. அரசும் இதற்கு அனுமதி கொடுக்காது என்பதை நான் உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழ்நாட்டில் உச்சபட்ச மின் தேவை என்பது வரலாறு காணாத அளவிற்கு 19 ஆயிரம் மெகாவாட்டை கடந்துள்ளது.

    இருப்பினும் தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக டிசம்பர், ஜனவரி மாதங்களிலேயே அதற்கான டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டு குறைந்த விலைப்புள்ளியில், அவசர தேவைக்கு ரூபாய் 8க்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.

    இந்த டெண்டர் மூலமாக தமிழ்நாடு அரசு இந்த 3 மாதத்தில் மட்டும் 1,313 கோடி ரூபாய் சேமித்துள்ளது. அதற்கு காரணம் முதலமைச்சர் எடுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கை தான்.

    இன்னும் கூடுதலாக மின் தேவை ஏற்பட்டாலும் அதை சமாளிப்பதற்கு மின்வாரியம் தயாராக உள்ளது. எனவே தமிழ்நாட்டை பொறுத்தவரை கோடை காலத்தில் எவ்வளவு மின் தேவை ஏற்படுகிறதோ அதை முழுமையாக சமாளிக்க கூடிய வகையில் தமிழ்நாடு மின்சார வாரியம் தயாராக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேற்று காலை 10 மணிக்கு 2-ம் கால யாக பூஜை நடந்தது.
    • மகாராஜன் தலைமையில் மஞ்சுநாதன் குழுவினரின் பட்டிமன்றம் நடக்கிறது.

    கோவை,

    கோவை சுண்டாக்காமுத்தூர் ராமசெட்டியாளையத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.

    இதை முன்னிட்டு கடந்த 21-ந் தேதி காலை 8 மணியளவில் பொன்னப்பசெட்டியார் தோட்டத்தில் இருந்து தீர்த்தக்குடங்கள் ஊர்வலம், மாலை 4 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம், விமான கலசங்கள் ஊர்வலம், இரவு 7 மணிக்கு முதலாம் கால யாக பூஜை நடந்தது.

    நேற்று காலை 10 மணிக்கு 2-ம் கால யாக பூஜை, மாலை 6 மணியளவில் 3-ம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு 4-ம் கால யாக பூஜை, காலை 8 மணிக்கு திருக்குடங்கள் கோவிலை சுற்றி வலம் வருதல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து காலை 8.15 மணியளவில் கோவிலின் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    இதையடுத்து காலை 8.45 மணிக்கு மூல மூர்த்திகளுக்கு புனிதநீர் ஊற்றி நன்னீராட்டு விழா நடந்தது. கும்பாபிஷேக விழா ராமானந்த குமரகுருபர சுவாமிகள் தலைமையில் நடந்தது.

    காலை 10 மணிக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜை, 10.30 மணிக்கு மகா அன்னதானம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து மாலை 6 மணிக்கு ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற வழிபாடும், இரவு 8 மணிக்கு வீடும், நாடும் சிறக்க காரணம் ஆண்களின் உழைப்பா? பெண்களின் உழைப்பா? என்ற தலைப்பில் தேவக்கோட்டை மகாராஜன் தலைமையில் மஞ்சுநாதன் குழுவினரின் பட்டிமன்றம் நடக்கிறது. மேலும் 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது.

    விழாவில் மாநகாரட்சி துணை மேயர் வெற்றிச்செல்வன், தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, கவுன்சிலர்கள் தென்றல் முருகேசன், குனிசை செந்தில்குமார், ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை முருகன் தலைமையிலான கோவில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • போலீசார் களிமங்களம் பஸ் நிறுத்தத்தில் சோதனை செய்தனர்.
    • போலீசார் பிரசாந்திடமிருந்து இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கோவை,

    கோவை களிமங்களம் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஆலந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் களிமங்களம் பஸ் நிறுத்தத்தில் சோதனை செய்தனர்.

    அப்போது அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து ஓட முயன்றார். உடனே சுதாரித்து கொண்ட போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.

    தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிரசாந்த் (24) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் மதுக்கரை மற்றும் மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக முஸ்தப்பா (52), அபுதாகிர் (24) ஆகியோரை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் 3 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மகேஷ் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.
    • கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சரவணம்பட்டி,

    கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் மகேஷ் (வயது35).

    இவர் கோவில்பாளையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.

    சம்பவத்தன்று இரவு மகேஷ் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார்.

    நேற்று காலை வேலை முடிந்து மீண்டும் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த முத்துராஜா என்பவரும் வந்தார். மோட்டார் சைக்கிளை மகேஷ் ஓட்டினார்.

