என் மலர்
கோயம்புத்தூர்
- வாலிபர், நான் கூப்பிட்டால் நூறு பேர் வருவார்கள் என உளறி ரகளையில் ஈடுபட்டிருந்தார்.
- போலீசார் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கல்லூரி பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
சூலூர்,
மது குடிப்பது வீட்டிற்கும், நாட்டிற்கும் கேடு என என்னதான் பாட்டிலில் வாசகம் எழுதி இருந்தாலும் அதனை கண்டு கொள்ளாமல் மது வாங்கி குடிப்பவர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.
அப்படி குடிப்பவர்களில் சிலர் போதை தலைக்கேறிய நிலையில் தான் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல், அவ்வழியாக வருவோர், போவோரிடம் ரகளையில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அந்த மாதிரியான ஒரு சம்பவம் கோவை சூலூர் பகுதியில் நடந்துள்ளது. கோவை சூலூர் போலீசார், போலீஸ் நிலையம் அருகே சம்பவத்தன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரின் மோட்டார் சைக்கிள் சாலையில் அங்குமிங்கும் சென்றபடியே வந்தது.
இதனை பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அந்த வாலிபரிடம் எதற்காக இப்படி வருகிறீர்கள் என விசாரித்தனர். அவர் போலீசாரின் கேள்விக்கு பதில் சொல்லாமல் தனது வாயில் வந்த வார்த்தைகளை எல்லாம் சொல்லி உளறி கொண்டிருந்தார். அப்போது அவர் மதுபோதையில் இருப்பதை போலீசார் அறிந்தனர்.
இதையடுத்து போலீசார் அவரது வாகனத்தை பறிமுதல் செய்து, அவரையும் சூலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.அப்போது அந்த நபர், பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரிடம் நான் யார் தெரியுமா என கேட்டதுடன், அவரை தகாத வார்த்தைகளால் திட்டியும் உள்ளார்.
இருந்த போதிலும் போலீசார் அவரிடம் மென்மையாக நடந்து கொண்டனர். உங்களது நண்பர் யாராவது இருந்தால் வந்து வாகனத்தை எடுத்து கொண்டு அவருடன் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லுங்கள் என அறிவுறுத்தினர்.ஆனால் அவர் நான் கூப்பிட்டால் நூறு பேர் வருவார்கள் என உளறி ரகளையில் ஈடுபட்டிருந்தார். உடனே போலீசார் அவரது நண்பரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.
அவர் போலீஸ் நிலையம் வந்து, நண்பரை தன்னுடன் வந்து விடுமாறு அழைத்தார்.
ஆனால் அந்த நபரோ தான் வரமாட்டேன். வண்டியை தரச்சொல். அப்படி தரவில்லை என்றால் நான் 100 பேரை கூட்டி கொண்டு வந்து வண்டியை எடுத்து செல்வேன் என கூறினார். அவரது நண்பரும் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்து கொண்டிருந்தார்.
தான் ஒரு கல்லூரி பேராசிரியர். அதனால் எனக்கு எல்லாமே தெரியும். உங்களுக்கு தெரியாதது கூட எனக்கு தெரியும் என கூறி கொண்டே இருந்தார்.
மேலும் அங்கு நின்று கொண்டிருந்தவர்களிடம் இதனை படம் எடுத்து யூடியூப்பில் போடுங்கள் எனவும் தெரிவித்து ரகளையில் ஈடுபட்டார்.
சில மணி நேரங்களுக்கு பிறகு அவர் போதை தெளிந்தார். இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 36 வயது வாலிபர் என்பதும், கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
மேலும் கல்லூரிக்கும் குடிபோதையில் சென்றதால் அவரை கல்லூரி நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியதும் தெரியவந்தது.
இவர் மீது அவரது மனைவி ஏதோ வழக்கு கொடுத்துள்ளதாகவும், அதில் ஆஜராவதற்காக வந்த போது குடிபோதையில் வந்ததாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அந்த நபருக்கு உரிய அறிவுரைகள் வழங்கி, இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து அவரது நண்பருடன் அனுப்பி வைத்தனர்.
மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக கல்லூரி பேராசிரியர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
சூலூர் போலீஸ் நிலையத்தில் கல்லூரி பேராசிரியர் ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
- வினோத் தனியார் நிறுவன மேலாளராக உள்ளார்.
