என் மலர்tooltip icon

    சென்னை

    • ஏழை பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவசமாக கியாஸ் இணைப்பு வழங்கப்படுகிறது.
    • சிலிண்டர் வாங்கும்போது அதற்கு மானியமும் வழங்கப்படுகிறது.

    சென்னை:

    பொதுத்துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையில் சமையல் கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, 'பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா' எனப்படும் இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டத்தை கடந்த 2016-ம் ஆண்டு மே 1-ந்தேதி தொடங்கியது.

    இந்த திட்டத்தின் கீழ் ஏழை பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவசமாக கியாஸ் இணைப்பு வழங்கப்படுகிறது. கியாஸ் அடுப்பு, டெபாசிட் தொகை, ரப்பர் குழாய், ரெகுலேட்டர், முதல் சிலிண்டர் ஆகியவற்றின் செலவை மத்திய அரசு ஏற்கிறது. சிலிண்டர் வாங்கும்போது அதற்கு மானியமும் வழங்கப்படுகிறது.

    இந்த திட்டத்தில் தமிழகத்தில் 40 லட்சம் பேருக்கு இலவச கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த திட்டத்தின் கீழ் 25 லட்சம் புதிய இலவச கியாஸ் இணைப்புகளை வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதில் 10 சதவீதம் அதாவது, 2½ லட்சம் இணைப்புகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எண்ணெய் நிறுவனங்களிடம் எழுந்துள்ளது.

    இதுகுறித்து பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், 'புதிதாக இலவசமாக வழங்கப்பட உள்ள 25 லட்சம் கியாஸ் இணைப்புகளில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எத்தனை இணைப்பு என்று ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. தமிழகத்தில் நகரமயமாக்கல் அதிகம் உள்ளது. எனவே அதற்கு ஏற்ப கியாஸ் இணைப்புகள் ஒதுக்கீடு செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன' என்றார்.

    • மதுரை மற்றும் டெல்லிக்கு சென்று இருந்த த.வெ.க. வக்கீல் குழு நிர்வாகிகள் இன்று காலை சென்னை திரும்பி இருந்தனர்.
    • இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ந்தேதி கரூர் அருகே வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் செய்த போது கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.

    நாட்டையே அதிர்ச்சியில் உலுக்கிய இந்த சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் தான் காரணம் என்று பல்வேறு கட்சிகளும் குற்றம் சுமத்தி வருகின்றன. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று த.வெ.க. சார்பில் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

    த.வெ.க. உள்பட மொத்தம் 7 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. நேற்று அந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சி.பி.ஐ. விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.

    மேலும் நெடுஞ்சாலைகளில் அரசியல் கூட்டங்கள் நடத்த கூடாது என்று உத்தரவிட்டனர். அதோடு த.வெ.க. தலைவர் விஜய்யை கண்டித்து பல்வேறு கருத்துக்களையும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    அதோடு கூடுதல் இழப்பீடு கோரி மனுதாக்கல் செய்யலாம் என்றும் அந்த மனுவுக்கு தமிழக அரசும், விஜய்யும் 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இந்த வழக்குகளின் விசாரணையை தொடர்ந்து த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமின் கேட்டு தாக்கல் செய்து இருந்த மனுக்களை நீதிபதிகள் ஆய்வு செய்தனர். பிறகு நீதிபதிகள் அவர்கள் இருவருக்கும் முன்ஜாமின் வழங்க மறுத்து மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

    இது தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், "கரூர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் அவர்கள் இருவரும் பொறுப்பு ஏற்க வேண்டும். காவல்துறை அனுமதி வழங்கிய நேரத்தை மீறியுள்ளனர். எனவே மனுதாரர்கள் கோரிக்கையை ஏற்க முடியாது" என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையே கரூர் சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தினேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு மீது நீதிபதி செந்தில்குமார் நேற்று பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். அவர் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார்.

    அது போல த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜூனா வன்முறையை தூண்டும் வகையில் எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நீதிபதி செந்தில் குமார் வெளியிட்ட உத்தரவில், "ஆதவ் அர்ஜூனா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை கிளை நீதிபதிகளின் இந்த அதிரடி உத்தரவுகள் விஜய்க்கும், தமிழக வெற்றிக் கழகத்துக்கும் ஏற்பட்ட பின்னடைவாக கருதப்படுகிறது.

