என் மலர்
கோயம்புத்தூர்
- வாகனஓட்டிகள்-பொதுமக்கள் பரிதவிப்பு
- வெங்கிட்டாபுரம் பகுதியில் சிக்னல் அமைத்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
குனியமுத்தூர்,
கோவை சாய்பாபா காலனி என்.எஸ்.ஆர். ரோடு பகுதியில் வெங்கிட்டாபுரம் அமைந்து உள்ளது. இது மூன்று ரோடுகள் சந்திக்கும் முக்கியமான பகுதி ஆகும். இங்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து சிக்னல் இயங்கி வந்தது. அது தற்போது செயல்படாத நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக போட்டி போட்டுக்கொண்டு பறந்து செல்கின்றன. மேலும் வாகனங்கள் தாறுமாறாக செல்வதையும் பார்க்க முடிகிறது.
மேலும் வெங்கிட்டாபுரம் சந்திப்பு என்பது தடாகம், காந்திபார்க், மேட்டுப்பாளையம் செல்லும் முக்கிய சாலைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று. இங்கு 3 தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அங்கு சுமார் 4500 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதனால் வெங்கிட்டாபுரம் பகுதியில் காலை-மாலை நேரங்களில் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்கிறது. எனவே தீபாவளி பண்டிகைக்கு பொருட்கள் வாங்க செல்லும் பொது மக்கள் நெரிசலில் சிக்கி மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டி உள்ளது.
இதுகுறித்து வெங்கிட்டாபுரம் பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் தேவையில்லாத இடத்தில் சிக்னல் அமைத்து பயணிகளை 1-2 நிமிடம் காக்க வைக்கின்றனர். ஆனால் இது மிகவும் முக்கியமான பகுதி. தினமும் 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிட்டாக பறந்து செல்கின்றன.
அப்படியிருக்கும்போது வெங்கிட்டாபுரம் சாலையில் சிக்னல் இல்லாதது எங்களுக்கு மிகவும் சிரமம் தருகிறது. ஒருசில நேரங்களில் போக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் நின்று கொண்டு வாகன போக்குவரத்தை முறைப்படுத்துவர். அந்த நேரம் மட்டும் எங்களுக்கு சற்று ஆறுதலாக இருக்கும்.
ஆனால் அவர்கள் பெரும்பாலான நேரங்களில் வெங்கிட்டாபுரம் சிக்னலில் நிற்பது கிடையாது. எனவே அந்த வழியாக செல்லும் வாகனங்கள் தறிகட்டிய நிலையில் பறக்கின்றன. இதனால் அங்கு சாலையை கடக்க வரும் பொதுமக்கள் அங்கும்-இங்குமாக அலை க்கழிப்படும் காட்சியை பார்க்க முடிகிறது.
வெங்கிட்டாபுரம் பகுதியில் சிக்னல் அமைத்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். ஆகவே போக்குவரத்து போலீசார் இதனை கவனத்தில் கொண்டு அந்த பகுதியில் உடனடியாக போக்குவரத்து சிக்னல் அமைத்து தர வேண்டும்.
இவ்வாறு வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான ரெயில் தண்டவாளப்பாதை முழுமையாக சீரமைக்கப்பட்டது.
- 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் டிக்கெட் எடுத்து மிகுந்த ஆர்வத்துடன் மலை ரெயிலில் பயணம் செய்தனர்.
மேட்டுப்பாளையம்:
கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகள் உருண்டு விழுந்தன. மேலும் பாதையோரத்தில் நின்றிருந்த மரங்கள் வேரோடு சரிந்து தண்டவாளத்தின் குறுக்கே விழுந்தன.
இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே இருமார்க்கங்களிலும் மலை ரெயில் சேவை கடந்த 4-ந்தேதி முதல் 7-ந்தேதி வரையும், 9-ந்தேதி முதல் 18-ந்தேதிவரையும் ரத்து செய்யப்பட்டது.