- தமிழ்செல்வனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
கோவை,
கோவை வெள்ளக்கிணறு அருகே உள்ள வி.சி.வி. நகரை சேர்ந்தவர் வினோத் (வயது 36). தனியார் நிறுவன மேலாளர். சம்பவத்தன்று இரவு இவர் தனது வீட்டை பூட்டி விட்டு அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது வினோத் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து வாலிபர் ஒருவர் உள்ளே நுழைந்தார். அவர் வீட்டில் இருந்த ரூ.1000 பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் செல்ல முயன்றார். அப்போது வினோத் வீட்டிற்கு வந்தார். வாலிபர் வீட்டிற்குள் நிற்பதை பார்த்த அவர் திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை துடியலூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் நாகப்பட்டினத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி தமிழ்செல்வன் (38) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
- மத்திய அரசு பஞ்சின் மீது விதிக்கப்பட்ட 11 சதவீத இறக்குமதி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
- நேரடியாகவும், மறைமுகமாகவும், சுமார் 12 லட்சம் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.
கோவை,
சிறு, குறு, நடுத்தர நூற்பாலைகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ் சந்திரன் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பஞ்சு விலை கேண்டி (356 கிலோ) ஒன்றுக்கு ரூ.58 ஆயிரமாக உள்ளது. சுத்தமான பருத்தி, ஒரு கிலோ ரூ.194 ஆக உள்ளது. தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி சங்கத்தின் (சிட்ரா) வழிகாட்டுதலின்படி, குறைந்தபட்சம் பஞ்சிலிருந்து நூல் மாற்றத்துக்கான விலை, ஒரு கிலோவுக்கு ரூ.2 ஆக இருக்க வேண்டும். ஆனால், தற்போது பஞ்சிலிருந்து நூல் மாற்றத்துக்கு, ஒரு ரூபாய் மட்டும் தான் கிடைக்கிறது. இதனால் கிலோவுக்கு ரூ.40 வரை நஷ்டம் ஏற்படுகிறது.
சுமார் 10 ஆயிரம் கதிர்கள் கொண்ட ஆலை ஒன்றில், 2500 கிலோ நூல் தயாரிக்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. நூற்பாலைகள் பெரும் நஷ்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளதால், வங்கிக் கடன் திருப்பி செலுத்துதல், பஞ்சு கொள்முதல் பணம் செலுத்துதல், மின்சார கட்டணம், ஜி.எஸ்.டி., போன்ற செலவினங்களை செலுத்த முடியாமல், ஆலைகள் தத்தளித்து வருகின்றன. இந்த நிலை நீடித்தால் ஆலைகள் நிரந்தரமாக மூடும் அபாய நிலைக்கு தள்ளப்படும். எனவே, நாளை முதல் (ஜூலை 15) நீல் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.
தமிழகத்தில் சிறு, குறு, நடுத்தர நூற்பாலைகள் 700 உள்ளன. இங்கு உற்பத்தி நிறுத்தத்தால் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 35 லட்சம் கிலோ நூல் உற்பத்தி பாதிப்பு, ரூ.85 கோடி முதல் ரூ.100 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும். நேரடியாகவும், மறைமுகமாகவும், சுமார் 12 லட்சம் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.
எனவே, மத்திய அரசு பஞ்சின் மீது விதிக்கப்பட்ட 11 சதவீத இறக்குமதி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். உயர்த்தப்பட்ட வங்கிகளின் கடன் வட்டி விகிதங்களை உடனடியாக பழைய நிலைக்கு (7.05 சதவீதம்) குறைத்துக் கொடுக்க வேண்டும்
குறுகிய கால கடன் நிலுவைத் தொகையை மறுசீரமைத்து, மீண்டும் புதிய கடனாக வழங்கி, அதனை திருப்பிச் செலுத்த 7 ஆண்டுகள் அவகாசம் வழங்க வேண்டும். ஜவுளித்துறையின் மூலப்பொருளான பருத்தி விளைச்சலை நாட்டில் அதிகரிக்க வேண்டும். மேலும், மின் கட்டண உயர்வால் மற்ற மாநிலங்களுடன் போட்டியிட முடியாத நிலை உள்ளது.எனவே, மாநில அரசானது உயர்த்திய மின்சார கட்டணத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- இளம்பெண்ணுக்கு அந்த பகுதியை சேர்ந்த திருமணமாகாத வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
- இளம்பெண்ணின் கணவர் மதுக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை மதுக்கரை அருகே உள்ள மரப்பாலத்தை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு அந்த பகுதியை சேர்ந்த திருமணமாகாத வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
கணவர் மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் தனது கள்ளக்காதலனை வீட்டிற்கு அழைத்து அவருடன் ஜாலியாக இருந்து வந்தார். இந்த கள்ளகாதல் விவகாரம் இளம்பெண்ணின் கணவருக்கு தெரியவந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார். இதன் காரணமாக கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் பள்ளிக்கு சென்ற 5 வயது இளைய மகனை அழைத்து விட்டு வருவதாக கூறி விட்டு சென்றார். பின்னர் அவர் தனது மகனுடன் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். நீண்ட நேரம் ஆகியும் பள்ளிக்கு சென்ற மனைவி வராததால் அவரை அவரது கணவர் பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இது குறித்து இளம்பெண்ணின் கணவர் மதுக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகனுடன் கள்ளக்கா தலனுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்ணை தேடி வருகிறார்கள்.
- வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்தி சென்றார்.
- மாணவியின் பெற்றோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தனர்.
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவிக்கு ஊட்டியை சேர்ந்த 24 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்தனர்.
சம்பவத்தன்று மாணவி தனது காதலனை சந்திக்க சென்றார்.
அப்போது வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை அவரது மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றார்.
வெளியே சென்ற மகள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவரை அக்கம் பக்கத்தில் தேடினர். அப்போது அவரை வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதாக அவர்கள் கூறினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பிளஸ்-2 மாணவியை கடத்தி சென்ற வாலிபரை தேடி வருகிறார்கள்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- 10 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை முழக்கங்களையும் எழுப்பினர்.
நீலாம்பூர்:
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் விவசாயிகள் தென்னை விவசாயத்தை காக்க வலியுறுத்தியும், கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சிக்கு உரிய நடவடிக்கை எடுப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில், கோவை மாவட்டம் சூலூர், செஞ்சேரி மலை பச்சாபாளையத்திலும் விவசாயிகள், தேங்காய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணை வழங்க வேண்டும்.
விளைநிலங்களை சேதப்படுத்தும் வனவிலங்குகளிடம் இருந்து உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5-ந் தேதி போராட்டத்தை தொடங்கினர்.
ஒவ்வொரு நாளும் வித்தியாசமான போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 8-வது நாள் போராட்டத்தின் போது, விவசாயிகள், கோவை மாவட்ட விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் வேலு மந்திராச்சலம் தலைமையில் கஞ்சித் தொட்டி திறந்து கஞ்சி காய்ச்சி அதனைக் குடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
10 அம்ச கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை முழக்கங்களையும் எழுப்பினர். இதில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இன்று 9-வது நாளாக போராட்டம் நடக்கிறது.
- 2 பேரும் மதுரையில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்து கொண்டிருப்பதாக கோவை மாவட்ட போலீசாருக்கு தகவல் வந்தது.
- சூலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
சூலூர்:
ஊட்டியில் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் நடப்பதற்கு மதுரையை சேர்ந்த நந்தினி (30), அவரது சகோதரி நிரஞ்சனா (25) ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஊட்டி சென்று போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.
இதற்காக 2 பேரும் மதுரையில் இருந்து கோவைக்கு பஸ்சில் வந்து கொண்டிருப்பதாக கோவை மாவட்ட போலீசாருக்கு தகவல் வந்தது.
இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர்களை வழியிலேயே மடக்கி பிடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து, சூலூர் போலீசார் போலீஸ் நிலையம் முன்பு தடுப்புகள் அமைத்து, அந்த வழியாக வந்த அனைத்து பஸ்களையும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.
அப்போது கோவையில் இருந்து மதுரைக்கு ஒரு பஸ் வந்தது. அந்த பஸ்சில் ஏறி போலீசார் சோதனை நடத்தினர். அதில் இருந்த நந்தினி, நிரஞ்சனா ஆகியோரை பஸ்சை விட்டு பெண் போலீசார் உதவியுடன் கீழே இறக்கினர்.
தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்திற்குள் அழைத்து செல்ல முயன்றனர். அப்போது 2 பெண்கள், அங்கு பணியில் இருந்த பெண் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் ஒரு பெண் போலீசை 2 பேரும் கன்னத்தில் அறைந்துள்ளதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மேலும் சிலரை வரவழைத்து பெண்கள் 2 பேரையும் சூலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
- விமானம் சிறிது நேரத்தில் தனது ஓடுபாதையில் இருந்து மேல் நோக்கி பறக்க ஆரம்பித்தது.
- வானில் பறக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே, விமானத்தின் என்ஜின் மீது பறவை மோதியது.
கோவை:
கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் சுமார் 23 விமானங்கள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.
இதுதவிர வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகிறது. அதன்படி ஷார்ஜாவிற்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஷார்ஜாவில் இருந்து 175 பயணிகளுடன் விமானம் கோவை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்று விட்டனர்.
அதனை தொடர்ந்து கோவையில் இருந்து ஷார்ஜாவிற்கு இன்று அதிகாலை 4 மணிக்கு, விமானம் புறப்பட்டது.
இந்த விமானத்தில் 175 பயணிகள் ஷார்ஜாவுக்கு செல்ல தயாராக இருந்தனர். விமானம் சிறிது நேரத்தில் தனது ஓடுபாதையில் இருந்து மேல் நோக்கி பறக்க ஆரம்பித்தது.
வானில் பறக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே, விமானத்தின் என்ஜின் மீது பறவை மோதியது.
இதனை அறிந்து கொண்ட விமானி உடனடியாக கோவை விமான நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். பின்னர் அவர்கள் கொடுத்த அறிவுரையின்படி அந்த விமானம் மீண்டும் கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும், அதில் இருந்த பயணிகளை பத்திரமாக கீழே இறக்கினர். அவர்களில் கோவையை சேர்ந்தவர்களை வீட்டிற்கும், மற்றவர்களை ஓட்டலிலும் தங்க வைத்தனர்.
இதனை தொடர்ந்து விமான நிலைய பொறியாளர்கள் உடனடியாக விரைந்து சென்று, விமானத்தில் ஏறி ஆய்வு செய்தனர்.
விமானத்தில் தற்போது பராமரிப்பு பணிகளையும் பொறியாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். பணிகள் அனைத்தும் முடிந்த பின்னர் மீண்டும் விமானம் எப்போது கோவையில் இருந்து புறப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்படும்.
விமானி பறவை மோதியது பார்த்து உடனே தகவல் கொடுத்ததால் 175 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் பெரும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இளம்பெண்ணின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
- ரொம்ப சாரி அம்மா... மன்னித்து விடு... என குறுஞ்செய்தி அனுப்பினார்
கோவை,
கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் 24 வயது இளம்பெண். இவர் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வாலிபரு டனான காதலை கைவிடுமாறு கூறினர். ஆனால் இளம்பெண் தனது பெற்றோருக்கு தெரியாமல் காதலை தொடர்ந்து வந்தார். இந்தநிலையில் இளம்பெண்ணின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
அதன்படி பெரியநாயக்கன்பாளையம் பகுதிையச் சேர்ந்த வாலிபர் ஒருவரை மணமகனாக பார்த்து வருகிற நவம்பர் மாதம் 19-ந் தேதி திருமணம் செய்வது என பெரியோர்கள் முன்னிலையில் நிச்சயம் செய்தனர். இ னால் இளம்பெண் அதிர்ச்சி அடைந்தார். திருமணத்துக்கு முன்பு தனது காதலனுடன் சென்று விட முடிவு செய்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இதனை தொடர்ந்து பெற்றோர்கள் பிரித்து விடு வார்கள் என்ற பயத்தில் இருந்த காதலர்கள் அந்த பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு இளம்பெண் தனது தாயின் வாட்ஸ்அப் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினார்.
அதில் நானும், காதலித்த வாலிபரும் திருமணம் செய்து கொண்டோம். ரொம்ப சாரி அம்மா, மன்னித்து விடு என அனுப்பி இருந்தார். பின்னர் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. திருமணம் நிச்சயம் ஆன நிலையில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மகளை கண்டுபிடித்து தரும்படி பெண்ணின் தந்தை வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த காதலர்கள் வடவள்ளி போலீஸ் நிலையத்துக்கு மணக்கோலத்தில் வந்தனர். போலீசாரிடம் இளம்பெண் தனது கணவருடன் செல்வதாக கூறினார். இதனையடுத்து போலீசார் இளம்பெண்ணை காதலனுடன் அனுப்பி வைத்தனர்.
