என் மலர்tooltip icon

    சென்னை

    • பொன்முடியின் தரக்குறைவான பேச்சு தமிழகத்தின் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • பெண்களை எத்தகைய மதிப்போடும், கண்ணியத்தோடும் நடத்த வேண்டும் என்பதை தங்களின் கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டும்.

    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

    பெண்கள் குறித்த அமைச்சர் பொன்முடியின் நாகரீகமற்ற பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. பெண்களை அவமதிக்கும் வகையிலும் சைவம், வைணவம் குறித்து அவதூறு பரப்பும் வகையிலுமான தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடியின் தரக்குறைவான பேச்சு தமிழகத்தின் ஒட்டுமொத்த பெண்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே, அருவருக்கத்தக்க வகையில் பொதுவெளியில் மகளிர் குறித்து பேசி இருக்கும் வனத்துறை அமைச்சர் பொன்முடி, இனியும் அமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமா? என சிந்திப்பதோடு, பெண்களை எத்தகைய மதிப்போடும், கண்ணியத்தோடும் நடத்த வேண்டும் என்பதை தங்களின் கட்சியினருக்கு அறிவுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • செய்தியாளர் சந்திப்பு அரங்கில் வைக்கப்பட்டுள்ள எல்இடி திரையில் நயினார் நாகேந்திரன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
    • எல்இடி திரையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அருகில் அண்ணாமலையின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

    தமிழக பாஜக தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் இன்னும் சற்று நேரத்தில் வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது.

    இதில், தமிழக பாஜக தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே, இன்று சென்னைக்கு வருகைத்தர உள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். செய்தியாளர் சந்திப்பு அரங்கில் வைக்கப்பட்டுள்ள எல்இடி திரையில் நயினார் நாகேந்திரன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

    மேலும், எல்இடி திரையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அருகில் அண்ணாமலையின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

    நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

    இந்நிலையில், தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் ஆண்ணாமலை ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழக பாஜக தலைவர் பதவிக்கான பணிகளை ஒப்படைப்பது குறித்து அண்ணாமலை ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    அப்போது, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர ரெட்டியுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

    • தமிழக பா.ஜ.க. தலைவர் பதவி தேர்தலுக்கான விருப்பமனு தாக்கல் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தொடங்கியது.
    • பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி உள்ள விருப்பமனு தாக்கல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

    சென்னை:

    தமிழகம் உள்பட நாடு முழுவதும் 19 மாநிலங்களில் புதிய தலைவர்களை நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளிலும் பா.ஜ.க. தேசிய தலைமை தீவிரம் காட்டி வருகிறது.

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நாளை நடைபெற உள்ளது. இதற்கான விருப்ப மனுக்களை இன்று சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    தமிழக பா.ஜ.க. தலைவர் பதவி தேர்தலுக்கான விருப்பமனு தாக்கல் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தொடங்கியது.

    பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி உள்ள விருப்பமனு தாக்கல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.

    இதையடுத்து தற்போதைய மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சட்டசபை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கமலாலயம் வந்துள்ளனர்.

    இந்த நிலையில், மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் முன்னிலையில் நயினார் நாகேந்திரன் விருப்பமனு தாக்கல் செய்தார்.

    • போலி நகைகளை அடகு வைத்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக ஞானசேகரனின் தம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.
    • ஞானசேகரனின் தம்பி சுரேஷ் உள்பட 3 பேரை கைது செய்து முதலியார்பேட்டை காவல்நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் சிக்கிய ஞானசேகரனின் தம்பி சுரேஷ் உட்பட 3 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை நகைக்கடைகளில் போலி நகைகளை அடகு வைத்து பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக ஞானசேகரனின் தம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.

    ஞானசேகரனின் தம்பி சுரேஷ் உள்பட 3 பேரை கைது செய்து முதலியார்பேட்டை காவல்நிலைய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திருச்சி சிவா நன்றி தெரிவித்தார்.
    • இதுவரை எதையும் நான் கேட்டுப் பெற்றதில்லை, தானாகவே தந்துள்ளார்கள்.