    மோட்டார் சைக்கிள் கோவை சத்தி ரோட்டில் குரும்பபாளையம் அருகே உள்ள தனியார் எடை மேடை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே கார் ஒன்று வந்தது. அந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த மகேஷ், முத்துராஜ் தூக்கி சாலையில் வீசப்பட்டனர். இதில் மகேஷ் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

    முத்துராஜ் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று காயம் அடைந்த முத்துராஜை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இறந்த மகேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நிழற்குடை மிகவும் உயரமான நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.
    • இளம் வயதினர் மட்டுமே அதில் குதித்துக் கொண்டு ஏறி உட்கார முடியும்.

    குனியமுத்தூர்.

    கோவை-பொள்ளாச்சி ரோடு சுந்தராபுரம் காந்திநகரில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து வருகிறார்கள்.

    பொள்ளாச்சி சாலையில் செல்லும் அனைத்து பஸ்களும் இந்த நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.

    இந்நிலையில் உக்கடம், காந்திபுரம் செல்லும் பயணிகள் பஸ் ஏறும் நிறுத்தத்தில் நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் உயரமான நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் யாரும் அதில் உட்கார முடியாத நிலை காணப்படுகிறது.

    இளம் வயதினர் மட்டுமே அதில் குதித்துக் கொண்டு ஏறி உட்கார முடியும். வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் வந்தால் அவர்கள் பஸ் வரும் வரை கால்கடுக்க நிற்க வேண்டிய சூழ்நிலையே காணப்படுகிறது. நிழற்குடை இருந்தும் பயனில்லாமல் இருப்பதால் பயணிகள் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

    நிழற்குடை சுற்றிலும் கற்கள் பதிக்கப்பட்ட நிலையில் அந்த பகுதி கரடு, முரடாக காட்சியளிக்கிறது. நிழற்குடையை நோக்கி வரும் வயதான பயணிகள் கல் தட்டி கீழே விழுந்து எழுந்து செல்லும் சூழ்நிலையை காணப்படுகிறது.

    அதே போன்று அதற்கு எதிர் புறம் பொள்ளாச்சி செல்லக்கூடிய பயணிகள் நிற்கும் இடத்தில் நிழற்குடை எதுவுமே கிடையாது. இதனால் வெயிலில் நின்று தான் பேருந்து ஏறக்கூடிய சூழ்நிலை உள்ளது.

    எனவே பொள்ளாச்சி ரோடு காந்தி நகரில் பஸ் ஏறக்கூடிய பயணிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • கடந்த பல நாட்களாகவே பாகுபலி என்ற ஒற்றைக்காட்டு யானை நடமாடி வருகிறது.
    • இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம்-வன பத்ரகாளியம்மன் கோவில் செல்லும் சாலையில் சமயபுரம் எனும் பகுதி உள்ளது. இப்பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இப்பகுதி அடர்வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் காட்டு யானை, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகை வனவி லங்குகள் அவ்வப்போது ஊருக்கு நுழைந்து பயிர்களை சேதம் செய்வதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் கடந்த பல நாட்களாகவே பாகுபலி என்ற ஒற்றைக்காட்டு யானை நடமாடி வருகிறது. மேலும்,பாகுபலி காட்டு யானையுடன் தற்போது வேறு சில யானைகளும் இணைந்து அதே பகுதியில் சாலையை கடக்க துவங்கியுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் அப்பகுதி மக்கள் வனத்துறையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய பாகுபலி யானை சமயபுரம் பகுதி வழியாக சாலையைக்கடந்து மற்றொருபுறம் சென்றது.

    அப்போது, யானை வருவதை கண்ட அங்கு சுற்றி திரிந்த தெருநாய் ஒன்று யானையை பார்த்து குரைக்க தொடங்கியது.

    இதனால் ஆவேசம் அடைந்த பாகுபலி யானை பிளிறிய படியே நாயை விரட்டி சென்றது.

    பின்னர் அங்கிருந்து விளை நிலங்களை நோக்கி சென்று விட்டு, மீண்டும் வனப்பகுதியை நோக்கி நடந்தது.

    தற்போது பாகுபலி யானை தன்னை பார்த்து குரைத்த நாயை துரத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    பாகுபலி யானையை கண்டதும் நாய் குரைத்ததையும், குரைத்த நாயை பார்த்த காட்டு யானை தெருநாயை விரட்டுவதையும் படத்தில் காணலாம்.

    • விழாவிற்கு சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார்.
    • சென்னி வீரம்பாளையம் கிராம பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே சிக்காரம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சென்னி வீரம்பாளையம் கிராமத்தில் உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் கிராமிய சேவை திட்டம் தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார்.

