என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • கோவை-கண்ணூர் விரைவு ரெயில் (எண் 16608), ஆகஸ்டு 18 முதல் பிற்பகல் 1.50 மணிக்கு புறப்பட்டு இரவு 8.50 மணிக்கு கண்ணூர் சென்றடையும்.
    • கோவை-பொள்ளாச்சி ரெயில் (எண் 06419) ஆகஸ்டு 18-ந் தேதி முதல் கோவையில் மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு, இரவு 8 மணிக்கு பொ ள்ளாச்சி சென்றடையும்.

    கோவை,

    கோவையில் இருந்து பாலக்காடு, பொள்ளாச்சி, கண்ணூர் செல்லும் ரெயில்களின் நேரம் வருகிற 18-ந் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருச்சியில் இருந்து தினமும் மாலை 6.25 மணிக்கு கோவை வந்தடைந்து இரவு 8.15 மணிக்கு பாலக்காடு சென்றடையும் திருச்சி-பாலக்காடு விரைவு ரெயில் (எண் 16843) ஆகஸ்டு 18-ந் தேதி முதல் கோவைக்கு மாலை 6.10 மணிக்கு வந்தடையும். இரவு 8.15 மணிக்கு பாலக்காடு சென்றடையும்.

    இதேபோல, தினமும் இரவு 7.55 மணிக்கு பாலக்காட்டில் இருந்து புறப்படும் பாலக்காடு-கோவை ரெயில் (எண் 06807) ஆகஸ்டு 18 முதல் பாலக்காட்டில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்படும்.

    கோவையில் இருந்து தினமும் மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு 7.45 மணிக்கு பொள்ளாச்சி சென்றடையும் கோவை-பொள்ளாச்சி ரெயில் (எண் 06419) ஆகஸ்டு 18-ந் தேதி முதல் கோவையில் மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு, இரவு 8 மணிக்கு பொ ள்ளாச்சி சென்றடையும்.

    கோவையில் இருந்து தினமும் பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு இரவு 9.20 மணிக்கு கண்ணூர் சென்றடையும் கோவை-கண்ணூர் விரைவு ரெயில் (எண் 16608), ஆகஸ்டு 18 முதல் பிற்பகல் 1.50 மணிக்கு புறப்பட்டு இரவு 8.50 மணிக்கு கண்ணூர் சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • யானை வாகனங்களை மறித்ததை பார்த்ததும் அதில் இருந்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • அரைமணி நேரத்திற்கு பிறகு யானைகள் அங்கிருந்து வனத்திற்குள் சென்றன.

    மேட்டுப்பாளையம்,

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான மேட்டுப்பாளையம் பகுதியில் காட்டு யானைகள், கரடி, சிறுத்தை, புள்ளிமான், காட்டெருமை அதிகளவில் வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இப்பகுதியில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா காடுகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாக மேட்டுப்பாளையம் வனப்பகுதி அமைந்துள்ளது.

    இந்த வனப்பகுதி வழியாக கூட்டம் கூட்டமாக யானைகள் செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் 3-வது கொண்டை ஊசி வளைவில் வாகனங்கள் வழக்கம் போல சென்று கொண்டிருந்தன.

    அப்போது 2 காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி, சாலையில் சுற்றி திரிந்தது. மேலும் அந்த வழியாக வந்த 2 சுற்றுலா வாகனங்களையும் யானைகள் வழிமறித்து நின்றன.

    யானை வாகனங்களை மறித்ததை பார்த்ததும் அதில் இருந்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். வாகனத்தையும் அப்படியே நிறுத்தி விட்டனர். அரை மணி நேரத்திற்கும் மேலாக காட்டு யானை நகரமால் அங்கேயே நின்றது.

    அரை மணி நேரத்திற்கு பிறகு யானைகள் அங்கிருந்து வனத்திற்குள் சென்றன. இதனால் மேட்டுப்பாளையம் -குன்னூர் மலைப்பாதையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • சத்யராஜின் தயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், நடிகர், நடிகைகள் உள்பட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    • நாதாம்பாள் உடலுக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் வயது முதிர்வு காரணமாக கோவையில் வசித்து வந்தார். அவருக்கு உடல்நிலை மோசமடைந்ததில் நேற்று மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 94. நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும், கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர்.

    சத்யராஜின் தயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின், நடிகர், நடிகைகள் உள்பட திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இதையடுத்து நாதாம்பாள் உடலுக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நாதாம்பாளின் உடலுக்கு இன்று மாலை இறுதி சடங்கு நடைபெறுகிறது.

