என் மலர்
கோயம்புத்தூர்
- கர்ப்பிணிகள், தாய்மார்கள், பிறந்த குழந்தைகளுக்கான காய்கறி, பழம், கீரை வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது
- ஊட்டச்சத்து மாத உறுதிமொழியுடன் கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது
கோவை,
தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊட்டச்சத்து குறித்தான விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தொடங்கி வைத்தார்.
செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அந்தந்த மாவட்டங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்படும். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊட்டச்சத்து மாதம் குறித்தான விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
இதனை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள், பிறந்த குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய காய்கறிகள் பழங்கள் கீரை வகைகள் என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் 50-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதில் ஊட்டச்சத்து மாத உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார்.
இந்தமாதம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்படுகிறது.
- தேங்காய் எண்ணை, நீரா, தென்னை சர்க்கரையை பொதுமக்கள் அதிகம் உபயோகிக்க வேண்டுகோள்
- இந்தோனேசியா, பிலிப்பைன்சில் இருந்து தேங்காய் எண்ணை, கொப்பரை இறக்குமதியை நிறுத்தவும் கோரிக்கை
பொள்ளாச்சி,
மத்திய தென்னை வளர்ச்சி வாரியம், தென்னை மகத்துவ மையம், செயல்விளக்க மற்றும் விதை உற்பத்தி பண்ணையில் உலக தென்னை தினம் கொண்டாடப்பட்டது.
நடப்பாண்டு கருப்பொருளான தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறைக்கான தென்னைத்துறையை நிலைநிறுத்துதல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் மாரியப்பன் உள்பட பலர் பங்கேற்று பேசினர்.
பொள்ளாச்சி எம்.பி.யும், மத்திய தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினருமான சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில் தென்னை சார் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆரோக்கியத்தை பராமரிக்க தேங்காய் எண்ணை, நீரா மற்றும் தென்னை சர்க்கரை உள்ளிட்ட தென்னை சார் பொருட்களை மக்கள் அதிகம் உபயோகிக்க வேண்டும்.
இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தேங்காய் எண்ணை மற்றும் கொப்பரை இறக்குமதி செய்வதை நிறுத்த மத்திய அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் மற்றும் கேரள எல்லைப் பகுதியில் இருந்து பூச்சி மற்றும் நோய் பரவுவதை தடுக்க அதிகாரிகளும், விவசாயிகளும் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.
தென்னை வளர்ச்சி வாரிய மேலாளர் ரகோத்து மன், மத்திய தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் தென்னை வளர்ச்சி மற்றும் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினார். மேலும் இளநீர், தேங்காய் மற்றும் தென்னை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை அன்றாடம் வாழ்வில் நாம் பயன்படுத்துவோம் என கேட்டுக் கொண்டார்.
வேளாண்மை பல்க லைக்கழக பேராசிரியர் ராஜமாணிக்கம் பேசுகையில் தென்னையில் இருந்து 50 வகையான மதிப்பு கூட்டப்பட்ட சத்தான உணவு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள், புரதம், ஆக்சிஜனேற்றிகள் என ஏராளமான நன்மைகள் உள்ளன.
தென்னை சாகுபடியின் உலகளாவிய சூழல், தேங்காய் உற்பத்தி, ஊட்டச்சத்து அம்சங்கள் மற்றும் தொழில்துறை முக்கியத்துவம், தேங்காய் சார் பொருட்கள் குறித்து அனைவரும் அறிய வேண்டும் என்றார்.
- மேலாளர் மனைவியின் வங்கி கணக்கில் பணம் செலுத்திய 3 ஊழியர்கள்
- சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கோவை,
கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் குமார் (வயது46). இவர் திருச்சி ரோடு அய்யர் லே-அவுட் அருகே கிரைண்டர் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார்.
இங்கு கோவையை சேர்ந்த சக்திவேல் என்பவர் மேலாளராகவும், ரம்யா, ஜெயக்குமார், சுப்புலட்சுமி ஆகியோர் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூல் செய்யும் பணியை மேற்கொண்டு வந்தனர்.
இந்தநிலையில், இவர்கள் 4 பேரும் சேர்ந்து வாடிக்கையாளர்களிடம் வாங்கும் பணத்தை நிறுவன கணக்கில் கட்டாமல், மேலாளர் சக்திவேல் மனைவி அகிலாண்டேஸ்வரியின் வங்கி கணக்கில் செலுத்தினர்.