தொடர்ந்து மலைரெயில் பாதையில் சீரமைப்பு பணிகள் தொடங்கியது. இதற்கான பணியில் 25-க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான ரெயில் தண்டவாளப்பாதை முழுமையாக சீரமைக்கப்பட்டது. தொடர்ந்து மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே இருமார்க்கங்களிலும் மலை ரெயில் சேவையை இன்று முதல் தொடங்குவது என ரெயில்வே அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரெயில் சேவை இன்று காலை தொடங்கியது. அப்போது 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் டிக்கெட் எடுத்து மிகுந்த ஆர்வத்துடன் மலை ரெயிலில் பயணம் செய்தனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரெயிலில் செல்லும்போது அந்த வழியில் உள்ள இயற்கை காட்சிகள், பள்ளத்தாக்குகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளை அருகில் இருந்து பார்த்து ரசிக்க முடிவும். எனவே சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் மலைரெயிலில் பயணம் சென்றுவந்தனர்.
நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்ததால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
இந்தநிலையில் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான மலைரெயில் சேவை 11 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- இருகூர் ரயில்வே பாலம் அருகே கஞ்சா விற்றதாக வாலிபர் சிக்கினார்
- சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கோவை,
கோவை குனியமுத்தூர் போலீசார் நேற்று சுகுணாபுரம் செந்தமிழ் நகரில் ரோந்து சென்றபோது சந்தேகப்படும்படி நின்றிருந்த சிறுவனை பிடித்து விசாரித்தனர். இதில் அவன் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
தொடர்ந்து சுகுணாபுரம், சக்தி விநாயகர் தெருவை சேர்ந்த சிறுவனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 110 கிராம் கஞ்சா மற்றும் ரூ.110 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
ஒண்டிப்புதூர் ரோடு என்ஜிஆர் புதூரை சேர்ந்த சிவக்குமார்(36) என்பவர் இருகூர் ரயில்வே பாலம் அருகே கஞ்சா விற்றதாக சிங்காநல்லூர் போலீசாரிடம் சிக்கினார். அப்போது அவரிடம் 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
- வீடு காலி செய்யும் விவகாரத்தில் கருத்து வேறுபாடு
- சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கோவை,
கோவை சுந்தராபுரம், காந்திநகர், 3-வது தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன் (வயது53). இவரது வீட்டில் டிரைவர் ஆனந்த் (37) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.
இந்நிலையில் அவர் குடிபோதையில் அக்கம்பக்கத்தினரிடம் சண்டையிட்டதாக தெரிகிறது. இதனை ஜானகிராமன் கண்டித்தார். மேலும் அவரிடம் வீட்டை காலி செய்யும் படி கூறினார்.
இந்த நிலையில் ஆனந்த் நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும் வீட்டு உரிமையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்த் தகாத வார்த்தை பேசி தாக்கினார்.
இதில் படுகாயம் அடைந்த ஜானகிராமன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- தர்மபுரி வாலிபர் கைது
- ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை
கோவை,
கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சிறைக்குள் தடைசெய்யப்பட்ட செல்போன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்துகிறார்களா? என போலீசார் அடிக்கடி ஆய்வு செய்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று சிறையின் நுழைவுவாயில் அருகே சந்தேகம்படும்படி நின்றிருந்த ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
எனவே போலீசார் அவரை சோதனை செய்து பார்த்தனர். இதில் அவர் ஒரு கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதற்காக வந்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து மத்திய சிறை ஜெயிலர் சிவராஜன், ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டியை சேர்ந்த கூலிதொழிலாளி கிரி(வயது 19) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தையை வீசி சென்றது யார்
- ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கோவை,
கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள குழந்தைகள் வார்டு அருகே பிறந்து 45 நாட்களேயான ஆண் குழந்தையை யாரோ வீசி விட்டு சென்றனர்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும் ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள குழந்தைகள் வார்டில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிறந்து 45 நாட்களேயான குழந்தை வீசி சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தகாத உறவின் காரணமாக பிறந்ததால் வீசி சென்றார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தினர். ஆனால் யாரென கண்டு பிடிக்க முடியவில்லை.
