என் மலர்
கோயம்புத்தூர்
- மகளை மீட்டு தரும்படி பெற்றோர் புகார்
- நெகமம் போலீசார் விசாரணை
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சின்ன நெகமத்தை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண்.
இவர் அந்த பகுதியில் உள்ள பேன்சி கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கு பக்கத்து கடையில் வேலை பார்த்து வந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் வீட்டிற்கு தெரிய வரவே இளம்பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வேலையை விட்டும் நிறுத்தினர்.
சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவர் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். பின்னர் அவர் தனது உறவினர் ஒருவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் கோவையில் இருப்பதாகவும், காதலனை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய இளம்பெண்ணின் பெற்றோர் அவர்களது மகள் வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர். அக்கம் பக்கத்தில் தேடிய போது இளம்பெண் அவருடைய காதலனை திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.
இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்து கொண்ட தங்களது மகளை மீட்டு தரும்படி நெகமம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
- மக்னா யானை கழுத்தில் பொருத்தப்பட்டு இருந்த ரேடியோகாலர் சரிவர வேலை செய்யவில்லை.
- ரேடியோகாலரில் பொருத்தப்பட்டு உள்ள பேட்டரிகள், 3 ஆண்டுகள் வரை தடையின்றி செயல்படக்கூடியவை.
வால்பாறை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த நாகமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட வில்லோனி பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பள்ளத்தாக்கில் ஒரு யானை இறந்து கிடந்தது.
வனத்துறையினர் ஆய்வு செய்ததில் பள்ளத்தாக்கில் இறந்து கிடந்தது மக்னா யானை என்பது தெரியவந்தது. இந்த யானை தர்மபுரி மற்றும் கோவையை கலக்கிய யானை ஆகும்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த 35 வயது மக்னா யானைக்கு தந்தங்கள் கிடையாது. ஆனால் ஆக்ரோஷம் மிகுந்து காணப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த யானை தர்மபுரி வனத்தில் இருந்து வெளியேறி பாலக்கோடு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அங்குள்ள விளைநிலங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது.
எனவே வனத்துறையினர் மயக்கஊசி செலுத்தி அந்த யானையை பிடித்து கோவை மாவட்டத்துக்கு கொண்டு வந்தனர். ஆனைமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட வரகளியாறு பகுதியில் யானை விடுவிக்கப்பட்டது.
ஆனால் யானை மீண்டும் காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறி கோவை வனக்கோட்ட எல்லையில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தியது. எனவே மக்னா யானையை மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது என வனத்துறையினர் முடிவு செய்தனர். கடந்த பிப்ரவரி மாதம் 23-ந்தேதி பேரூர் நொய்யல் ஆற்றங்கரை பகுதிக்கு வந்தது. அங்கு வனத்துறை ஊழியர்கள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
தொடர்ந்து அந்த யானை மானாம்பள்ளி வனச்சரகத்தில் விடுவிக்கப்பட்டது. ஆனால் யானை சரளபதி கிராமத்துக்குள் புகுந்து அங்குள்ள விளைநிலங்களை சேதப்படுத்தியது. வனத்துறையினர் மக்னா யானையை மூன்றாவது தடவையாக மயக்க ஊசி செலுத்தி பிடித்து, வால்பாறை அடுத்த சின்னக்கல்லாறு வனப்பகுதியில் விடுவித்தனர்.
இருந்தபோதிலும் அந்த காட்டு யானை மீண்டும் மீண்டும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்ய ஆயத்தமாகி வந்தது. சின்னக்கல்லாறு வனப்பகுதியில் இருந்து நாகமலை வனச்சரகத்துக்கு புறப்பட்ட யானை வில்லோனி வழியாக பொள்ளாச்சியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.
இதற்காக தான் அந்த யானை கடந்த சில நாட்களுக்கு வில்லோனி பகுதிக்கு வந்து உள்ளது. தொடர்ந்து பாறைச்சரிவில் ஏறி செல்ல முயன்றது. அப்போது அந்த யானை எதிர்பாராதவிதமாக பள்ளத்தாக்கு பகுதியில் விழுந்து படுகாயத்துடன் சம்பவ இடத்தில் பலியானது தெரிய வந்து உள்ளது.