மொத்தம் அவர்கள் 5 பேரும் ரூ. 25 லட்சம் மோசடி செய்ததாக தெரியவந்தது. உரிமையாளர் குமார் அவர்களிடம் பணம் கேட்டு போது அவர்கள் பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
இது குறித்து குமார் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் நம் பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவின் கீழ் நிறுவன மேலாளர் சக்திவேல், அவரது மனைவி அகி லாண்டேஸ்வரி, ஊழியர்கள் ரம்யா, ஜெயக்குமார், சுப்புலட்சுமி ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், குமாரின் தந்தை முத்துசாமி நடத்தி வரும் கிரைண்டர் கம்பெனி யிலும் ரூ. 50 லட்சம் மோசடி செய்ததாக ஏற்கனவே 4 ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
- சூலூர் சரகத்தில் மட்டும் 2 பேர் வாகனம் மோதி உயிரிழப்பு
- மோட்டார் சைக்கிளில் சென்ற காளிமுத்து கார் மோதி சாவு
கோவை,
சூலூர் அருகே உள்ள பட்டணத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (60). சம்பவத்தன்று இவர் தனது மனைவியுடன் மொபட்டில் கொச்சி- சேலம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து ெமாபட் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி இருவரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்கள் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே சாமிநாதன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிங்காநல்லூரை சேர்ந்தவர் ஜெயராம் (24). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் சேலம்- கொச்சிரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த ஜெயராம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவில்பாளையம் அருகே உள்ள எஸ்.எஸ். குளத்தை சேர்ந்தவர் காளிமுத்து (41). சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் துடியலூர்- கோவில்பாளையம் ரோட்டில் சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த காளிமுத்துவை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் வரும் வழியிலேயே காளிமுத்து பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மகனுடன் பைக்கில் சென்றபோது நிலைதடுமாறி விழுந்து உயிரிழப்பு
- வேகத்தடுப்புகளில் வர்ணம் பூசி ரிப்ளைக்டர் லைட் அமைக்க வாகனஓட்டிகள் கோரிக்கை
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே உள்ள ராமேகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (61). இவரது மனைவி சீதாமணி (52). இவர்களது மகன் சரண் (26).
இவர் தனது மோட்டார்சைக்கிளில் நேற்று தாயார் சீதாமணியுடன் வெள்ளியங்காடுக்கு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
மோட்டார்சைக்கிள் கணுவாய்ப்பாளையம் அருகே உள்ள விநாயகா வித்யாலயா பள்ளியின் அருகே வந்தபோது சாலையில் இருந்த வேகத்தடை முன்பு தெரியாமல் ஏறி இறங்கும்போது மோட்டார்சைக்கிளில் இருந்து சீதாமணி தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த சீதாமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சீதாமணியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இப்பள்ளியின் முன்பு உள்ள சாலையில் ஏற்படுத்தி உள்ள வேகத்தடையில் நெடுஞ்சாலைத்துறையினர் சார்பில் வேகத்தடை இருப்பதற்கான ரிப்ளக்டர் லைட் மற்றும் வெள்ளை கோடுகளில் வர்ணம் பூசாமல் வைத்திருந்துள்ளனர். இதனால் இந்த வேகத்தடை களை கடக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள், தங்களது கட்டுப்பாட்டை மீறி ஏறி இறங்கி கீழே விழுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
எனவே சாலைப் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஏற்படுத்தியுள்ள வேகத்தடுப்புகளில் வர்ணம் பூசி ரிப்ளைக்டர் லைட் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- ரூ.25 கோடி மின்கட்டண பாக்கியை 6 தவணைகளில் செலுத்த முடிவு
- சோமனூர் காந்தி நினைவிடம் அமைப்பது என்று தீர்மானம்
கருமத்தம்பட்டி,
கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி சங்க செயற்குழு கூட்டம், சோமனூர் அடுத்த கோம்பக்காடு புதூர் சிவசக்தி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
தலைவர் குமாரசாமி தலைமை தாங்கினார். செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் பூபதி, துணைத் தலைவர் ஈஸ்வரன், துணை செயலாளர்கள் வேலுச்சாமி, சதீஷ்குமார் வெற்றிவேல் உள்பட நிர்வாகிகள்கலந்து கொண்டனர்.
சோமனூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 2500 விசைத்தறி யாளர்கள்கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்தாண்டு ஏப்ரல் மாதம் வரையில் ரூ.25 கோடிக்கு மின்கட்டண பாக்கி வைத்து உள்ளனர்.
