என் மலர்
சென்னை
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி 150 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சென்னை:
சென்னையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமைகளில் காலை, மாலை என இருவேளையில் தங்கம் விலை உயர்ந்து சவரன் ரூ.85,120-க்கு விற்பனையானது. இதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை சற்று குறைந்தது. கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,600-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.84,800-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்றும் இரண்டாவது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 90 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10,510-க்கும் சவரனுக்கு 720 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.84,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 150 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
24-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.84,800
23-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.85,120
22-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.83,440
21-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,320
20-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.82,320
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
24-09-2025- ஒரு கிராம் ரூ.150
23-09-2025- ஒரு கிராம் ரூ.150
22-09-2025- ஒரு கிராம் ரூ.148
21-09-2025- ஒரு கிராம் ரூ.145
20-09-2025- ஒரு கிராம் ரூ.145
- சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், கல்வி அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர் பாராட்டிச் சிறப்பிக்கப்பட உள்ளனர்.
- நேரு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சமூகநீதியை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு அரசு, கல்வி அனைத்துத் தரப்பினருக்கும் சென்று சேரவேண்டும் என்கிற நோக்கத்தோடு அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கு 'புதுமைப் பெண்' என்கிற திட்டத்தின் வாயிலாகவும் மாணவர்களுக்கு 'தமிழ்ப் புதல்வன்' என்கிற திட்டத்தின் மூலமும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது.
2025-26 கல்வி ஆண்டிற்கான "புதுமைப் பெண் - தமிழ்ப் புதல்வன்" திட்டங்களின் தொடக்க விழா இன்று மாலை 4 மணியளவில் சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.
'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்னும் கருப் பொருளில் கொண்டாடும் இவ்விழாவில் தலைமையேற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி திட்டங்களை தொடங்கி வைக்கின்றனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கின்றார்.
தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சியின் கொண்டாட்டமாக இவ்விழா மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற உள்ளது.
கல்வி சார்ந்த 5 முக்கிய திட்டங்களையும் சாதனைகளையும் முன்னிலையாக வைத்து இவ்விழா 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.
முதல் பகுதியாக தமிழ்நாட்டு மக்களின் மனதுக்கு நெருக்கமானத் திட்டமான 'முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்" இடம் பெறும். அதனைத் தொடர்ந்து 'நான் முதல்வன்', 'விளையாட்டுச் சாதனையாளர்கள்', 'புதுமைப் பெண்-தமிழ்ப் புதல்வன்' மற்றும் 'அரசுப் பள்ளிகளில் இருந்து முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் சென்ற சாதனையாளர்கள்' ஆகிய அரங்கங்கள் நடைபெறும்.
இவ்வரங்கங்களில் இத்திட்டங்களால் பயன்பெற்றவர்கள், இத்திட்டத்தின் மூலம் சாதித்தவர்கள், அவர்களுக்குத் துணை நின்றவர்கள், ஆசிரியர்கள், நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களையும் தங்கள் வாழ்வில் இத்திட்டங்களின் தாக்கத்தையும் பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர்.
இதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி இணைந்து 2025-26-ம் ஆண்டிற்கான "புதுமைப்பெண்-தமிழ்ப் புதல்வன்" திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்கள். இந்த ஆண்டு இத்திட்டத்தின் மூலம் 2.57 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சிக்குத் தொடர்ந்து பங்காற்றி வரும் சமூக சிந்தனையாளர்கள், சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், கல்வி அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர் பாராட்டிச் சிறப்பிக்கப்பட உள்ளனர்.
இவ்விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், அமைச்சர்கள் கீதாஜீவன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி, மதிவேந்தன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள் பலர் பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியும் கலந்து கொள்வதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
நேரு உள்விளையாட்டு அரங்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
தெலுங்கானாவில் இருந்து முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி சாலை மார்க்கமாகவே சென்னைக்கு வருகை தருவதால் சென்னை புறநகர் பகுதிகளிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
செங்குன்றம், புழல் வழியாக ரேவந்த் ரெட்டி வருகை தர இருப்பதால் அந்த பகுதிகளில் அவர் வரும் போதும் தீவிரமாக கண்காணிப்பதற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி வரும் பாதைகளிலும் போலீசார் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கு உயர் போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- திட்டம் குறித்து பல பயணிகளுக்கு இன்றளவும் தெரிவதில்லை.
- முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் வந்து நிற்கும் இடத்தில் வைத்து பயணிகளுக்கு நேரடியாக உணவு வழங்குகின்றன.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம், ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் இணைந்து முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக கடந்த 2023-ம் ஆண்டு ரூ.20-க்கு 'சிக்கன உணவு' என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த 'சிக்கன உணவு' திட்டத்தின் நோக்கம் பயணிகளுக்கு சத்தான மற்றும் குறைந்த விலை உணவுகளை வழங்குவதாகும். இத்திட்டம் குறித்து பல பயணிகளுக்கு இன்றளவும் தெரிவதில்லை.
எனவே, சென்னை சென்டிரல், எழும்பூர், செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் சிக்கன உணவு விற்பனை மையங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 27 ரெயில் நிலையங்களில் 64 சிக்கன உணவு கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்கள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் வந்து நிற்கும் இடத்தில் வைத்து பயணிகளுக்கு நேரடியாக உணவு வழங்குகின்றன.
இந்த கடைகளில் 200 கிராம் எடையுள்ள எலுமிச்சை சாதம், தயிர் சாதம், புளி சாதம், பருப்பு கிச்சடி மற்றும் பூரி-கிழங்கு போன்ற அரிசி வகை உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- விஜயின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்திற்கான திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
- 18 சனிக்கிழமைகள் மற்றும் 2 ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுப்பயணம்.
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தனது முதல் அரசியல் பிரசாரத்தை கடந்த 13-ந்தேதி திருச்சியில் தொடங்கினார். இதனை தொடர்ந்து தனது அரசியல் பிரசாரத்தை நடத்தி வருகிறார். கட்டுக்கடங்காத ரசிகர்கள், தொண்டர்கள் கூட்டத்தால் குறித்த நேரத்தில் விஜயின் பிரசாரத்தை தொடங்க முடியாமல் காலதாமதத்துடன் நடைபெற்றது. இதனால் அவரை காண வரும் ரசிகர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் அவல நிலையும் ஏற்படுகிறது.
இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்திற்கான திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, விஜயின் சுற்றுப்பயணம் மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 20-ந்தேதி வரை மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை திட்டமிட்டிருந்த நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 18 சனிக்கிழமைகள் மற்றும் 2 ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுப்பயணம் இருக்கும் என கூறப்படுகிறது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- அகரம் மெயின் ரோடு, மப்பேடு சந்திப்பு, பாரதிதாசன் தெரு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (26.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
ரெட் ஹில்ஸ்: சோத்துப்பெரும்பேடு, நாரணம்பேடு, சோழவரம், கோட்டைமேடு, பெரிய காலனி, செம்புலிவரம், ஒரக்காடு சாலை.
தாம்பரம்: புதுத்தாங்கல் முல்லை நகர், டிஎன்எச்பி, ஸ்டேட் பாங்க் காலனி, முடிச்சூர் ரோடு, பழைய தாம்பரம், படேல் நகர், இரும்புலியூர், சாய் நகர், டிடிகே நகர், பையார் நகர், கிருஷ்ணா நகர், குள்ளக்கரை, வைகை நகர், டவுன் தாம்பரம், சிடிஓ காலனி, சக்தி நகர், கன்னடக்கின்டா சாலை தெரு, பாரதி நகர், நல்லெண்ண நகர், வீரலட்சுமி நகர், கண்ணன் அவென்யூ, குறிஞ்சி நகர், அமுதம் நகர், நித்யானந்தா நகர், பெருமாள் தெரு, ஜோதி நகர், காந்தி நகர்.
மாடம்பாக்கம்: அகரம் மெயின் ரோடு, மப்பேடு சந்திப்பு, பாரதிதாசன் தெரு, செக்ரடேரியட் காலனி, வெங்கடமங்கலம் மெயின் ரோடு, திருவஞ்சேரி.
ஆயிரம் விளக்கு: அண்ணாசாலை மதர்ஷா பில்டிங் ஃபர்ஸ்ட் பாயிண்ட், கிரீம்ஸ் ரோடு, அலி டவர், எம்ஆர்எஃப், ரங்கூன் ஸ்ட்ரீட் ஃபர்ஸ்ட் பாயின்ட், அண்ணாசாலை, மகிஸ் கார்டன், ஷாபி முகமது சாலை, மெயின் அப்பல்லோ, க்ரீம்ஸ் லேன், ஸ்பென்சர் பிளாசா மால்.
