என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவை அருகே ஊராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட்டு ஊராட்சி தலைவி போராட்டம்
- கடந்த 2019 முதல் 2021ம் ஆண்டு வரை உள்ள கோப்புகளை காணவில்லை.
- அலுவலக வாயிலில் கூடுதலாக 4 பூட்டுகள் போடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம், காரமடை அருகில் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி உள்ளது. இங்கு மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. சிக்கதாசம்பாளையம் ஊராட்சி தலைவராக விமலா உள்ளார்.
இவர் மீது ஒருசில வழக்குகள் நிலுவையில் உள்ளதால், காசோலையில் கையெழுத்திடும் உரிமம் ரத்து செய்யப்பட்டது. எனவே அவருக்கு பதிலாக காரமடை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு ஆவணங்களில் கையெழுத்திடும் உரிமம் தரப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஊராட்சியில் அங்கீகரிக்கப்படாத மனைப்பகுதிகள் குறித்து ஆய்வு செய்ய, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நந்தினி என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதே நிலையில் ஒருசிலர் பூட்டி கிடந்த ஊராட்சி அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை அத்துமீறி புகுந்து அங்கிருந்த மகளிர் குழு அலுவலக பணியாளர் சுரேகாவிடம் ஆவணங்களை பறித்து ஆட்டோவில் தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
சிக்கதாசம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் கடந்த 2019 முதல் 2021ம் ஆண்டு வரை உள்ள கோப்புகளை காணவில்லை எனக் கூறி, ஊராட்சித்தலைவர் விமலா அலுவலக வாயிலில் கூடுதலாக 4 பூட்டுகள் போட்டு, அதற்கு முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.