இதனை அரசாங்கம் ஏற்கெனவே அறிவுறுத்தியபடி 6 தவணையாக செலுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் சோமனூரில் ஜவுளி சந்தை, சோலார் மின்சாரம் மற்றும் தறிகளை நவீனப்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை மத்திய-மாநில அரசுக ளுக்கு அனுப்பி வைப்பது, சோமனூர் காந்தி என்று அழைக்கப்படும் பழனிச்சாமி முதலாம் ஆண்டு நினைவு தினத்திற் குள் நினைவிடம் அமைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
- இரவு நேரங்களில் ஆலையின் உடைந்த சுவர் வழியாக வெளியேறி ஊருக்குள் புக முயற்சி
- வனத்துறையினர் நீண்டநேரம் போராடி யானையை காட்டிற்குள் விரட்டினர்
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனச்சரக பவானி நீர்தேக்க பகுதியில் அமைந்துள்ளது. மேலும் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக காடுகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ள சிறுமுகை வனச்சரகம் உள்ளது.
இங்கு காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகம். வலசை காலங்களில் நூற்றுக்கணக்கான யானைகள் இவ்வழியே இடம் பெயர்வது வழக்கம்.
இப்படி இடம் மாறும் யானைகளில் சில உணவும், நீரும் ஓரிடத்தில் கிடைத்தால் அங்கேயே சில காலம் தங்கி விடுவதும் உண்டு. இவை காட்டு யானைகளுக்கே உண்டான இயல்பிற்கு மாறாக இயற்கையான வன தீவனங்களை தவிர்த்து விட்டு விவசாய பயிர்களை உண்டு பழகி விட்ட கிராப் ரைடர்ஸ் வகை யானைகள் என வனத்துறையினர் அழைக்கின்றனர்.
இந்த வகையில் சிறுமுகை பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் இயங்கி வந்த பழைய விஸ்கோஸ் ஆலையில் 10-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. அடர்ந்த காட்டை ஒட்டி பவானி ஆற்றங்கரையோரம் இயங்கி வந்த இந்த ஆலை பல்வேறு காரணங்களினால் மூடப்பட்டு பல ஆண்டுகளாகி விட்ட நிலையில் புதர்மண்டி ஆள் நடமாட்டம் இல்லாத ஆலை வளாகத்தினுள் யானைகள் புகுந்து விடுகின்றன.
இவை பகல் நேரங்களில் ஆலைக்குள் ஓய்வெடுத்து விட்டு இரவு நேரங்களில் ஆலையின் உடைத்து சுவற்றின் வழியே வெளியேறி அருகில் கிடைக்கும் உணவுகளை உட்கொள்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆலைக்குள் முகாமிடும் யானைகளின் எண்ணிக்கை மாறினாலும் அருகிலேயே ஆற்று நீரும், தீவனமும் கிடைப்பதால் எப்போதும் ஒரு யானைக்கூட்டம் இதனுள் இருப்பது வழக்கமாகி விட்டது.
இந்த நிலையில் நேற்று ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று தொழிற்சாலையிலிருந்து சாலை கடக்க முயன்றது. இதனை அறிந்த சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் மற்றும் யானை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நீண்ட நேரம் போராடி யானையை காட்டிற்குள் விரட்டினர்.
- மனைவியுடன் தகராறு காரணமாக தூக்கு போட்டு தற்கொலை
- ஏற்கெனவே பலமுறை கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றவர்
கோவை,
கோவை மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள தென்சங்கம்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 26). இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கருப்பசாமிக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் மனவேதனை அடைந்த அவர் பலமுறை கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அவரது குடும்பத்தினர் காப்பாற்றினர். சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கருப்பசாமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி யடைந்தனர்.
பின்னர் அவர்கள் இது குறித்து கோட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட கருப்பசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டில் இருந்து வெளியேறினார்
- பாதுகாப்பு கேட்டு நெகமம் போலீசில் தஞ்சம்
கோவை,
கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள குருநெல்லிபாளையத்தை சேர்ந்தவர் அகிலாதேவி (வயது 19).
இவருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டிபாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் (29) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் அகிலாதேவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவர்கள் தங்களது மகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி மணமகனை தேடி வந்தனர்.
இது குறித்து அகிலாதேவி தனது காதலனுக்கு தகவல் தெரிவித்தார். 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்வது என முடிவு செய்தனர்.
சம்பவத்தன்று அகிலா தேவி, கார்த்திகேயன் ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் வேட்டைக்காரன்புதூரில் உள்ள கோவிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர்.