    இதையடுத்து த.வெ.க. தலைவர் விஜய் இன்று சென்னையில் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். வக்கீல் பிரிவினரையும் அவர் அழைத்து இருந்தார். மதுரை மற்றும் டெல்லிக்கு சென்று இருந்த த.வெ.க. வக்கீல் குழு நிர்வாகிகள் இன்று காலை சென்னை திரும்பி இருந்தனர்.

    அவர்களுடன் விஜய் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்தினார். ஐகோர்ட் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையில் எந்தெந்த விஷயங்களில் பதில் அளிப்பது என்றும் நீண்ட நேரம் ஆய்வு செய்யப்பட்டது.

    சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டு உள்ள உத்தரவுகளின்படி செயல்படும் பட்சத்தில் அது த.வெ.க.வுக்கு எதிராக அமைந்து விடும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கரூர் நெரிசல் சம்பவத்துக்கு சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக சென்னை மற்றும் டெல்லியில் உள்ள மூத்த சட்ட வல்லுனர்களுடன் விஜய் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் அது கட்சி வளர்ச்சிக்கும், எதிர்கால திட்டங்களுக்கும் உதவியாக இருக்குமா? என்றும் கேட்டறிந்தார்.

    இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக சுப்ரீம் கோர்டை அணுகுவது பற்றி அவர் ஆலோசித்து வருகிறார். ஓரிரு நாளில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளை மறுநாள் (திங்கட்கிழமை) விஜய் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்படக் கூடும் என்று தெரிகிறது.

    இதற்கிடையே புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் கைது செய்யப்பட்டால் அது தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கவும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

    • கூட்டு முயற்சியில் அனைவரது யோசனைகள், ஆலோசனைகளையும் வரவேற்கிறேன்.
    • ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பில்லாதது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கரூர் துயரம் குறித்து மாண்பமை உயர்நீதிமன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு மிகத் தீவிரமாக கவனத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது.

    கரூரில் நடந்த துயரத்தால் நாம் அனைவருமே நெஞ்சம் கலங்கிப் போயிருக்கிறோம். தம் அன்புக்குரியோரை இழந்து தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் கண்ணீரையும் கண்டு தவிக்கிறேன்.

    மாண்பமை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) தனது விசாரணையைத் தொடங்கும். இதன் மூலம், முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்று மாநிலத்தின் முதலமைச்சராக மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். அனைத்து மட்டங்களிலும் பொறுப்பு உறுதிசெய்யப்படும்.

    பலவற்றிலும் இந்தியாவுக்கே முன்னோடியான தமிழ்நாடு, கூட்ட நெரிசல் விபத்துகளைத் தவிர்ப்பதிலும் நாட்டுக்கு வழிகாட்டும். மாநிலம் முழுவதும் துறைசார் வல்லுநர்கள், அரசியல் கட்சியினர், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என அனைவரோடும் கலந்தாலோசித்து ஒரு முழுமையான 'நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) வடிவமைப்போம். தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் பின்பற்றத்தக்க மாடலாக இது அமையும்.

    துடைக்க முடியாத இந்தத் துயரச் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல் ஒரு நீண்டகாலத் தீர்வை நோக்கிப் பயணிப்போம். இந்தக் கூட்டு முயற்சியில் அனைவரது யோசனைகள், ஆலோசனைகளையும் வரவேற்கிறேன். ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பில்லாதது. நம் மக்களின் இன்னுயிரைக் காக்கவும், இனி இப்படி ஒரு பெருந்துயரம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே நிகழாமல் தடுக்கவும் ஒன்றிணைவோம்! என்று கூறியுள்ளார். 



    • தேனாம்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு போனில் மிரட்டல் விடுத்த ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த ஞானமூர்த்தி என்ற வாலிபரை கைது செய்தனர்.

    சென்னை:

    சென்னையில் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்துக்கு இ-மெயில் மூலமாக மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது வாடிக்கையாகி இருக்கிறது.