    சென்னை:

    அமைச்சர் பொன்முடியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் தி.மு.க.வில் வகித்து வந்த துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இதையடுத்து தி.மு.க. துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவாவை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

    தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு தி.மு.க. துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில், தி.மு.க. துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை அடுத்து அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திருச்சி சிவா நன்றி தெரிவித்தார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, கழகத்தைப் பொறுத்தவரை உழைப்புக்கு என்றும் அங்கீகாரம் உண்டு. இதுவரை எதையும் நான் கேட்டுப் பெற்றதில்லை, தானாகவே தந்துள்ளார்கள்.

    தலைவர் கொடுத்துள்ள அங்கீகாரம் என்பது நான் இன்னும் கடுமையாக இந்த இயக்கத்திற்காக உழைத்து இன்னும் பல தோழர்களை இந்த இயக்கத்தில் இணைத்து திராவிட முன்னேற்ற கழகம் என்கிற இந்த தவிர்க்க முடியாத சக்தி மேலும் வலிமை பெற உழைப்பதே எனது கடமை. பொறுப்பு வருகிறபோதே அதனுடன் கடமைகளும் அதிகமாக வருகின்றன என்பதை நான் உணர்ந்து இருக்கிறேன். எனது கடமைகள் மேலும் வேகமாக தொடரும் என்றார். 

    • அதிமுக- பாஜக கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
    • ஒரு மணிநேரத்திற்கும் மேலாக குருமூர்த்தி- அமித்ஷா இருவர் மட்டுமே ஆலோசனையில் ஈடுபட்டனர்.

    சென்னை:

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றிரவு சென்னை வந்தார். இதனை தொடர்ந்து இன்று மதியம் 12 மணிஅளவில் அமித்ஷா செய்தியாளர்களை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிமுக- பாஜக கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில், மயிலாப்பூரில் அமைந்துள்ள ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்திற்கு அமித்ஷா சென்றார். சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக குருமூர்த்தி- அமித்ஷா இருவர் மட்டுமே ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது கூட்டணி தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனிடையே, அமித்ஷா செய்தியாளர் சந்திப்பு அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள எல்.இ.டி. பேனரில் நயினார் நாகேந்திரனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. எல்.இ.டி. திரையில் ஜெ.பி.நட்டாவுக்கு அருகில் அண்ணாமலையின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

    என்.டி.ஏ. மற்றும் தமிழக பா.ஜ.க. தலைவர் மாற்றம் தொடர்பான ஊகங்களுக்கு பதில் கூறும் வகையில் பேனர் வைக்கப்பட்டுள்ளதாக யூகிக்கப்படுகிறது.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் வழுவிழந்தது. இருப்பினும், அதே மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    13-ந்தேதி முதல் 17ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

    அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு:

    தமிழகத்தில் இன்று முதல் 14-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை ஏனினும், ஓரிரு இடங்களில் சற்று உயரக்கூடும்.

    15-ந்தேதி தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறையக்கூடும்.

    இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

    இன்று மற்றும் நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

    இன்று மற்றும் நாளை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று மற்றும் நாளை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    • தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவாவை நியமித்துள்ளார்.
    • அமைச்சர் பொன்முடி இல்லத்தில் வழக்கத்தை விட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை:

    அமைச்சர் பொன்முடி கூட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    இதற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி, பொன்முடிக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.

    இதையடுத்து தி.மு.க.வில் அமைச்சர் பொன்முடி வகித்து வரும் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பொன்முடி வகித்து வரும் துணைப்பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    பொன்முடி பதவி பறிக்கப்பட்ட நிலையில், துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவாவை நியமனம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு துணை பொதுச்செயலாளராக திருச்சி சிவாவை நியமித்துள்ளார்.

    விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் தி.மு.க. ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர். சட்டசபை உறுப்பினர் அன்னியூர் சிவா, விழுப்புரம் மாவட்ட குழு தலைவர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் வந்துள்ளனர்.