இதனையடுத்து காதலர்கள் பாதுகாப்பு கேட்டு நெகமம் போலீசில் தஞ்சம் அடைந்தனர். நெகமம் போலீசார் காதலர்களின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
- கள்ளக்காதலன் குடும்பத்தினரும் சேர்த்துக்கொள்ள மறுத்து விட்டனர்
- ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
கோவை,
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் 26 வயது இளம் பெண். இவருக்கு திருமண மாகி 9 ஆண்டுகள் ஆகிறது. கணவர் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
இந்தநிலையில் இளம் பெண் கடந்த 9 மாதங்களாக கோவை அய்யம்பாளையத்தில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது அதே மில்லில் வேலை பார்த்து வரும் ஆனைமலை அருகே உள்ள தாத்தூரை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவரு டன் இளம்பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் வாலிபருடன் நீண்ட நேரமாக செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். இதனை அவரது கணவர் கண்டித்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் கணவரிடம் கோபித்துக்கொண்ட இளம்பெண் கணவர் மற்றும் மகனை தவிக்க விட்டு தனது கள்ளக்கா தலனை தேடி தாத்தூரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றார். ஆனால் வாலிபரின் பெற்றோர் இளம் பெண்ணை ஏற்க மறுத்து விட்டனர்.
இதனையடுத்து இளம்பெண் தனது காதலனுடன் சேர்த்து வைக்குமாறு ஆனைமலை போலீசில் தஞ்சம் அடைந்தார். போலீ சார் இளம்பெண்ணின் கணவரை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் அவர் தனது மனைவி தனக்கு வேண்டாம் என கூறி விட்டு சென்று விட்டார். வாலிபரின் பெற்றோரும் கணவரை பிரிந்து மகனை தேடி வந்த இளம்பெண்ணை ஏற்க மறுத்து விட்டனர். இதுகுறித்து ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காலம், காலமாக இருக்கின்ற பாரம்பரியத்தை குறை சொல்வது திராவிட முன்னேற்ற கழகத்தின் வாடிக்கையாக மாறியிருக்கிறது.
- முடியாது என்று தெரிந்தே நீங்கள் வாக்குறுதி கொடுத்துள்ளீர்கள்.
கோவை:
ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்பதை ஒருபோதும் இந்து மதமோ, சனாதன தர்மமோ வலியுறுத்தவில்லை. பல்வேறு தொழில்களை செய்து கொண்டிருந்தவர்கள் பல்வேறு சாதிகளாக பிரிந்து கொண்டிருக்கிறார்கள். காலம், காலமாக இருக்கின்ற பாரம்பரியத்தை குறை சொல்வது திராவிட முன்னேற்ற கழகத்தின் வாடிக்கையாக மாறியிருக்கிறது.
இவர்கள் இன்னும் 1952-ல் இருப்பதாகவே நான் கருதுகிறேன். காலம் மாறி வருகிறது. மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. பாரம்பரியமும், அதனுடைய பெருமையும் காக்கப்பட வேண்டும் என்று நினைக்கிற தமிழர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது.
தேவையில்லாதவற்றை தொடாமல் தமிழகத்தின் முன்னேற்றத்தில் தி.மு.க. அரசு கருத்தைச் செலுத்துவதும், கவனத்தை செலுத்துவதும், தி.மு.க.விற்கும், தமிழகத்திற்கும் நல்லது. ஒட்டு மொத்தத்தில் தி.மு.க. தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அடிக்கடி தேர்தல் என்பது ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதிக்கும். ஒரே நேரத்தில் எல்லா அமைப்புகளுக்கும் தேர்தல் என்பது தேசத்தின் முன்னேற்றத்தை விரைவுப்படுத்தும்.
ஒரே நாடு, ஒரே தேர்தலில் என்ன குறை கண்டு வேண்டாம் என்கிறார்கள்? ஒரே நேரத்தில் தேர்தல் என்றால் முடிவுகளை எடுப்பது எந்த கட்சியாக இருந்தாலும் எந்த அரசியல் தலைவராக இருந்தாலும் அது சாத்தியம்.
தி.மு.க. பகையை வளர்த்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு எதையும் எதிர்பார்க்காத நல்ல கவர்னர் கிடைத்திருக்கிறார். அதைவிட இவர்களுக்கு என்ன வேண்டும் என்பது தெரியவில்லை. தமிழ் மீதும், தமிழரின் மீதும், தமிழர்களின் முன்னேற்றத்தின் மீதும், அக்கறை கொண்ட கவர்னர் கிடைத்திருக்கிறார்.