    பல்வேறு பெயரிலான இ-மெயில் முகவரிகளில் இருந்து முக்கிய பிரமுகர்களின் இல்லங்கள் மற்றும் அரசியல் கட்சி அலுவலகங்களுக்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டலை விடுத்துக் கொண்டே உள்ளார்.

    அந்த வகையில் இ-மெயில் மூலமாக நேற்று இரவு சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழி எம்.பி.யின் வீடு, மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி வீடு, முன்னாள் டி.ஜி.பி. நடராஜ் வீடு, ஆழ்வார்பேட்டை நாரதகான சபா, வேப்பேரி பெரியார் திடல், கிழக்கு கடற்கரை சாலை, இஸ்கான் கோவில் ஆகிய 6 இடங்களுக்கும் தொலைபேசி மூலமாக தேனாம்பேட்டை மெட்ரோ ரெயில் நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து போலீசார் நேற்று இரவு மேற்கண்ட 7 இடங்களிலும் வெடிகுண்டு சோதனை நடத்தினர். ஆனால் அது புரளி என்பது தெரியவந்தது.

    இ-மெயில் மூலமாக மிரட்டல் விடுத்த நபர் இதுவரை போலீசில் சிக்காத நிலையில், மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு போனில் மிரட்டல் விடுத்த ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த ஞானமூர்த்தி என்ற வாலிபரை கைது செய்தனர். அவர் பேசிய தொலைபேசி எண்ணை வைத்து இருப்பிடத்தை கண்டுபிடித்த போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்த நபரை தொடர்ந்து தேடிவருகிறார்கள்.

    • கடலோர பகுதிகளில் மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
    • கடலுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

    வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது.

    இதற்கிடையே வடகிழக்கு பருவமழையின் முதல் சூறாவளியாக அரபிக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது புயலாக உருவாகி உள்ளது. இந்த புயலுக்கு சக்தி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை இலங்கை பரிந்துரைத்தது.

    இந்த தாழ்வு பகுதி குஜராத்தின் துவார்காவில் இருந்து சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவில், வடமேற்கு திசையில் மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.

    இது தீவிர புயலாக மாறக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த புயல் நாளைக்குள் வடக்கு மற்றும் மத்திய அரேபிய கடலில் மத்திய பகுதிகளை அடைய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

    வானிலை மையத்தின் தகவலின் படி இந்த புயல் கேரளாவை நோக்கி நகராது. அது கடலுக்குள் மேற்கே நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படு கிறது. இதனால் கடலோர பகுதிகளில் மீனவர்கள் கவனமாக இருக்க வேண்டும். கடலுக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

    இதற்கிடையே வங்க கடலில் உருவான மற்றொரு தாழ்வு பகுதி ஒடிசா மாநிலத்தில் கோபால்பூரை ஒட்டிய பகுதியில் தீவிரமாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் ஒடிசாவின் உள்பகுதிகளையும், வடக்கு திசையில் சத்தீஸ்கரையும் தாக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    சக்தி புயல் காரணமாக இன்று தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிபேட்டை, வேலூர், திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதேபோல தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்கில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை ஓரிரு பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும், சில சமயங்களில் தீவிரமடையலாம் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

    • ஒரே நாளில் விலை மாற்றம் கடந்த 2 தினங்களாக நீடிக்கிறது.
    • தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் உயர்ந்து உள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த மாதம் (செப்டம்பர்) முழுவதும் பெரும்பாலான நாட்களில் ஏற்றத்துடனேயே காணப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இம்மாத தொடக்கத்தில் இருந்தும் விலை ஏற்ற-இறக்கத்துடனேயே இருந்து வருகிறது.

    அதிலும் ஒரே நாளில் விலை மாற்றம் கடந்த 2 தினங்களாக நீடிக்கிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் காலையில் கிராமுக்கு ரூ.110-ம், சவரனுக்கு ரூ.880-ம் குறைந்து, மாலையில் கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் அதிகரித்து இருந்தது.

    மொத்தத்தில் நேற்று முன்தினம் விலையுடன் ஒப்பிடுகையில், நேற்று கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.87 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது.