    • ஷீபா ராணி தனது கணவர், மகன் மற்றும் மேலாளருடன் சேர்ந்து, ஏழை மற்றும் குடிசை வீட்டில் வசிக்கும் மக்களை குறி வைத்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
    • இதுபோன்று வேறு எங்காவது கைவரிசை காட்டியுள்ளனரா என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    கோவை:

    தேனியை சேர்ந்தவர் ஷீபாராணி(வயது43). இவரது கணவர் ராஜசேகர்(53). இவர்களுக்கு இம்மானுவேல் (24) என்ற மகன் உள்ளார்.

    இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு வந்தனர். கோவை தொண்டாமுத்தூரில் தங்கியிருந்த ஷிபாராணி, தனது கணவர் மற்றும் மகனுடன் சேர்ந்து, அந்த பகுதியில், நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தனர்.

    இந்த நிறுவனத்தின் மேலாளராக கோவையை சேர்ந்த பாபு(48) என்பவர் பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் இவர்கள், காரமடையை சேர்ந்த மருதாசலத்தை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளனர். அப்போது அவரிடம் உங்களுக்கு வெளிநாட்டு பண உதவி மூலம் புதிதாக வீடு கட்டி தருகிறோம். அதற்கு நீங்கள் குறிப்பிட்ட பணம் முன்பணமாக செலுத்த வேண்டும் என கேட்டனர்.

    அவரும் நம்பி பணத்தை கொடுத்தார். ஆனால் அதன்பின்னர் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை.

    இதையடுத்து அவர் ஷீபா ராணியின் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு யாரும் இல்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

    விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன.

    ஷீபா ராணி தனது கணவர், மகன் மற்றும் மேலாளருடன் சேர்ந்து, ஏழை மற்றும் குடிசை வீட்டில் வசிக்கும் மக்களை குறி வைத்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் குடிசை வீட்டில் வசிக்கும் மக்களை நேரில் சென்று சந்திக்கின்றனர்.

    அப்போது அவர்களிடம் உங்கள் வறுமையை போக்க தான் நாங்கள் வந்துள்ளோம். உங்களுக்கு சொந்தமாக வெளிநாட்டு உதவி மற்றும் உள்ளூர் சி.எஸ்.ஆர் நிதியுதவியுடன் ஒரு வீட்டினை கட்டி தருகிறோம்.

    இந்த வீடு கட்டுவதற்கு முன்பணமாக நீங்கள் ரூ.52 ஆயிரம் செலுத்த வேண்டும் என அவர்களிடம் கூறுகின்றனர். அவர்களும் புதிதாக வீடு கிடைக்கிறது என்ற நம்பிக்கையில் அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து விடுகின்றனர்.

    அதன்பின்னர் ஷீபா ராணி மற்றும் அவரது கூட்டாளிகள் வீடு கட்ட போகிறோம். நீங்கள் காலி செய்து விடுங்கள் என கூறிவிட்டு, வீட்டை முழுவதுமாக தரைமட்டமாக்குகின்றனர். தொடர்ந்து வீடு கட்டுவ தற்கான அஸ்திவாரத்தை போட்டு விட்டு சென்று விடுகின்றனர்.

    ஆனால் அதற்கு பிறகு அந்த வீட்டை பார்க்க வருவதே இல்லை. ஆனால் வீட்டை இடித்து விட்டு புதிதாக அஸ்திவாரம் போட்டதை நம்பி, கோவையில் காரமடை, தொண்டாமுத்தூர், குன்னத்தூர் பகுதிகளை சேர்ந்த 36 பேர் அவரிடம் ரூ.13.75 லட்சம் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் இவர்கள் இதுபோன்று பல்வேறு இடங்களில் பலரிடமும் மோட்டார் சைக்கிளுக்கு லோன் வாங்கி தருவதாகவும், வீடு கட்டி தருவதாகவும் கூறி இதுவரை ரூ.1 கோடி வரை மோசடியில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் அந்த கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில் இதில் தொடர்பு டைய ஷீபா ராணி தேனியில் பதுங்கி இருப்பதாக தகவல் வரவே அங்கு விரைந்து சென்று, அவரை கைது செய்தனர்.