செம்பியம்: தணிகாசலம் நகர், சக்தி வேல் நகர், பிரபு தெரு, 80 அடி சாலை, சக்தி விநாயகர் கோவில் தெரு, மேரி எலியன் தெரு, அன்னாள் காந்தி தெரு, தட்சிணாமூர்த்தி தெரு, ராமலிங்க காலனி, எம்பிஎம் தெரு, சுப்ரமணி நகர், திருப்பூர் குமரன் தெரு, திரு.வி.க. தெரு, காமராஜ் நகர், ஸ்ரீனிவாஸ் நகர், ஆசீர் தெரு, காமராஜ் நகர், என். காந்திமதி தெரு.
போரூர்: குன்றத்தூர் ரோடு, காரம்பாக்கம், மதானந்தபுரம், மவுண்ட் பூந்தமல்லி ரோடு, கெருகம்பாக்கம், முகலிவாக்கம், ராமாபுரம், சின்ன போரூர், கொளப்பாக்கம்.
- பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, ‘இன்ஸ்டாகிராமில்’ 15 லட்சம் பேர் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
- தமிழக அரசியல்வாதிகளில் நான்கு பேருக்கே அதிக பின் தொடர்பவர்கள் உள்ளனர்.
சென்னை:
சமூக வலைத்தளங்கள் மக்களின் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கின்றன. அதனால் அரசியல்வாதிகள், நடிகர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் கணக்குகளை வைத்திருக்கின்றனர். அவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையிலேயே, அவர்களுக்கான ரசிகர்கள் எவ்வளவு என்பதை கணிக்கலாம். அந்த வகையில், தமிழக அரசியல்வாதிகளில் அதிக பின்தொடர்பவர்களை பெற்றிருப்பவர் தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் ஆவார்.
விஜய்க்கு, 'இன்ஸ்டாகிராமில்' 1 கோடியே 46 லட்சம், 'பேஸ்புக்'கில் 77 லட்சம், 'எக்ஸ்' தளத்தில் 55 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். ஒரே நபர் 3 தளங்களிலும் பின்தொடர்ந்து இருக்கக்கூடும். எனவே, மூன்றையும் சேர்த்து சராசரியாக பார்த்தால், சுமார் 93 லட்சம் பேர் விஜய்யை பின்தொடர்கிறார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 'இன்ஸ்டாகிராமில்' 18 லட்சம், 'பேஸ்புக்'கில் 31 லட்சம், 'எக்ஸ்' தளத்தில் 40 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். சராசரியாக 30 லட்சம் பேர் அவரை பின்தொடர்கிறார்கள்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, இன்ஸ்டாகிராமில் 63 ஆயிரம், 'பேஸ்புக்'கில் 1.68 லட்சம், 'எக்ஸ்' தளத்தில் 6.55 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். சராசரியாக 2.95 லட்சம் பேர் இருக்கிறார்கள்.
பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, 'இன்ஸ்டாகிராமில்' 15 லட்சம், 'பேஸ்புக்'கில் 5.77 லட்சம், 'எக்ஸ்' தளத்தில் 10 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். சராசரியாக 10.25 லட்சம் பேர் இருக்கிறார்கள்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, 'இன்ஸ்டாகிராமில்' 98 ஆயிரம், 'பேஸ்புக்'கில் 11 லட்சம், 'எக்ஸ்' தளத்தில் 37 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். சராசரியாக 16.25 லட்சம் பேர் அவரை பின்தொடர்கிறார்கள்.
தமிழக அரசியல்வாதிகளில் இந்த நான்கு பேருக்கே அதிக பின் தொடர்பவர்கள் உள்ளனர். மற்ற தலைவர்களுக்கு மிகக் குறைந்த அளவே இருக்கிறது.
விஜய்யை பொறுத்தவரை, அவர் ஏற்கனவே சினிமா பிரபலம் என்பதால், தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் அவரை பின்தொடர்கிறார்கள். இதனால், அவருக்கான பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை இயற்கையாகவே அதிகமாக இருக்கிறது. அதேபோல் மற்ற கட்சியினர் கூட விஜயை ஒரு நடிகராக பின்தொடர்வார்கள்.