மக்னா யானை கழுத்தில் பொருத்தப்பட்டு இருந்த ரேடியோகாலர் சரிவர வேலை செய்யவில்லை. இதனால் அந்த யானையின் இருப்பிடத்தை எங்களால் சரிவர அறிய முடியவில்லை. மேலும் அடர்ந்த வனப்பகுதியில் யானை இருந்தால் சிக்னல்களை அறிய முடியாது.
நாகமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட வில்லோனி பகுதிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்றிருந்த மக்னா யானை, அங்குள்ள ஒரு பாறையில் ஏறி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக கால் இடறி பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என தெரிகிறது. மக்னா யானைக்கு உடற்கூராய்வு நடத்தப்படுகிறது. அதன்பிறகுதான் அந்த யானை எப்படி உயிரிழந்தது என்பது பற்றிய விவரம் தெரிய வரும்
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மக்னா யானையை வனத்துறையினர் சரிவர கண்காணிக்கவில்லை எனவும், அதன் காரணமாக யானை இறந்துள்ளதாகவும் வன உயிரின ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
தர்மபுரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களில் அட்டகாசம் செய்துவந்த மக்னா யானையை வனத்துறையினர் 3 தடவை மயக்க ஊசி செலுத்தி பிடித்து உள்ளனர். அப்போது அந்த யானையின் கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு உள்ளது.
இதன்மூலம் அந்த யானை எந்த பகுதியில் உள்ளது என்பதை வனத்துறையினர் அறிய இயலும். மேலும் ரேடியோகாலரில் பொருத்தப்பட்டு உள்ள பேட்டரிகள், 3 ஆண்டுகள் வரை தடையின்றி செயல்படக்கூடியவை.
மக்னா யானையின் ரேடியோகாலர் கருவியில் இருந்து கடந்த சில நாட்களாக வனத்துறைக்கு சிக்னல் எதுவும் கிடைக்கவில்லை. எனவே அவர்கள் இதுகுறித்து உடனடியாக தேடுதல் வேட்டை நடத்தியிருந்தால் மக்னா யானையை உயிரோடு காப்பாற்றி இருக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- ரேஸ்கோர்ஸ் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
- இறந்து கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை
கோவை,
கோவை வாலாங்குளம் ரெயில்வே குடியிருப்பு பின்புறம் உள்ள கோவை - கேரளா செல்லும் ரெயில்வே தண்டவாளம் அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக இன்ஸ்பெக்டர் அர்ஜுன் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு சென்று சோதனை செய்தனர்.
பின்னர் அந்த வாலிபரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து அழுகிய நிலையில் இறந்து கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரூ.86,200 மொய் பணம் வசூல்
- திருக்கல்யாணத்தை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு
வடவள்ளி,
கோவை மேற்கு மலை தொடர்ச்சியில் மருதமலை முருகன் கோவில் உள்ளது. இது முருக பக்தர்களால் ஏழாவது படை வீடு என போற்றப்படுகிறது.
இந்த கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய தினமும் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரு கின்றனர். மருதமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டுக்கான கந்தசஷ்டி விழா கடந்த 14-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது.
கந்த சஷ்டி விழாவின் 6-ம் நாளான இன்று காலை திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் நடை பெற்றது. காலை 8.30.மணி அளவில் யாகசாலை கலசங்களில் உள்ள தீர்த்தங்களை கொண்டு மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது.
காலை 9 மணிமுதல் 10.30 மணி அளவில் வள்ளி - தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. அப்போது வள்ளி மஞ்சள் பட்டு, தெய்வானை சிவப்பு பட்டு அணிந்திருந்தனர். சுப்பிரமணிய சுவாமி வெண்பட்டு உடுத்தி மணக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
அதன்பிறகு பக்தர்களின் மொய்ப்பணம் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு மொய் வைத்தனர். அந்த வகையில் ஒட்டுமொத்தமாக ரூ.86,200 மொய்ப்பணம் வசூலானது.
தொடர்ந்து பாத காணிக்கை செலுத்துதல் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமிகள் தம்பதி சமேதராக பல்லக்கில் வீதி உலா வந்தனர்.