    மேலும் கோவையில் பதுங்கி இருந்த நிறுவனத்தின் மேலாளர் பாபுவையும் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள ஷீபாராணியின் கணவர் ராஜசேகர், மற்றும் மகன் இம்மானுவேல் இருவரையும் தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

    கைது செய்யப்பட்ட ஷீபாராணி மற்றும் பாபுவிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர். அவர்கள் இதுபோன்று வேறு எங்காவது கைவரிசை காட்டியுள்ளனரா என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

    • வேகமாக வந்த கும்பல் தாங்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால் கவுன்சிலர் சித்ராவையும், அவரது கணவரையும் சரமாரியாக வெட்டியது.
    • ராஜா உள்ளிட்ட 5 பேரும் தப்பிச் சென்று விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டி அருகே உள்ள அவ்வையார் நகர் 2-வது வீதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 47). இவரது மனைவி சித்ரா (44). தி.மு.க.வைச் சேர்ந்த இவர் மலுமிச்சம்பட்டி பஞ்சாயத்து கவுன்சிலராக உள்ளார். இவருக்கு மோகன் (24) என்ற மகன் உள்ளார்.

    நேற்று இரவு 9.30 மணிக்கு வீட்டில் சித்ரா, கணவர் ரவிக்குமார், மகன் மோகன் ஆகியோர் இருந்தனர். அவர்கள் சாப்பிட்டு விட்டு தூங்குவதற்காக தயாராகிக் கொண்டு இருந்தனர்.

    அப்போது முகமூடி அணிந்தபடி வந்த 5 பேர் கும்பல் திடீரென வீட்டுக்குள் திபு, திபுவென புகுந்தனர். அவர்களை பார்த்து சித்ராவும், அவரது கணவரும் சத்தம் போட்டனர். நீங்கள் யார், எதற்காக வீட்டுக்குள் வருகிறீர்கள் என சத்தம் போட்டனர். அதற்குள் வேகமாக வந்த கும்பல் தாங்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால் கவுன்சிலர் சித்ராவையும், அவரது கணவரையும் சரமாரியாக வெட்டியது. இதனை தடுப்பதற்காக மகன் மோகன் ஓடி வந்தார். அவரையும் அந்த கும்பல் வெட்டியது. இதில் 3 பேருக்கும் தலை, கை, கால் என உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. இதனால் 3 பேரும் சத்தம் போட்டனர்.

    அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்களை பார்த்ததும் முகமூடி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. காயம் அடைந்து உயிருக்கு போராடிய தாய்-தந்தை, மகன் ஆகிய 3 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கவுன்சிலர் சித்ரா கடந்த 6 மாதத்துக்கு முன்பு 3.5 சென்ட் நிலம் வாங்கி இருந்தார். இந்த நிலத்தை மலுமிச்சம்பட்டி அம்பேத்கர் நகரில் பெட்டிக்கடை நடத்தி வரும் ராஜா (23) என்ற வாலிபர் புரோக்கராக செயல்பட்டு வாங்கிக் கொடுத்துள்ளார். இதற்காக புரோக்கர் ராஜாவுக்கு 2 சதவீத கமிஷன் பேசப்பட்டு இருக்கிறது. ஆனால் அந்த கமிஷனை சித்ரா கொடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் அடிக்கடி சித்ரா குடும்பத்தினரை சந்தித்து ராஜா தகராறு செய்துள்ளார்.

    இந்தநிலையில் தான் நேற்று இரவு ராஜா தனது ஆதரவாளர்கள் 4 பேரை அழைத்துக் கொண்டு முகமூடி அணிந்து சித்ரா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு சித்ரா உள்பட குடும்பத்தினரை 3 பேரையும் அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.

    ராஜா உள்ளிட்ட 5 பேரும் தப்பிச் சென்று விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். நள்ளிரவில் தி.மு.க. பெண் கவுன்சிலர் ஒருவர் முகமூடி கும்பல் வெட்டப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • நம் வாழ்க்கையில் சுறு சுறுப்பையும் தெம்பையும் கொண்டு வர வேண்டுமென்றால் விளையாட்டு தன்மையுடன் இருக்க வேண்டும்.
    • கிராமங்களில் கூட இப்போது வெறும் பணத்தை மட்டும் கணக்கு போட்டு கொண்டு இருப்பதால் மன அழுத்தம் அதிகமாகிவிட்டது.