    இந்த நிலையில் வார இறுதி நாளான இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் 10,950 ரூபாய்க்கும் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 87,600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    தங்கம் விலையை போல, வெள்ளி விலையும் உயர்ந்து உள்ளது. கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    03-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,200

    02-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 87,600

    01-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.87,600

    30-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.86,880

    29-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.86,160

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    03-10-2025- ஒரு கிராம் ரூ.162

    02-10-2025- ஒரு கிராம் ரூ.164

    01-10-2025- ஒரு கிராம் ரூ.161

    30-09-2025- ஒரு கிராம் ரூ.161

    29-09-2025- ஒரு கிராம் ரூ.160

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, அரியலூர், கரூர், கடலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூர், திருவாரூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • கடன்கள் குறித்து 6 மாதத்திற்கு ஒருமுறை ரிசர்வ் வங்கிக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
    • தேவைப்பட்டால் வங்கிகளுக்கு முழு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

    சென்னை:

    ஒரு வங்கியின் இயக்குனர்கள், பங்குதாரர்கள், அதிகாரிகள் ஆகியோர் தங்களது உறவினர்களுக்கு அதேவங்கியில் அதிகளவில் கடன் வழங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன. அந்த கடன் பெரும்பாலும் வாராக்கடன் ஆகி பொதுமக்களின் பணத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க ரிசர்வ் வங்கி ஒரு வரைவு அறிக்கையை, நேற்று வெளியிட்டுள்ளது. இது அடுத்தாண்டு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    அதன்படி வங்கியின் இயக்குனர்கள், புரமோட்டர்கள், முக்கிய மேலாண்மை அதிகாரிகள் மற்றும் வங்கியில் 5 சதவீத பங்குகளை வைத்திருப்பவர்கள் ஆகியோர் தங்களின் உறவினர்கள் மற்றும் அவர்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு தங்கள் வங்கியில் கடன் வழங்கக்கூடாது. அப்படியே கடன் வழங்கினாலும், சில நிபந்தனைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதன்படி அவர்களுக்கு கடன் வழங்குவதாக இருந்தால் அது தொடர்பான முடிவெடுக்கும் கூட்டத்தில் பங்கேற்கக்கூடாது. மேலும் ஜாமீன், கடன் தள்ளுபடி, மீட்பு, வாராக்கடன் தீர்வு போன்ற எந்தப் பணிகளிலும் பங்கேற்கக்கூடாது.

    அவர்களுக்கு கடன் வழங்குவதற்கும் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி 10 லட்சம் கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள பெரிய வங்கிகள் அதிகபட்சமாக ரூ.50 கோடி வரை மட்டுமே கடன் தரலாம். ஒன்று முதல் ரூ.10 லட்சம் கோடிக்கு கீழ் சொத்துள்ள நடுத்தர வங்கிகள் அதிகபட்சமாக ரூ.10 கோடியும். ரூ.1 லட்சம் கோடிக்கு கீழ் சொத்துள்ள சிறிய வங்கிகள் அதிகபட்சமாக ரூ.5 கோடியும். உள்ளூர் வங்கிகள் மற்றும் மத்திய-மாநில கூட்டுறவு வங்கிகள் ரூ.1 கோடியும், என்பிஎப்சிகள் ரூ.10 கோடி வரையும் மற்ற அனைத்து நிதி நிறுவனங்கள் ஆகியவை ரூ.50 கோடி வரையும் கடன் கொடுக்கலாம்.

    இப்படி வழங்கப்படும் கடன்கள் குறித்து 6 மாதத்திற்கு ஒருமுறை ரிசர்வ் வங்கிக்கு தகவல் கொடுக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள் நபார்டுக்கு கடன் விவரங்களை அறிக்கையாக அளிக்க வேண்டும். வங்கிகள் ஆண்டுதோறும் தங்களது நிதி அறிக்கைகளில் எவ்வளவு கடன் தொடர்புடையவர்களுக்கு கொடுக்கப்பட்டது, அவற்றில் எவ்வளவு கடன் வாராக்கடன் நிலைக்கு சென்றது என்பதனை வெளிப்படையாக குறிப்பிட்ட வேண்டும். இந்த விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும். தேவைப்பட்டால் வங்கிகளுக்கு முழு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். முழுத்தொகையை ஒதுக்கீடாக வைத்திருப்பதை கட்டாயப்படுத்தும். மேலும் கூட்டுறவு வங்கிகளின் இயக்குனர்கள் தங்களது உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு கடன் ஜாமீன் வழங்கக்கூடாது.

