என் மலர்
சென்னை
- பாகிஸ்தான் இதைச் செய்தது என்றும், இன்னும் பலவற்றைச் செய்தது என்றும் அவர்கள் சொன்னார்கள்.
- இந்தியாவிற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டதை காட்டும் ஒரு படம் அல்லது புகைப்படத்தை என்னிடம் சொல்ல முடியுமா?
சென்னை ஐஐடி-யில் 62-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கலந்து கொண்டார். அப்போது ஆபரேஷன் சிந்தூர் குறித்து அஜித் தோவல் கூறியதாவது:-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து துல்லியமாக தாக்குதல் நடத்தியது. இதில் ஏதும் தவறவில்லை.
எல்லைத் தாண்டிய மிரட்டலை எதிர்கொள்ளும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. தொழில்நுட்ப வசதி திறனும் உள்ளது.
அதன் பிறகு, பாகிஸ்தான் இதைச் செய்தது என்றும், இன்னும் பலவற்றைச் செய்தது என்றும் அவர்கள் சொன்னார்கள். இந்தியாவிற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டதை காட்டும் ஒரு படம் அல்லது புகைப்படத்தை என்னிடம் சொல்ல முடியுமா?
இவ்வாறு அஜித் தோவல் கூறினார்.
- ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 198 வாகனங்களின் சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- பள்ளிக்கல்வித் துறை சார்பில் “உலகப் பொதுமறை திருக்குறள்” என்னும் நூலினை வெளியிட்டார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட 63 கோவில்களை அதன் பழமை மாறாமல் புனரமைக்கும் வகையிலான திருப்பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 17 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான 198 வாகனங்களை வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சேவையினை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர், பள்ளிக்கல்வித் துறை சார்பில் "உலகப் பொதுமறை திருக்குறள்" என்னும் நூலினை வெளியிட்டார். இந்நூலினை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தனது முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்புத் திட்டத்தின் கீழ், சிகாகோ உலகத் தமிழ் மொழி அறக்கட்டளையுடன் சேர்ந்து கூட்டு வெளியீடாக வெளியிடுகிறது.
தொடர்ந்து தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற 2 கோடியே 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவர் முனைவர் ம. இராசேந்திரனிடம் வழங்கினார்.
- ஒவ்வொரு துறை வாரியாக தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
- ஒவ்வொரு துறைகளிலும் இதுவரை முடிக்கப்பட்டுள்ள பணிகள் எவ்வளவு? எத்தனை பணிகள் செயல்பாட்டில் உள்ளன?
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அவ்வப்போது அரசு துறைகளின் செயல்பாடுகள் குறித்தும் அரசின் திட்டங்கள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும், ஆய்வு மேற்கொள்கிறார்.
அது தவிர சட்டசபையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் எத்தனை செயலாக்கத்திற்கு வந்திருக்கிறது. அதில் எத்தனை திட்டங்கள் நிலுவையில் உள்ளன என்பது போன்றும் ஒவ்வொரு துறை வாரியாக தலைமைச் செயலகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று சட்டத்துறை, நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, சிறப்பு முயற்சிகள் துறை நிதித்துறை உள்ளிட்ட 6 அரசு துறைகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
இதில் ஒவ்வொரு துறைகளிலும் இதுவரை முடிக்கப்பட்டுள்ள பணிகள் எவ்வளவு? எத்தனை பணிகள் செயல்பாட்டில் உள்ளன? நிலுவையில் உள்ள பணிகள் எவ்வளவு? கைவிடப்பட்ட பணிகள் ஏதும் உள்ளதா? என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
- தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
13-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று முதல் 13-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை முதல் 14-ந்தேதி வரை குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு இன்று, தமிழில் அர்ச்சனை எனும் புரட்சியை முன்னெடுத்தவர், சமூகநீதித் தளத்தில், தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் எனத் திராவிட இயக்கத்துக்குத் துணையாக நின்ற மாண்பாளர்!
சோவியத் யூனியன் பயணத்தின் உந்துதலால், பிரதமர் இந்திரா காந்தியை பாராட்டிய 'குன்றக்குடிக் கிராமத் திட்டம்' கொண்டு வந்த பொதுவுடைமைச் சிந்தனையாளர்.
பகட்டுச் சம்பிரதாயங்களைத் தவிர்த்து மனித நேயம் போற்றிய சமத்துவச் சிந்தனையாளர்.