    உலக சமுதாய சேவா சங்கத்தின் கோவை மண்டல துணைத் தலைவர் வெள்ளிங்கிரி வரவேற்றார். ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ, பேராசிரியர் பாலமுருகன், ஒருங்கிணைப்பாளர் குரு ரங்கதுரை, வி.பி.எம். நந்தகுமார், ஓய்வு பெற்ற ஆசிரியர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உலக சமுதாய சேவா சங்கத்தின் கிராமிய சேவை திட்ட இயக்குனர் முருகானந்தம் திட்ட விளக்க உரையாற்றினார்.

    உலக சமுதாய சேவா சங்கத்தின் கோவை மண்டல தலைவர் பச்சையப்பன், டாக்டர் ஹரிதாஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் மயிலானந்தன் காணொளி காட்சி வாயிலாக கிராமிய சேவை திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இத்திட்டத்தின் மூலம் நோயற்ற வாழ்வு கல்வியில் மேன்மை, சுற்றுப்புற சுகாதாரம், முதியோரை பாதுகாத்தல், மகளிர் மேம்பாடு, குடும்ப அமைதி, கர்மயோக வாழ்க்கை நெறி, மனிதநேயம், மத நல்லிணக்கம், சமுதாய விழிப்புணர்வு ,தூய்மையும் பசுமையும் மிக்க ஆரோக்கியமான அமைதியான கிராமம் என இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என ஊராட்சி தலைவர் ஞானசேகரன் தெரிவித்தார் .

    சென்னி வீரம்பாளையம் கிராம பொதுமக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. காரமடை மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

    • போத்தனூர் ரெயில் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • தெற்கு ரெயில்வே சார்பில் ரெயில்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    கோவை,

    கோவை போத்தனூர் ரெயில் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அந்த வழியாக செல்லும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து தெற்கு ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை எழும்பூரிலிருந்து மங்களூருக்கு இரவு 11.15 மணிக்கு செல்லும் விரைவு ரெயில் (வண்டி எண் 16159) ஏப்ரல் 27, 29-ந் தேதிகளில் திருச்சி கோட்டை, கரூர், புகளூர், கொடுமுடி, ஈரோடு, ஊத்துக்குளி, திருப்பூர், பீளமேடு, கோவை வடக்கு, கோவை, போத்தனூர் வழியாக செல்வதற்கு பதிலாக திருச்சி, திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு வழியாக செல்லும்.

    ஜார்கண்ட் மாநிலம் ,தன்பாத்திலிருந்து கேரளத்தின் ஆலப்புழா செல்லும் விரைவு (ரெயில் வண்டி எண் 13351) ஏப்ரல் 26, 28 தேதிகளில் ஈரோடு, திருப்பூர், கோவை, வழியாக செல்வதற்கு பதிலாக சேலம், நாமக்கல், கருவூர், திண்டுக்கல், பழனி, பொள்ளாச்சி வழியாக செல்லும்.

    ஈரோடு- பாலக்காடு நகரம் இடையே இயக்கப்படும் மெமு விரைவு ரெயில் ( வண்டி எண்கள் : 06818/06819) ஏப்ரல் 28 , 30-ந் தேதிகளில் கோவையுடன் நிறுத்தப்படும். கோவையிலிருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு வழக்கம்போல ஈரோடு சென்றடையும்.

    மதுரை-கோவை இடையே இயக்கப்படும் விரைவு ரெயில் (வண்டி எண்கள் : 16721/16722) ஏப்ரல் 28, 30-ந் தேதிகளில் போத்தனூருடன் நிறுத்தப்படும். போத்தனூரிலிருந்து பிற்பகல் 2.52 மணிக்கு புறப்பட்டு வழக்கம்போல ஈரோடு சென்றடையும்.

    மதுரை-கோவை இடையே இயக்கப்படும் விரைவு ரெயில் (வண்டி எண்கள் 16721/16722) ஏப்ரல் 28, 30-ந் தேதிகளில் போத்தனூருடன் நிறுத்தப்படும். போத்தனூரிலிருந்து பிற்பகல் 2.52 மணிக்கு புறப்பட்டு வழக்கம்ேபால மதுரை சென்றடையும்.

    கண்ணூர்- கோவை இடையே இயக்கப்படும் மெமு ரெயில் விரைவு ரெயில் (வண்டி எண்கள் : 16608/16607) ஏப்ரல் 28, 30 -ந் தேதிகளில் போத்த னூருடன் நிறுத்தப்படும். கோவையிலிருந்து பிற்பகல் 2.34 மணிக்கு புறப்பட்டு வழக்கம்போல கண்ணூர் சென்றடையும்.