எனவே விஜய்யின் இந்த எண்ணிக்கையை ஓட்டு எண்ணிக்கையாகக் கருதக்கூடாது. எடுத்துக்காட்டாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு 'இன்ஸ்டாகிராமில்' 9 கோடியே 75 லட்சம் பின்தொடர்பவர்கள் உள்ளனர். ஆனால் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு அதைவிட அதிகமாக 27 கோடியே 30 லட்சம் பின்தொடர்பவர்கள் இருக்கிறார்கள். காரணம், உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் இருப்பதே. அதேபோல், விஜய்க்கும் திரை உலக பிரபலம் என்பதால் அதிக பின்தொடர்பவர்கள் இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது என்று சமூகவலைதள ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
- டிக்கெட்டுகளை ரத்து செய்ய முடியாது.
- டிக்கெட்டுகள் எடுத்த அடுத்த 3 மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் பஸ், மெட்ரோ ரெயில், புறநகர் மின்சார ரெயில் மற்றும் வாடகை ஆட்டோ, கார் ஆகிய அனைத்து போக்குவரத்தையும் ஒன்றிணைக்கும் வகையில் ஒரே கியூ-ஆர் பயணச்சீட்டு மூலம் பயணம் செய்ய சென்னை ஒன்று என்ற புதிய செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 22-ந்தேதி அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த செயலியில், புறநகர் மின்சார ரெயிலில் டிக்கெட் எடுத்து பயணிக்கலாம். ஏற்கனவே உள்ள யூ.டி.எஸ்., செயலி இருப்பது போல், இந்த செயலியையும் பயணியர் பயன்படுத்தலாம். புறநகர் ரெயில் கட்டணத்தில் மாற்றம் இல்லை. 'ஏ.சி.' மின்சார ரெயில் டிக்கெட் எடுக்க முடியாது. டிக்கெட் பரிசோதனையின்போது, பயணியர் 'அசல் ரெயில் டிக்கெட்டைக் காட்டு' பக்கத்தின் வாயிலாக, டிக்கெட்டுகளைக் காண்பிக்க வேண்டும். டிக்கெட்டுகளை ரத்து செய்ய முடியாது. இந்த டிக்கெட்டுகள் எடுத்த அடுத்த 3 மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கொரோனா காலத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக செயல்பட்டார்.
- கொரோனா பரவல் காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராக திறம்பட பணியாற்றிய இவரது மறைவு, மிகப் பெரும் இழப்பாகும்.
தமிழக எரிசக்தித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பீலா வெங்கடேசன் (55), ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் கொரோனா காலத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக செயல்பட்டார்.
இதனிடையே, பீலா வெங்கடேசன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீலா வெங்கடேசன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் எதிர்கட்சித் தலைவர் இபிஎஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர். பீலா வெங்கடேசன் இ.ஆ.ப. அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், அரசு ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட இரங்கல் பதிவில், ஐஏஎஸ் அதிகாரி திருமதி பீலா வெங்கடேசன் அவர்களின் மறைவுச் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
கொரோனா பரவல் காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராக திறம்பட பணியாற்றிய இவரது மறைவு, மிகப் பெரும் இழப்பாகும்.
திருமதி பீலா வெங்கடேசன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன். ஓம் சாந்தி!" என்று குறிப்பிட்டுள்ளார்.
- தமிழக எரிசக்தித்துறை முதன்மை செயலாளராக இருந்தவர் டாக்டர் பீலா வெங்கடேசன்
- இவர் தமிழக சுகாதாரத்துறை செயலாளராகவும் செயல்பட்டுள்ளார்.
சென்னை:
தமிழக எரிசக்தித்துறை முதன்மை செயலாளர் டாக்டர் பீலா வெங்கடேசன் (55), ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் கொரோனா காலத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக செயல்பட்டார்.
இதனிடையே, பீலா வெங்கடேசன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீலா வெங்கடேசன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பீலா வெங்கடேசனின் தந்தை எல்.என்.வெங்கடேசன் தமிழக காவல்துறையில் டி.ஜி.பி.யாக பதவி வகித்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாலாவை பற்றிப் பேசினால்தான் உங்களுக்கு வருமானம் வரும்.