மருதமலை முருகன் கோவிலில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
- பொதுமக்கள் செல்போனில் படம் பிடித்து வலைதளத்தில் பரப்பினர்
- சாதாரண பக்தர்களுக்கு ஒரு நியாயம், வசதி படைத்தவர்களுக்கு ஒரு நியாயமா? என கேள்வி
வடவள்ளி,
மருதமலை முருகன் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் தற்போது சாலை சீரமைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் கந்த சஷ்டி விழா தொடங்கியதை தொடர்ந்து ஒரு மாதத்துக்கு பின் மீண்டும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. நேற்று சூரசம்ஹாரம் மற்றும் இன்று திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இந்த 2 முக்கிய விழாக்களிலும் பக்தர்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் மலைப்பாதை வழியாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
இதுதொடர்பாக இந்து அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் கலெக்டர் கிராந்திகுமார் பாடியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அவரும் 2 நாட்கள் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதித்தார். இதனால் பக்தர்கள் கோவில் பஸ்களிலும், நடைபாதை வழியாகவும் சென்றனர்.
இன்று காலை நடை பாதை வழியாக ஏராளமான பக்தர்கள் சென்றனர். முதியவர்கள் பலர் மிகவும் சிரமப்பட்டு மலையை அடைந்தனர். அங்கு சென்று பார்த்த பக்தர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கோவில் வளாகத்தில் 25-க்கும் மேற்பட்ட கார்கள் நின்றன.
அந்த கார்களை பார்த்த தும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்களை மட்டும் கால்நடையாக மலையேறச் செய்து விட்டு அவர்களை மட்டும் எப்படி காரில் வர அனுமதித்தனர் என ஆதங்கப்பட்டனர். சாதாரண பக்தர்களுக்கு ஒரு நியாயம், வசதி படைத்தவர்களுக்கு ஒரு நியாயமா என அவர்கள் கேள்வி எழுப்பினர். மேலும் அங்கு கார்கள் நிறுத்தப்பட்டிருந்ததை தங்கள் செல்போனில் படமும் பிடித்து வலைத ளத்தில் பரப்பினர்.
இதுமட்டுமல்லாமல் திருக்கல்யாண நிகழ்ச்சி யின் முன்வரிசையிலோ, அருகிலோ சாதாரண பக்தர்களால் செல்ல முடிய வில்லை. அவரவர்களுக்கு வேண்டியவர்களை முன்வரிசையில் அமரச் செய்து இருந்தனர். சாதாரண பக்தர்கள் வெகு தொலையில் நின்றபடியே சாமியை தரிசித்து விட்டுச் சென்றனர்.
இதனால் இனி வரும் காலங்களிலாவது அதிகாரிகள் அனைவரையும் சமமாக பாவித்து தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக மலை அடிவாரத்தில் உள்ள டோல்கேட் ஊழியர்களிடம் கேட்டபோது தங்களுக்கு 86 வாகனங்களை மலைப்பாதையில் அனுமதிக்க பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
- கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது
- இந்தியா உலக கோப்பையை வெல்ல சிறப்பு பூஜை
மேட்டுப்பாளையம்,
அன்னூர் அருகே செம்மாணி செட்டிபாளையம் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ராயர் பெருமாள் கோவில் உள்ளது.
இந்த கோவிலை பராமரித்து பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. தற்போது கோவில் புனரமைப்பு பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா தொடங்கியது.
கடந்த 18-ந் தேதி மாலை 3 மணிக்கு பெருமாள் ஆஞ்சநேயர் நூதன விக்ரகம், பட்டினப்பிரவேசம், தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. மாலை 4 மணி முதல் 9 மணி வரை ஆசார்ய வர்ணம், அங்குரா ர்ப்பனம், மருத்சங்கரணம் ஹோமம், திவ்யபிரபந்த சேவாகாலம் சாற்றுமுறையும் நடந்தது. தொடர்ந்து இன்று காலை யாக சாலைகள் சிறப்பு கேள்விகள் அமைத்து பூஜைகள் நடத்தப்பட்டன.
அதன்பின் காலை 8.30 மணி முதல் 9:30 மணிக்குள் கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் காட்டம்பட்டி, கணேஷ்புரம், குன்னத்தூர், செட்டிபாளையம், அன்னூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேகம் முடிந்து இந்தியா உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற வேண்டி கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தை காரமடை ஸ்ரீ வேதவ்யாச சுதர்சன பட்டர் சுவாமிகள் நடத்தி வைத்தனர்.