    கேரள மாநிலம் சொரனூர்- கோவை இடையே இயக்கப்படும் மெமு விரைவு ரெயில் (வண்டி எண்கள் 06804/06805) ஏப்ரல் 28, 30-ந் தேதிகளில் போத்தனூருடன் நிறுத்தப்படும். போத்தனூரிலிருந்து பகல் 12.05 மணிக்கு புறப்பட்டு வழக்கம்போல சொரனூர் சென்றடையும்.

    இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • வாலிபர் சிறுமியிடம் உன்னை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
    • போலீசார் வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    பொள்ளாச்சி,

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி.

    இவர் 10-ம் வகுப்பில் பாதியில் நிறுத்தி விட்டு, வீட்டில் இருந்து வந்தார். சிறுமியின் பாட்டி வீடு பொள்ளாச்சியில் உள்ளது. இதனால் சிறுமி தனது பாட்டி வீட்டிற்கு வருவார்.

    சிறுமியின் பாட்டி வீட்டின் அருகே வசந்தகுமார் (22) என்ற வாலிபர் வசித்து வந்தார். இவர் அடிக்கடி சிறுமியிடம் சென்று பேசி வந்தார்.

    அப்போது சிறுமியிடம் நான் உன்னை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதையடுத்து 2 பேரும் அடிக்கடி பேசி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிறுமி தனது பாட்டியை பார்ப்பதற்காக பொள்ளாச்சிக்கு வந்தார். அங்கு சில நாட்கள் தங்கி இருந்தார்.

    சம்பவத்தன்று சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை பார்த்த வசந்தகுமார், சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி, கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து விட்டார். தொடர்ந்து இது போன்று அவர் செய்து வந்துள்ளார்.

    மேலும் கடந்த 12-ந் தேதி சிறுமியை அழைத்து சென்று மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணமும் செய்து கொண்டார்.

    இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து பெற்றோர் அவரை உடும லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது, அவர் 7 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து டாக்டர்கள் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் ெகாடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சிறுமி தனக்கு நடந்தவற்றை போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் சிறுமியை திருமணம் செய்து, பலாத்காரம் செய்த வாலிபர் வசந்தகுமார் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    • பெண்கள் காவல்துறையில் காவலர்களாக சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
    • இப்போட்டியை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    கோவை,

    பெண்கள் காவல்துறையில் காவலர்களாக சேர்க்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவானதை முன்னிட்டு, கோவை மாநகர், தாலுகா காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படை ஆகியவற்றில் பணியாற்றி வரும் பெண் போலீசாருக்கு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

    கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாதேவி தலைமையிலான யல்லோ வாரியர்ஸ் என்ற அணியும், பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வமணி தலைமையிலான ப்ளூ பைட்டர்ஸ் என்ற அணியும் மோதியது.

    முதல் போட்டியில் டாஸ் வென்ற யல்லோ வாரியர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து நிர்ணியிக்கப்பட்ட 10 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஆடிய ப்ளூ பைட்டர்ஸ் அணி 3.3 ஓவர்களிலேயே 1 விக்கெட் இழப்பிற்கு 51 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ப்ளூ பைட்டர்ஸ் அணியை சார்ந்த தேவி 10 பந்துகளில் 3 சிக்சர், 3 ஃபோர்கள் உள்பட 33 ரன்கள் அடித்து அபாரமாக ஆடினார்.

    2-வது போட்டியில் டாஸ் வென்ற ப்ளூ பைட்டர்ஸ் அணி பவுளிங்கை தேர்வு செய்தது. யல்லோ வாரியர்ஸ் அணி நிர்ணி யிக்கப்பட்ட 8 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் சேர்த்தது. இதில் பொன்னு பேபி 29 பந்துகளில் 10 சிக்சர், 2 போர்கள் உட்பட 72 ரன்கள் அடித்து அபாரமாக ஆடினார்.

    பின்னர் ஆடிய ப்ளூ பைட்டர்ஸ் அணி 6.2 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் தேவி 22 பந்துகளில் 8 சிக்ஸர் 4 போர்கள் உட்பட 70 ரன்கள் அடித்து அபாரமாக ஆடினார். இப்போட்டியில் 2-0 என்ற கணக்கில் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வமணி தலைமையிலான ப்ளூ பைட்டர்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

    போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், வெற்றி கோப்பையை வழங்கினார். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பெண் போலீசாருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர வடக்கு சரக போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ், தலைமையிட போலீஸ் துணை கமிஷனர் சுஹாசினி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×