- நீங்கள்தான் பாலாவை பற்றிப் பேசி பிழைக்க வேண்டிய நிலையில் உள்ளீர்கள்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பல கோடி மக்கள் வறுமையில் வாடும் இந்த நாட்டில், உதவி செய்யும் உள்ளம் படைத்தவர்கள் வெகுசிலர் மட்டுமே. முட்கள் அடர்ந்து நிறைந்த காட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் பூக்கள் பூக்கிறது. அப்படி அரிதினும் அரிதாகப் பூத்த மலர்தான் தம்பி பாலாவும். தன்னை உருக்கி மற்றவர்களுக்கு ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தி போல, தம்மை வருத்தி மற்றவர் வாழ வழி ஏற்படுத்தித் தரும் தம்பி பாலாவின் உயர்ந்த உள்ளமும், உதவுகின்ற செயல்களும் மிகுந்த பாராட்டுக்குரியது.
வறுமையில் வாடும் மக்களுக்கு தம்பி பாலா தம்மால் முடிந்த அளவு உதவிகளைச் செய்து வருகின்றார். நாம் அதனை வாழ்த்தி, வரவேற்று ஊக்கப்படுத்த வேண்டும். முடிந்தால் அவரைப்போல தாமும் உதவிகள் செய்ய வேண்டும். மாறாக உதவி செய்பவர்கள் புகழ் பெறுகிறாரே என்று பொறாமை கொள்வதும், அவருக்கு கிடைக்கும் நற்பெயரைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அவதூறுகளை அள்ளித்தெளிப்பதும் தரம் தாழ்ந்த இழிச்செயலாகும்.
தம்பி பாலா மீது சமூக ஊடகங்கள் வாயிலாக கடந்த 10 நாட்களாக சிலர் செய்யும் எதிர்மறையான அவதூறு தாக்குதல் அனைத்தும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒருவர் தன்னலமற்று தான் பிறந்த மண்ணின் மக்களுக்கு உதவி செய்ய முன்வந்தால் எத்தனை எத்தனை கேள்விகள்? உதவி செய்கின்றவருக்கு எங்கிருந்தோ பணம் வருகின்றது. அவர் சர்வதேச கைக்கூலி என்கின்றனர். சரி, அப்படியே இருக்கட்டும். அதனால் உங்களுக்கு என்ன பிரச்சனை? எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு பரப்பும் நீங்கள்தான் சர்வதேச கைக்கூலி.
எங்கிருந்தோ பணம் வருகின்றது என்று கண்டுபிடித்தவர், அது எங்கிருந்து வருகின்றது என்று கண்டுபிடித்துச் சொல்ல முடியாதது ஏன்? உங்களுக்கெல்லாம் வராத பணம் அவருக்கு மட்டும் ஏன் வருகின்றது? இந்த நாட்டில் உளவுத்துறை உள்ளது. பாதுகாப்பு முகமை உள்ளது. வருமானவரித்துறை உள்ளது. சிறப்புப் புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை உள்ளது. அது அவர்களுடைய வேலை, அவர்களுடைய கவலை. உங்களுக்கு என்ன கவலை? எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு, அவருக்கு எங்கிருந்து பணம் வருகின்றது? அவர் எப்படி மருத்துவமனை கட்டுகிறார்? என்றெல்லாம் நீங்கள் ஆராய்ச்சி செய்வது ஏன்?
இதையெல்லாம் கேட்பவர்கள் எப்படி இவ்வளவு கோடிக்கு சமாதி கட்டுனீங்க? எப்படி இவ்வளவு கோடி போட்டு திரைப்படம் எடுக்குறீங்க? அப்படியென்று யாரையும் கேட்பது இல்லையே ஏன்? தம்பி பாலாவுக்கு எங்கிருந்து பணம் வந்தால் உங்களுக்கு என்ன? அதைப் பற்றி கவலைப்பட வேண்டியது அரசும், அது சார்ந்த நிர்வாக அமைப்புகளும்தான். உங்களுக்கு என்ன வேலை அதில்? ஏனென்றால், இப்போது தம்பி பாலாவை பற்றிப் பேசினால்தான் உங்களுக்கு வருமானம் வரும்? நீங்கள்தான் தம்பி பாலாவை பற்றிப் பேசி பிழைக்க வேண்டிய நிலையில் உள்ளீர்கள்.