    "நம் வாழ்க்கையில் சுறு சுறுப்பையும் தெம்பையும் கொண்டு வர வேண்டுமென்றால் விளையாட்டு தன்மையுடன் இருக்க வேண்டும். ரொம்ப சீரியஸ் ஆகிவிட்டால் வாழ்க்கை முடிந்துவிடும்" என சத்குரு கூறியுள்ளார்.

    இந்தியாவின் மிகப்பெரிய கிராமிய விளையாட்டு திருவிழாவான 15-வது 'ஈஷா கிராமோத்சவம்' நாளை மறுநாள் (ஆக.12) தொடங்க உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக சத்குரு அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவில், "நம் பாரத கலாச்சாரத்தில் வாழ்க்கையையே ஒரு விழாவை போல் கொண்டாட்டமாக வைத்து இருந்தோம். நம் தேசத்தில் 365 நாட்களும் ஏதோ ஒரு விழா நடந்து கொண்டே இருக்கும். விழா என்றால் வேலை செய்ய கூடாது; விடுமுறை எடுக்க வேண்டும், அதிகமாக சாப்பிட வேண்டும் என்பது அல்ல. எப்போது நீங்கள் எல்லா செயல்களையும் கொண்டாட்டமாக செய்கிறீர்களோ அதுவே ஒரு விழா தான்.

    நம் கிராமங்களில் உழவு செய்யும் போது, நெசவு நெய்யும் போது, சமையல் செய்யும் போது, குழந்தையுடன் விளையாடும் போது என எந்த செயல் செய்தாலும் அதில் ஒரு பாட்டும் கொண்டாட்டமும் இருக்கும். எப்போது நம் வாழ்வில் இந்த கொண்டாட்ட தன்மையை இழக்கிறோமோ அப்போது மன அழுத்தம் வரும்.

    நம் வாழ்க்கையில் சுறு சுறுப்பையும் தெம்பையும் கொண்டு வர வேண்டுமென்றால் விளையாட்டு தன்மையுடன் இருக்க வேண்டும். ரொம்ப சீரியஸ் ஆகிவிட்டால் வாழ்க்கை முடிந்துவிடும். உங்களுடைய பாட்டி சீரியஸ் ஆக இருக்கிறார் என்றால் என்ன அர்த்தம்? அவர் போவதற்கு தயாராகிவிட்டார் என்று தானே அர்த்தம். நீங்கள் அப்படி ஆக கூடாது. எப்போதும் சுறு சுறுப்பாகவும் புத்துணர்வாகவும் இருக்க வேண்டும். உங்களுக்குள் விளையாட்டு தன்மையை கொண்டு வர எங்கோ சென்று போட்டி போட வேண்டும் என்று அவசியம் இல்லை. உங்கள் வீட்டிலேயே குடும்பத்தினருடன் விளையாடி கொள்ளலாம்.

    கிராமங்களில் கூட இப்போது வெறும் பணத்தை மட்டும் கணக்கு போட்டு கொண்டு இருப்பதால் மன அழுத்தம் அதிகமாகிவிட்டது. சமூகங்களில் ஜாதி, மதம் என பல விதமான பாகுபாடுகள் வந்துவிட்டது. இதற்காக தான் ஈஷா கிராமோத்சவம் திருவிழா. 2004-ம் ஆண்டு இதை முதல் முறையாக தொடங்கினோம். இப்போது 15 வது ஈஷா கிராமோத்சவம் ஆகஸ்ட் மாதம் தொடங்கி செப்.23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 60,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் ஈடுபடுகிறார்கள். இவர்கள் எல்லாம் நன்கு தேர்ச்சி பெற்ற தடகள வீரர்கள் கிடையாது. வீட்டில் சமையல் செய்யும் பாட்டியும் அவருடைய பேரன் பேத்திகளும் ஒன்றாக சேர்ந்து ஒரு அணியாக இதில் விளையாடுகிறார்கள்.

    இதுபோன்ற ஒரு மிகப்பெரிய கிராமிய விளையாட்டு போட்டி உலகத்தில் வேறு எங்கும் இல்லை என கூறலாம். அந்தளவிற்கு மிகப் பெரிய அளவில் மிக உற்சாகமாக நடக்க உள்ளது. எனவே, இந்த ஈஷா கிராமோத்சவத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

    இப்போது நம் பாரத தேசம் பொருளாதாரத்தில் முன்னேறி கொண்டு இருக்கிறது. இந்த சூழலில் நம் வாழ்வில் விளையாட்டும் கொண்டாட்டமும் இல்லாமல் போய்விட்டால் பொருளாதாரத்தை வைத்து என்ன செய்வது?" என வீடியோவில் சத்குரு கூறியுள்ளார்.