இந்தி எதிர்ப்புப் போரில் பங்கெடுத்த தமிழுணர்வாளர், முத்தமிழறிஞர் கலைஞரின் விருப்பத்தின் வழியே தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகி, மேலவையில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகப் பேசிய பெருந்தகையாளர்.
தமிழ்ச்சமூகத்தின் சமூகவியல் உள்ளடக்கிய இறையியல் அடையாளமாக விளங்கும் திருக்கைலாய பரம்பரைத் திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி 45-வது மகாசந்நிதானம் திருப்பெருந்திரு தெய்வ சிகாமணி அருணாசல தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் எனும் குன்றக்குடி அடிகளாரின் புகழ் வாழ்க!
அவரது வழியில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் தொண்டு தொடரட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இந்திய விடுதலைப் போரில் வீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பங்களிப்பும், தியாகமும் ஈடு இணையற்றது.
- மாவீரன் அழகு முத்துக்கோனின் வீரம் செறிந்த வாழ்க்கை வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், இந்திய விடுதலைக்காக அவர் நடத்திய போர்களையும், அவர் செய்த தியாகங்களையும் நினைவுகூர்கிறேன். வீரத்தின் அடையாளமாக திகழ்ந்த அவருக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன்.
இந்திய விடுதலைப் போரில் வீரன் அழகு முத்துக்கோன் அவர்களின் பங்களிப்பும், தியாகமும் ஈடு இணையற்றது ஆகும். ஆங்கிலேயர்களுடன் நடந்த போரில் தோல்வியடைந்து விட்ட சூழலில், மன்னிப்புக் கேட்டு வரி செலுத்த ஒப்புக்கொண்டால், உயிரையும், நிலத்தையும் காப்பாற்றிக் கொள்ளலாம் என நிபந்தனை விதிக்கப்பட்ட நிலையில், அதை ஏற்க மறுத்து, பீரங்கியின் வாயில் வைத்து சுடப்படும் தண்டனையை மகிழ்வுடன் ஏற்ற மாவீரன் அவர். அவரின் வீரத்தையும், தியாகத்தையும் நாம் போற்றுவோம். அவரது வீரம் செறிந்த வாழ்க்கை வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் சரவணன் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் அவசர முறையீடு செய்துள்ளார்.
- 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' திரைப்படத்தில், என்னுடைய பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ள படம் 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்'. இந்தப் படத்தை அவரே எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். அவருடன் ராபர்ட் மாஸ்டர் இணைந்து நடித்துள்ளார்.
வனிதா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் ராபர்ட், வனிதா விஜயகுமார், ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியானது.
இந்த நிலையில் வனிதா விஜயகுமார் படத்திற்கு எதிராக இசையமைப்பாளர் இளையராஜா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் சரவணன் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் அவசர முறையீடு செய்துள்ளார்.
அதில், வனிதா விஜயகுமார் நடிப்பில் உருவாகி இன்று வெளியாகியுள்ள 'மிஸஸ் அண்ட் மிஸ்டர்' திரைப்படத்தில், என்னுடைய பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த படத்தில் இருந்து 'ராத்திரி சிவராத்திரி' என்ற பாடலை நீக்க வேண்டும் என்று இளையராஜா தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
- வைகோ அவருடைய நிலையை தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்காக அ.தி.மு.க.வை தேடி வந்தார்.
- வைகோ தற்போது வயது முதிர்வு காரணத்தினாலும், ஞாபக மறதியின் காரணத்தினாலும் ஏதோ பிதற்றிக்கொண்டு இருக்கிறார்.
போயஸ்கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்தது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறி இருந்தார்.
இதுதொடர்பாக அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் கூறியிருப்பதாவது:
வைகோ தொடர்ந்து அவருடைய நிலையை தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்காக அ.தி.மு.க.வை தேடி வந்தார். போயஸ் தோட்டத்தை தேடி வந்தார். புரட்சித்தலைவி ஜெயலலிதாவை தேடி வந்தார்.
தேடி வந்தது வீண்போகவில்லை. அவருடைய கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது. அவருடைய சின்னமான பம்பரம் சின்னத்திற்கு தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் கிடைப்பதற்காக அ.தி.மு.க. கடமையாற்றி அந்த வெற்றியை அவருக்கு ஈட்டித்தந்ததை அவர் மறந்து விடக்கூடாது.
வைகோ தற்போது வயது முதிர்வு காரணத்தினாலும், ஞாபக மறதியின் காரணத்தினாலும் ஏதோ பிதற்றிக்கொண்டு இருக்கிறார்.