    இந்த கட்டுப்பாடுகள் வங்கியின் நிர்வாகிகளுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் மட்டும் பொருந்தும். பொதுமக்கள் எடுக்கும் வீட்டுக்கடன், கல்விக்கடன், வாகனக்கடன், தனிநபர் கடன் போன்றவற்றுக்கு இந்த வரம்புகள் எதுவும் பொருந்தாது.

    • புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
    • அரியானா ஸ்டீலர்ஸ் அணியை தமிழ் தலைவாஸ் அணி வீழ்த்தியது.

    சென்னை:

    12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது லீக் ஆட்டங்கள் சென்னையில் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், நேற்று இரவு நடந்த 2வது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ், அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின.

    ஆரம்பத்தில் தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் சிரமபட்டனர். இதில் சுதாரித்துக் கொண்ட அவர்கள் அதன்பின் அதிரடியாக ஆடி புள்ளிகள் எடுத்தனர்.

    இறுதியில், தமிழ் தலைவாஸ் அணி 45-33 என்ற புள்ளிக்கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தமிழ் தலைவாஸ் அணி 5-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

    • புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
    • யுபி யோதாஸ் அணியை தபாங் டெல்லி அணி வீழ்த்தியது.

    சென்னை:

    12-வது புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், சென்னையில் இன்று இரவு நடந்த முதல் ஆட்டத்தில் தபாங் டெல்லி, யுபி யோதாஸ் அணிகள் மோதின.

    ஆரம்பம் முதலே தபாங் டெல்லி அணி வீரர்கள் சிறப்பாக ஆடி புள்ளிகள் எடுத்தனர்.

    இறுதியில், தபாங் டெல்லி அணி 43-26 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் தபாங் டெல்லி அணி 9-வது வெற்றியைப் பதிவு செய்ததுடன் மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.

    • இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
    • தேன் சோப்புகள் உள்ளிட்ட இயற்கை சார்ந்த பொருட்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

    சென்னை கலைவாணர் அரங்கில் தேசிய கைத்தறி கண்காட்சி இன்று காலை தொடங்கியது. வருகிற 17-ந் தேதி வரை மொத்தம் 15 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்.

    சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் புதிய வடிவமைப்பு ரகங்களை அறிமுகம் செய்து வைத்தார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

    இந்த கண்காட்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உலகப் பிரசித்தி பெற்ற பட்டுச் சேலைகள் பட்டு வேட்டிகள், படுக்கை விரிப் புகள், மற்றும் பருத்தி ஆடைகள், நீலகிரி மாவட்டத்தில் தோடர் இனத்தவர் பயன்படுத்தும் ஆடைகள் என விதவிதமான ஆடைகள் கண்காட்சியில் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    காஞ்சீபுரம், திருபுவனம், ஆரணி, சேலம், ராசிபுரம், திருப்பூர் என கைத்தறி மற்றும் பட்டுக்கு பெயர் பெற்ற பல்வேறு ஊர்களில் இருந்தும் விதவிதமான சேலைகள் பட்டு வேட்டிகள் படுக்கை விரிப்புகள், விரிப் புகள் என விதவித மான அனைத்து வகையான ஆடைகளும் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டு உள்ளன.

    கைத்தறி நெசவாளர்களால் வடிவமைக்கப்பட்ட பூம்பட்டு புதுமணப்பட்டு மாங்கல்ய பட்டு, பருத்தி நூலால் செய்யப்பட்ட யோகா விரிப்புகள், தாய் மார்கள் பயன்படுத்தக்கூடிய தாய்-சேய் பெட்டகம் என்று அழைக்கப்படும் சிறப்பு பை ஆகியவையும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

    தாய்-சேய் பெட்டகப்பையில் குழந்தைகளுக்கு தேவையான பால் பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட்டவர்களை வைப்பதற்கு தனித்தனியாக உள்பகுதியில் பைகள் வைத்து தைக்கப்பட்டுள்ளது.