மற்றவர் கண்ணீரைத் துடைத்து உதவ வரும் இளம்பிள்ளைகளை வருமுன்னே இப்படி கசக்கித் தூரப்போட்டீர்கள் என்றால், இனி வருங்காலத்தில் இதுபோல யார் உதவ முன்வருவார்கள்? பாலா போன்ற உதவும் உள்ளங்களை நாம் கொண்டாடவில்லை என்றாலும் பரவாயில்லை; துண்டாடாமல் இருங்கள். போற்றவில்லை என்றாலும் பரவாயில்லை; தூற்றாமல் இருங்கள். இப்பொழுது தம்பி பாலாவை பற்றி அவதூறு பேசி, நீங்கள் சாதித்தது என்ன? பிறர் துயர் துடைக்கும் தம்பி பாலாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதே தவிர இதனால் நிகழ்ந்த நன்மை என்ன? இவற்றையெல்லாம் பார்க்கும்போது இவ்வளவு அருவருப்பான சமூகத்தில்தான் நாம் வாழ்கின்றோமா? என்ற நடுக்கம் வருகின்றது. யாருக்கு என்ன உதவி செய்தாலும் அதில் குறை சொல்பவர்கள், அவர்கள் இதுவரை மற்றவர்களுக்குச் செய்த உதவிகள் என்ன? என்ற கேள்விக்கு பதில் தருவார்களா?
அன்புத்தம்பி பாலாவுக்கு நான் சொல்வது, எது குறித்தும் யோசிக்காமல், கவலைப்படாமல் இல்லாதவர்களுக்கு உதவும் தொண்டினை தொடர்ந்து செய்துகொண்டே இரு. தூரத்தில் இருந்தாலும் என்னைப் போன்று பல்லாயிரக்கணக்கான அண்ணன்கள் உன்னை நேசித்துத் துணை நிற்கின்றோம். எத்தனையோ தாய்மார்கள் உன்னை வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
அன்று உன்னிடம் சொன்னதையே மீண்டும் உனக்குச் சொல்கிறேன். 'அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம்!' என்ற நம் அறிவு மூதாட்டி ஔவையின் வார்த்தையை உச்சரித்துக்கொண்டே முன்னேறிச் சென்றுகொண்டே இரு!
மந்திரம் ஜெபிக்கிற உதடுகளை விட, மற்றவர்களுக்கு உதவுகிற கைகளைத்தான் மக்கள் அதிகமாக விரும்புகிறார்கள்! அதனால்தான் உன்னை விரும்புகிறார்கள்.
அன்புத்தம்பி பாலாவுக்கு
அன்பும், வாழ்த்துகளும்!
என சீமான் கூறினார்.
- தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என ஜாய் கிரிசில்டா புகார்
- சமூக வலைத்தளங்களில் இருவருக்கும் இடையிலான தொடர்பு குறித்த படங்களையும் பகிர்ந்திருந்தார்.
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருணம் செய்து ஏமாற்றி விட்டார். வயிற்றில் வளரும் குழந்தைக்கு அவர்தான் தந்தை என ஜாய் கிரிசில்டா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்திருந்தார். மேலும், சமூக வலைத்தளங்களில் இருவருக்கும் இடையிலான தொடர்பு குறித்த படங்களையும் பகிர்ந்திருந்தார்.
காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் அவருடைய புகார் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. துணை ஆணையர் வனிதா ஜாய் கிரிசில்டாவிடம் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டார்.
இந்நிலையில், ஜாய் கிரிசில்டா கொடுத்த புகாரில், சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் வரும் 26ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று நீலாங்கரை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
- படிப்புதான் நமக்கு கடைசி வரை துணை நிற்கும்.
- கவர்ச்சியான சொற்களை சொல்லி பின்னுக்கு இழுத்துக் கொண்டு போகக் கூடிய ஒரு சூழ்நிலையை சிலர் ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி, தையல் எந்திரம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு அனிதா அச்சீவர்ஸ் நிகழ்ச்சிக்கு வந்தவுடன் என்னுடைய களைப்பெல்லாம் போய் உற்சாகம் வரக்கூடிய நிகழ்ச்சியாக அமைந்து உள்ளது.
உங்கள் முகத்தில் தோன்றக் கூடிய மகிழ்ச்சியை பார்க்கும்போது இன்னும் நான் என்னுடைய கடமையை வேகமாக நிறைவேற்றிட வேண்டும்.

இங்கே கூட அனிதா அச்சீவர்ஸ் மூலம் பலன் பெற்றிருக்கக்கூடிய 2 சகோதரிகள் பேசுகிறபோது குறிப்பிட்டு சொன்னார்கள்.