ஆகவே, வைகோவை இனிமேல் பொய்கோ என்றுதான் சொல்ல வேண்டும் என்பதை போல இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
- முதலமைச்சரை தொடர்ந்து அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து இந்தியாவில் முதன் முதலில் போரிட்ட மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத்தொடர்ந்து அமைச்சர்கள், சென்னை மாநகராட்சி மேயர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
- பாட்டாளி மக்கள் கட்சி என்றாலே நினைவுக்கு வருவது சமூகநீதியும், மக்கள் நலனுக்கான போராட்டங்களும் தான்.
- தமிழ்நாட்டு மக்களை திமுக ஆட்சியின் கொடுமைகளில் இருந்து காக்க வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களின் குரலாகவும், ஊமை சனங்களின் பாதுகாவலனாகவும் திகழ்ந்து கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி வரும் ஜூலை 16 ம் நாள் 36 ஆண்டுகளை நிறைவு செய்து 37-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இந்த மகத்தான தருணத்தில் இம்மாபெரும் மக்கள் இயக்கத்தை கட்டி எழுப்பிய டாக்டர் ராமதாசுக்கு வணக்கங்களையும், உலகெங்கும் வாழும் பாட்டாளி சொந்தங்களாகிய உங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாட்டாளி மக்கள் கட்சி என்றாலே நினைவுக்கு வருவது சமூகநீதியும், மக்கள் நலனுக்கான போராட்டங்களும் தான். 36 ஆண்டுகளுக்கு முன் சமூகநீதிப் போராளி டாக்டர் ராமதாஸ். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டதன் நோக்கமே அனைத்து மக்களுக்கும் சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுக்க வேண்டும்; அனைத்துத் தரப்பு மக்களின் இருக்கும் உரிமைகளை பாதுகாக்க வேண்டும்; இழந்த உரிமைகளை மீட்டெடுத்துக் கொடுக்க வேண்டும் என்பது தான். இந்த பாதையில் தான் நமது பயணம் தொடருகிறது.
தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்றால் பாட்டாளி மக்கள் கட்சி வலிமையாக வேண்டும். அதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாகத் தான் பாட்டாளி மக்கள் கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, வாக்குச்சாவடி முகவர் குழுக்களை அமைத்தல் ஆகிய பணிகளைத் தொடங்கியிருக்கிறோம்.
கடந்த மே 30-ந் தேதி அந்தப் பணிகள் தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்திருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைய இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடையே பேரெழுச்சி காணப்படுகிறது.
இதை பயன்படுத்திக் கொண்டு உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி முகவர் குழுக்களை அமைக்கும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.
இவை அனைத்தையும் விட தமிழ்நாட்டு மக்களை திமுக ஆட்சியின் கொடுமைகளில் இருந்து காக்க வேண்டிய கடமையும் நமக்கு உள்ளது.
டாக்டர் ராமதாஸ் பிறந்தநாளான ஜூலை 25-ம் நாள் முதல் தமிழ்நாடு நாளான நவம்பர் 1-ந்தேதி வரை தமிழ்நாடு முழுவதும் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். அதுவே தி.மு.க. அரசை அகற்றுவதற்கான தொடக்கமாகட்டும்.
பாட்டாளி மக்கள் கட்சியின் 37-ம் ஆண்டு தொடக்கவிழாவை, அனைத்துக் கிளைகளிலும் குறைந்தது ஓர் இடத்திலாவது முறையான அனுமதி பெற்று கொடிக்கம்பம் அமைத்து பா.ம.க. கொடியேற்றி கொண்டாட வேண்டும்.
இந்த நாளில் தொடங்கி 9 மாதங்களில் நாம் மேற்கொள்ளவிருக்கும் பணிகள், மக்களை வதைக்கும் தி.மு.க. அரசுக்கு முடிவுரை எழுதும் வகையிலும், அடுத்த ஆண்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் 38-ம் ஆண்டு விழாவை ஆளும் கூட்டணிக் கட்சியாக கொண்டாடுவதற்கு தொடக்கவுரை எழுதும் வகையிலும் அமைய வேண்டும். உங்களுக்காக நான் இருக்கிறேன்... எனக்கு உங்களைத் தவிர வேறு எவருமில்லை. நாம் அனைவரும் இணைந்து உழைத்து புதிய வரலாற்றை படைப்போம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 பயங்கரவாதிகள் 2 ஆப்ரேஷன்கள் மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- பிற மாநிலங்களில் துணிக்கடை, மளிகைகக்டை உள்ளிட்ட தொழில்கள் நடத்தி தலைமறைவாக இருந்தவர்கள் பிடிபட்டுள்ளனர்.
