என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னுரிமை அளித்து திட்டங்களை கொடுக்கிறோம் கோவையை தி.மு.க. அரசு புறக்கணிக்கவில்லை- அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
    X

    முன்னுரிமை அளித்து திட்டங்களை கொடுக்கிறோம் கோவையை தி.மு.க. அரசு புறக்கணிக்கவில்லை- அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

    • கோவை மக்களின் கோரிக்கையின் பேரில் மேற்குபுறவழிச்சாலை பணி தொடங்கப்பட்டு உள்ளது.
    • அவினாசி மேம்பாலம் பணிகள் குறிப்பிட்ட காலத்தில் முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

    கோவை,

    கோவை மைல்கல் முதல் நரசிம்மநாயக்கன்பாளையம் வரை 32 கிலோமீட்டர் தூரத்திற்கு மேற்கு புறவழிச் சாலை அமைக்கப்படுகிறது.

    சாலை அமைக்கும் பணிக்கான தொடக்க விழாவில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி அமைந்த பின்னர் கோவைக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத்துறை மூலமாக 368 கிலோமீட்டர் சாலை தூரத்தை ரூ. 770 கோடி திட்ட மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக ரூ. 284 கோடி மதிப்பில் 14 பாலப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    கோவையில் சுற்றுவட்ட சாலை அறிவிப்பை 2007-ம்ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டார். 2009 ம் ஆண்டு திட்டம் இறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் இந்த திட்டம் தொய்வடைந்தது.

    இங்குள்ள பெரும்பான்மையான தொழிலதிபர்களை அழைத்து கூட்டம் நடத்தியபோது, மேற்கு புறவழிச்சாலை பணியை முதன்மையாக சொன்னார்கள்.

    அதன் அடிப்படையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோவை மக்களின் கோரிக்கையின் பேரில் மேற்குபுறவழிச்சாலை பணி தொடங்கப்பட்டு உள்ளது.

    இதற்காக நிதி ஒதுக்கீடு செய்து 3 கட்டமாக இந்த பணிகளை செய்ய இருக்கின்றோம். முதற்கட்டமாக மதுக்கரை-மாதம்பட்டி வரையிலான சாலை பணிக்கு முழுமையாக நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளதால், ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இன்று பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

    முதற்கட்ட பணிகள் நடைபெற்று இருக்கும்போதே 2ம் கட்ட பணிகளுக்கு 95 சதவீதம்நிலம் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. மூன்றாம் கட்ட பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    செம்மொழி மாநாடு கோவையில் தான் கருணாநிதி நடத்தினார். கோவைக்கு பல்வேறு அறிவிப்புகளை கொடுத்தோம். அதை அ.தி.மு.க தான் கிடப்பில் போட்டார்கள். ஆனால் தற்போது அ.தி.மு.க விட்டு சென்ற பாலப்பணிகளை முக்கியத்துவம் கொடுத்து செய்து வருகிறோம்.

    தொழில் நகரமான கோவைக்கு எந்தவித ஓர வஞ்சனமும் செய்யவில்லை. கோவையை இந்த அரசு புறக்கணிக்க வில்லை. இதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம்.

    அவினாசி மேம்பாலம் பணிகள் குறிப்பிட்ட காலத்தில் முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. மெட்ரோ பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றது. இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் தலைமை பொறியாளர் சந்திரசேகர், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் , மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை மேயர் வெற்றிசெல்வன், நெடுஞ்சாலைகள் துறை கோட்ட பொறியாளர் சோமசுந்தரம், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை அலகு) பாலசுப்பிரமணியன், முன்னாள் எம் எல் ஏ நா.கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×