இன்னும் செய்ய வேண்டும். மாணவர்களாகிய நாங்கள் எதிர்பார்க்கக்கூடிய பணிகளை நீங்கள் நிறைவேற்றி கொண்டிருக்கிறீர்கள். இருந்தாலும் நீங்கள் இன்னும் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனால் நிச்சயமாக உறுதியாக சொல்கிறேன். என்னுடைய உடலில் உயிர் இருக்கிற வரையிலே, தலைவர் கலைஞர் கற்றுத் தந்திருக்கக் கூடிய அந்த உழைப்பு எனது உதிரத்திலே இருக்கிற வரையில் நிச்சயமாக, உறுதியாக, நான் என்னுடைய கடமையை நிறைவேற்றுவேன். நீங்கள் யாரும் கவலைப்பட வேண்டாம்.
என்னமோ தெரியவில்லை. கொளத்தூர் தொகுதிக்கு வந்துவிட்டால் இப்படியெல்லாம் பேசத் தோன்றுகிறது.
1860 பேருக்கு கண்ணாடி வழங்கி அதிலும் 2 ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு கண் மருத்துவமனையில் தொடர்ந்து வழங்கி இன்றுடன் சேர்த்து 9,123 பேருக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டு உள்ளது.
அதே போல் இந்த நிகழ்ச்சியை பொறுத்தவரை 126 மாணவ-மாணவிகளுக்கு லேப்-டாப், 356 பெண்களுக்கு தையல் எந்திரங்களும் வழங்கி இருக்கிறோம்.
உங்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இந்த அகாடமியில் நீங்கள் பெற்றிருக்க கூடிய பயிற்சி ஒரு சிறிய துவக்கம் தான்.
இந்த பயிற்சி உங்களுக்கான வாய்ப்புகளை அடையாளம் காட்டக்கூடிய, ஆனால் அதே பாதையில் வெற்றி நடை போட வேண்டும் என்றால், அதை தொடர்ந்து கற்றுக் கொள்ளக்கூடிய ஆர்வம் குறைந்து விடக் கூடாது.
இன்றைக்கு தகவல் தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. மனிதர்களின் வேலைச் சுமையை இந்த வளர்ச்சி வெகுவாக குறைத்து வருகிறது. அதற்கேற்ற மாதிரி நீங்களும் 'அப்-டேட்' ஆகி வர வேண்டும். அதுதான் என்னுடைய விருப்பம்.
இன்றைக்கு இணையம் முழுக்க அறிவுத் தகவல் கொட்டிக் கிடக்கிறது. நல்ல பயனுள்ள தகவல்களை பார்த்து அந்த திறமையை மேலும் மேலும் நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நிறைய ஆன்லைன் படிப்பு இருக்கிறது. எது உங்களுக்கு வசதியாக இருக்குமோ அதை தேடி படிக்க வேண்டிய, பயிற்சி பெற வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது.
படித்து விட்டோம். வேலை கிடைத்து விடும் என்று அலட்சியமாக இருந்து விடாதீர்கள். அஞ்சல் வழியில் மேற்படிப்பை தொடருங்கள். படிப்புதான் நமக்கு கடைசி வரை துணை நிற்கும்.
அதுதான் உங்கள் வாழ்க்கையில் உறுதுணையாக இருக்கும். கல்விக்கு இடைஞ்சல் ஏற்படுத்தக்கூடிய, கல்வியினால் பெறப்படும் அறிவை கொச்சைப்படுத்த பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது எண்ணம் நீங்கள் முன்னேற வேண்டும் என்பது கிடையாது. கவர்ச்சியான சொற்களை சொல்லி பின்னுக்கு இழுத்துக் கொண்டு போகக் கூடிய ஒரு சூழ்நிலையை சிலர் ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.
எனவே எதிர்காலத்திற்கு என்ன தேவையோ அதை இந்த அரசு செய்யும். உங்களுக்கு திராவிட மாடல் அரசு இருக்கிறது என்பதை நீங்கள் மறந்து விட வேண்டாம்.
அதனால்தான் தமிழ்நாடு முழுவதும் இன்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு இருக்கிறோம். தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம் என்பது நமது ஒற்றுமையை காட்டுகிறது.
எனவே தமிழ்நாட்டின் அடுத்த வளர்ச்சிக்கு அடித்தளமாக இந்த கல்வி நிச்சயமாக இருக்கிறது. எனவே உங்கள் இல்லத்தில் நீங்கள் முன்னேற்றம் காண வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.