    பூம்புகார் நிறுவனத்தின் மூலமாக அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கைவினைப் பொருட்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. கதர் கிராம தொழில் வாரியத்தின் மூலமாக உற்பத்தி செய்யப்படும் தேன் சோப்புகள் உள்ளிட்ட இயற்கை சார்ந்த பொருட்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.

    கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் கைத்தறி ரகங்கள் அனைத்துக்கும் 30 சதவீதம் முதல் 50 வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதே போன்று கண்காட்சியில் இடம்பெற்றுள்ள கடைகளில் 10 சதவீதம் முதல் 35 சதவீதம் வரையிலும் சேலைகள் மற்றும் ஜவுளிகளுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இதன்மூலம் பெண்கள் தங்களுக்கு பிடித்தமான ஒரிஜினல் பட்டு சேலைகளை தள்ளுபடி விலையில் வாங்குவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒரிஜினல் பட்டுச்சேலைகள் ரூ.13 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் ஆயிரம் ரூபாயில் இருந்தும் சேலைகள் கிடைக்கிறது.

    பூம்புகார் நிறுவனம் சார்பில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள அரங்கில் ரூ.250-லிருந்து ரூ.12 லட்சம் வரையில் கலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. திருவள்ளுவர் சிலை, கலைஞர் கருணாநிதி சிலை ஆகியவையும் விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளது.

    ஐம்பொன் லட்சுமி சிலை ஒன்று ரூ.4 லட்சத்து 83 ஆயிரத்து 340 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அருகில் கையில் விளக்குடன் கூடிய ஒரு ஜோடி பாவை விளக்கு ஒன்று ரூ.12 லட்சத்துக்கு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    மேற்கு வங்காளம், ஜம்மு-காஷ்மீர், உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், அரியானா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய வெளிமாநிலங்களை சேர்ந்த கைத்தறி துணி வகைகளும் கண்காட்சிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தங்களது அரங்குகளை அமைத்துள்ளனர். கண்காட்சியின் முகப்பில் எந்தெந்த பகுதிகளைச் சேர்ந்த எந்த வகையான சேலைகள் கண்காட்சியில் உள்ளன என்பது பற்றிய தகவல்களும் விரிவாக விளக்கி வைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை, ஜெயங்கொண்டம், மதுரை, பரமக்குடி, அருப்புக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, வேலூர், கோவை, சேலம் ஆகிய ஊர்களில் பிரசித்தி பெற்ற பட்டுச் சேலைகள் துணி வகைகள் ஆகியவைகள் பற்றி விரிவான விளக்கங்களுடன் கண்காட்சி பலகை வைத்திருப்பதும் பொது மக்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது.

    தீபாவளியை கருத்தில் கொண்டு இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் என்பதால் வரும் நாட்களில் மக்கள் அதிக அளவில் கண்காட்சிக்கு வருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக வார இறுதி விடுமுறை நாட்களான நாளையும் மறுநாளும் கண்காட்சியை பார்வையிட்டு பெண்கள் அதிகளவில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் கைத்தறித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • காட்டாங்குளத்தூர் முதல் தாம்பரத்திற்கு மின்சார ரயில் சிறப்பு சேவைகள் இயக்கப்படும்.
    • அக்.6-ம் தேதி அதிகாலையில் காட்டாங்குளத்தூரில் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

    ஆயுத பூஜை விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக அக்.6-ம் தேதி அதிகாலையில் காட்டாங்குளத்தூர் முதல் தாம்பரத்திற்கு மின்சார ரெயில் சிறப்பு சேவைகள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி காட்டாங்குளத்தூரில் இருந்து அதிகாலை 4 மணியில் இருந்து 5 சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. கடைசி சிறப்பு ரெயில் 6.25 மணிக்கு காட்டாங்குளத்தூரில் இருந்து புறப்படுகிறது. அதேபோல தாம்பரத்தில் இருந்து காட்டாங்குளத்தூருக்கு ஒரே ஒரு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி அந்த ரெயில் அதிகாலை 5.40 மணிக்கு புறப்பட்டு 6.10 மணிக்கு காட்டாங்குளத்தூரை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    ×