குழந்தையை டாக்டர்கள் குழந்தைகள் வார்டில் அனுமதித்து கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் குழந்தை திடீரென பரிதாபமாக இறந்தது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கோரிக்கை மனுக்கள் மீது 15 நாளில் நடவடிக்கை
- கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவு
கோவை,
கோவை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் காளப்பட்டி மெயின்ரோட்டில் உள்ள சுகுணா ஆடிட்டோரியம், சூலூர் ஆர்.வி.எஸ் கல்லூரி ஆகிய பகுதிகளில் வருகிற 22-ந்தேதி காலை 9 மணிமுதல் மதியம் 2.30 மணிவரை நடக்க உள்ளது.
இந்த முகாம் தொடர்பாக ஆலோசனைக்குழு கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடந்தது. இதில் மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சுரேஷ், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் துவாரகநாத்சிங், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் பஷீர் அகமது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் கிராந்திகுமார் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:-
மக்களுடன் முதல்வர் முகாமில் பொதுமக்கள் மற்றும் தொழில்முனை வோர் கலந்து கொண்டு எரிசக்திதுறையில் புதிய மின்இணைப்பு, மின் வீதப்பட்டியல் மாற்றம், பெயர்மாற்றம், மின்பளு மாற்றம், குடிநீர்-கழிவுநீர் இணைப்புகள், சொத்துவரி பெயர்மாற்றம், பிறப்பு-இறப்பு சான்றிதழ், திடக்கழிவு மேலாண்மை, பட்டா மாறுதல், உட்பிரிவு நிலஅளவை, இலவச வீட்டு மனைப்பட்டா, வாரிசு சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்பட அரசு சார்ந்த சேவைகளுக்கு விண்ணப்பம் செய்யலாம்.
அவை இணையத்தளத்தில் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மக்களுடன் முதல்வர் முகாமுக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து செய்ய வேண்டும். மேலும் இதுகுறித்த தகவல்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பக்தர்கள் திரண்டு வழிபாடு
- நாளை காலை 9 மணிக்கு திருக்கல்யாணம், சுவாமி திருவீதி உலா
கோவை,
ஐப்பசி மாத அமாவாசை முடிந்து முருகனுக்கும், சூரனுக்கும் இடையே நடந்த போரில் சஷ்டி அன்று சூரனை வதம் செய்து முருகன் வெற்றி பெற்றார். இதை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் இந்த நாட்களில் பக்தர்கள் சஷ்டி விரதம் மேற்கொள்கின்றனர்.
விரதம் இருக்கும் பக்தர்கள் சஷ்டி தினமான இன்று தங்கள் விரதத்தை நிறைவு செய்கிறார்கள். இதையொட்டி முருகன் கோவில்களில் இன்று அதிகாலையில் சஷ்டி அலங்கார பூஜை நடந்தது. மாலையில் முருகன், சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடக்கிறது.
கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று பிற்பகல் 3 மணிக்கு வேல் வாங்கு தலும், 3.30 மணிக்கு சூரசம்ஹாரமும் நடக்கிறது. இதையொட்டி அங்கு காலை முதலே பக்தர்கள் திரண்டு வழிபட்டனர்.
கூட்டம் கருதி மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. பக்தர்கள் கோவில் பஸ்களில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டனர். பெரும்பாலான பக்தர்கள் படிகளில் ஏறிச் சென்று முருகனை வழிபட்டனர். இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டனர்.
இதேபோல கோவை மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் இன்று மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. சுக்கிர வார்பேட்டை பாலதண்டாயுதபாணி கோவிலில் மாலை 5.30 மணிக்கும், சிரவணபுரம் கவுமாரமடாலயத்தில் உள்ள தண்டபாணி கடவுள் கோவிலில் மாலை 4.30 மணிக்கும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.
அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று காலை சத்ரு சம்ஹார ஹோமம், அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மாலை 3.30 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை 9 மணிக்கு மகா அபிஷேகம், திருக்கல்யாணம், சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
குருந்தமலை குழந்தை வேலாயுதசாமி கோவில், மேட்டுப்பாளையம் கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில், குமரன் குன்று முருகன் கோவில், ஓதிமலை ஆறுமுகசுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் இன்று மாலை சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.
பொள்ளாச்சி சுப்பிரமணிய சுவாமி கோவில், குரும்ப பாளையம் அம்மணீஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னதி, கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுத சுவாமி கோவில், சுல்தான்பேட்டை செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவில், வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய கோவில்களிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. இந்த கோவில்களில் ஏராளமான பக்தர்கள் திரண்டு வழிபாடு நடத்தினர்.
- பிறந்த நாளுக்கு காதலன் கோவிலுக்கு அழைத்து செல்லாததால் மனவேதனை
- மின் விசிறியில் துப்பட்டாவில் தூக்கில் தொங்கினார்
கோவை,
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள கே.ஆர். நகரை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகள் பரணி என்ற சபரி (வயது 19). இவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். சி.ஏ., 2-வது ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 1 அரை ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போன் மூலமாக பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.
சம்பவத்தன்று சந்துருவுக்கு பிறந்த நாள். எனவே தன்னை கோவிலுக்கு அழைத்து செல்லுமாறு அவரிடம் பரணி கூறி இருந்தார். அப்போது அவர் மாணவியிடம் நீ செமஸ்டர் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வாங்கி விட்டு வா அதன் பின்னர் பார்த்து கொள்ளலாம் என கூறினார்.
அப் போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த பரணி தற்கொலை ெய்வது என முடிவு செய்தார். அதன்படி வீட்டில் உள்ள அறையில் மின் விசிறியில் துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்து மாணவியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர் இதுகுறித்து காரமடை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட மாணவி பரணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தீராத உடல்உபாதையால் அவதி
- வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு தற்கொலை
கோவை,
கோவை கீரநத்தம் அருகே உள்ள புதுப்பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 36). சி.என்.சி. ஆபரேட்டர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
வினோத்குமாருக்கு 2 முறை குடல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக துடியலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த சில நாட்களாக அவருக்கு வலி அதிகமாக காணப்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த வினோத்குமார் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர். அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு வாட்ஸ்அப் மூலமாக அவரது அக்காவுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினார். அதில் நான் இருக்க மாட்டேன். வலி அதிகமாக உள்ளது. எனது குடும்பத்தை பார்த்து கொள்ளவும். இவ்வாறு அதில் அனுப்பி இருந்தார்.
பின்னர் வினோத்குமார் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார். பின்னர் அவர் இது குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட வினோத்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
- 2024 பாராளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்போம்.
கோவை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கவர்னர், முதலமைச்சர் இருவரும் சேர்ந்து செயல்பட வேண்டும். இருவரும் இரண்டு பக்கம் சென்றால் பாதகம் தமிழக மக்களுக்கு தான். எனவே மக்கள் நலன் கருதி கவர்னர் நடுநிலையாக செயல்பட வேண்டும்.
கவர்னர் கட்சி சார்ந்தவராக இருக்க கூடாது. ஒரு கட்சியின் கொள்கையை அவர் கடைபிடிக்கவோ, பேசவோ கூடாது. தமிழ்நாடு வளர்ச்சிக்கு கவர்னர் தடையாக இருக்க கூடாது. கவர்னர் அரசியல்வாதி கிடையாது. அவர் அரசியல் பேசினால் மக்களுக்கு தான் பாதிப்பு.
தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதனை இந்த கூட்டத்தொடரில் அறிவிக்க வேண்டும். சமூக நீதி பேசும் தி.மு.க.வுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த என்ன தயக்கம்?
தமிழ்நாட்டில் உள்ள 540 சாதிகளும் எந்த நிலையில் உள்ளது என்பதை அறிய வேண்டும். அதில் பின்தங்கிய சமுதாயங்களை முன்னேற்ற சிறப்பு திட்டங்கள் கொண்டு வர வேண்டும்.