சென்னை:
தமிழக டி.ஜி.பி.சங்கர் ஜிவால் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பயங்கரவாதிகள் கைது குறித்து விளக்கம் அளித்து அவர் கூறியதாவது:-
* கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி டெய்லர் ராஜா 30 ஆண்டுகளுக்குப் பின் கைதாகி உள்ளார். கர்நாடகாவில் பதுங்கியிருந்த டெய்லர் ராஜாவை தமிழ்நாடு பயங்கரவாத தடுப்புப்படை கைது செய்துள்ளது.
* பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 3 பயங்கரவாதிகள் 2 ஆப்ரேஷன்கள் மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
* பிற மாநிலங்களில் துணிக்கடை, மளிகைகக்டை உள்ளிட்ட தொழில்கள் நடத்தி தலைமறைவாக இருந்தவர்கள் பிடிபட்டுள்ளனர்.
* ஆந்திர போலீசாருடன் இணைந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர், கோவை போலீசார் சிறப்பாக செயல்பட்டனர்.
* குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
- குறைந்தது 4 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடு செய்யாத அவலம்.
- ஆமை வேகத்தில் மாட வீதிகளில் சிமெண்ட் சாலைகள் அமைப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான, கடந்த 50 மாதகால தி.மு.க. அரசு, மக்களின் அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் சிறிதும் அக்கறை இல்லாமல் இருந்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.
திருவண்ணாமலை மாநகரில் அறநிலையத்துறை, மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுத் துறைகளின் அலட்சியத்தாலும், ஆமைவேகப் பணிகளினாலும் பக்தர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திண்டாடுகின்றனர். அந்த வகையில், திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம், திருவண்ணாமலையில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளால், பக்தர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன் விபரம் வருமாறு:
பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு முறையான வழிமுறைகளைக் கையாளாததால், அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு நாள்தோறும் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பலமணி நேரம் காத்துக்கிடக்கும் அவலம்.
குறைந்தது 4 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடு செய்யாத அவலம்.
தமிழ்நாட்டில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுவாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு முறையான வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன. அதேபோல், முறையான பார்க்கிங் வசதி இல்லாத காரணத்தால் அடாவடி கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
ஆமை வேகத்தில் மாட வீதிகளில் சிமெண்ட் சாலைகள் அமைப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல்.
மாட வீதிக்கு வாகனங்கள் வரத் தடை இருக்கின்ற காரணத்தால் வியாபாரிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு.
மோசமான சாலைகள், சாலைகளில் கழிவுநீர் மற்றும் குப்பைகள் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அவதிக்குள்ளாகும் அவலம்.
மாநகராட்சி கடைகளுக்கு பல மடங்காக வாடகை உயர்வு.
திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள 18 கிராமங்களில் எந்தஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில், அதனை மாநகராட்சியுடன் இணைத்து ஏழை, எளிய மக்களிடமிருந்து கூடுதல் வரிகளை மட்டுமே வசூலிப்பதாகக் குற்றச்சாட்டு.
மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல் மெத்தனப்போக்கோடு இருந்து வரும், தி.மு.க.வின் ஸ்டாலின் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தராத அறநிலையத் துறையைக் கண்டித்தும், திருவண்ணாமலை மாநகராட்சியின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், ஆமை வேகத்தில் பணிகளை மேற்கொண்டு வரும் அரசுத் துறையினரைக் கண்டித்தும், அரசுத் துறைகளின் நிர்வாகச் சீர்கேடுகளை சரிசெய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தி.மு.க.வின் ஸ்டாலின் அரசை கண்டித்தும்; பக்தர்கள், வியாபாரிகள் மற்றும் மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அ.தி.மு.க. திருவண்ணாமலை கிழக்கு மாவட்டத்தின் சார்பில் 16-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில், திருவண்ணாமலை மாநகராட்சி அண்ணாசிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர்கள் வீரமணி தலைமையிலும்; ராமச்சந்திரன் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், திருவண்ணாமலை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி, பேரூராட்சி மன்ற முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மக்களின் அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தராத விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசையும், மாவட்ட நிர்வாகம் மற்றும் திருவண்ணாமலை மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