    அமைச்சர் பொன்முடி இல்லத்தில் வழக்கத்தை விட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் இருந்து சென்னை புறப்பட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவிக்க அவர் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • பொன்முடியின் சர்ச்சை பேச்சு தொடர்பான வீடியோவை பகிர்ந்து அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
    • இந்து தர்மத்தின் மீது தி.மு.க.வின் இடைவிடாத தாக்குதல்கள் பதிலளிக்கப்படாமல் கடந்து போகாது.

    சென்னை:

    கடந்த 6-ந்தேதி நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில், பெண்களைப் பற்றி கொச்சைப்படுத்தும் விதமாகவும், சைவ, வைணவ மதத்தை அவமதிக்கும் வகையில் அமைச்சர் பொன்முடி பேசியுள்ளது தற்போது சர்ச்சையாகி உள்ளது. பொன்முடியின் பேச்சுக்கு தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், தமிழக பா.ஜ.க., பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், இதுதான் தமிழ்நாட்டில் தி.மு.க.வின் அரசியல் பேச்சுக்களின் தரம் என பொன்முடியின் சர்ச்சை பேச்சு தொடர்பான வீடியோவை பகிர்ந்து அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், எக்ஸ் தள பக்கத்தில் அண்ணாமலை கூறியிருப்பதாவது:-

    இதுதான் தமிழ்நாட்டில் திமுகவின் அரசியல் பேச்சுக்களின் தரம். திரு. பொன்முடி ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் உயர்கல்வி அமைச்சராகவும், தற்போது வனத்துறை மற்றும் காதி அமைச்சராகவும் இருந்தார். தமிழக இளைஞர்கள் இந்த அசுத்தத்தை பொறுத்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறதா? இந்த அமைச்சர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தி.மு.க. கூட்டமும் மோசமானது மற்றும் அநாகரீகமானது.

    இவ்வளவு அவமானகரமான கூட்டத்தை வழிநடத்தியதற்காக, வெட்கப்பட்டு தலையை குனிந்து கொள்ளுங்கள், திரு. மு.க.ஸ்டாலின். இன்று அவரை ஒரு கட்சிப் பதவியில் இருந்து நீக்குவதன் மூலம், மக்கள் முன்னேறுவார்கள் என்று தி.மு.க. நினைத்தால், துரதிர்ஷ்டவசமாக அது தவறான ஒன்று தான்.

    இந்து தர்மத்தின் (சைவம் & வைணவம்) மீது தி.மு.க.வின் இடைவிடாத தாக்குதல்கள் பதிலளிக்கப்படாமல் கடந்து போகாது. எங்கள் மௌனத்தை பலவீனமாகக் கருதாதீர்கள், திரு. மு.க. ஸ்டாலின்.



    • சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு பார்சல் அலுவலகத்திற்கு வந்த இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
    • ரெயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பார்சல் அலுவலகத்திற்கு வந்த இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தமிழிசை இல்லத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் அமித்ஷா, அவரது தந்தை மறைவிற்கு ஆறுதல் கூறினார்.
    • சட்டசபை தேர்தல் கூட்டணியை இன்று இறுதி செய்யும் நிலையில் குருமூர்த்தியுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார். இன்று பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து அவர் பேச்சு நடத்துகிறார். இதனால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி இன்று முடிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் இருந்து விருகம்பாக்கத்தில் உள்ள பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்திற்கு சென்ற மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன் மறைவிற்கு ஆறுதல் கூறினார்.

    இதையடுத்து சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்றார்.

    சட்டசபை தேர்தல் கூட்டணியை இன்று இறுதி செய்யும் நிலையில் குருமூர்த்தியுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். குருமூர்த்தி உடனான ஆலோசனையின்போது அமித்ஷா உடன் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையும் இருந்தார்.

    • ஓசூர், ராயக்கோட்டை ரோடு, இ.பி. அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
    • பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஓசூர் மாநகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான தி.மு.க.வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அ.தி.மு.க. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தின் சார்பில் 15-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணியளவில், ஓசூர், ராயக்கோட்டை ரோடு, இ.பி. அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தலைமையிலும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணா ரெட்டி முன்னிலையிலும் நடைபெறும்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், ஓசூர் மாநகராட்சி மாமன்ற இந்நாள், முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×