- மாணவி மறுக்கவே எலக்ட்ரிசீயன் கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து சென்றார்.
- மாணவியின் தாய் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள குமாரபுரத்த சேர்ந்த 15 வயது மாணவி.
இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவிக்கு பள்ளிக்கு செல்லும் போதும், திரும்பி வரும் போதும் அவரை அடிக்கடி பின் தொடர்ந்து வந்த அதே பகுதியை சேர்ந்த 23 வயது எலக்ட்ரிசீயன் காதலிக்கு மாறு தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்தார். ஆனால் மாணவி காதலிக்க மறுத்து விட்டார்.
சம்பவத்தன்று மாணவி வழக்கம் போல பள்ளிக்கு புறப்பட்டு சென்றார். அவர் பள்ளி அருகே சென்ற போது மீண்டும் அவரை பின் தொடர்ந்து வந்த எலக்ட்ரிசீயன் மீண்டும் பின் தொடர்ந்து வந்து காதலிக்குமாறு தகராறு சென்றார். மாணவி மறுக்கவே எலக்ட்ரிசீயன் கொலை மிரட்டல் விடுத்து அங்கு இருந்து சென்றார்.
இது குறித்து மாணவி தனது தாயிடம் கூறி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்த எலக்ட்ரிசீயனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 2 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பாதுகாப்பான முறையில் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- அதன்பிறகு அங்கு அமைக்கப்பட்டுள்ள மியூசியத்தை பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை,
நாளை மதியம் சந்திராயன் 3 விண்கலம் ஏவப்பட உள்ளது. இவற்றை 2 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பாதுகாப்பான முறையில் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிலும் ஆகா, தீலிபன், நந்தகிஷோர், ஆல்பர், ஜாக்ஸன், மிர்ஜான் அஸ்தியா ஆகிய 5 மாணவர்கள், ஆசிரியர் சக்திவேல், கீரணத்தம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளயில் பயிலும் சாந்தனு, ஹெப்சி, ஏஞ்சல், லத்திகா, ஸ்வீட்டி குமார் ஆகிய 5 மாணவர்கள், ஆசிரியர் ஜெபலான்ஸி டெமிலா ஆகியோர் சந்திராயன் 3 விண்கலம் ஏவப்படும் நிகழ்வைக் காண செல்கின்றனர்.
இன்று இரவு கோவையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் செல்லும் இவர்கள் சென்னையில் இருந்து வேன் மூலமாக ஸ்ரீஹரிகோட்டா சென்றடைகிறார்.
அங்கு சந்திராயன் 3 விண்கலம் ஏவப்படும் நிகழ்வை பார்வையிடும் மாணவர்கள், அதன்பிறகு அங்கு அமைக்கப்பட்டுள்ள மியூசியத்தை பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- கடந்த 2019 முதல் 2021ம் ஆண்டு வரை உள்ள கோப்புகளை காணவில்லை.
- அலுவலக வாயிலில் கூடுதலாக 4 பூட்டுகள் போடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம், காரமடை அருகில் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி உள்ளது. இங்கு மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. சிக்கதாசம்பாளையம் ஊராட்சி தலைவராக விமலா உள்ளார்.
இவர் மீது ஒருசில வழக்குகள் நிலுவையில் உள்ளதால், காசோலையில் கையெழுத்திடும் உரிமம் ரத்து செய்யப்பட்டது. எனவே அவருக்கு பதிலாக காரமடை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு ஆவணங்களில் கையெழுத்திடும் உரிமம் தரப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஊராட்சியில் அங்கீகரிக்கப்படாத மனைப்பகுதிகள் குறித்து ஆய்வு செய்ய, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தினி என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதே நிலையில் ஒருசிலர் பூட்டி கிடந்த ஊராட்சி அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை அத்துமீறி புகுந்து அங்கிருந்த மகளிர் குழு அலுவலக பணியாளர் சுரேகாவிடம் ஆவணங்களை பறித்து ஆட்டோவில் தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
சிக்கதாசம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் கடந்த 2019 முதல் 2021ம் ஆண்டு வரை உள்ள கோப்புகளை காணவில்லை எனக் கூறி, ஊராட்சித்தலைவர் விமலா அலுவலக வாயிலில் கூடுதலாக 4 பூட்டுகள் போட்டு, அதற்கு முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.