அதை விட்டுவிட்டு இவர்கள் தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டார்கள் என்பதற்காக நீட் தேர்வு ரத்து சட்ட மசோதாவை அமல்படுத்த முடியுமா?. முடியாது என்று தெரிந்தே நீங்கள் வாக்குறுதி கொடுத்துள்ளீர்கள். அதன் பழியை கவர்னர் மீது போடுகிறீர்கள்.
ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து என்றீர்கள். நீங்கள் முதல் கையெழுத்து போட்டால் அது சட்டமாகிவிடுமா என்ன? எதுவெல்லாம் அரசியல் சாசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறதோ எதெல்லாம் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலுக்கு உட்பட்டு இருக்கிறதோ அதில் மட்டும்தான் கவர்னர் கையெழுத்திட முடியும்.
ஏழை மக்களின் நிலையை கண்டு, பொருளாதார நிலையை மனதில் கொண்டு ஏழை மக்களிடம் அதன் பலனை கொண்டு செல்ல வேண்டும் என கருத்தில் கொண்டே ரூ.200 கியாஸ் விலை குறைக்கப்பட்டுள்ளது
பா.ஜ.க.விற்கு எதிரான கட்சிகள் ஒன்றாக சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உங்கள் கருத்து. அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பிரதமருக்கும், அமித்ஷாவுக்கும், ஜே.பி. நட்டாவுக்கும் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கிராம பகுதிகளில் மக்கள் சத்குருவின் படத்தை வைத்து பூஜைகள் செய்தும், இனிப்புகள் வழங்கியும், அன்னதானமிட்டும் பெரு விமர்சையாக கொண்டாடினர்.
- ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்த ஊர்வலத்தில், மலைவாழ் மக்கள் அவர்களுக்கே உரிய மேளங்கள் முழங்க நடனமாடி கொண்டாட்டத்துடன் விழாவை நடத்தினர்
சத்குரு பிறந்தநாளான செப்.3ந்தேதியை ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்களும், கிராம மக்களும் ஒன்று கூடி பக்தியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஈஷா யோகா மையத்தை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் சத்குருவின் படத்தை வைத்து பூஜைகள் செய்தும், இனிப்புகள் வழங்கியும், அன்னதானமிட்டும் பெரு விமர்சையாக பக்தியுடன் கொண்டாடினர்.
ஈஷா யோகா மையத்தை சுற்றியிருக்கும் கிராம பகுதிகளான மத்வராயபுரம், முட்டத்துவயல் ஆகிய கிராம பகுதிகளில் சத்குருவின் படத்தை வைத்து வழிபட்டு அன்னதானமிட்டு கொண்டாடினர். மேலும் தேவராயபுரம், விராலியூர், நரசிபுரம், இந்திராநகர் (விராலியூர்), காந்தி காலனி (செம்மேடு) ஆகிய பகுதியில் சத்குருவின் படம் வைத்து பூஜைகள் செய்து இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியையும் பக்தியையும் பகிர்ந்து கொண்டனர்.
இதைப்போலவே மலைவாழ் மக்கள் வசிக்கும் பஞ்ச கிராமம் என்று அழைக்கப்படும் பட்டியார் கோவில் பதி, மடக்காடு, தாணிக்கண்டி, முள்ளங்காடு, குலத்தேரி ஆகிய கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்கள் சத்குருவின் படத்தை ரதத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து வந்து ஆதியோகியின் சிலையின் முன்பாக மாலை 6.30 மணியளவில் ஊர்வலத்தை நிறைவு செய்தனர். இந்த கொண்டாட்டங்களில் சிங்கப்பதி, சர்கார் போரத்தி, நல்லூர்பதி, சந்தேகவுண்டன் பாளையம் ஊர்களை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்த ஊர்வலத்தில், மலைவாழ் மக்கள் அவர்களுக்கே உரிய மேளங்கள் முழங்க நடனமாடி கொண்டாட்டத்துடன் இந்த விழாவை நடத்தினர். இந்த ஊர்வல நிறைவை தொடர்ந்து ஆலந்துறை, தொண்டாமுத்தூர், அட்டுக்கள், சந்தேகவுண்டன் பாளையம், பூலுவாம்பட்டி மக்கள் ஒன்றிணைந்து இரவு அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
ஈஷா யோகா மையத்தை சுற்றி இருந்த அனைத்து கிராம மற்றும் மலைவாழ் பகுதிகளும் நாள் முழுவதும் நிகழ்ந்த ஏராளமான நிகழ்ச்சிகளால் விழா கோலம் பூண்டிருந்தது.