    • கோவை மக்களின் கோரிக்கையின் பேரில் மேற்குபுறவழிச்சாலை பணி தொடங்கப்பட்டு உள்ளது.
    • அவினாசி மேம்பாலம் பணிகள் குறிப்பிட்ட காலத்தில் முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

    கோவை,

    கோவை மைல்கல் முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32 கிலோமீட்டர் தூரத்திற்கு மேற்கு புறவழிச் சாலை அமைக்கப்படுகிறது.

    சாலை அமைக்கும் பணிக்கான தொடக்க விழாவில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி அமைந்த பின்னர் கோவைக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத்துறை மூலமாக 368 கிலோமீட்டர் சாலை தூரத்தை ரூ. 770 கோடி திட்ட மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக ரூ. 284 கோடி மதிப்பில் 14 பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    கோவையில் சுற்றுவட்ட சாலை அறிவிப்பை 2007-ம்ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டார். 2009 ம் ஆண்டு திட்டம் இறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் இந்த திட்டம் தொய்வடைந்தது.

    இங்குள்ள பெரும்பான்மையான தொழிலதிபர்களை அழைத்து கூட்டம் நடத்தியபோது, மேற்கு புறவழிச்சாலை பணியை முதன்மையாக சொன்னார்கள்.

    அதன் அடிப்படையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோவை மக்களின் கோரிக்கையின் பேரில் மேற்குபுறவழிச்சாலை பணி தொடங்கப்பட்டு உள்ளது.

    இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து 3 கட்டமாக இந்த பணிகளை செய்ய இருக்கின்றோம். முதற்கட்டமாக மதுக்கரை-மாதம்பட்டி வரையிலான சாலை பணிக்கு முழுமையாக நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளதால், ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இன்று பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

    முதற்கட்ட பணிகள் நடைபெற்று இருக்கும்போதே 2ம் கட்ட பணிகளுக்கு 95 சதவீதம்நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. மூன்றாம் கட்ட பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    செம்மொழி மாநாடு கோவையில் தான் கருணாநிதி நடத்தினார். கோவைக்கு பல்வேறு அறிவிப்புகளை கொடுத்தோம். அதை அ.தி.மு.க தான் கிடப்பில் போட்டார்கள். ஆனால் தற்போது அ.தி.மு.க விட்டு சென்ற பாலப்பணிகளை முக்கியத்துவம் கொடுத்து செய்து வருகிறோம்.

    தொழில் நகரமான கோவைக்கு எந்தவித ஓர வஞ்சனமும் செய்யவில்லை. கோவையை இந்த அரசு புறக்கணிக்க வில்லை. இதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம்.

    அவினாசி மேம்பாலம் பணிகள் குறிப்பிட்ட காலத்தில் முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மெட்ரோ பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் தலைமை பொறியாளர் சந்திரசேகர், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் , மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை மேயர் வெற்றிசெல்வன், நெடுஞ்சாலைகள் துறை கோட்ட பொறியாளர் சோமசுந்தரம், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை அலகு) பாலசுப்பிரமணியன், முன்னாள் எம் எல் ஏ நா.கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோவை மாநகர ஆயுதப்படை உதவி கமிஷனர் சேகர் முன்னிலையில் நிகழ்ச்சி நடந்தது.
    • 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    கோவை,

    கோவையில் மாநகர மற்றும் மாவட்ட போலீஸ் துறை சார்பில் போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் தொடர்ச்சியாக இன்று அவிநாசி ரோடு பீளமேடு பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநகர போலீஸ் துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு வகுப்பு நடத்தப்பட்டது.

    கோவை மாநகர ஆயுதப்படை உதவி கமிஷனர் சேகர் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில், போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள், போதைப் பொருட்களை தடுப்பதற்கு அரசு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் போதை பொருள் தடுப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

    ஆயுதப்படை உதவி கமிஷனர் சேகர் உறுதிமொழியை முன்மொழிய அதனைத் தொடர்ந்து மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.இதில் 1500க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • பால் பூத்துகளிலும் அடிக்கடி பால் திருட்டு போய் வருகிறது.
    • போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு முகவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    கோவை,

    கோவை மாவட்ட ஆவின்பால் முகவர்கள் பாதுகாப்பு நலச்சங்க தலைவர் மைக்கேல்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் 708 ஆவின் பூத்துகள் உள்ளன. இதில் ஒரு சில பூத்துகள் மட்டுமே கடைகள் எடுத்து பாலை கடைக்குள் வைக்கின்றன. மற்ற முகவர்கள் சாலையின் ஓரமாக இறக்கி வைத்து வியாபாரம் செய்கின்றனர். ஆவின் பால் முகவர்கள் பொருளாதார ரீதியாக பெரிய அளவில் வாடகை கொடுத்து வியாபாரம் செய்வது என்பது மிகவும் சிரமமானது.