- காங்கயம், லம்பாடி காளைகள் அதிகளவில் பங்கேற்பு
- வெற்றி பெற்ற காளையின் உரிமையாளருக்கு தங்கக்காசு, கோப்பை பரிசு
பொள்ளாச்சி,
நாட்டு மாடுகள் குறித்து விவசாயிகளிடமும், கால்நடை வளர்ப்பவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆனைமலை அருகே நடைபெற்ற ரேக்ளா போட்டியில் தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து 400-க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகள் பங்கேற்றன.
பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை அருகே உள்ள அங்கல குறிச்சி கிராமத்தில் விவசாய நண்பர்கள் சார்பில் 3-ம் ஆண்டு ரேக்ளா பந்தயம் நடை பெற்றது. இதில் கோவை மாவட்டத்தின் ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், நெகமம், கிணத்துக்கிடவு, திருப்பூர் மாவட்டம், உடுமலை, தாராபுரம், செஞ்சேரி மலை, பல்லடம், திண்டுக்கல் மாவட்டத்தின் பழநி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தின் கொழிஞ்சாம்பாறை, சித்தூர், பகுதிகளில் இருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டிகளில் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
200 மீ, 300 மீ என இரண்டு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. காங்கயம் இன காளைகள் மற்றும் லம்பாடி காளைகள் அதிகளவில் பங்கேற்றன. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்கக் காசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.
போட்டியில் இலக்கு நோக்கி சீறிப் பாய்ந்த காளைகளை, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பார்வையாளர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தினர்.
- ஆன்லைன் வேலை தருவதாக கூறி ஏமாற்றினர்
- சைபர் கிரைம் போலீசார் விசாரணை
கோவை,
கோவை உப்பிலிபாளையம், காந்திபுதூரை சேர்ந்தவர் கீர்த்திகுமார் (வயது 35). பொறியியல் பட்டதாரி. பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கீர்த்திகுமார் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் பகுதி நேர வேலை செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
எனவே கீர்த்திகுமார் அந்த இணைப்பை கிளிக் செய்தார். தொடர்ந்து அவர் டெலிகிராம் குழுவில் இணைந்து விவரங்களை பதிவு செய்தார். பின்னர் அவரை தொடர்பு கொண்ட ஒருவர், நாங்கள் அனுப்பும் விளம்பரத்தை பார்த்து ஷேர் செய்தால் அதிகளவில் பணம் தருவோம். இதற்கு நீங்கள் சிறியஅளவில் பணம் கட்ட வேண்டும் என ஆசை வார்த்தை கூறினார். இதனை நம்பிய கீர்த்திகுமார், அந்த நபர் கூறியபடி வங்கி கணக்குகளில் ரூ. 5.88 லட்சம் முதலீடு செய்தார்.'
ஆனால் அந்த நபர் சொன்னபடி பணம் தரவில்லை. முதலீடு செய்த பணமும் திருப்பி தரப்படவில்லை. எனவே அதிர்ச்சி அடைந்த கீர்த்திகுமார்அந்த நபரை தொடர்பு கொண்டபோது, நீங்கள் மேலும் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால்தான் செலுத்திய தொகை லாபத்துடன் திரும்ப கிடைக்கும் என தெரிவித்துள்ளார். பின்னர் அந்த நபரை கீர்த்தி குமாரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
அப்போதுதான் ஆன்லைன் வேலை தருவதாக கூறி, அந்த நபர் ரூ.5.88 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக கீர்த்திகு மார் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீராத குடிப்பழக்கம் உயிரை பறித்தது
- சுல்தான்பேட்டை போலீசார் விசாரணை
கோவை,
கோவை எஸ்.பி.வடுகபாளையம், பொங்கலூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாச்சிமுத்து (வயது 54). கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு குடிப்பழக்கம் காரணமாக தீராத வயிற்றுவலி தொல்லை இருந்து வந்தது. இதற்காக அவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்தார். ஆனாலும் பலனில்லை.
எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்த நாச்சிமுத்து சம்பவத்தன்று வீட்டில் இருந்தபோது கத்தியால் தனக்குதானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக சுல்தான்பேட் போலீசார் வழக்குப்பதிவுசெய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இதுதொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் கட்டப்பட்டது
- வனஅதிகாரி நேரில் பார்வையிட்டு ஆய்வு
வடவள்ளி,
கோவை தொண்டாமுத்தூர் பகுதிக்கு உட்பட்ட மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. அவை இரவு நேரங்களில் ஊரு க்குள் புகுந்து குடியிருப்பு பகுதிகளில் உலா வரு கின்றன. மேலும் விளைநிலங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டு உள்ள காய்கறிகளை ருசித்து தின்று சேதப்படுத்தி விட்டு செல்கின்றன.
இந்த நிலையில் தீத்திபாளையம், குப்பனூர், செல்லப்பகண்டன்புதூர் ஆகிய பகுதிகளுக்கு சம்ப வத்தன்று 11 காட்டு யானைகள் கூட்டம்-கூட்டமாக வந்தன. பின்னர் அவை விளைநிலங்களுக்குள் புகுந்து அங்கு விவசாயிகள் பயிரிட்டு இருந்த தென்னை, வாழை, தக்காளி, வெண்டை, முட்டைக்கோஸ், மஞ்சள் ஆகியவற்றை தின்றன. பின்னர் விளை பொருட்களை மிதித்து நாசமாக்கி விட்டு சென்றன.
தீத்திபாளையம், குப்பனூர், செல்லப்பகண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டு இருந்த பொருட்கள் அனைத்தும் நன்றாக விளை ந்து அறுவடைக்கு தயாரானநிலையில் இருந்தது. இந்த நிலையில் காட்டு யானைகள் மேற்கண்ட பயிர்களை நாசப்படுத்தியதால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
இதுகுறித்து தகவலின்பேரில் கோவை மாவட்ட வனஅதிகாரி ஜெயராஜ் மற்றும் பயிர்ச்சேத தீர்வுக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவருமான சு.பழனிச்சாமி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரடியாக சென்று சேத மதிப்பீடுகளை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து தீத்திபாளையம், குப்பனூர், செல்லப்பகண்டன்புதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் ஒருவார காலத்துக்குள் உரிய சேத இழப்பீடு வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதற்கிடையே தொண்டாமுத்தூர் பகுதி யில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் நவீன அம்சங்களுடன் கூடிய ஸ்பிரிங் தடுப்புச்சுவரை அமைப்பது என வனத்துறை அதிகாரிகள் முடிவுசெய்து உள்ளனர். இதுதொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் நடவடிக்கைகளில் 4 தனிப்படை குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அவர்கள் மலைஅடிவாரத்தில் திரியும் காட்டு யானைகளை அடர்ந்த காட்டுக்குள் திருப்பி அனுப்பி வருகின்றனர். இருந்தபோதிலும் காட்டு யானைகள் மலைஅடிவார புதர்களுக்குள் மறைந்து கொண்டு நள்ளிரவு நேரத்தில் ஊருக்குள் புகுந்து நாச வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
எனவே தொண்டா முத்தூர் பகுதியில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுவதை தடுத்து நிறுத்தும் பணியில் ஒரு பகுதியாக அய்யாசாமி மலைஅடிவாரத்தில் இருந்து சுமார் 3.5 கி.மீ தொலைவுக்கு ரூ.3 கோடி செலவில் நவீன அம்சங்களுடன் கூடிய ஸ்பிரிங் வேலியுடன் ஒருங்கிணைந்த தடுப்புச்சுவரை ஏற்படுத்துவது என வனத்துறை சார்பில் முடிவெடுக்கப்பட்டு உள் ளது.
இது நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் பவுன்ஸ் பேக் முறையில் அமைக்கப்படும். எனவே மலைஅடிவாரத்துக்கு வரும் காட்டு யானைகள் மேற்கண்ட தடுப்புச்சுவரை தாண்டி ஊருக்குள் வர முடியாது. மேலும் யானை உயிருக்கும் பாதிப்பு ஏற்படாது.
தொண்டாமுத்தூர் பகுதியில் பவுன்ஸ்பேக் முறையிலான ஸ்பிரிங் தடுப்புச்சுவர் அமைப்பது தொடர்பான கருத்துரு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகு உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்தில் தடுப்புச்சுவர் அமைக்கப்ப டும்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.