மருத்துவர் ராமதாஸ் கட்சி தொடங்கும் முன்பிருந்தே மதுவை ஒழிக்க போராட்டம் நடத்தி வருகிறார். மது விலக்கை எல்லா கட்சிகளும் கொள்கை ரீதியாக ஏற்கும் நிலைக்கு வர பா.மக. தான் காரணம். தீபாவளி, பொங்கல் பண்டிகைகளின் போது மதுக்கடைகளை மூட வேண்டும். மதுக்கடைகளை மூடும் எண்ணம் தமிழக அரசிற்கு துளியும் கிடையாது. மதுக்கடைகளை மூடினால் சாலை விபத்துகளை குறைக்க முடியும்.
2024 பாராளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து விரைவில் அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டின் போது முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக், மாவட்ட செயலாளர்கள் அசோக், கோவை ராஜ், தங்கவேல் பாண்டியன் மற்றும் பலர் இருந்தனர்.
- வீட்டில் நைட்ரஜன் வாயு சிலிண்டர் ஒன்றையும் பயன்பாட்டுக்காக வைத்திருந்தார்.
- படுக்கை அறையில் கடிதம் ஒன்றும் சிக்கியது. அதனை போலீசார் படித்து பார்த்தனர்.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி நேதாஜிபுரம் பகுதியை சேர்ந்தவர் தனபிரபு (வயது 33). வேதியியல் முதுகலை பட்டதாரி. கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசி ரியராக வேலைபார்த்து வந்தார். இதற்காக சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பாரதி நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தார்.
தனபிரபு வேதியியல் ஆய்வுக்கூடத்தில் நைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடங்களை கற்று கொடுத்து வந்தார். பின்னர் அவர் திடீரென பணியில் இருந்து விலகினார். தொடர்ந்து வீட்டில் இருந்தபடி மாணவர்களுக்கு சிறப்பு வேதியியல் வகுப்புகள் நடத்தினார். இதற்காக அவர் வீட்டில் நைட்ரஜன் வாயு சிலிண்டர் ஒன்றையும் பயன்பாட்டுக்காக வைத்திருந்தார்.
இந்நிலையில் தனபிரபு சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவருக்கு வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டது. எனவே அவர் தற்கொலை செய்வது என முடிவெடுத்தார்.
பின்னர் நைட்ரஜன் வாயு சிலிண்டரை திறந்து விட்டு, அதில் இருந்து வெளிப்பட்ட விஷவாயுவை வலுக்கட்டாயமாக முகர்ந்தார். இதனால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. தொடர்ந்து வீட்டுக்குள் சுருண்டு விழுந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அடுத்தநாள் காலையில் பேராசிரியர் தனபிரபு வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. எனவே சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டினர் கதவை தட்டிப்பார்த்தனர். ஆனாலும் கதவு திறக்கப்படவில்லை.
மேலும் வீட்டில் இருந்து விஷவாயுவின் வாசனை வெளிப்பட்டவண்ணம் இருந்தது. எனவே அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் அளித்தனர்.
தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பேராசிரியர் தனபிரபு நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மேலும் வீட்டின் படுக்கை அறையில் கடிதம் ஒன்றும் சிக்கியது. அதனை போலீசார் படித்து பார்த்தனர். தனபிரபு எழுதிய அந்த கடிதத்தில், என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை என குறிப்பிடப்பட்டு இருந்தது.
பேராசிரியர் தனபிரபுவுக்கு திருமணம் ஆகவில்லை. வங்கியில் லட்சக்கணக்கில் பணத்தை சேமித்து வைத்திருந்தார். மேலும் அவர் ஷேர் மார்க்கெட்டில் பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்து வந்து உள்ளார். இதில் அவருக்கு ஏதேனும் பெரியஅளவில் நஷ்டம் ஏற்பட்டு இதன் காரணமாக தற்கொலை செய்தாரா என்பது பற்றிய விவரம் தெரியவில்லை.
இதுதொடர்பாக சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