    ஆவின் முகவர்கள் பால் பொருட்களை வினியோகம் செய்ய இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும் போது மர்மநபர்களால் அடிக்கடி தாக்கப்பட்டு பணம், உடமை இழக்கும் சம்பவம் நடக்கிறது.

    மேலும் பால் பூத்துகளிலும் அடிக்கடி பால் திருட்டு போய் வருகிறது. எனவே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு, அங்கு சந்தேகப்படும் படியாக யார் நின்றாலும் அவர்களை விசாரித்து செல்ல வேண்டும். முகவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    புதியதாக பொறுப்பேற்று கொண்ட டி.ஐ.ஜி சரவண சுந்தருக்கு போலீசார் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

    கோவை,

    கோவை சரக டி.ஐ.ஜி யாக பணியாற்றி வந்தவர் விஜயகுமார். இவர் கடந்த மாதம் 7-ந் தேதி ரேஸ்கோர்சில் உள்ள முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    காலியாக இருந்த கோவை சரக டி.ஐ.ஜி. பணியிடத்திற்கு, திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த சரவண சுந்தர் நியமிக்கப்பட்டார். அவர் இன்று ரேஸ்கோர்சில் உள்ள அலுவலகத்தில் டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

    புதியதாக பொறுப்பேற்று கொண்ட டி.ஐ.ஜி சரவண சுந்தருக்கு போலீஸ் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

    • இந்த ஆண்டு 58-ம் ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 17-ந் தேதி தொடங்கியது.
    • அசைவ விருந்துடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சாய்பாபாகாலனி,

    கோவை தடாகம் சாலை லாலிரோடு சந்திப்பில் மிகவும் பழமை வாய்ந்த கருப்பராயன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு 58-ம் ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 17-ந் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து 30-ந் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி, 1-ந் தேதி பவுர்ணமி பூஜையும், 2-ந் தேதி கரகம் மற்றும் சாமி அழைப்பும் நடைபெற்றது.

    3-ந் தேதி கருப்ப ராயனுக்கு சிறப்பு அபிஷே கம், நவக்கி ரகஹோமமும் நடந்தது. 8-ந் தேதி கருப்பராயன் கோவில் திருவிழா நடந்தது.

    இதனையொட்டி 48 கிடாய்கள், சேவல்கள் பலியிடப்பட்டன. அதனை தொடர்ந்து மறுநாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பூஜை நடந்தது.

    விழாவில் கலந்து கொண்ட 2 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் கலந்து கொண்டனர். திருவிழாவையொட்டி அங்கு இன்ஸ்பெக்டர் சரவணகுமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    • மதுக்கரை போலீசார் நள்ளிரவு 12 மணி முதல் கோவை- வாளையாறு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
    • ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    குனியமுத்தூர்,

    கோவை வழியாக கேரளாவுக்கு ஹவாலா பணம் கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து மதுக்கரை போலீசார் நள்ளிரவு 12 மணி முதல் கோவை- வாளையாறு ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். வேலந்தாவளம் - அரிசி பாளையம் ரோட்டில் அதிகாலை 3 மணி அளவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் கொண்டு வந்த கைப்பையை சோதனை செய்தனர். சோதனையில் கைப்பையில் கட்டுகட்டாக பணம் இருப்பதை போலீசார் பார்த்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.26 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்கள் என தெரிய வந்தது. அவர்களிடம் பணம் எங்கு இருந்து வந்தது என விசாரணை நடத்தினர். அப்போது அவர் நாங்கள் தங்க நகை தொழிலாளிகளாக வேலை பார்த்து வருகிறோம்.

    தங்கத்தை நகைகளாக செய்து அதனை கோவையில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்பனை செய்து விட்டு பணத்தை கேரளாவுக்கு கொண்டு செல்வதாக கூறினர். ஆனால் அவர்களிடம் பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லை. எனவே இது ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் அவர்கள் 2 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×