நிகழ்ச்சியில் விவசாய சங்க பிரதிநிதிகள் ஆறுச்சாமி, சதாசிவம், லோக நாதன், ஈஸ்வரன், ரவி, வடிவேல், பாலு, வேணு கோபால், பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தீபாவளிக்கு மாமியார் வீட்டுக்கு சென்றிருந்த நேரத்தில் துணிகரம்
- உறவினர்கள் கைவரிசையா? போலீசார் விசாரணை
பேரூர்,
கோவை பேரூர், தீத்திபாளையம் காவேரி வீதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 41). பிளம்பராக உள்ளார். இவரது மனைவி நித்யா, மகன் ஹரிநாத்.
இந்த நிலையில் முருகேசன் தீபாவளியை முன்னிட்டு குடும்பத்துடன் சென்னனூரில் உள்ள மாமியார் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். அங்கு தீபாவளி பண்டிகையை கொண்டாடிவிட்டு அடுத்த நாள் மாலை வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. எனவே அதிர்ச்சி அடைந்த முருகேசன் பதட்ட த்துடன் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டுக்குள் துணிமணிகள் கலைந்து கிடந்தன. மேலும் பீரோ திறந்து கிடந்தது. எனவே முருகேசன் பீரோவில் தேடிப்பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.44 ஆயிரம் ரொக்கம் ஆகியவை மாயமானது தெரிய வந்தது.
முருகேசன் குடும்பத்தினர் தீபாவளி பண்டி கைக்காக வெளியூருக்கு புறப்பட்டு செல்வதை முன்கூட்டியே அறிந்த சிலர் வீடுபுகுந்து பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றது தெரிய வந்தது.
இதுதொடர்பாக முருகேசன், பேரூர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து சம்பவ இடத்தில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு காமிராக்களை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் முருகேசனின் வீட்டுக்கு உறவினர்கள் சிலர் அடிக்கடி சென்று வந்ததாக தெரிகிறது. எனவே அவர்கள் ஒருவேளை மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாமா என்று போலீசாருக்கு சந்தேகம் உள்ளது. எனவே கொள்ளைபோன வீட்டின் உரிமையாளர் முருகேசன் தொடர்புடைய உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு
- சூலூர் பஸ் நிலையத்துக்கு காலை 8 மணிக்கும், கொடிசியா வளாகத்துக்கு காலை 11 மணிக்கும், பொள்ளாச்சி பஸ் நிலையத்துக்கு மாலை 4 மணிக்கும் கொண்டு செல்ல ஏற்பாடு
கோவை,
எழுத்தாளர் கலைஞர் குழுமூலம் தயார் செய்யப்பட்ட முத்தமிழ்த் தேர் அலங்கார ஊர்தி கோவைக்கு நாளை மறுநாள் வருகிறது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார்பாடி கூறியிருப்பதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அனைத்து தரப்பு மக்களுக்கும் ஒரு நிலையான பங்களிப்பை தர வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்துவதற்காக 12 குழுக்கள் அமைக்கப்பட்டன.
அதில் எழுத்தாளர் கலைஞர் குழுவின் மூலம் படைப்புலகின் முடிசூடா மன்னராக திகழ்ந்த கருணா நிதி தமிழகத்திற்கு ஆற்றிய அரும்பணிகளில் அவரது பரிணாமங்களைப் போற்றும் வகையிலும், இன்றைய இளம் தலைமுறையினருக்கு அவரின் பன்முக தன்மையை எடுத்துச் சொல்லும் வகை யிலும் அவரது புகழ்பாடும் முத்தமிழ்த் தேர் அலங்கார ஊர்தி தயாரிக்கப்பட்டு ள்ளது. இந்த ஊர்தி கன்னியாகுமரி காந்தி மண்டபம் அருகேயுள்ள முக்கோண பூங்காவில் இருந்து கடந்த 4-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. டிசம்பர் 5-ந் தேதி வரை மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல உள்ள இந்த ஊர்தி, கோவைக்கு நவம்பர் 21-ந் தேதி வருகிறது.
சூலூர் பஸ் நிலையத்துக்கு காலை 8 மணிக்கும், கொடிசியா வளாகத்துக்கு காலை 11 மணிக்கும், பொள்ளாச்சி பஸ் நிலையத்துக்கு மாலை 4 மணிக்கும் இந்த அலங்கார ஊர்தி கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






